Monday, September 18, 2006

ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...

மகன்: ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?

அம்மா: இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?

மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???

அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?

மகன்: வீட்லதான்மா இருக்கேன். அக்கா, சித்தி, மாமா எல்லோருக்கும் போன் பண்ணிட்டேன். இன்னைக்கு நீதான் கடைசி. அப்புறம் என்ன நடக்குது அங்க?

அம்மா:இங்க ஒன்னும் இல்ல, திருப்பூர் போய்ட்டு வந்தேன். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா. உன்னைய பார்க்கணும்னார், ஒரு தடவைதான் அங்க போன் பண்ணேன்டா???

மகன்: முந்தா நேத்து மாமா செல்லுக்கு பண்ணுனேன்மா, அப்போ அவர் வெளிய இருந்தார். சரி, இன்னைக்கு பண்ணறேன்.

அம்மா: ரேவதி வந்து 2000 பணம் வாங்கிட்டு போனா. அவ குழந்தைக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

மகன்: ஏம்மா, போன மாசம் கூட பணம் குடுத்ததா சொன்ன? இப்படியே வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் குடுத்துட்டே இருக்கே? உன்னைய எல்லோரும் நல்லா ஏமாத்துறாங்க...

அம்மா: போடா, உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான். நானும் ரெண்டு பேரை பெத்து வளர்த்திருக்கேன், எனக்கு தெரியும்டா... அந்த குழந்தை நல்லா பெருசாச்சுன்னா அந்த புண்ணியம் எல்லாம் யாருக்கு??? எல்லாம் உங்களுக்குத்தான்...

மகன்: இதையே நீயும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கே, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல.

அம்மா: சரி, நீ என்ன பண்ணுன இந்த வாரம்?

மகன்: ஆபிஸ்... வீடு... இப்படியே 5 தடவை சொல்லு. அப்புறம் நேத்து முழுசா தூங்கினேன். அவ்வளவுதான்.

அம்மா: அதுக்கு நீ பெங்களூரிலயே இருந்துருக்கலாம், வாரா வாரம் ஊருக்காவது வந்துட்டு போயிட்டு இருப்பே...

மகன்: சரிம்ம்ம்ம்ம்மா..... வேற ஏதாவது சொல்லு.

அம்மா: சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன?

மகன்: நானே சமைச்சுக்கறேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உன்னோட அல்சர் இப்போ எப்படி இருக்கு?

அம்மா: அதை விடு, அது அப்படியேதான் இருக்கு. அத்தை சந்தியாவுக்கு 10 பவுன்ல கல்லு வைச்ச ஆரம் எடுத்திருக்கா. நானும் கூடப் போயிருந்தேன். அக்காவுக்குத்தான் அது மாதிரி ஒன்னு வாங்கி குடேன்டா...

மகன்: ஏம்மா 6 மாசம் முன்னாடிதான் அவ கிட்ட அது ஒன்னுதான் இல்லைன்னு வாங்கி குடுத்த... உங்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்.

அம்மா: டேய், அது உங்க அக்கா மகளுக்குடா...

மகன்: என்னது, அந்த நண்டுக்கா? அதைப் போட்டுட்டு நடந்தா அவ கீழ விழுந்துடுவாம்மா... மொத்தத்துல உனக்கு ஏதாவது மகளுக்கு சீதனமா குடுத்துடே இருக்கணும்... நீ நடத்து...

அம்மா: பையனுக்கு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்ன்னு கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.

மகன்: நீதான் ரெடிமேடா வெச்சிருப்பியே, என் பையன் இன்னும் குழந்தை மாதிரின்னு... அதையே சொல்ல வேண்டியதுதானே?

அம்மா: குரு பலன் 29 வரைக்கும் இல்லை, அப்புறந்தான் பார்க்கணும்ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் நம்பற மாதிரி இல்லை. பையனே பார்த்துட்டு இருக்கான்னு சொல்லிட்டேன்.. இப்போ பேச்சே இல்லை. சுதந்திரமா வெளிய போயிட்டு வர முடியுது.

மகன்: நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.

அம்மா:(சிரிப்புடன்)எல்லாம் நல்லபடியா நடக்கும். எம் பையனைப் பத்தி எனக்கு தெரியாதா?

மகன்: சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...

அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?

மகன்: இல்லம்மா... எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசிக்கிறேன்.

அம்மா: எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தைதான் பேசேன். ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?

மகன்: வச்சுர்றேன்...

25 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

சவுண்ட் பார்டியின் சவுண்ட் சூப்பர்..

said...

வீட்டு வீட்டுக்கு இதே வாசப்படியாப் போச்சே:-)))))


தங்கம் விலை வீழ்ச்சியாம்! பேப்பரில்
போட்டுருக்கு!


"கீரை பொறிக்க = கீரை பறிக்க"

said...

உதய்

அம்மா செல்லமா நீங்க.அப்பா கூடயும் ஒரு வார்த்தை பேசிரதுதானே.

said...

//அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க///
உங்க அம்மா ரொம்ப தெளிவாயிருக்காங்க. சூப்பர் நகைச்சுவை. ..........:)

said...

//அங்க இப்போ மணி எத்தனை?

மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???

அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?
//
எல்லா அம்மாவும் இப்படித்தான்னு நினைக்கிறேன்...

தங்கம் விலை வேற குறைஞ்சது பெரிய பிரச்சனையா போயிடுச்சு :(

//மகன்: சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...

அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... //

உங்களுக்கு எப்படி இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்குனு இப்பத்தான் புரியுது ;)

said...

:-)

மலரும் நினைவுகள் :-D

said...

//நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.
//

LOL ...

said...

இப்பத்தாம் மொதோ மொறையா இங்க வரேன்... நல்லாருக்கு... வாழ்க...

said...

நன்றி சிவா!!!

said...

//வீட்டு வீட்டுக்கு இதே வாசப்படியாப் போச்சே:-)))))
தங்கம் விலை வீழ்ச்சியாம்! பேப்பரில்
போட்டுருக்கு!//

நினைச்சேன், எங்க துளசி டீச்சரைக் காணோம்ன்னு... தங்கம்ன்னு யாரோ பிளாக்ல எழுதுனா உடனே ஓடி வந்தாத்தான் துளசி டீச்சர்!!!

//"கீரை பொறிக்க = கீரை பறிக்க" //

எங்க ஊருல பேச்சு வழக்குல இப்படித்தான் சொல்லுவோம். அதனால மாத்தலை...

said...

//அம்மா செல்லமா நீங்க.அப்பா கூடயும் ஒரு வார்த்தை பேசிரதுதானே. //

பெருசு, அது கொஞ்சம் இல்லை, நிறையவே கஷ்டம்...

said...

/உங்க அம்மா ரொம்ப தெளிவாயிருக்காங்க. சூப்பர் நகைச்சுவை. ..........:) //

அனுசுயா, எல்லோரும் தெளிவாத்தான் இருக்காங்க, என்னைத் தவிர... பின்ன, அம்மா ப்ண்ணு பார்த்தாதான் கல்யாணம் நடக்கும்ன்னு சொல்லற அப்பாவி இந்த உலகத்துல ரொம்ப கம்மியாகிட்டு வர்ரதா ஒரு சர்வே சொல்லுது...

said...

/உங்களுக்கு எப்படி இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்குனு இப்பத்தான் புரியுது ;)//

பாலாஜி, எதோ கடவுள் புண்ணியத்துல வண்டி ஓட்டிட்டு இருக்கு :-)

said...

//மலரும் நினைவுகள் :-D //

அட, ரெண்டு பாலாஜிக்கும் கொசுவர்த்தி சுத்த விட்டுட்டேனா????

said...

//இப்பத்தாம் மொதோ மொறையா இங்க வரேன்... நல்லாருக்கு... வாழ்க... //

கில்லியின் அருள் பார்வை என் மேல... பிரகாஷ், வந்ததுக்கு நன்றி!!!

said...

//அம்மா ப்ண்ணு பார்த்தாதான் கல்யாணம் நடக்கும்ன்னு சொல்லற அப்பாவி இந்த உலகத்துல ரொம்ப கம்மியாகிட்டு வர்ரதா ஒரு சர்வே சொல்லுது... //

ரொம்ப சரியான சர்வேதான் ஏன்னா சில பேர் ஆர்க்குட்லயெல்லாம் பொண்ணு தேடறாங்க :))))

said...

//Babble said...
அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க. போன வருசம் நோபல் பரிசு குடுத்தாங்க...

http://news.bbc.co.uk/2/hi/health/4304290.stm
//

ஏங்க இவ்வளவு நல்ல தகவலை சொல்லிட்டு உங்களை அடையாளம் காட்டாம் போறீங்க. யாருக்குன்னு நன்றி சொல்லுவேன் !!!

said...

//ரொம்ப சரியான சர்வேதான் ஏன்னா சில பேர் ஆர்க்குட்லயெல்லாம் பொண்ணு தேடறாங்க :)))) //

அனுசுயா, என்னைய சொல்லாத வரைக்கும் நானும் இதை அமோதிப்பேன் :-)

said...

இதெல்லாம் நல்லாயில்ல சொல்லீட்டேன்...எல்லாரும் கலக்கோ கலக்குன்னு கலக்குறதுன்னு முடிவு செஞ்சிட்டு வந்திருக்கீங்களா! நல்லாயிருங்கப்பா! நல்லாயிருங்க. :-)

said...

//அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?//

LOL :))))

said...

//அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... //

ஹி...ஹி...
:))

said...

Machhi,
It is really nice da...
Senthil

said...

அடப்பாவி ந்நிங்களும் அப்பாகிட்ட பேசுறதில்லையா?

:)

said...

உதய், இதை இப்போத் தான் பார்க்கிறேன்..அட்லாஸ் வால்பருக்கு அடித்தளம் இந்தப்பதிவு தானா? :)))

சூப்பரா இருக்கு :))) பாவம் அப்பா.. அவர்ட்டயும் கொஞ்சம் பேசுங்கப்பா..

said...

பாவங்க இந்த அப்பாக்கள்,

இன்னமும் அம்மா வழியாகத்தான் மகன் பற்றிய தகவல் சேகரிக்கின்றார்கள்!

////அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... //

பொறுத்து போதும் பொங்கி எழு என்று சொல்கிறதா எடுத்துக்கலாமா?

க்ரீன்விச் டைம் கன்ப்யூஷன் எவர்க்ரீன் மேட்டர் எல்லா இடத்துலேயும் நீக்கமற இருக்கிறது சந்தோஷம்!

நல்லா இருந்துச்சுங்க! சீக்கிரமே நீங்களாவே காலைக் கட்டிக்குங்க இல்லை கால்கட்டுக்கு காலைக்குடுங்க!