Saturday, August 12, 2006

வாசுவும் வெடைக் கோழியும்-2

Part-1

நான்: சரி சரி... அழுகாதடா. உன் கதையை சொல்லு. நான் வேணா எம்பேர்ல போட்டுக்கறேன். ஆனா ஏதாவது பிரச்சினை ஆச்சு, அவ்வளவுதான். இதுக்கெல்லாம் நான் தார்மீக பொறுப்பேத்துக்கிட்டு ஊர்ல எல்லார் வாயிலும் விழுந்து எந்திரிக்க முடியாது, சொல்லிட்டேன்.

வாசு: நீதாண்டா நண்பன். ஒரு நாளு எங்க தோட்டத்து வழியா வளர் போயிட்டு இருந்தா. தோட்டத்துல யாருமே இல்லை. எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை, இன்னைக்கு இதை எப்படியாவது முடிச்சிறனும்ம்னு...

நான்: பாவம்டா வளர்மதி, ச்சீ, அவளைப் போயி???

வாசு: உன்னைய கதாசிரியன்னு சொன்னது தப்பா போச்சு. முழுசா கேளுடா வெண்ணை. அந்தன்னைக்கு வளர் கால்ல செருப்பும் போடலை. உடனே ஓடிப் போயி பொத்துன்னு அவ கால்ல உழுந்து வளர், ஏன் என் மேல இவ்வளவு கோவம் உனக்கு. செருப்பு கால்ல போடறதுக்கு மட்டுந்தான். அதை கையிலெடுத்துட்டு நீ இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணலாமான்னு அழுதுட்டேன்.

நான்: அதானே பார்த்தேன். எங்க வாசு தங்கம்டா. அதுக்கு அவ என்ன சொன்னா?

வாசு: அவ பெரிய வைராக்கியமுள்ள பொண்ணுடா. ஞாபகம் இருக்கா, 5வது படிக்கும் போது அம்மணியக்கா தோட்டத்துல இருந்து கொய்யாக்காய் யாருக்கும் தெரியாம பொறிச்சு நம்ம எல்லொருக்கும் தானம் பண்ணிட்டு இருந்தோமே, அப்ப வளரும் அங்க இருந்திருக்கா. அவ வரும்போது கொய்யாக்காய் தீர்ந்து போச்சு. அப்ப ஆரம்பிச்ச பிரச்சினையாம் இது. அப்புறம் ஒரு நாள் எங்க தோட்டத்துல ஒரு சிவப்பு தாவணி மட்டும் கிடந்தது. எருமை மேய்க்க போறப்ப தலைக்கு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டு போயிட்டேன். அது அவளோடதாம். துவைச்சுட்டு போகும்போது மறந்துட்டு போயிட்டா. நான் ரொம்ப ஸ்டைலா எருமை மேய்க்கற அழகை எவனோ ஒரு நாதாரி போய் வளர்கிட்ட போட்டுக் குடுத்துட்டான். அன்னையிலிருந்து இந்த புகை வளர்ந்துட்டு இருக்கு. அப்புறம் நான் அவளை ரெண்டு முணு தடவை பார்த்து ரொமாண்டிக்க்கா சிரிக்க அவள் பகைக்கு நெய் ஊத்துன மாதிரி ஆயிப் போச்சு. ஆனா இதையெல்ல்லாம் சொல்லிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு, அடடா... அதுக்காகவே சாகலாம்டா...

நான்: இவனைப் போய் ஒரு வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு இருந்தா பார்ட்டி பெரிய காமெடியனா இருக்குன்னு சிரிச்சிருப்பா...

வாசு: உனக்கு நான் எப்பவுமே காமெடியந்தான். நீ பண்ணின கூத்துக்கெல்லாம் டவுசர் கிழிய அடி வாங்குனது நாந்தான்டா. அதையெல்லாம் மறந்துடாதே...

நான்: அதான் இந்த கதையை போடறன்னு சொல்லிருக்கேன்ல.

வாசு: வளர் நாம் பேசி ஒரு சமாதனத்துக்கு வருவோமான்னு கேட்டேன். நீ ஊர்ல புறம்போக்கு, உருப்படாதவன்னு பேரு வாங்கிருக்க. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்க முதல்லன்னு சொல்லிட்டு மான் மாதிரி துள்ளிக் குதிச்சிட்டு திரும்பி திரும்பி பார்த்துட்டே போனா.

நான்: அடப்பாவி, நீ காமெடியாய் ஒன்னு பண்ணி இப்ப அந்த பொண்ணு அவளோட வாழ்க்கையவே பணயம் வெக்குது. பெண்புத்தி பின்புத்தி தான்டா.

வாசு: ஆம்பிள மாதிரி நடக்கனுமே என்ன பண்ணலாம்ன்னு பார்த்தா அவங்க அம்மா முட்டி வலி முட்டி வலின்னு முனகீட்டு வீட்டை விட்டு வெளிய வராமா எல்லா வேலையையும் வளரே பார்த்துட்டு இருந்தா. எங்க வீட்டுக்கு வரப் போற மகராணி வேலைக்காரி மாதிரி இருக்கறதான்னு, நீ எங்கப்பாவுக்கு முட்டி வலின்னா போட்டுக்கங்க மாமான்னு ஒரு கிரீம் குடுத்தைல்ல, அது ஒன்னை திருடிட்டு போயி குடுத்தேன். அமெரிக்காவிலிருந்து வந்தது. உடனே கேக்கும்ன்னு சொன்னேன். இப்போ அவங்க அம்மா வெளியவெல்லாம் நடமாடறாங்க.

நான்: அது நான் மாமாவுக்கு குடுத்ததுடா...

வாசு: அடுத்த தடவை வாங்கிட்டு வர்ரப்போ ஒன்னு சேர்த்து வாங்கிட்டு வா. எங்கப்பா கணக்கு கரெக்டா வைச்சிருப்பாரு. இப்போல்லாம் வளர் என்னை எங்க பார்த்தாலும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாரு...

நான்: நீ வழியறது இங்க கொஞ்ச நேரத்துல BBC நியூஸ் ல வரப் போகுது பாரு...

வாசு: மாப்பிள்ள, வளர் வந்துட்டு இருக்காடா. நான் ஆம்பிளைன்னு நிருப்பிக்க ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

நான்: ஏதாவது பண்ணி உடனே இழுத்துட்டு ஓடிறாதா. நான் 6 மாசம் கழிச்சு வரேன், அப்போ கல்யாணம் வெச்சிக்கலாம். இப்பொ என்ன பண்ணப் போற?

வாசு: கவுத்துக்காரர் வெடைக் கோழி வளர் வீட்டு கீரைப் பாத்தியை தினமும் கிளறி விட்டுருதாம். இங்க ஒரே சண்டை. இன்னைக்கு அந்த வெடைக் கோழியும் வருது. இந்தப் பக்கம் வளரும் வர்றா.. இப்போ மட்டும் கரெக்ட்டா கல்லெடுத்து அடிச்சு அந்த கோழியோட காலை முறிச்சுட்டேன்னு வைச்சுக்க அப்புறம் கெட்டி மேளம் கெட்டி மேளம்தான். அப்படியே லைன்லயே இரு. நல்ல கல்லா பார்த்து எடுத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான்டா , இந்த கோழி இன்னைக்கோட காலி.

அய்யோ என பெருங்குரலில் வளர்மதியின் அம்மா கத்துவது போனில் கேட்டது. நாசமாப் போன நாயே, சிவனேன்னு வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தவளை அமெரிக்கா களிம்புன்னு குடுத்து என்னை நடமாடவும் விட்டு இப்படி கல்லுல அடிச்சு ஜென்மத்துக்கும் நடக்கமுடியாமா பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியா? என்பதும் கேட்டது.

அர்ச்சுனனுக்கு மரத்திலிருந்த கிளி மட்டும் தெரிந்த மாதிரி நம்ம வாசுவுக்கு வளர்மதியின் வீடு கோழிக்குப் பின்னால் இருப்பது சுத்தமாக மறந்திருந்தது. எனக்கென்னமோ அந்த ஜோசியகாரன் சொன்னதுதான் வாசு விசயத்தில் நடக்கும் போலத் தெரியுது.

7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

உதய்,

பாகம் - 1 படித்துவிட்டு ...அப்புறமா இங்கே வருகிறேன்...

said...

----நான் ரொம்ப ஸ்டைலா எருமை மேய்க்கற அழகை எவனோ ஒரு நாதாரி போய் வளர்கிட்ட போட்டுக் குடுத்துட்டான்---

:-}

ஹூம்.

கூரையேறி கோழி புடிக்க முடியாதவன்,கோபுரம் ஏறி புறா புடிக்க ஆசப் பட்ட கதை மாதிரியில்ல இருக்கு.எப்படியோ ஒரு பழமொழியப் போட்டு பின்னூட்டத்திலயும் ஒரு நேட்டிவிட்டியைக் கொண்டு வந்திட்டோம்ல.

said...

:-))

said...

பாபா, வருகைக்கும் ஸ்மைலிக்கும் ரொம்ப நன்றி! இந்த நன்றியை உங்களோட பிளாக்ல என் பிளாக்குக்கு லிங்க் குடுத்திருக்கறதுக்கும் சேர்த்து வைச்சுகுங்க:-) (இன்னைக்குத்தான் பார்த்தேன்)

said...

adapaavamey !!! (namma aatharavu vaasuku thaangana.. epavumey :-(

said...

செந்தில், பெல்ஜியம் எல்லாம் எப்படி இருக்கு? நீங்களாவது ஆதரவுன்னு சொன்னீங்களே... எல்லோரும் வாசுவை பார்த்து சிரிப்பா சிரிக்கறாங்க...

said...

<< நான்: சரி சரி... அழுகாதடா. >> நீங்க ஒரு பழுத்த பழம். அதுக்காக இவ்வளவு சீக்கிரம் அழுகறதா? பதிவு நல்லா இருக்கு..