பார்வைகள்
2006, ஜுன் இரண்டாம் வாரம் அது. ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டில் அட்டென்டண்ஸ் குடுத்து வந்ததால் நேரம் தவறாமல் சகாக்களுடன் வீட்டின் முன் உள்ள புளிய மரத்தினடியில் நின்று பேசி கொண்டிருந்தேன்.என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. திடீரென பாட்டிக்கு காய்ச்சல் அதிகமாகி விட்டதால் டாக்டரை வீட்டுக்கு வரச் சொல்லாம் என கட்டியிருந்த லுங்கியுடன் கிளம்பி விட்டேன்.
அப்போது இரவு 8 மணி. டாக்டர் கிளீனிக்குக்கு 1 கிலோமீட்டர் போக வேண்டும். டாக்டரை பற்றி ஒரு சின்ன முன்னுரை. எங்கள் ஊருக்கு 15 வருடமாக சிகிச்சை அளிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் (எனக்கு உடம்பு சரியில்லைன்னா பாட்டிதான், டாக்டர் எல்லாம் கிடையாது). ஆனால் அவர் முழு நேர அலுவல் பெருந்துறை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியும்.
கிளீனிக்குக்கு போன பொழுது டாக்டர் உள்ளே ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டரின் மகள் நிறைய சாக்லெட் வைத்துக் கொண்டு உக்கார்ந்திருந்ததால் என்ன பிறந்த நாளா என கேட்டேன். இல்லை 10 ம் வகுப்பில் 1010 மார்க் எடுத்திருக்கேன் அதுக்கு என்றாள். ரொம்ப சந்தோசம் எந்த ஸ்கூல், எந்த குரூப் என கேட்பதற்க்குள் டாக்டர் என்ன வீட்டுக்கு போலாமா என கேட்டுக் கொண்டே வெளியே வந்தார். என்ன டாக்டர் உங்களை மாதிரியே டாக்டருக்கு படிக்க வைக்க போகிறீர்களா என சொல்லிவிட்டு நான் என் நிலைமையை சொன்னேன்.
என்னப்பா, வீட்டுக்கு போகும் நேரத்துல இந்த மாதிரின்னு என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். டாக்டர், இது உங்களுக்கு புதுசில்லை ஆனால் எஙக பாட்டிக்கு புதுசு... வீட்டுக்கு போற வழிதானே பார்த்துட்டு போலாமே என்றேன். 15 வருடமாக எங்கள் ஏரியாவில் மருத்துவம் செய்து கொண்டு இருந்தாலும் எங்கள் வீட்டுக்கு வழி தெரியாது என்றதால் வழி சொல்லிவிட்டு வீட்டுக்கு முன்னே போனேன்.
எங்கள் பழைய வீட்டை இடித்துக்கட்டி 2 வருடம் ஆகிறது. வீடு கட்டும் பொழுது நான் அருகில் இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதை எல்லாம் வைத்து வீட்டை என் மனதில் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஒரு வருடத்துக்கு முன் வீட்டிற்க்கு சென்ற பொழுது என் கற்பனைக்கும் வீட்டுக்கும் நிறைய இடைவெளி இருந்ததால் அது சரியில்லை இது சரியில்லை என ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன்.
எங்க வீட்டுக்கு பெரிய கேட் இருக்கும். என்ன பெயின்ட் அடிப்பதுன்னு பெரிய பட்டிமன்றமே நடத்தி கருப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்திருந்தோம். அதுவரைக்கும் வீட்டில் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது என்ன இது கேட்டுக்கு கருப்பு பெய்ண்ட் என்று கேட்டதில் எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் (அவர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை இப்பொழுது யாரும் குறை சொல்வதில்லையாதலால்). டாக்டர் காரை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு சொன்ன முதல் வார்த்தை கேட் ரொம்ப நல்லா இருக்கு, அதுவும் இந்த கருப்பு மஞ்சள் காம்பினேஷன் ரொம்ப இருக்குன்னு சொல்லிட்டே வீட்டுக்குள் வந்தார்.
பாட்டிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே வீட்டை நன்கு பார்த்துக் கொண்டிருந்தார். அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்குன்னு சொன்னவர் கடைசியாக வரிசையாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்தார். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதை தொகுப்பு, Da Vinci Code, A monk who sold his Ferrari, Angels and Demons, The Alchemist என கலந்து இருந்ததை பார்த்து இதெல்லாம் யாரு இந்த கிராமத்தில படிக்கிறதுன்னு கேட்டார்.
எல்லாம் எஙக பையன்தான்னு பாட்டி சொன்னாங்க. அதுவரை என்னிடம் சரியாக பேசாத டாக்டர் திரும்பி, நீ என்னப்பா படித்திருக்கிறாய் என கேட்டார். என்ஜினியரிங் என்று சொல்லியதும், அதை படிச்சிட்டு இந்த கிராமத்துல என்ன பண்ணிட்டு இருக்கிறாய் என ஆச்சர்யமாக கேட்டார். இல்லைங்க, பெங்களூரில் இருக்கிறேன், வார இறுதியில் ஊருக்கு வந்துவிடுவேன் என்று சொன்னதும், வார வாரம் வர்றியே, சாப்ட்வேரா கம்பெனியிலயா இருக்க? என கேட்க ஆம் என் சொன்னேன். திரும்பவும் ஆச்சர்யபட்டார். டாக்டர் ரொம்ப ஆச்சர்ய படாதீங்க, உங்க உடம்புக்கு ஒத்துக்காது என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
உன் உடையை பார்த்து உன்னை நான் தவறாக நினைத்துவிட்டேன். என் பார்வையை நான் சரி செய்து கொள்ளவேண்டும் என்றார். நீங்களும் இந்த வீட்டை பற்றிய என் பார்வையை சரி செய்துவீட்டீர்கள். இங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பார்த்து கட்டிய வீட்டை அது சரியில்லை இது சரியில்லை என எதாவது நொல்லை சொல்லிக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவருடைய பார்வையும் அது வைக்கும் அளவுகோலும் வித்தியாசம். என்னுடையதுதான் பெருசு என்பதில்தான் பிரச்சினை. இப்போ இதை புரிஞ்சிக்கிட்டதால இனி மேல் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். எங்கள் வீட்டில் அனைவரது முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.
2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
Romba correct.
sila vizhayangal mattavanga sonna appuram dan namakke adoda arumai terium.
வருகைக்கு நன்றி! இந்த மாதிரி நிறைய தருணங்கள் என் பார்வையை மாற்றி இருந்தாலும் இதை மட்டும் ஏனோ சொல்லத் தோணுச்சு....
Post a Comment