ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டுக் கொண்டிருந்த நேரம். எங்கிட்ட இருந்த PDA (Palm Tungsten E) வில் mp3 பாட்டு கேக்கலாம். 100 பாட்டு எப்பவும் இருக்கும் அதில். புதுசு, குத்து, சோகம், ரிலாக்ஸ்ன்னு வகை வகையா பிரிச்சு வைச்சுக்கிட்டு பஸ்ஸில் பாட்டு கேட்பேன். 1 மணி நேர பயணம் மினிமம் கியாரண்டி என்பதால் குறைந்தது 10 பாட்டு கேட்கலாம்.
அன்னைக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா யார் கூடவோ ரொம்ப நேரம் பேசினதில் சந்தோஷமா இருந்தேன். ஸ்கூல், காலேஜ், கோயில் என எல்லா இடத்திலுமே கடைசியில் நின்னு நின்னு அதே பழக்கத்தில் பஸ்ஸில் கடைசி சீட்டுக்கு போனால் ஏற்கனவே 3 பெண்கள் உக்கார்ந்து கொண்டு தமிழில் சும்மா சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சரி, வந்தது வந்தாச்சுன்னு அதற்க்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் உக்கார்ந்து கொண்டேன். ஐடி கார்டை பெல்ட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன்.
சீட்டில் உக்கார்ந்த பிறகு வழக்கம் போல ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உக்கார்ந்திருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களது டிரெயினிங், யுனிக்ஸ் என பேசியதால் அதுவும் போர் அடித்தது. ரொம்ப சந்தோஷமா இருந்ததாலோ என்னவோ உலகத்தில் மற்றவர்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக இயங்குவதாக தோன்றியது. என் PDA வை எடுத்து (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) நோண்ட ஆரம்பித்தேன்.
இதை கவனித்த ஒரு பெண், "பாருடி பீட்டரை... கால்குலேட்டரை கையில் வைச்சுக்கிட்டு பால்ம்டாப் கையில இருக்கிற நினைப்புல மிதக்கிறதை"...
"ஆமாண்டி, வந்தவுடன் ஐடி கார்டை அவசர அவசரமா எடுத்து ஒளித்து வைத்ததை பார்த்தியா? இப்போதான் ட்ரையினிங் பேட்ச்சில் சேர்ந்திருப்பான் போல"
"புதன் கிழமை பக்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வந்திருக்கான். அவன் பேக் பாரேன், 3 புக் உள்ள இருக்கு, நிச்சயம் டிரெயினிங் பேட்ச்தான்"
அதுவரை பேசாமல் இருந்த ஒரு பெண், "ஏண்டி, அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுட்டு இந்த ஓட்டு ஓட்டறீங்க... அவனை பார்க்காமல் கிண்டல் பண்ணுங்க. அவனை பத்தி பேசுறம்ன்னு தெரிஞ்சு எவன் கிட்டையாவது அர்த்தம் கேட்டு தொலைக்கப் போறான்"
சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க. சரி நமக்கு விதிச்சது அவ்வளவுதான்... தமிழ் பொண்ணுகளா இருக்கு, அப்படியே பிக்கப்,ட்ராப், எஸ்கேப்ன்னு பிளான் பண்ணினா நம்மை பஞ்சர் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல வழிஞ்சா நல்லா இருக்காதுன்னு பாட்டு கேக்க என் சோனி இயர் ஃபோனை எடுத்தேன்...
"அது கால்குலேட்டர் இல்லடி, 50 ரூபாய்க்கு விக்கிற FM ரேடியோ, செம ஹாட் மச்சி" ன்னு சுசித்ரா மாதிரி ஹஸ்கி வாய்சில் சொல்லி வயித்தை புடிச்சி சிரிச்சாங்க. நான் இந்த இழவையெல்லாம் கேக்கணும்னு இருக்கே,"கடவுளே, உனக்கு கண்ணே கிடையாதா??? இப்படியெல்லாம் அழும்பு பண்ணாறாங்க, நான் ஆடம் டீஸ்ன்னு கேஸ் கூட போட முடியாதே" என புலம்பினேன். இருந்த பதட்டத்தில் இயர் ஃபோனை PDA வில் சொருகினேனா என பார்க்காமல் காதில் மட்டும் மாட்டிக் கொண்டு குத்து பிளே லிஸ்ட் செலெக்ட் பண்ணினேன்.
கோடம்பாக்கம் ஏரியா, கூத்து பார்க்க வாரியா ந்னு எங்கேயோ தூரத்தில் கேக்குது. என்னடா ஆச்சு நம்ம இயர் ஃபோனுக்கு, சும்மா ஹோம் தியேட்டர் எபெக்ட் குடுக்குமே, இன்னைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்தா இயர் ஃபோனை சொருகவே இல்லை. அவ்வளவுதானான்னு இயர் ஃபோனை சொருகிட்டு தலையை தூக்கிப் பார்த்தா 3 பொண்ணுகளும் பேயறஞ்ச மாதிரி என்னையவே பார்த்தாங்க...
அட இதுக்கே பயந்துட்டீங்க, நீங்கெல்லாம் கண்ணகி பரம்பரைன்னு நினைச்சா இப்படி பம்முறிங்க, அய்யோ அய்யோ... ன்னு நான் பாட்டில் மூழ்கி விட்டேன். அப்புறம் அந்த 3 பெண்களும் உக்கார்ந்து இருந்த இடத்தில் இன்னொரு ஆள் உட்காரும் அளவுக்கு இடம் உருவானது. அவர்கள் நான் இறங்கும் வரை வாயை திறக்கவே இல்லை என்பது கூடுதல் செய்தி.