Showing posts with label அவியல். Show all posts
Showing posts with label அவியல். Show all posts

Saturday, October 11, 2008

ஆயாசம், பாயாசம், பொங்கல் மற்றும் இன்ன பிற...

இந்த வயதில் ஆயாசம் என்பது சற்று அதீதமாகத்தான் தோன்றுகிறது. பார்க்கும், கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்திலும் ஒரு விமர்சகனாகவே அணுகுகின்றேனா என்று எனக்கு நானே கேள்வி கேட்டால் அதற்கு பதில் ஒன்றும் இல்லை. முதுகுத் தண்டு வளையும் அளவுக்கு உழைத்தாலும் உலக நிகழ்வுகளை ஆவலுடன் கவனித்துத்தான் வந்துள்ளேன். அதிலெழுந்த நிறைய கேள்விகள் என்னுள்ளே புதைக்கப்பட்டாலும், அங்கங்கே தெளித்து வைத்துள்ளேன். எதற்கும் எதிர் கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

TBCD எப்போது பதிவு போட்டாலும் முதல் ஆளாய் இல்லாவிட்டாலும் ஒரு எதிர் கருத்தை பதிந்து விட்டுத்தான் மறு வேலை. அதை அவர் பதில் சொல்லும் விதத்தைப் பொறுத்து பதிவில் தொடரும் இல்லையேல் சாட்டில். மொத்தத்தில் ஒரு பங்காளி மனப்பான்மையுடனே அவரது பதிவுகளை அணுகுகிறேன் என நினைக்கிறேன். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் IT பற்றிய தவறான புரிதல் மற்றும் பதிவுகளுக்கும் சென்று மறுப்பு எழுதியதைத் தவிர வேறெதையும் நான் வெளியில் சொன்னதில்லை.
******************************

சீரோ டிகிரி படித்து அதைப் புரிந்த ஆத்மா ஏதாவது இந்த வலையுலகத்தில் இருந்தால் கேள்வி கேட்டு பின்நவீனத்துவத்தை உள் வாங்கிக் கொள்ளலாம் என்று பதிவு எழுதி வைத்து பல மாதங்களாகிறது. அதற்கு பிறகு சாரு ஹாட் டாபிக் ஆகி வெட்டிப்பயல், லக்கிலுக் எல்லாம் முறை வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டதில் அந்த பதிவு ஒரு சின்ட்ரோம் மாதிரி இருக்கும் என பதிக்கவேயில்லை.

விஷ்ணுபுரம் படிக்கவே வேண்டாம் என அனுசுயா அன்புக் கட்டளையிட்டும் இந்தியாவிலிருந்து வாங்கி வந்து இன்னமும் 100 பக்கம் கூட தாண்டவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. நிறைய கேள்விகள் மற்றும் புரிதலின்மை; அதனால்தான் அதை அங்கேயே சலிப்புடன் நிறுத்தி விட்டேன். இதுக்கும் ஒரு பதிவு எழுதி வைத்து பின் சினிமா பிரச்சினையில் ஆளாளுக்கு ஜொமோவை கும்மியதால் அதுவும் குப்பைக் கூடைக்குப் போயிற்று.

டிவின் டவர் சாய்ந்தது என் டவர் சாயவில்லை என வைரமுத்து எழுதிய போது அதற்கும் ஒரு கேள்வி வைத்திருந்தேன். கடைசியில் அதை யாரும் அவ்வளவு சுவராசியமாக விவாதிக்காததால் அப்படியே விட்டுவிட்டேன். என்ன முரண் பாருங்க? யாரவது அதைப் பற்றி விவாதித்தாலும் வேண்டாம்; விவாதிக்கவில்லை என்றாலும் வேண்டாம்; வேறு என்னதான் வேண்டும் எனக்கு???

**************************************

பார்ப்பனீய மற்றும் கழக சண்டைகள் ஒரு ஓரத்தில் நடந்தாலும் டுபுக்கு, ஜொள்ளுப்பாண்டி, இளவஞ்சி, ராசா, கைப்புள்ள என எனக்கு blog எழுத நிறைய காரணங்கள் இருந்தன. இப்பொழுது அதே ஆட்டம் மொக்கை, கும்மி என மாறி இருந்தாலும் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. வயசாகிடிச்சோ????

ரொம்ப நாளைக்கு அப்புறம் ரத்னேஷ் மற்றும், முரளி கண்ணன் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். தெரிந்த தலைகள், தெரியாத தகவல்கள் என்பதற்காக ரத்னேஷையும், தெரிந்த சினிமா, தெரியாத தகவல்கள் என்பதற்காக முரளி கண்ணனும்... ஆனால் இதுவரைக்கும் ஒரு வரி கூட அவர்களது பதிவில் எழுதியது கிடையாது.

**************************************

என் தொழிலில் Certification என்பது முன்பு பெருமைக்காக இருந்தது. இப்போது இருந்தே ஆக வேண்டும் என எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்தியா ஒன் டே மேட்ச் ஆடுகிற மாதிரி இருக்கிற எல்லா எக்சாமும் எழுதி முன் மண்டை வலிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் எக்சாம் பற்றிய விவரம் கேட்டு வந்த எந்த மெயில் பார்த்தாலும் இப்போது காத தூரம் ஒடிக் கொண்டிருக்கிறென். நான் பட்ட கஷ்டம் அவர்களும் படட்டும் என்ற கண்றாவி மனோநிலையிலா நான் இருக்கிறேன்?

**************************************


கேமரா ஆர்வம் பொங்கி Canon Rebel XTi வாங்கி 6 மாதம் ஆகிறது. ஒன்றுக்கு ரெண்டாக லென்சும், ட்ரை பாடும் வேறு சேர்ந்து கொண்டது. ஊர் மாறிய கூத்தில் சார்ஜரைத் தொலைத்து 1 மாதத்திற்கு மேல் ஆகி நேற்றுதான் ஆர்டர் செய்தேன். இன்று குப்பைகளை எடுத்து தூர எறியும் போது குப்பையோடு குப்பையா சார்ஜரும் கிடைத்தது. இப்போது 1 க்கு 2 சார்ஜர் மற்றும் 3 பேட்டரி. அறுக்க முடியாதவன் இடுப்புல 58 அறுவாள் சொருகி வைத்திருந்தான் கதை ஆகி விட்டது. ஏதாவது ஒன்றைப் பிடித்து தொங்கிக் கொண்டே மேற் சொன்ன ஆயசத்தைக் குறைப்பதற்கான வழி இதுவோ????


**************************************

என் கூடப் படித்தவர்கள் யார் பெயரும் இது வரையில் பத்திரிக்கையில் வந்ததில்லை என சில மாதங்கள் முன்பு வரை நினைத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் ராஜா தயவில் சிவபாலன் பெயர் பத்திரிக்கையில் வந்ததும் கொஞ்சம் பதறித்தான் போனேன். இன்னமும் அவன் எங்கிருக்கிறான் என தெரியவில்லை என தெரிந்தவர்கள் சொல்லும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. நம்மைச் சுற்றி நடப்பவை என்றால் துக்கம் மற்றவை எல்லாம் செய்தி என மூளை நினைக்கிறதே எனவும் ஆயாசம்....



**************************************

பின்குறிப்பு: சாரு நிவேதிதா மற்றும் அவர்தம் புத்தகங்கள் பற்றிய நாகார்ஜுனன்
பதிவு. இதுக்கும் யாரவது நோட்ஸ் எழுதினால் நல்லாவே இருக்கும். (சாமனியனான) எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!