Wednesday, August 30, 2006

என்னவெல்லாம் செய்யலாம்-2

பெரியவனாகி என்னடா செய்யப் போற? என்ற கேள்விக்கு எரோப்ளேன் ஓட்டப் போறேன் என்றானாம் பள்ளிக்குப் போகாமல் டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வீரன் மகன். ஒழுகும் மூக்கை சரியாகத் துடைக்கத் தெரியாத சுபாவுக்கு தம்பி முருகனை பார்த்துக் கொள்ளும் ஆயா வேலை. தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் இன்னும் இந்த நிலைதான்.

திராவிட குஞ்சுகள், ஆரிய வந்தேறிகள், திமுக அடிவருடி, அதிமுக ரவுடி கும்பல்,பாமக மரம் வெட்டி கட்சி, சிதம்பரத்தில் தமிழ் மறுப்பு, பெரியார், ராஜாஜி ந்னு ஆளாளுக்கு அடி பின்னி எடுத்துட்டு இருந்தாலும் சத்தமில்லாமல் உதவி செய்யும் நிறைய நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் விளம்பரங்களை விரும்பாதவர்கள். ஆனால் இதை வெளியே சொன்னால் இவர்களால் உதவி பெற்று பள்ளிக்கு செல்லும் 10 வீரன் மகன், 10 சுபா 1000 மடங்காக பெருகக்கூடும். நான் இதைப் பற்றி ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன்.

இந்த பதிவு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கானது. பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு இந்திய ரூபாயை விட அதிகம் என்பதால் அவர்களின் குறைவான பங்களிப்பும் ஒரு நிறைவான செயலை செய்து முடிக்கும். இங்கு நிறைய பேரின் முன்னோர்கள் நிச்சயம் ஒரு கிராமத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அந்த கிராமத்திற்குண்டான அடிப்படை வசதிகளில் ஒரு பங்கை நிறைவேற்றி வைக்கலாம். இன்னமும் கிராமத்தில் காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கென ஒரு பொது கழிப்பறை இல்லாத கிராமங்கள் இன்னும் நிறைய. 10 கிராமத்துக்கு ஒரு ஆரம்ப சுகதார நிலையம் இருக்கும் ஆனால் வரும் நோயாளிகள் உட்கார ஒரு பலகை இருக்காது. ஆரம்பப் பள்ளி என ஒரு கட்டிடம் இருக்கும் ஆனால் 5 வகுப்புகளுக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடக்கும்.

இதைவிடக் கொடுமை பைபாஸ் சர்ஜரி, சிறுநீரகத்தில் கோளாறு போன்ற பணம் அதிகம் செலவு வைக்கும் வியாதிகள் வருவதென்னவோ தினக்கூலிக்கு செல்பவர்களின் குழந்தைகளுக்குதான். நல்லாத்தான் விளையாடிட்டு இருந்தான் திடீர்ன்னு சாமி கூப்பிட்டுக்கிச்சி என அவர்கள் ஆற்றாமையை அடக்க முடியாமல் கடவுள் மேல் பழியைப் போடுவார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை ஒரு சிறிய அளவு பணம் ஒதுக்கி உங்களால் இயன்ற அளவு உங்கள் கிராமத்துக்கு உதவலாம். உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

6 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

நல்ல சிந்தனைகள், பதிவு உதய். நம்மால் செய்ய முடியாவிட்டாலும் அதை செய்கின்ற தொண்டு நிறுவனங்களுக்கு உதவலாம்.

said...

// திடீர்ன்னு சாமி கூப்பிட்டுக்கிச்சி என அவர்கள் ஆற்றாமையை அடக்க முடியாமல் கடவுள் மேல் பழியைப் போடுவார்கள். //
இந்த நிலமை இன்னும் இந்திய கிராமங்கள்ல இருக்கு. இத மாற்ற அடிப்படை கல்வியறிவு எல்லாருக்கும் கிடைக்க வைக்கனும். நல்ல பதிவு.

said...

உதயா.. இங்கே அவர்களை சுயசார்பாய் இருப்பதற்கான அடித்தளமான கல்விக்கு உதவுகின்றார்கள்/றோம்..

said...

செந்தில், சைட் பார்த்தேன். என் நண்பர் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன். ரொம்ப நன்றி!!!

said...

சந்தோஷ்/அனுசுயா, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!!!

said...

உதய்... அந்த குழுவை தலைமை தாங்கி நடத்துபவர் பெயரும் உதய் தான் :-) .. மேலும் விவரங்கள், கான்டாக்ட் தேவைப்பட்டால் தெரிவிக்கவும்.. பலர் எங்களுடன் சேருவதில் மிகவும் மகிழ்ச்சியே.. பல சிறு வாய்க்கால்கள் ஒன்றாக சேரச்சேர பெரும் நதியாய் நாம் மாறலாம்.. என்ன சொல்றீங்க...