Sunday, December 31, 2006

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

- வேதாத்ரி மகரிஷி.

Monday, December 25, 2006

ஓற்றை முடி

என்னை என்னால்
நம்ப முடியவில்லை
என் முகத்தை பார்க்கவே
எனக்கு பிடிக்கவில்லை.
தினமும் உபயோகித்த
ஞாபகம் இருக்கிறது.

கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?
அப்படியே மறைத்து
விட்டால்...
இல்லை கல்யாணத்துக்கு
முன்னால் சொல்லி விட்டால்...

-என் தலையில்
ஒற்றை வெள்ளை முடி!

Sunday, December 24, 2006

போய் வா!!!

என் வெற்றி
என் அழுகை
என் கோபம்
என் இயலாமை
என் சோகங்கள்
என் காதல்கள்

உன்னுடன் ஒத்துப் போகாதபோது
உன் செல்லச் சிணுங்கல்கள்
உன்னுடனான சின்னச் சண்டைகள்
உன்னால் சுருங்கிய
உறவுகளும் நட்பு வட்டங்களும்
உன்னால் குறைந்துபோன
தொலைபேசி
உரையாடல்கள்...

முகம் பார்த்து சிரிக்க மறந்து
சாட்டிங்கில் சிரிப்பு முகம்
காட்ட வைத்த உன்
கஞ்சத்தனம்...

அத்தனையையும்
கூட இருந்த
அமைதியாய் பார்த்தாய்
நீ...

நான் இழுத்த இழுப்புக்கு வராமல்
உன் பின்னால் என்னை
அலைய வைத்தாய்
ஒவ்வொரு முறையும்
ஜெயித்தது நீதான்...

என்னோடு நீ இருந்த
ஒவ்வொரு நாட்களும்
மறக்க முடியாதடி...

போய் வா 2006.

Thursday, November 23, 2006

வருத்தப்படாத வாலிபர்கள்

சம்பவம் 1:

வாலிபன் 1: மாப்பிள, எனக்கு கல்யாணம்.
வாலிபன் 2: உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா???
வாலிபன் 1: லவ்டா, இது லவ்டா...
வாலிபன் 2: அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை?
வாலிபன் 1: இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...
வாலிபன் 2: அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???
வாலிபன் 1: உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...
வாலிபன் 2:சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்பார்க்காதே...
வாலிபன் 1: !#$%^&*()

சம்பவம் 2:

முருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.

வாலிபர்: ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பெண்: என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.
வாலிபர்: நான் கன்சல்டன்டா இருக்கேன்.
பெண்: ஓ, அப்படியா???
வாலிபர்: MBBS ன்னா??? நர்ஸா???
பெண்:)(*&^%#$%^&*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...

கடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.

Thursday, November 16, 2006

குடைக்குள் மழை

வாசல் வரை வந்து
வழியனுப்பு விழா,
காருக்குள் அமர்ந்ததும்
உன் பறக்கும் முத்தம்,
என்னுடன் கை கோர்த்து
ஏரிக்கரையில்
நடை பயணம்...
செல்லச் சண்டையில்
மண்டையில் கொட்டு....

ஏய் பிசாசே,
யார் கண்ணுக்கும் தெரியாமல்
எனக்கு மட்டும் தெரியும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்?

Tuesday, November 14, 2006

தூக்கம் தொலைக்கும் இரவுகள்

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்??

Thursday, October 19, 2006

பொங்கல்

எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.

ஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்துக்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

ஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.

எங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.

என்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.

மார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.

அடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் "நாங்கெல்லாம் அந்த காலத்துல" என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Monday, October 16, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006

1. காலையில் வேட்பாளரின்
ஆவேச முழக்கம்
"சாதிகள் இல்லையடா மடையா".
இரவில் பக்கத்து ஊருக்கு
கூடுதல் பணப் பட்டுவாடா
அது வேறு சாதிக்காரர்கள்
இருக்கும் ஊராம்...

2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்
"ஸ்காட்ச்" உடன் ஊறுகாய்,
பழசை மறக்க மாட்டாராம் தலைவர்.

3. அனைத்து வேட்பாளர்களிடமும்
பணம் வாங்கியாயிற்று
யாருக்கு போடப் போகிறாய் ஓட்டு?
கேட்ட மனைவியிடம் சொன்னான்,
எல்லோருக்குந்தான்...
இவனுக ஜெயிச்சா
நாடு உருப்படவா போகுது.

Wednesday, September 27, 2006

தென்றல் வந்து தீண்டும் போது

நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...

நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.

கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.

கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...

http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

Saturday, September 23, 2006

ஏன்? எதற்கு? எப்படி???-2

Part 1

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன். இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?

2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே, இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா?

3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே, அது ஏன்?

4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே, அது ஏன்?

5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?

6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே, உண்மையா அதை படிக்கறீங்களா, இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா?

7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???

8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே, தனியா கோர்ஸ் போவீங்களா???

9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே, நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா?

10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே, இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா?

பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப்!!!

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!

தினமும் இங்க எட்டிப் பார்த்துட்டு போற 53 நல்ல உள்ளங்களே,

இப்படி இருந்த நான்



இப்படி ஆயிட்டேன்:-(


திரும்ப பழையபடி திரும்ப எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை. அதுவரை நீங்கெல்லாம் சந்தோஷமா இருங்க...

Monday, September 18, 2006

ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...

மகன்: ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?

அம்மா: இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?

மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???

அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?

மகன்: வீட்லதான்மா இருக்கேன். அக்கா, சித்தி, மாமா எல்லோருக்கும் போன் பண்ணிட்டேன். இன்னைக்கு நீதான் கடைசி. அப்புறம் என்ன நடக்குது அங்க?

அம்மா:இங்க ஒன்னும் இல்ல, திருப்பூர் போய்ட்டு வந்தேன். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா. உன்னைய பார்க்கணும்னார், ஒரு தடவைதான் அங்க போன் பண்ணேன்டா???

மகன்: முந்தா நேத்து மாமா செல்லுக்கு பண்ணுனேன்மா, அப்போ அவர் வெளிய இருந்தார். சரி, இன்னைக்கு பண்ணறேன்.

அம்மா: ரேவதி வந்து 2000 பணம் வாங்கிட்டு போனா. அவ குழந்தைக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

மகன்: ஏம்மா, போன மாசம் கூட பணம் குடுத்ததா சொன்ன? இப்படியே வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் குடுத்துட்டே இருக்கே? உன்னைய எல்லோரும் நல்லா ஏமாத்துறாங்க...

அம்மா: போடா, உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான். நானும் ரெண்டு பேரை பெத்து வளர்த்திருக்கேன், எனக்கு தெரியும்டா... அந்த குழந்தை நல்லா பெருசாச்சுன்னா அந்த புண்ணியம் எல்லாம் யாருக்கு??? எல்லாம் உங்களுக்குத்தான்...

மகன்: இதையே நீயும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கே, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல.

அம்மா: சரி, நீ என்ன பண்ணுன இந்த வாரம்?

மகன்: ஆபிஸ்... வீடு... இப்படியே 5 தடவை சொல்லு. அப்புறம் நேத்து முழுசா தூங்கினேன். அவ்வளவுதான்.

அம்மா: அதுக்கு நீ பெங்களூரிலயே இருந்துருக்கலாம், வாரா வாரம் ஊருக்காவது வந்துட்டு போயிட்டு இருப்பே...

மகன்: சரிம்ம்ம்ம்ம்மா..... வேற ஏதாவது சொல்லு.

அம்மா: சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன?

மகன்: நானே சமைச்சுக்கறேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உன்னோட அல்சர் இப்போ எப்படி இருக்கு?

அம்மா: அதை விடு, அது அப்படியேதான் இருக்கு. அத்தை சந்தியாவுக்கு 10 பவுன்ல கல்லு வைச்ச ஆரம் எடுத்திருக்கா. நானும் கூடப் போயிருந்தேன். அக்காவுக்குத்தான் அது மாதிரி ஒன்னு வாங்கி குடேன்டா...

மகன்: ஏம்மா 6 மாசம் முன்னாடிதான் அவ கிட்ட அது ஒன்னுதான் இல்லைன்னு வாங்கி குடுத்த... உங்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்.

அம்மா: டேய், அது உங்க அக்கா மகளுக்குடா...

மகன்: என்னது, அந்த நண்டுக்கா? அதைப் போட்டுட்டு நடந்தா அவ கீழ விழுந்துடுவாம்மா... மொத்தத்துல உனக்கு ஏதாவது மகளுக்கு சீதனமா குடுத்துடே இருக்கணும்... நீ நடத்து...

அம்மா: பையனுக்கு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்ன்னு கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.

மகன்: நீதான் ரெடிமேடா வெச்சிருப்பியே, என் பையன் இன்னும் குழந்தை மாதிரின்னு... அதையே சொல்ல வேண்டியதுதானே?

அம்மா: குரு பலன் 29 வரைக்கும் இல்லை, அப்புறந்தான் பார்க்கணும்ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் நம்பற மாதிரி இல்லை. பையனே பார்த்துட்டு இருக்கான்னு சொல்லிட்டேன்.. இப்போ பேச்சே இல்லை. சுதந்திரமா வெளிய போயிட்டு வர முடியுது.

மகன்: நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.

அம்மா:(சிரிப்புடன்)எல்லாம் நல்லபடியா நடக்கும். எம் பையனைப் பத்தி எனக்கு தெரியாதா?

மகன்: சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...

அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?

மகன்: இல்லம்மா... எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசிக்கிறேன்.

அம்மா: எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தைதான் பேசேன். ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?

மகன்: வச்சுர்றேன்...

Sunday, September 10, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

இரவு மணி 8. பஸ்ஸிலிருந்து இறங்கி 10 நிமிடம் வீட்டுக்கு நடக்க வேண்டும். வழக்கம் போல் விளக்குக் கம்பம் விளக்கில்லாமல் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. போன வாரம் பெய்த மழையில் ரோடு எது குழி எது என தெரியாமால் எல்லா இடமும் குழியாக இருந்தது. என்னிடமிருப்பதோ நம்பரெல்லாம் அழிந்து போன ஒரு பழைய நோக்கியா 1108, அதிலிருக்கும் வெளிச்சத்தை வைத்து சமாளித்துக் கொண்டே போய் விடலாம். "ஏன்டா, அந்த போனைத்தான் தூக்கி போட்டுட்டு வேற வாங்குறது? இன்னும் அதை கட்டிட்டு அழுதுட்டு இருக்கே..." என யாராவது திட்டினால் "இதை வாங்கி அவ ஒரு தடவை பேசினா... நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன்" என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.

இருட்டாய் வேறு இருக்கிறது, துணைக்கு யாராவது வந்தால் பேசிட்டே போயிடலாம். இல்லை, யாராவது வந்தால் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? என கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். என்னைத் தவிர ரோட்டில் வேறு யாரும் இல்லை. யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான். நான் எப்போ மிஸ்ஸுடு கால் விட்டாலும் பொறுப்பாய் போன் பண்ணும் சீனிக்கு போன் பண்ணினேன். ஒன்னு, ரெண்டு என எண்ணி மூனாவது ரிங்கில் கட் பண்ணினேன். ஒரு வண்டி மெயின் ரோடில் இருந்து நான் இருந்த ரோட்டுக்கு திரும்பியதை பார்த்ததும் நான் இன்னும் 2 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என என் உள்ளுணர்வு சொல்லியது.

நான் கையை ஆட்டி அந்த வண்டியை நிறுத்துவதற்க்கும் சீனியின் கால் வருவதற்க்கும் சரியாய் இருந்தது. "சீனி, ஒரு முக்கியாமானவங்க வந்திருக்காங்க, நானே உனக்கு அப்புறம் போன் பண்ணரேன்" என போனை கட் செய்தேன். நிமிர்ந்து பார்த்தால் வண்டியில் 2 பேர் உக்கார்ந்திருந்தார்கள். அடடா, கால் பண்ணின சீனியையும் கட் பண்ணியாச்சு, இனி வேற யாரையாவதுதான் கூப்பிட வேண்டும் என நடக்க ஆரம்பித்ததும் "சார், மலர் ஹாஸ்பிடல் எப்படி போகணும்?" என வண்டியிலிருந்தவன் கேட்டான். "அதுக்கு மெயின் ரோட்டில் போகணும், 10 கிலோ மீட்டர் வரும்" என பேச்சை முடித்தேன்.

"இல்லைங்க, பிரெண்டுக்கு அடிபட்டிருக்குங்க. இதுல போனா சீக்கிரம் போகலாம்ன்னு சொன்னாங்க ,அதான் வந்தோம்..." என பரிதாபமாக சொன்னான். நான் இந்த ஏரியாவிலதான் ரொம்ப நாளா இருக்கேன், அப்படியெல்லாம் ஒரு வழியும் கிடையாது. பையன் தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்துட்டானா, இல்லை..." என நான் எனக்கே உண்டான ஆர்வக் கோளாறில் இழுத்த போது "அவன் கூட யாரும் இல்லைங்க, நாங்க போய் சேர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் பிடிக்கும். என் போன்ல பேலன்ஸ் இல்லை,பக்கத்துலையும் ஒரு பூத் இல்லை, உங்க போனை குடுத்தீங்கன்னா ஒரே ஒரு கால் பண்ணிட்டு குடுத்திடுவேன்" என பின்னால் இருந்தவன் கேட்டான்.

"ஆபத்துக்கு உதாவாதவன் எல்லாம் மனுஷனே இல்லை, இந்தாங்க போன்" என பின்னாலிருந்தவனிடம் குடுத்தேன். "டேய், வண்டியை ஓரமா நிறுத்து. பேசிட்டு அப்புறம் போலாம்" என பின்னாலிருந்தவன் சொன்னவுடன் ஒரு யு டர்ன் எடுத்து மெயின் ரோட்டைப் பார்த்து வண்டியை நிறுத்துவது மாதிரி நிறுத்தி வண்டியை விரட்டி சிட்டாய் பறந்தான். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் அவர்கள் மெயின் ரோட்டிற்க்கு அருகில் இருந்தார்கள். என் போன், பேலன்ஸ் 200 ரூபாய் என் கண் முன்னே காணாமல் போய் கொண்டிருந்தது. மெயின் ரோட்டின் விளக்கு வெளிச்சத்தை தொட்டவுடன் வண்டி திரும்பவும் என்னைப் பார்த்து திரும்பியது.

எனக்கு தெளிவாக தெரிந்தது மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகப் போவது நான்தான் என்று. 10 காசுக்கு தேறாத போனுக்கு எங்களை இவ்வளவு பொய் சொல்ல வெச்சுட்டியேன்னு பைக் பார்ட்டிகள் வந்து மிதிக்கப் போறாங்கன்னு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். என் உள்ளுணர்வு சொல்லியபடி 2வது நிமிடத்தில் வீட்டிலிருந்தேன்.

Saturday, September 09, 2006

ஒரு பயணக் குறிப்பு

3 நாள் கண்காணாத எடத்துக்குப் போய் தொலைஞ்சு போயிட வேணும்ங்கற எண்ணம் எல்லோருக்கும் இருந்துட்டே இருந்தது. ஒருத்தன்தான் வண்டி ஒட்டும் முடிவில் இருந்தோம். ஆனால கார் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் SUV (SUV க்கும் எங்களுக்குமான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை) மட்டுந்தான் என்று சொன்னதும் பாதுகாப்பு கருதி என்னையும் டிரைவராக சேர்த்து வண்டியை வாடைகைக்கு எடுத்தோம்.

நைட் ஒரு மணிக்கு புறப்பட்டு கிண்டல், கேலி, குத்துப் பாட்டு என கீரின் பே தாண்டியதும் வண்டி நான் ஓட்ட ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கப்புறம் வண்டி ஓட்டுவதால் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டினேன்.

020 Munising 009

காலங்கார்த்தால போட்டோ எடுக்குறோம்ன்னு வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுத்து வழியை தவற விட்டு அப்புறம் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தோம். 54 மைலுக்கு ஒரே நேர்கோடாய் ஒரு ரோடு (H13).

020 Munising 028

Munising போய் சேர்ந்ததும் முதலில் முகத்தில் அறைந்தது நீர்தான். அழுகின முட்டையை யாரோ தண்ணியில் கலந்து விட்டது மாதிரியான வாசம். அழுது கொண்டே குளித்து முடித்தேன். உலகிலேயே மிகப் பெரிய தூய நீர் ஏரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சுத்தமான நீர் இல்லை என்பது அமெரிக்காவிலும் இருக்கிறது. படம் போடும் பாறைகளைப்(Pictured Rocks) பார்த்து விட்டு திரும்பும்போது ஒரு உலக சாதனை சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருந்தது. 50 நிமிடங்களில் 150 போட்டோ (ஒரு நிமிஷத்துக்கு 3) என அடித்து தள்ளிவிட்டு அப்பாடா என உக்கார்ந்தோம்.

020 Munising 154

மதியம் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு போனது Au Sable Light Station. இதுக்கு ஒரு மைல் நடக்க வேண்டும். போகும் வழியில் தரகரிடம் குடுக்க ரெண்டு மூணு போட்டோ எடுத்துட்டு கலங்கரை விளக்குக்குப் போனால் மேலே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேர்ல பார்த்ததை விட இந்த போட்டோல இன்னும் நல்லா வந்திருக்கு.

020 Munising 207

அப்புறம் காட்டுப் பாதையில் போய் சேர்ந்த இடம் Log Slide. மக்கள் அந்த காலத்துல மரத்தை வெட்டி வெட்டி இந்த வழியாத்தான் அமெரிக்காவின் மத்த பாகங்களுக்கு கொண்டு போனாங்க. இயற்கையான ஒரு அமைப்பை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி காடுகளையெல்லாம் மொட்டையடிச்சாங்க. என்ன சந்தோஷம்னா காடுகள் இன்னமும் அப்படியேதான் இருக்கு.

020 Munising 227

Log Slide ல இருந்துட்டே Grand Sable Banks and Dunes பார்த்தோம். எங்க ஊரு ஏரியில இந்த பக்கமிருந்து கத்துன அந்த பக்கம் கேக்கும். ஆனால், அவ்வளவு பெரிய ஏரி, அதுக்கு பக்கத்தில் மணல் மேடு, அடர்ந்த காடு ன்னு விசித்திரமா இருந்தது லேக் சுப்பிரீயர்.

020 Munising 220

அடுத்த பார்த்தது Sable Falls. என்ன இருந்தாலும் குற்றாலம், அதிரப்பள்ளி அருவி மாதிரி வருமா? னெல்லாம் ஒப்பீடு செய்யாமல் அழகை அனுபவிக்க மட்டும் செய்தோம்.

Munising 153

எட்டு மணிக்கு சூரியன் உள்ளே போய் வானத்தில் கலர் கோலம் மட்டும் மீதி இருந்தது. அதையும் கேமராவில் அடைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

Munising 169

விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு.

020 Munising 251

காலையில் எழுந்து Mackinac Island போனோம். ஒரு சாதரண தீவை ரொம்ப ஏத்தி விட்டிருக்காங்க. ஒரு நாள் ஓடுனதே தெரியவில்லை.

020 Munising 401

மூனாவது நாள் திரும்ப Munising. Wagner falls, Munising Falls, Miners Falls பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பினோம்.

Munising 261

Munising 270

020 Munising 4532

எல்லோரும் எடுத்த 850 போட்டோல எதைப் போடுவது எதை போட வேண்டாம் என்பதில்தான் குழப்பம் வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு இதைப் போட...

செப்டெம்பர் 10, 2006 ஞாயிறு:

நெட்டில் இருந்து சுட்டதா என சூடாக சந்தேகம் வரும் என்பதால் என் படம் ஒன்னையும் வெட்டிப்பயலின் வார்த்தைக்காக இணைக்கிறேன்.

020 Munising 4451

Wednesday, September 06, 2006

ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!

"படம் போடும் பாறைகள் (Pictured Rocks, Munising, MI, USA) - ஒரு பாமரனின் பயணக் குறிப்பு"ன்னு எழுதிட்டு இருந்தேன்.தமிழோவியத்தில் இந்த வாரம் என்னா இருக்குன்ன்னு பார்த்தா என் கதை!!!

இந்த கதை எப்படி தமிழோவியத்துக்குப் போச்சு அப்படிங்கறதே ஒரு பெரிய கதை... நிலா உறவுன்னு தேன்கூடு போட்டிக்கு தலைப்பு குடுத்தாலும் குடுத்தாங்க நானும் ஒரு கதையை நாலு மணி நேரம் உக்கார்ந்து ரெடி பண்ணி பிளாக்ல போட்டு நண்பன் ஒருத்தன் கிட்ட எப்படிடா இருக்குன்னு கேட்டா "இதை அனுப்ப போறீயா?" ன்னு கேட்டான். ரைட்டோய், அவ்வளவுதான் நம்ம கதைக்கு ஆயுசுன்னு உடனே தூக்கி குப்பையில போட்டுட்டு வேலையப் பார்த்துட்டு இருந்தேன்.

என்ன இருந்தாலும் நானே எழுதுனது, பத்தோட பதினொன்னா இதுவும் என் பிளாக்கை அலங்கரிக்கட்டும்ன்னு ஒரு வாரம் கழித்து குப்பைத் தொட்டியில் இருந்து தூசி தட்டி எடுத்து போடலாம்னா அங்க பாபா எல்லோரையும் வரிசையா நிக்க வைச்சு லெப்ட், ரைட், மேல, கீழ ன்னு பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருந்தாரு... அவரு சொன்னதுக்கு அப்புறம்தான் என் கதையை படிச்சி பார்த்தேன் (நாங்கெல்லாம் எழுத மட்டுந்தான் செய்வோம், படிக்கறதுதான் உங்க தலையெழுத்து) அப்படியே கதிர் படம் மாதிரி இருந்தது. கதிர் படமாவது தியேட்டர் வரைக்கும் வரும், என் கதைக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. இதை மட்டும் போட்டோம் நம்ம கதைக்குத்தான் அவர் போடும் முதல் 0 ன்னு நினைச்சிட்டு (சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...) ன்னு திரும்ப வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

ஆடுன காலும் பாடுன வாயும் தான் சும்மா இருக்காதே... ஏதாவது இணைய இதழுக்கு அனுப்பி வைப்போம்ன்னு தமிழோவியத்துக்கு "வறுமையில் வாடும் புலவன் நான், ஏதாவது போட்டுக் குடுங்கன்னு" ரொம்ப டீசண்ட்டா பிச்சை எடுத்திருந்தேன். அவங்களும் பரிதாபப்பட்டு (இன்னமும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்னையும் எழுத்தாளராக்கிட்டாங்க... உங்க தலையெழுத்து, நான் என்னங்க பண்ண முடியும்???

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணி தள்ளிட்டாங்க. நான் வேற தனியா சொல்லணுமா என்ன??? இது நாங்க வேட்டையாடு விளையாடு படத்துக்கு போய் வந்த பயணக் கட்டுரை.

தமிழ் படம் எதுவும் எங்க ஊர்ல ரிலீஸ் பண்ண மாட்டாங்க (அருள் மட்டும் ஆச்சு, பாய்ஸ், விருமாண்டி ரெண்டும் பக்கத்து ஊர்ல ஆச்சு) நாங்க சிகாகோக்கு வண்டி கட்டிட்டு போய்த்தான் படம் பார்ப்போம். தமிழ் மக்கள் யாருக்கு நியூஸ் கிடைச்சாலும் உடனே கூட்டம் போட்டு யாரு கார்ல யாரு, எத்தனை மணி ஷோ ந்னு கிளம்பி போய்ட்டு நிதானமா ஊர் சுத்திட்டு வருவோம். இப்போ கூட்டம் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதானால தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு நாங்க நாலு பேரு கிளம்பறதா முடிவு பண்ணிட்டோம். ஒரு புது நண்பர் நான் வர்றப்ப மட்டும் உங்களோட வரட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டு நாங்க வண்டியை கிளப்பினோம்.

அந்த தியேட்டரில் அதுதான் நாங்க பார்க்கும் முதல் தமிழ் படம் அதனால வழி மாறிட கூடாதுன்னு உஷாரா ரோட்டையே பார்த்துட்டு இருந்ததுல பெருசா ஒன்னும் பேசிக்கவே இல்லை. தியேட்டரில நிறைய நம்மூர்காரங்களை பார்த்தவுடனே எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு கூட வந்த ஒரு பட்சி சிறகடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதை அமைதிப்படுத்தறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. தியேட்டரில் இருந்து சிவாவுக்கு ஃபோன் போட்டு படத்து வந்தால் சிகாகோவில் வலைப்பதிவர் மாநாடுன்னு ஒரு பதிவு போடலாம்னா அவர் வர முடியாத நிலைய சொன்னார்.

கூட்டத்துல அடிச்சு புடிச்சு உள்ள போயி உக்கார்ந்து படம் ஆரம்பிச்சது முதல் சின்ன சின்ன ஜோக்குகளை ரசிச்சுட்டும், கமெண்ட் அடிச்சிட்டும் விளையாட்ட போயிடுச்சு முதல் பாதி. பொண்ணு யாரு மாதிரி வேணும்ன்னு கேட்டா கமலினி மாதிரின்னு கமலினியைப் பார்த்த முதல் ஷாட்டிலேயே முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கதாநாயகியை பார்க்கும் போதும் நினைச்சுக்கறது, ம்ம்ம்ம்....... நீங்க இதை கண்டுக்காதீங்க. ஏன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்திருக்கும் என அமெரிக்கா தொடர்பான சில தேவையில்லாத காட்சிகளைப் பற்றி இடைவேளையில் ஒரு குட்டி விவாதம் பண்ணிட்டு ரெண்டாவது பாதி பார்க்க உக்கர்ந்த்தா அது கொஞ்சம் சோதனையாத்தான் இருந்தது.

பரவாயில்லை, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தால் அந்த புது நண்பர் வந்து சேர்ந்திருந்தார். எல்லோரடையும் அறிமுகப் படலம் முடிந்தவுடன் ரெண்டாவது பாதி உக்கார முடியலை என ஆரம்பித்து வைத்தார். காரில் அப்படியே ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொரு காட்சியாக எல்லோரும் அலசி காயப் போட்டோம். இந்த படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள், சப் டைட்டில் இருந்தாலும் மக்களை ரீச் ஆகாது. A சென்டர் மக்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும், கட்டாயம் அங்க ஒடும் என சொல்லி முடித்தார். பேசறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அவங்கவங்க மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருந்தப்போ என்னைய பார்த்து "உங்களுக்கு படம் புடிச்சிருக்கா?" ந்னு கேட்டார்.

நான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ என் மூளையில் ஒரு ஃபிளாஷ்... அப்போ நான் A சென்டரா??? என மனசுக்குள் நினைத்தது வாயிலும் வந்துருச்சு. பசங்க எல்லோரும் சிரிச்ச சிரிப்புக்கு புது நண்பருக்கு அர்த்தம் புரியலை. பாஸ், சந்துல அவன் ஊரை சிட்டின்னு சொல்லிக்கிறான். பாவம், அவந்தான் என்ன பண்ணுவான், இப்படியாவாது அவன் ஊரை சிட்டின்னு மாத்திக்கட்டும்ன்னாங்க... மனசுக்குள்ள மட்டும் சொல்லிருந்தா போன பதிவோட டைட்டிலை மனசுக்குள்ள சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாம நம்ம சொந்த ஊரு ரொம்ப மாறிடுச்சுன்னா நாம அன்னியப்பட்டு போயிடுவம்ல... எப்பவும் நாம் நினைக்கறதா நடக்குது????

மூணு நாளைக்கு லீவு... அடுத்ததும் பயணக் கட்டுரைதான்... லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன். மத்த நாலையும் ஏற்கனவே பார்த்தச்சு, இது ஒன்னுதான் பாக்கி...

Thursday, August 31, 2006

நானாத்தான் நாறீட்டனா???

என்னவெல்லாம் செய்யலாம்ன்னு 5 மாசத்துக்கு முன்னாடி ஒன்னு எழுதினேன். ரொம்பக் குறைவான பேருதான் படிச்சிருப்பாங்க. சரி மிச்ச நச்சமிருக்கிறதையும் போட்டுருவோம்ன்னு போட்டா இப்பவும் கொஞ்சம் பேருதான் படிச்சிருக்காங்க. என்னடா எழவு இதுன்னு என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தா ஒன்னு நான் நாறுன மாதிரி இருக்குற பதிவு இல்லைன்னா நாறுனது நாந்தான்னு நெனைச்சுட்டு கமெண்ட் வாங்கின பதிவுதான் ரொம்ப அதிகமாயிருந்தது. ஓ, அப்ப நானாத்தான் நாறிட்டு இருக்கேனா? காமெடியன் சொல்லறதையெல்லாம் மக்கள் காதுல வாங்கிக்க மாட்டோங்களோ? ந்னு வேலைய பார்த்துட்டு இருந்தேன். இப்படி நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இந்த 2005 சனிப் பெயர்ச்சிக்கு அப்புறம் வந்ததா இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். எங்க ஊரு கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். பக்கத்து ஊரு பசங்களுக்கும் எங்க ஊரு பசங்களுக்கும் மேட்ச். மத்தியானம் மொட்டை வெயிலில் கருப்பராயன் கோவில் குதிரைக்கு கீழே ஒண்டி உக்கார்ந்துட்டு இருந்தோம். வந்த பக்கத்து ஊரு பசங்க நேரா வந்து என்ன எங்களுக்கு பயந்துட்டு இப்படி உக்கார்ந்து இருக்கீங்களான்னு லந்து பண்ணவுடனே செந்திலுக்கு வந்ததே கோவம்,தைரியமான பசங்களா இருந்தா பேட்ல பேசுங்கடா, தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். பக்கத்து ஊரு பசங்க கொஞ்சம் கலவரமாயிட்டாங்க.

சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது. பேட்டிங் நாங்கன்னு சொல்லிட்டு வந்து செந்திலை பேட் புடிக்க சொன்னா எனக்கு கை ஈரமா இருக்கு, நீதான் சிக்ஸர் சிக்ஸரா அடிப்பியே நீயே முதல்ல ஆடுன்னு சொன்னான். எனக்கு தரைக்கு மேலெ ஓரடி பறக்கிற மாதிரி இருந்தது.

அதே வேகத்தில் பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு தொலைஞ்சிங்கடா என கர்ஜனை பண்ணீட்டு உள்ளே போனா ரொம்ப தூரத்தில் ஒருத்தன் பந்தோட நின்னுட்டு இருந்தான். எதுக்குடா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து பந்தை வீசி, ம்ம்ம்ம்??? அதெப்படியும் கலர் தோட்டத்துக்குள்ள நான் அடிச்சா போகப் போகுது. அலட்டிக்காம பக்கதிலிருந்து வீசுன்னு அவனை காமெடி பண்ணியதில் அவன் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லாம் பயம் என சிரிச்சிட்டே பந்தை அடிக்க தயாரானேன். முதல் பந்து நடு பிட்ச்சில் குத்தி லட்டு மாதிரி பேட்டுக்கு வந்தது. தூக்கி அடிச்சா பந்து நேர மேல மேல போயிட்டு நேர பந்து வீசினவன் கையிலயே விழுந்தது.

உணர்ச்சிவசப்பட்டு பேட்டை ரொம்ப ஓவரா தூக்கிட்டமே என தலையை தொங்க போட்டுட்டு வெளிய வரும் போது "முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.


மொத்தம் 27 ரன், அவ்வளவுதான். ஏன்டா போறவன் எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு அவுட் ஆகறீங்க, நின்னு விளையாடுங்கடான்னா பொடி சுடுதுடா, உள்ளையெல்லாம் ரொம்ப நேரம் நிக்க முடியலைன்னு நொள்ளை சொன்னாங்க. சரி வாங்கடா அவனுகளையும் அப்படியே உருட்டி எறிஞ்சிறலாம்ன்னு முதல் ஓவரை வீசப் போனேன். வேகமாக வந்து பந்தை எரிந்ததில் பேட்ஸ்மேன் தலைக்கு மேலெ பறந்த பந்து கீப்பரை ஒரு சாத்து சாத்திருந்தது. ரெண்டாவது பாலும் நேரா அவன் நெஞ்சு மேல விழுந்து இவன் பந்து வீசினா நான் பின்னாடி நிக்க மாட்டேன்னு ஓடிட்டான். இவன் இந்த பாலும் நேர வீச மாட்டானு பேட்ஸ்மேன் சும்மா நின்னுட்டிருந்தான். இந்த பந்து நேரே போய் ஸ்டம்பில் அடிச்சு அவன் அவுட். இப்படி ஓவருக்கு 14 பால் வீசி 3 பேரைக் காலி பண்ணியிருந்தேன். வைடு , நோ பாலுக்கு ரன் இல்லைன்னு அவுனக செட் பண்ணின ரூல் எங்களுக்கு நல்லா வேலை செஞ்சுது. இபபடியே போறவன் எல்லாம் 15, 16 பந்து வீசி 25 ரன்ல அவுனுக எல்லாத்தையும் சுருட்டியாச்சு.

தண்ணி காட்டீட்டம்லன்னு குதிச்சிட்டு இருந்தப்போ இந்த பொழப்புக்கு பேசமா எருமைக்கு தவிடு காட்டலாம் இவனுகளோட கிரிக்கெட்ன்னு எவனாவது வந்து கூப்பிட்டீங்க அங்கேயே கிடையா போட்டு மிதிப்பேனுட்டு போயிட்டான் ஒருத்தன். இதுலிருந்து என்ன தெரியுதுன்னா சனிப் பெயர்ச்சி எல்லாம் சாதாரணம்ன்னு தெரியுது. சேச்சே... இதை வைச்சுட்டெல்லாம் நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறதுன்னு முடிவு பண்ணக் கூடாதுன்னு திரும்ப கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

Wednesday, August 30, 2006

என்னவெல்லாம் செய்யலாம்-2

பெரியவனாகி என்னடா செய்யப் போற? என்ற கேள்விக்கு எரோப்ளேன் ஓட்டப் போறேன் என்றானாம் பள்ளிக்குப் போகாமல் டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வீரன் மகன். ஒழுகும் மூக்கை சரியாகத் துடைக்கத் தெரியாத சுபாவுக்கு தம்பி முருகனை பார்த்துக் கொள்ளும் ஆயா வேலை. தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் இன்னும் இந்த நிலைதான்.

திராவிட குஞ்சுகள், ஆரிய வந்தேறிகள், திமுக அடிவருடி, அதிமுக ரவுடி கும்பல்,பாமக மரம் வெட்டி கட்சி, சிதம்பரத்தில் தமிழ் மறுப்பு, பெரியார், ராஜாஜி ந்னு ஆளாளுக்கு அடி பின்னி எடுத்துட்டு இருந்தாலும் சத்தமில்லாமல் உதவி செய்யும் நிறைய நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் விளம்பரங்களை விரும்பாதவர்கள். ஆனால் இதை வெளியே சொன்னால் இவர்களால் உதவி பெற்று பள்ளிக்கு செல்லும் 10 வீரன் மகன், 10 சுபா 1000 மடங்காக பெருகக்கூடும். நான் இதைப் பற்றி ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன்.

இந்த பதிவு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கானது. பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு இந்திய ரூபாயை விட அதிகம் என்பதால் அவர்களின் குறைவான பங்களிப்பும் ஒரு நிறைவான செயலை செய்து முடிக்கும். இங்கு நிறைய பேரின் முன்னோர்கள் நிச்சயம் ஒரு கிராமத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அந்த கிராமத்திற்குண்டான அடிப்படை வசதிகளில் ஒரு பங்கை நிறைவேற்றி வைக்கலாம். இன்னமும் கிராமத்தில் காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கென ஒரு பொது கழிப்பறை இல்லாத கிராமங்கள் இன்னும் நிறைய. 10 கிராமத்துக்கு ஒரு ஆரம்ப சுகதார நிலையம் இருக்கும் ஆனால் வரும் நோயாளிகள் உட்கார ஒரு பலகை இருக்காது. ஆரம்பப் பள்ளி என ஒரு கட்டிடம் இருக்கும் ஆனால் 5 வகுப்புகளுக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடக்கும்.

இதைவிடக் கொடுமை பைபாஸ் சர்ஜரி, சிறுநீரகத்தில் கோளாறு போன்ற பணம் அதிகம் செலவு வைக்கும் வியாதிகள் வருவதென்னவோ தினக்கூலிக்கு செல்பவர்களின் குழந்தைகளுக்குதான். நல்லாத்தான் விளையாடிட்டு இருந்தான் திடீர்ன்னு சாமி கூப்பிட்டுக்கிச்சி என அவர்கள் ஆற்றாமையை அடக்க முடியாமல் கடவுள் மேல் பழியைப் போடுவார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை ஒரு சிறிய அளவு பணம் ஒதுக்கி உங்களால் இயன்ற அளவு உங்கள் கிராமத்துக்கு உதவலாம். உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Sunday, August 27, 2006

கேமரா கவிஞர்கள்

எங்காளு ஒருத்தன் வெளிய போயிட்டு வரலாம்னா கார் சாவி, வீட்டு சாவி எடுத்திருக்கானான்னு பார்க்க மாட்டான் கேமெராவைத்தான் முதலில் எடுப்பான். அவன் எடுத்த ஃபோட்டோ ஒன்னு ஏற்கனவே நான் இங்கே போட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மில்வாக்கீ வந்த முதல் வாரமே நாங்க ரெண்டு பேருமே சர்க்யூட் சிட்டியில $400 க்கு கேமரா + $80 க்கு மெமரி ஸ்டிக் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சதுல( அதுவே இன்டர்நெட்ல வாங்கிருந்தா இன்னும் சீப்பா இருந்திருக்கும், ஆனா எனக்கு இன்னைக்கே வேணும்ன்னு வாங்குனது) அவன் மட்டும் இன்னும் எடுத்துட்டே இருக்கான்.

சரி, சமாச்சாரம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஃபோட்டோ எல்லாம் எங்க புடிக்கிற நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதாலா ஃபோட்டோ ஏதாவது சுட்டுட்டு வரலாம்ன்னு flickR பக்கம் ஒதுங்கினேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி தேடிட்டு இருந்தா நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருந்த முகம் நான் ரொம்ப கூலா இருக்கானே ன்னு கேட்டுட்டு இருந்தது.

ரெகுலரான பட்டேல் ஸ்டைல் ஃபோட்டோகளோட கொஞ்சம் பார்க்கற மாதிரியும் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறான். அவன் எப்படியும் வாரம் ஒரு முறை ஃபோட்டோ சேர்ப்பது உறுதி. நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் எப்படியும் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கும்.


பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

Friday, August 25, 2006

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ

Long Islan

வரலாறு:

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீயானது முதன் முதலில் ஹேம்ப்டன் பேஸில் (Hampton Bays) உள்ள ஓக் பீச் இன் (Oak Beach Inn) பார் டெண்டர் ரோஸ்பட் (Rosebud) (அ) ராபெர்ட் பட் (Robert Butt) என்பவரால் 70களில் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது.

செய்முறை:

22.5 மில்லி டெக்கீலா, 22.5 மில்லி ஜின், 22.5 மில்லி வெள்ளை ரம், 22.5 மில்லி வோட்கா, கொஞ்சம் போல சர்க்கரை, எலுமிச்சை ரசம், கோலா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் கிளாஸில் ஊற்றி மேற்புறம் எலுமிச்சை துண்டை சொருகவும்.

*************கட்...கட்...கட்...****************

சர்வர் மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களையும் வைத்து விட்டு நகர்ந்தவுடன்,

நம்பர் 1: அந்த லெக் பீஸ் எடு மாப்பிள...

நம்பர் 2: டேய், நீ கைகாட்டி சொல்லிட்டு இருக்கிறது மீன் டா... மீன் ல லெக் பீஸ் கேட்ட முத ஆளு நீதான்டா...

கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: (தட்டில் இருந்ததை பார்த்துக் கொண்டே) என்ன கருமம்டா இது, வாயிலயே வைக்க முடியல...

நம்பர் 3: புடிக்கலைன்னா எனக்கு குடு நான் சாப்பிட்டு போறேன். சும்மா நை நைன்னு குதிச்சுட்டு இருக்க...

நம்பர் 4: தல, அவரு சொன்னது மீனை... இதுதான் சாக்குன்னு அப்படியே மொத்தமா உறுவரீங்க போல இருக்கு... உங்ககிட்ட உஷாரா இருக்கனும்...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: என்னடா வேணும் உனக்கு???

நம்பர் 4: நீங்க என்ன சொன்னீங்களோ அதையோ சொல்லுங்க...

நம்பர் 2: நான் குடிக்க தண்ணி கேட்டேன், அதையே சொல்லட்டுமா???

நம்பர் 4: என்னது தண்ணியா? அதை மனுஷன் குடிப்பானா? சாப்படறக்கு வேற ஏதவது சொல்லுங்க...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 1: மாப்பிள, நீ இந்த கோக் குடிக்கலைன்னா நான் எடுத்துக்கட்டுமா?

நம்பர் 2: சரி எடுத்துக்கோ. ஒரு நிமிஷம் இரு. ஸ்ட்ராவை திருப்பி போட்டுக்கிறேன். இப்போ குடி...

நம்பர் 1: அப்போத்தான் உன் எச்சை எல்லாம் நல்லா கோக்கில் கலக்குமா??? எல்லா என் நேரம்....

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 5: இனிமேல் நான் பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்....

நம்பர் 2: அப்புறம் அந்த சாந்தி ...

நம்பர் 5: சாந்திகூட எப்படியாவாது பேசிடலாம்னுதான் பார்க்கறேன்...

நம்பர் 2: பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை... எல்லாம் கலி முத்திப் போச்சு...


டிஸ்கி: லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீக்கும் மேற்கண்ட உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.