Wednesday, December 23, 2015

உயிர் உறையும் நேரம்

வாட்சப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் விபத்து தொடர்பான கோரமான ஒளித்துண்டுகள் பதிவோருக்கு இந்தக் கதை சமர்ப்பணம்-துரை.உதயகுமார்



அருண்  ஆகிய எனக்கு  25 வயதுதான். சின்னப்பையன், இன்னும் கொஞ்சநாள் போகட்டும் அப்புறம் பெண்பார்க்க ஆரம்பிக்கலாம் என என் அம்மாவே ஊர் வாயை அடக்கிவிடுவதால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பைல்ஸ், சுகர் மற்றும் இரத்த அழுத்தம் அதிகமுள்ள அப்பா; படிப்பு  விசயத்தில் அவர் என்ன வேண்டும் என நினைத்தாரோ அதைச் செய்ததினால் என் மேல் அசாத்திய நம்பிக்கை. கை கொள்ளாமல் இப்போது சம்பளமும் வாங்குவதால் அவருக்கு என்னிடம் குறை சொல்ல ஒன்றுமில்லை.

எனக்கு சின்ன வயதிலிருந்தே எதிலும் முதலில் வரவேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்துவிட்டேன். வீட்டுப்பாடத்திலிருந்து  எல்லாமே முதல்தான்; முதல் மார்க், முதல் பெஞ்ச், முதல் கால்குலேட்டர், முதல் வீடியோ கேம் என எல்லாமே முதல்தான். இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததே அளவு கடந்த வேலைப்பளுவுக்காகத்தான். வெறி ஏறிய   டெவெலப்பராக வேலையைச் சொன்ன நேரத்தில் முடிப்பதால் கம்பெனியில் மிக நல்லபெயர். ஐடியா சிக்காத சில நேரங்களில் கூட வேலை செய்பவர்களுடன் சேர்ந்து தம் அடிக்க பழகியிருக்கிறேன் . வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதலாய் வந்ததால் இப்போதெல்லாம் எதிலுமே ஒரு பிடித்தம் இல்லை எனக்கு. சோசியல்மீடியா  தோற்பவர்களின் கூடாரம் என அந்த பக்கம் ஒதுங்கியதே இல்லை. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்சப் என பேருக்கு இருந்தேன்.

அதெல்லாம் வீரம் விளைஞ்ச மண்ணு எனும் வாட்சப் குருப்பில் சேரும் வரைதான். இப்போதெல்லாம் போனும் கையுமாகத்தான் திரிகிறேன். எங்கிருந்துதான் இந்தமாதிரி வீடியோ பிடிக்கிறார்களோ என எனக்கு வேர்த்து விட்டது. சிங்கம் மானைத் துரத்தி வேட்டையாடி ரத்தம் வர கறி திண்பதில்  ஆரம்பித்து முதலை மனிதனின் காலை கடிப்பது, டிராபிக்கில் மாட்டி நொறுங்கும் கார், ரயில் தண்டவாளத்தில் குதித்து  தற்கொலை செய்வது என எல்லாம் அதிரிபுதிரியான வீடியோக்கள். ஸ்மார்ட்போனில்  வாட்சப் நோடிபிகேசன் பார்த்ததும் தலைதெறிக்க ஒடிப்போய் டாய்லெட்டில் உட்கார்ந்து 5 முறை பார்த்தவுடன்தான்  சமநிலைக்கு திரும்புகிறேன். சில வீடியோக்களில் சவுண்ட் இல்லாததில் எனக்கு பெரும் வருத்தம்... 

ஒரு நொடி கூட யோசிக்காமல் வீடியோ எடுத்தால் இப்படித்தான் ஆகும். சம்பவம் எப்போது நடக்கும் என யாருக்கும் தெரியாது, ஆனால் நடக்கும்போது ஒரு குண்டுமணி கூட சிதறாமல் பிடிப்பவன்தான் உண்மையான வேலைக்காரன், அதுவும் நானாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு செய்த முதல் காரியம் நல்ல ஸட்டர்ஸ்பீடு உள்ள ஸ்மார்ட்போன் தேடி வாங்கியதுதான். வீடியோ கேமரா எல்லா இடத்திலும் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது என்பதை விட அதை பிராசஸ் செய்து யூடுயுபில் போடுவதற்குள் வேறு யாராவது சப்பையான வீடியோவை முதலில் போட்டுவிடுவார்கள் என இந்த எற்பாடு.

ஒரு லாரி ஒரு காரின் மீது மோதும்போது முன்னாலோ பின்னாலோ இருக்கக்கூடாது. அல்லையில் இருந்தால் ஒரு பெர்ஸ்பெக்ட்டில் பெரிய ஏரியாவை ஃபிரேமில் கொண்டு வந்து விடமுடியும். லக் இருந்தால் சேதம் நானிருக்கும் பக்கம் அதிகமாகி சிந்தாமல் சிதறாமல் கேமராவில் அடைத்து விடலாம். 

ரயில் முன் பாய்ந்து ஒருத்தி சாகிறாளென்றால் அதில்  இரண்டு பாகங்கள். ரயிலுக்கு பாய்வதற்க்கு முன் மற்றும் பின் என. எவன் எப்போ என்ன செய்வான் என தெரியாததால் கேமரா எப்போதும் ரோலிங்கில் இருக்க வேண்டும். எட்டு நொடிக்கு ஒரு முறை அதே இடத்தை புகைப்படம் எடுக்கும் வகையில் சுத்திக்கொண்டிருந்தால் எதுவும் தப்பாது. இது ரயிலில் பாய்வதற்கு முன்பான ஷாட். கொஞ்சம் வெட்டி ஓட்டினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

என் பிரச்சினையே ரயிலுக்கு முன் பாய்ந்தபின் என்ன நடக்கும் என்பதுதான்.  ரயில் நேர்கோட்டில் வரும்போது மெதுவாய் வருவது மாதிரி தெரிந்தாலும் விசுக்கென்று வந்து அடியில் கிடப்பவனை அறைத்து விடும். ரயில் வருவதற்கு முன்னாலேயே விழுந்தானெனில் சக்கரம்தான் முதலில் ஏறும். இரண்டு சக்கரம் ஏறும் வரை  தாங்குவானா இல்லை நாலு அஞ்சு சக்கரம் தாங்குமா என எனக்கு இப்போது பெரிய தலைவலி. ஒரு வாரமாக இதே நினைப்புத்தான். வேலையில் கூட இவ்வளவு சிரமப்பட்டதாக நினைவில்லை.

மெயின் ரோடில் இருக்கும் கடையில் ஒரு தம்மடித்துவிட்டு வந்தால் ஒரு வேளை தெளிவு பிறக்கும் என நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு கிளம்பினான். ஃபோனில் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டு ஒருவன், வாட்சப்பில் நொடிக்கு மூன்று கெட்ட வார்த்தை டைப் செய்யும் ஒருவன், அஜீத்-விஜய் சண்டை போடும் இருவர் என மிகச்சாதரணமான மந்தை இது. நான் என் புதுப்பழக்கமான வீடியோ ரெக்கார்டிங்கில் தொலைந்து விட்டேன்.

அதென்ன சாப்ட்வேர் கம்பெனிகள் இருக்கும் இந்த இடத்தில் என்ன இத்தனை கூட்டம்? கிரேன் , வண்டிகள், பெரிய லைட் என சந்தைக்கடை மாதிரி என யோசித்த போது ஒருவன் வாய் திறந்தான் அது ட்விங்கிள் ஸ்டாரின் படத்துக்கான சூட்டிங்க் என்று. மணி நாலுதான் ஆகுது அவன் இன்னமும் எந்திரிச்சே இருக்கமாட்டான் என இன்னொருத்தன். ஸ்டார்ட் கேமெரா, ஏக்சன்  என ஸ்பீக்கரில் கத்துவது கேட்டது.  கூடி அழும் சீனுக்கு எதுக்கு ஏக்சன்ன்னு சொல்றாங்கன்னு சொன்ன நேரத்தில் கூட்டத்தில் இருந்து பெரிய சத்ததுடன் ஒரு கார் சீறி வந்தது. எப்படியும் ஐந்து பேராவது குறுக்கு உடைந்து மாவுக்கட்டுடன் இருப்பது உறுதி என சந்தோசத்துடன் ஃபோகஸ் செய்ய ஆர் ஆரம்பித்தேன். 

கூட வந்தவர்கள் சடாரென்று நடை மேடையில் ஏறிவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்தேன். இது எனக்கான தருணம், நான் யார் என்பதை உங்களுக்கு காட்டுகிறேன் என வேகமாக வண்டி வரும் திசையில் நகரும்போது பார்த்தால் ட்விங்கிள் ஸ்டார்தான் டிரைவிங் சீட்டில்.  கன நேரத்தில் கார் என்னை நோக்கி திரும்பி வேகமாக வந்து கொண்டிருக்கும்போது ஜூம் செய்து பார்த்தால் அவன் கண் விழி சொருகிய நிலையில் வந்து கொண்டிருந்தான்.

ங்கோ...என கத்தும்போதே அருணின் சோலி முடிந்திருக்கும். அவன் அந்த கடைசி வார்த்தை முழுதாக சொன்னான எனத் தெரியவில்லை. இந்த பாடை சூட்டிங்  வந்தாலும் பிரச்சினை வரலைன்னாலும் பிரச்சினை என புரடக்சன் மேனேஜர் சத்தம் போட்டுக்கொண்டே  வந்து ட்விங்கிள் ஸ்டார் தலையில் துண்டைப் போட்டு கேரவேனுக்கு இழுத்துப்போனான். இன்னொரு ஆள் டிரைவிங் சீட்டில் உக்கார்ந்து கொண்டான். நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லியபின் காருக்கு கீழே குனிந்து அருண்... அருண்... என சத்தம் போட்டபடி இருந்தனர். 

கேமரா இவர்களின் சத்தத்தையும் சேர்த்துதான் பதிவு செய்யும். ஆனால் வாட்சப்பில் பரப்புகிறவன் இதை வெட்டுவிடுவானா இல்லையா என தெரியவில்லை.

Sunday, August 24, 2014

6174



புத்தகம் நிறைய வாங்கியிருக்கேன் படிக்க முடியுமா என இருந்த நிலையிலிருந்து "அட, இந்த புத்தகம் மட்டும் ஏன் தொடாமால் இருக்கு?" என சனிக்கிழமை காலை ஆரம்பித்த புத்தகம். 400 பக்கங்களை சின்னச்சின்ன இடைவெளிகளில் 12 மணி நேரத்தில் முடித்து விட்டேன். அட்டகாசம்!

பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், காந்தளூர் கடிகையின் கதை என ராஜா கதை படித்த காலங்களில் இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் திகில் கிளப்பும். வீட்டில் எல்லோரும் இருக்கும் இடங்களில் மட்டும் உக்கார்ந்து படிப்பேன். மர்மதேசம் ஏன் தினமும் ஒளிபரப்பக்கூடாது எனவும், 30 நிமிட திங்கள் எபிசோடை அடுத்த வாரம் வரை அலசிக்கொண்டும், அடுத்த என்ன நடக்கும் என திகிலோடு காத்துக் கொண்டிருப்போம். ஓலைச்சுவடியிலிருந்து படிக்கும் பாட்டையும் கூறு போடுவோம். இந்த treasure hunt type கதைகள் பிடித்ததினால் Indiana Jones எந்த சச்சரவும் இல்லாமல் என் all time favorite படங்களில்  இருக்கிறது. 

டான் பிரவுனின் ராபர்த் லேங்டன் மூலமாக ஐரோப்பா முழுதும் ஓடி ஓடி தேடிவிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் DC யையும் Google earth ல் அங்குலம் விடாமல் அலசியாகி விட்டது. டான் பிரவுன் எழுதுவது புதினமாக இருந்தாலும் இடங்களைப்பற்றிய உண்மை தகவல்களை வைத்து ஒரு எட்டாத கற்பனையை சரக்கென்று கண் முன் நிறுத்தி விடுவார். ஒவ்வொரு புதினம் படிக்கும்போதும் என் பெரும்பாலான நேரம் அவர் சொன்ன தகவல்களை விக்கியில் தேடிப்படிக்கவும் சரிபார்க்கவும் செலவிடப்படும். நான் சரியான ஊர் சுற்றியாய் இருந்ததும் இந்த மாதிரியான கதைகளில் ஆர்வம் வரக்காரணமாக இருக்கும்.

6174 - 2014 சென்னை புத்தககண்காட்சி சமயத்தில் பரவலான கவனம் பெற்ற அறிவியல் புனை கதை, எக்கச்சக்க தரவுகளுடன், தகவல்களுமாய் அருமையாக இருக்கிறதென படித்தேன். கர்ணனின் கவசம் வாங்கி படித்த பிறகு புத்தகங்களை திரும்ப வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால் இதை வாங்கினேன். என்ன சமாச்சாரம் என தெரியாமல் படிக்க ஆரம்பித்து... அப்புறம் என்ன, 12 மணி நேரம் புத்தகமும் கையுமாக திட்டு வாங்கி கொண்டிருப்பது தெரியாமல் நடந்து, படுத்து, நிமிர்ந்து உக்கார்ந்து வாசித்த புத்தகம். 6174 ஐ மிக சாமர்த்தியமாக இந்த புனை கதையில் நடுவில் வைத்த திறமை - அற்புதம்!

இதற்கு மேல் எதை சொன்னாலும் சுவாரசியம் குறைந்து விடும். புத்தகம் ஆன்லைனிலும் கிடைக்கிறது.

அதிபயங்கர உழைப்பு இந்த நாவலுக்குப் பின் இருக்கும் என தெரிந்தாலும் சுதாகர் கொடுத்த reference link ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருக்கிறேன். 

GRE score பற்றிய தகவலும், இரட்டை கடற்கரை கிராமத்தைப் பற்றி வரும் இடங்களில் பெயர் மாறி இருப்பதும், டபுள் கேம் ஆடும் குழுக்கள் பற்றி கொஞ்சம் குழப்பம் (என் புரிதலாகக் கூட இருக்கலாம்) என்பதை அடுத்த பதிப்பில் தெளிவிக்கலாம்.

Wednesday, May 28, 2014

கோழி வளரும் கதை


ஆமையைக் காணவில்லை என அறிவுப்பு பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். அப்படியே பின்னோக்கி போய் ஊரில் கோழியைக் காணோம் எனத் தேடும் ஆயாக்கள் நினைவுக்கு வந்தார்கள். கோழி ஊரெல்லாம் குப்பையைக் கிளறினாலும் பொழுதானால் சரியாக சாய்த்து வைத்த கூடையில் ஐக்கியமாகி விடும். சிறு சிறு சத்தங்களுடன், பொழுது போய் ஒரு மணி நேரத்தில் அடங்கி விடும். பாம்போ, பல்லியோ அதன் இருப்பை கலைக்காதிருந்தால் காலை வரை  சத்தம் கேட்காது.

கோழி காட்டுக்குள் திரியும் வரை பிரச்சினை இல்லை. போகும் போது வரும் போது வழியில் இருக்கும் குப்பையை கிளறி வெட்டுக்குத்து அளவுக்கு போய் விடும். கோழி நன்றாக வளருவதைப் பார்த்தால் குப்பையை கிளறும் வரை பொறுத்து பின் சமயம் பார்த்து கல்லெடுத்து எறிந்து ஆத்திரத்தை அடக்கிக் கொள்வார்கள்.



கோழி குஞ்சுகள்தான் ஏழரையுடன் பிறந்திருக்கும். நோய் கொண்டு போகுமோ, காக்கா கொத்துமோ, கழுகு தூக்குமோ, வெயில் தாங்காமல் சுருண்டு விழுமோ என்ற பயங்களுக்கு நடுவில் திக்கு தெரியாமால் சில சமயம் காணாமலும் போய் விடும். அம்மா கோழியைக் காணாமல் அலை மோதும். பொடியன் எவனாவது இது அன்னக்கொடி அக்கா வீட்டுக்குஞ்சு என பாய்ந்து அமுக்கி பிடிக்கும் கணத்தில் இழுத்த காற்றுதான் கடைசி மூச்சாக இருக்கும். விழுக் விழுக் என இரண்டு முறை காலைக் கூட முழுதாக இழுக்க முடியாமல் போய் சேர்ந்திருக்கும். சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது கோழி மிதித்தெல்லாம் குஞ்சு சாவாது, வேண்டுமானால் நொண்டலாம்.

ஊருக்குள் வந்து போகும் யாரோ ஒருவர் ஒரு கோழிக் குஞ்சு தனியாக அல்லாடுகிறது என எதிர்ப்பட்ட ஒருவரிடம் சொன்னால் போதும் பொட்டி வந்துருச்சாமா பொட்டி வந்துருச்சாமா என ஆண்பாவத்தில் சொல்வது மாதிரி நொடியில் ஊரெல்லாம் தெரிந்துவிடும். காட்டுக்கு வேலைக்குப் போகாமல் வீட்டில்  இருந்தால் கூந்தலை அள்ளி முடிந்து வந்து விரட்டிக் கொண்டு போவார்கள். பொதுவாகவே வேலையிலிருந்து திரும்பி வந்தவுடன் ஊர் மேயும் கோழிகளை எண்ணிப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். கோழி தினமும் ஒரே இடத்தில்தான் முட்டையிடும். அதை எடுத்து சேர்த்து வைத்து அடைக்கு வைப்பது கில்லாடியான வேலை. முட்டையிடும் இடத்தை கண்டுபிடிக்கவில்லையெனில் கோவிந்தாதான்.

இதெல்லாம் தாண்டி குஞ்சு கொஞ்சம் வளர்ந்து தனியாக மேயும் பருவத்தில் ஆபத்து புளிய மரத்தடியிலோ, சாவடியிலோ நிழலுக்கு அமர்ந்திருக்கும் மைனர் குஞ்சு ரூபத்தில் வரும். ஆள் இல்லாத சமயம் பார்த்து கோழியை அமுக்கி, இறக்கை இரண்டையும் சேர்த்து திருகிவிடுவார்கள். அது என்ன ஏது என சுதாரிப்பதற்குள் தலைகீழாக ஒரு கையில் பிடித்து இன்னொரு கையால் கழுத்தின் மேல் வீசினால் தலை திருகி விடும். அதை அப்படியே எதாவது ஒரு காட்டுக்கு எடுத்துப் போய் கிடைத்த விறகுகளை வைத்து அடுப்புக்கூட்டி சாறு வைத்து விடுவார்கள்.

மைனர்களின் சமையல் திறமை அலாதியானது. சட்டி உடைந்ததாக இருக்கும், சமயத்தில் விறகு ஈரமாக இருக்கும், எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவுதான் இருக்கும். சினன வெங்காயம் மற்றும் வர மிளகாய்தான் மசாலா பொருட்கள். ஒரு மணி நேரத்தில் சுட சுட வறுவல் தயார். இந்த சம்பவம் நடந்த இடத்தை அவர்களே காட்டினாதால் உண்டு, யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அவ்வளவு தொழில் நேர்த்தி. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என ஒட்டிய மண்ணை தட்டி விட்டுக் கொண்டு எழுந்து நடந்து விடுவார்கள்.

கோழிய பாத்தியா என யாராவது கேட்டு, அட ஆமாம் இங்கதான் மேஞ்சுட்டு இருந்தது என அடையாளம் சொல்லி தேடும்போது ஒன்றிரண்டு கோழி இறகுகளைப் பார்த்தால் அவ்வளவுதான், அதற்க்குப் பிறகு வர ஆரம்பிக்கும் எந்த வார்த்தைகள் எதையும் அச்சில் ஏற்ற முடியாது. ப்பீப் - ப்பீப் - ப்பீப் - ப்பீப் மட்டுந்தான் கேட்கும். விதம் விதமாக திட்டுவதில்லாமல் அண்ணாமருக்கு கோழி குத்தி சாபம் விடறேன், முட்டை மந்திரித்து வைக்கிறேன், திருடினவன் கை விளங்காம போயிடும், சாப்பிட்ட வாய் கோணிக்கும் என பீதி கிளப்பி விடுவார்கள்.

இதெல்லாம் பலிக்குமா என கேட்டால் ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிடாக கதையாக, செவியூரில இப்படித்தான், ஊதியூரில் இப்படித்தான் என போய் விசாரித்து வர முடியாத ஊரில் நடந்ததாக சொல்வார்கள். நம்பிக்கை இல்லாமல் கேட்டால் அம்மணி அக்காவின் ரெண்டாவது கொழுந்தியாவின் மச்சாண்டார் பேத்தியை அங்கதான் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என தரவு தருவார்கள். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் யாருக்காவது நக சுத்தி வாந்தாலும் பார்வை வேறுமாதிரிதான் இருக்கும். நக சுத்தி வந்தவருக்கு பிடிக்காதவர்களோ இவ சுத்த பத்தமா இருந்து சாபம் விட்டிருந்தா முழுசா பலிச்சிருக்கும் என கோழியத் தொலைத்தவரை திட்டிக் கொண்டிருப்பார்கள்.

இது அத்தனையும் தாண்டி கோழி வளர்ந்தாலும் வீட்டுக்கு மச்சான் மற்றும் மாப்பிள்ளைகள் வரும் நாளில் காரியம் முடிந்திருக்கும்.

Monday, May 26, 2014

டாலும் ழீயும், கரும்புனல், மாதொருபாகன்

வருட ஆரம்பத்தில் வைராக்கியத்துடன் புத்தகம் வாங்கி, வழக்கம் போல் கோழி அடைக்கு உக்காரும் கதையாக ஆகிவிடுமோ என நினைத்திருந்தேன். பரவாயில்லை, எண்ணிலடங்கா புடுங்கல்கள் மத்தியிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மேய்ந்து கொண்டிருக்கிறேன். 

முதலில் டாலும் ழீயும் - விழியன்




நான் ஒரு கதைசொல்லி இல்லையென்றாலும் ஒரு ஊரில் என இழுத்து இழுத்து கன்னித்தீவு மாதிரி சொல்லி சமாளிக்கலாம் என நினைத்தால் ப்ரித்திவ் இன்னமும் கதை கேட்க தயாராக இல்லை. ஒரு விநாடி கதை கேட்டால் அடுத்த விநாடி சைக்கிளில், அடுத்த விநாடி அம்மா மடியில் என்று சுத்துகிறவனுக்கு ஒரு நிமிடம் பெரிய விசயம். விழியன் குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என்பதை விட பெற்றோர்களுக்கு ஒரு மேப் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கதை கேட்பவர்களுக்கு தகுந்த மாதிரி கதைசொல்லிகள் அத்தியாயங்களை எப்போது விருப்பமோ அப்போது முடிக்கலாம். 

உங்கள் குழந்தை தானே படிக்கும் வயதில் இருந்தாலும் பிரச்சினை இல்லை. பக்கங்கள் குறைவு, குழந்தை தலைக்கு வைத்து தூங்கும் அபாயமும் இல்லை, நழுவி விழுந்து எலும்பு முறியும் துன்பமும் இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் அழகான தலைப்பு மற்றும் படம். இரண்டு குழந்தைகள் சேர்ந்து இதை வாசித்தால் என்ன மாதிரியான உரையாடல் இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். 2000 பக்கம் தாண்டியும் அது போகும் வாய்ப்புகளைத்தான் கதையாக சொல்லியிருக்கிறார். 

அவரின் மற்ற படைப்புகளை வாசிக்கவில்லை, என் வாரிசு கதை கேட்கும் பருவத்திற்கு I am waiting.

*************************************************************
கரும்புனல் - ராம்சுரேஷ்



இந்த வருட புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின்  பெஸ்ட் செல்லர் புத்தகம் கரும்புனல். பெனாத்தல் சுரேஷ் பிளாக்கை 2005 தமிழ்மணம் காலத்தில் இருந்து வாசித்து வருகிறேன். இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல என டிஸ்கி போடாமல் எல்லா நான் அனுபவித்ததுதான் கூட வந்து பாருங்கள் என ஜார்க்கண்ட் கூட்டிபோகிறார். நிலக்கரி, ஆதிவாசிகள், அரசாங்கம் என கதை. முதல் அத்தியாயம் வாசிக்கும்போது ஜிலீர் என்றது. அதுவும் பழகினா சரியாப்போகும் என்பதான மைண்ட்செட் கலவரத்தை உண்டு பண்ணியது. நாயகி இல்லாத கதையை சொன்னால் யாரும் வாசிக்க மாட்டார்கள் என நினைத்தாரோ என்னவோ தமிழ்ப்பட கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவே இதிலும். இந்த கதையை விருமாண்டி பாணியில் பலவிதமாக சொல்லலாம். நாயகனை லீகல் ஆள் என இறக்கியதில் இவர் எதோ நட்ட நடு செண்டரில் சொல்வார் என நினைத்தேன். பார்த்ததை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். 

எனக்குப் புரியாத பூமி, தொழில் மற்றும்  பிரச்சனை. பள்ளியில் படித்த புவியியல் பாடம் மற்றும் கூகுள் மேப் துணையுடன் முதலில் இடத்தைப் பார்த்தேன். கற்பனையான சுரங்கம் என்றாலும் விவரிக்கும்போது மேப்பில் சரியாக புள்ளி வைத்து மார்க் வாங்கி விடலாம். சுரங்கத்தைப் பற்றி எழுதியதை வைத்து ஒரு மாதிரி மனதில் கோடு போட்டு வைத்திருந்தேன். புத்தகத்தைப் படித்துவிட்டு பொகாரோ சுரங்கம் எப்படி இருக்கும் என பார்க்கலாம் என்றால் பிங்கோ!!! என் மனதில் நினைத்தது படமாக இருந்தது. விரல் விட்டு எண்ணி விடும் பாத்திரங்கள், ஆனால் எல்லா பக்கத்து பார்வையும் பதிவு செய்ய தோதான பாத்திரங்கள். கதையின் கட்டமைப்பு அருமை. மெதுவாக உள்ளிழுத்து பிரச்சினையின் வடிவத்தை சொல்லி, பிரச்சினையின் ஊடாகவே பயணித்து அதைத் தீர்க்கும் வரைக்கும் வந்த பிறகு அடுத்த பக்கத்தில் சுபம் என முடிப்பார் என நினைத்தால் ஒரு பைனல் கிக்!

இந்தியா ஒளிர வேண்டும் என்றால் சுரங்கம் அவசியம், நக்சல், மாவோயிஸ்ட் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என நினைப்பவர்கள் இந்த புதினத்தைப் படிப்பார்களே ஆனால் கொஞ்சமாவது  இதைப்பற்றி சிந்திப்பார்கள். ஆனாலும் இந்த புதினத்திலும் மேலோட்டமாகவே சொல்லியிருக்கிறார் என சொல்வேன். திவ்யாவுக்கு பதில் தமிழ் பேசத்தெரிந்த அலோக் இருந்திருந்தாலும் ஆசிரியர் நினைத்த திருப்பங்கள் இருந்திருக்கும். ஒரே இரவில் வாசித்தாலும் 3 நாட்கள் சுரங்கம் பற்றிய தேடல்தான் நிறைந்து இருந்தது.

*************************************************************
மாதொருபாகன் - பெருமாள் முருகன்



மாதொருபாகன்- திருச்செங்கோடு அர்த்தநாறீஸ்வரின் இன்னொரு பெயர். ஆணும் பெண்ணும் சமமென உடலை சரிபாதி பிரித்து வைத்திருக்கும் சாமி. கதை சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் நடப்பதால் ஆசிரியரின் முன்னுரையை வாசித்து விட்டு கதைக்கு செல்லாம் என்றால் ரெட் அலெர்ட்.  சொல்ல வந்த விசயம் அப்படிப்படதென்பதால் தன் உழைப்பை,ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

பெயர் சொல்லாமல் ராஜாஜியை திட்டியிருக்கிறார், திருச்செங்கோட்டு கோயில் அய்யர் பாவாத்தாவை மறைத்ததை சொல்கிறார், குத்தல் பேச்சுக்களால் இயல்பு மாறும் வறடியின் கோபங்களை சொல்கிறார். காளியும் பொன்னாளும் கதையின் தலைப்பை அத்தனை பக்கங்களிலும் நிறைத்துக்கொண்டே வருகிறார்கள். சாமியின் பெயர்க்காரணத்துக்கு ஏற்ப வாழ்ந்து சாமி ஆனார்களா இல்லை சாமி குழந்தை இருந்தால் போதும் என இருந்தார்களா? வாசகர்களிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு பதினாலாம் நாள் திருவிழாவை கண் முன் நிறுத்துகிறார். கலவையான ஒரு மனநிலையில் நான்.

*************************************************************
பாதி வருடம் முடிக்கப் போகிறேன், இடையில் வந்த சிறு தொய்வைத்தவிர நான் படிப்பதற்காக நேரம் பெயரளவுக்காவாது வைத்திருக்கிறேன். ஹேப்பி அண்ணாச்சி!!!

Sunday, March 02, 2014

கூள மாதாரி - பெருமாள் முருகன்

இந்த வருட ஆரம்பத்தில் வாங்கிய புத்தகங்களில் கூள மாதாரியும் ஒன்று. 2006ல் இணயத்தில் புழங்க ஆரம்பித்த பொழுது முத்து தமிழினி இதைப் பற்றி எழுதி இருந்தார், ஊர்ப்பக்கத்துக்  கதையாக இருக்கிறது என நினைத்தேனே ஒழிய வாங்கி படிக்கவில்லை. இப்போது இரண்டாம் பதிப்பை வாங்கியிருக்கிறேன். முதல் பதிப்பு 2000, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.



ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் என்ன கதை இருக்கும் என நீங்கள் நினைக்க வைக்க முடியாத கதை. இந்தப் புத்தக்கமும் என் பால்யத்தைக் கோழிக்காலால் கிளறி ஒரு ஒழுங்கின்றி இறைத்து விட்டுப் போயிருக்கிறது. நீளக் கிணறு தோட்டத்தில் தேங்காய் பறிக்க மரம் ஏறி பின் ஆயா பார்த்து காடு காடாய் ஒட்டி சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தது வரலாறு. இப்படி காடு காடாய் சுற்றினாலும் நடு நடுவில் விளையாட்டும் உண்டு. கூளையன் ஆடுகளுடன் பெரியகாட்டில் இறங்கிய போது நானும் எனக்கு வசதியாக எஙக ஊர் ஒடைக்காட்டையும் பொழிக்கால் காட்டையும் நினைத்துக் கொண்டேன்.

ஆடு மேய்க்கும் பண்ணையத்து ஆளுகளின் சோத்துப் போசியைப் பார்த்தால் 3 பேர் சாப்பிடுவது மாதிரி இருக்கும். பெரும்பாலும் நீராகரமாகத்தான் இருக்கும்.  3 ஆள் வேலையை ஒரே ஆள் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் சாப்பிடவேண்டும் என குசுகுசுப்பாய் பேசிக் கொள்வோம். காட்டில் குருவி, கிளி பிடிக்க, எலந்தைப் பழம் உலுக்க, மழைக் காலங்களில் நண்டு புடிக்க  என போகும் போது ஆள் குறைந்தால் அவர்களையும் சேர்த்துக் கொள்வோம். கூளையன், நொண்டி, பொடுசா, செங்காயன் எனத் தெரியுமோ தவிர அவர்களின் பெயர் என்ன என ஒரு நாளும் கேட்டதில்லை.

ஓணான் அடித்து அரை உயிராய் இருக்கும் போது எருக்கம் பால் விட்டு மசை எழுப்பி விடுவது, தலை தட்டி விளையாடுவது, கல் குமித்து விளையாடுவது என பொழுது போவதே தெரியாது. இதற்கு நடுவே, கடலை புடிங்கிய பிறகு மேல் கடலை பொறுக்குவது, பருத்திமார் பிடுங்கிவருவது, கீரை பறிப்பது என வீட்டுக்கும் ஒத்தாசையாக இருந்ததால் பெரும்பாலான சனிக்கிழமைகளில் வீடு தங்கியது கிடையாது. இதெல்லாம் எழுதி மாளாது. இவை அனைத்தையும் நினைத்துப் பார்க்க வைத்த கதை.

பண்ணையத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி ஆண்டுக்கு ஒருமுறை, தினம் இரண்டு வேளை சோறு, வருடத்துக்கு ஒரு செட் துணி. வருடக்கூலியை ஏதாவது ஒரு காரணம் சொல்லி பாதியிலேயே வாங்கி பொங்கல் வைத்துவிடும் அப்பாக்கள். தினமும் மூன்று முறையாவது கடுசாய் பேசினால்தான் வேலை ஒழுங்காய் நடக்கும் எனும் கவுண்டச்சிகள். இதுதான் வாழ்க்கை முறை என்று ஏர்றுக் கொண்டு வயதுக்கேற்ற இயல்புடன் ஆடுகளை பேர் சொல்லிக் கூப்பிடுவதும், மற்ற ஆடு மேய்க்கும் சிறுவர்களுடன் விளையாடுவது, சண்டை போடுவது என கதை அதன் பாட்டுக்கு நகர்கிறது.

உரையாடல் பாணியிலேயே சென்ற கதையில் எம்ஜிஆரால் திருப்பம். படம் பார்க்கப் போன சமயத்தில் ஆடு திருடு போய் கவுண்டரிடம் அடி வாங்குகிறான். தேங்காய் திருடி மாட்டி கிணற்றில் தலை கீழாய் தொங்கும் போது  தீடீரென தடம் மாறி கூளயைனின் எண்ணங்களை சொல்ல ஆரம்பித்ததும் பதறினேன். பதறிய படியே முடிவும். தனக்கு அமைந்தது ஒரு ஒழுங்கான வாழ்வாக நினைத்து வாழ்கையில் ஏற்படும் ஒரு சிறு அதிர்வு கூளையனை பகல் முழுவதும் தூங்க வைக்கிறது, சாப்பாட்டு நினைவை மறக்க வைக்கிறது. பாட்டியுடன் இருந்த நாட்களில் வேறு உலகத்தைப் பார்ப்பதும் அது அவனுக்கு திரும்ப கிடைக்காது என்பதால்தான் நெடும்பன் என்ன சொல்லியும் ஓடாமல் கிணற்றில் குதிக்கிறான். வட்டார வழக்கில் ஒரு நல்ல புனைவு. 

Monday, February 03, 2014

அலகிலா விளையாட்டு - பா.ராகவன்

நிலமெல்லாம் இரத்தம் மூலம் எனக்கு பா.ராகவன் அறிமுகம். 2006ல் படித்ததாக ஞாபகம். கிழக்குப் பதிப்பகத்தில் பல எழுத்தாளர்களுக்கு வேள்வி மாதிரி செம்மைப்படுத்துகிறார் என கேட்டிருக்கிறேன் மற்றும் என்.சொக்கன் அதை எழுத்தில் சொல்லியும் இருக்கிறார். ட்வீட்டரிலும்  தொடர்ந்து பார்த்துக்
கொண்டிருக்கிறேன், வெண்பாம் போடுவார், குறுமிளகு மாதிரி பல டிவீட்கள். நேரத்தைப் பற்றி கவலைப்படாத, நேரத்தை வீணாக்காத எழுத்தாளர். அலகிலா என்ற ஒரு சொல்தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. தமிழ் வழி இயற்பியலில் படித்தது 20 வருடம் கழித்து ஒரு புத்தகத்தின் தலைப்பாய். unitless, countless, infinity and so on. என்னால் கதை எந்த தளத்தில் எழுதப்பட்டிருக்கும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. விஷ்ணுபுரம் வாங்கி 5 வருடம் முழுதாக முடிந்து விட்டது. சிந்தித்து பார்த்ததில் விலை மற்றும் பக்கங்கள் குறைவு. ஒரு ஸ்டார்பக்ஸ் நடையைக் குறைத்தால் அசிடிட்டிக்கும் நல்லது என்ற அடிப்படையிலும் பாரா மேல் உள்ள நம்பிக்கையிலும் வாங்கியது.



இந்த புத்தகத்தை தூக்கம் வராமல் சனி இரவு வாசிக்க ஆரம்பித்து சரியாக 2 அத்தியாங்களில் என்னை தூங்க வைத்து விட்டது. (எனக்குப் பிடித்த) வேதியியல் புத்தகத்துக்குத்தான் இந்த பெருமை அதிக முறை. ஒரு பக்கம் படித்தாலும் அது சம்பந்தமான நிகழ்வுகள் அது இது என பல பக்கம் போய் வருவேன்.  NFL சூப்பர் பவுல் ஞாயிறு மதியம் 3 மணிக்குத்தான் அது வரை படிப்போம் என 1 மணிக்கு ஆரம்பித்தேன். சூப்பர் பவுல் முடியும் முன்பே படித்து முடித்து விட்டேன். X-Men ஹீரோ Hugh Jackman Fox-11ல் இங்க என்ன சொல்லுதுன்னா டென்வர், ஆனா ஜெயிக்கப் போறது சியாட்டில் சொன்னவுடன் எடுத்த புத்தகம் என்றால் மிகச்சரி. அதுவும் டென்வர் முதல் ஆரம்பமே கந்தலாகி சொதப்பியவுடன் முழு மூச்சாக படித்து முடித்தேன். நான் நினைத்த அணி வெற்றி பெறவில்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. இந்தக் கதைதான் மனம் முழுவதும்,  முழுவதுமாய்.

கதையின் நாயகன் யார், எங்கு நடக்கிறது என எந்தக் குறிப்பும் இல்லாமல் கதை ஆரம்பித்து விட்டது. பனி லிங்கம் - ஊர் பத்ரிநாத் அருகில் ஏதோ, சத்திரம், வேட்டி, வத்தக்குழம்பு - வயதான பிராமணன் என ஒரு வடிவம் கட்டிக் கொண்டிருக்கையில் தூக்கம் வந்து விட்டது, கதையின் தலைப்பை உணர்ந்துதான் நான் தூங்கியிருக்க வேண்டும். பாலகுமாரனின் இரும்புக் குதிரை படிக்க முடியாமல் வீசியிருக்கிறேன். அப்போது அது எனக்கான கதையல்ல. பகவத்கீதையும், பைபிளும் வீட்டில்  இருந்திருக்கிறது. கடினமான மொழி நடைக்காகவே தொடாமல் ஒதுக்கி வைத்திருந்தேன்.

ஆரம்பித்து 20வது பக்கத்தில் கதை சொல்பவன் சாகப் போவதாய் உணர்வதாய் வந்தால் எப்படி இருக்கும். முதலில் பேரைச் சொல்லிட்டு அப்புறம் சாகு என தூங்கப் போனேன். கடைசி வரையில் பேரே இல்லை. முடிந்தவரை கதை நாயகனாக மாறி கதையைப் படித்து முடிப்பதுதான் என்னளவில் படித்து முடிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை. எனக்கு சம்பந்தமில்லாத கதை, உண்மையை சொல்லப் போனால் நானும் ஒரு யாத்ரீகனாய் சத்திரத்தில் உக்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அழுத்தக்காரர்கள், எதோ ஒரு காரணத்துக்காக எல்லாவற்றையும் விட்டு யாருக்கும் சுமையாகவும் இல்லாமல் வந்து விட்ட வயதானவர்கள் குளிருக்கு பயப்படுவது, மாத்திரை தவறாமல் சாப்பிடுவது, சோறு, வத்தக்குழம்பு என நாக்குக்கு தீனி போடுவது என சராசரி மனிதர்களாகக் காட்டினாலும் அவர்கள் வழியாக ஓயாமல் சிந்திக்க வைக்கிறார்.

குளிரை வைத்து ஒரு உள்மனப் போரே நடந்து விட்டது. 2 மாதம் முன்பு முன்னறிவிப்பில்லாமல் திடீரென குளிரெடுத்த ஒரு நாளில் எப்போதும் போல் தூங்கப் போய் காய்ச்சலுடன் எழுந்து 2மாதம் இன்னமும் முடியவில்லை. காய்ச்சல் வந்து முடியாமல் அனத்திக் கொண்டு படுத்திருப்பது எத்தனை பட்டா பட்டி டவுசர் போட்டலும் பேஸ்மெண்ட் வீக் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். கவுரவம் பார்த்தால் நாளைக்கு இருப்போமா என்பதே தெரியாது.

ஒரு கதைக்குள் இழுத்துப்போட மசாலா தேவையில்லை, படிக்கும் மனம்தான் காரணம். பூரணியின் அப்பா நடத்திக் கொண்டிருந்த பாடசாலை என சொல்ல ஆரம்பித்தவுடன் ஒரு பிளாஷ்பேக் வருது என வரிந்து கட்டி உட்கார்ந்தால் மீண்டும் தத்துவ விசாரம். அறியாத வயசு புரியாத மனசு; கேள்விகள், கேள்விகள், கேள்விகள் மட்டுமே. பச்சை மண்ணைக் குழைத்து எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இங்கு சேர்த்து விட்டு உயர்ந்த படிப்பு என சொல்கிறார்களே, அந்தப் படிப்பு சொல்லிக் கொடுப்பவர் வீட்டில் மருந்துக்கூட மகிழ்ச்சி இல்லை. அம்மா ஆசிரியர் வீட்டு சோகத்தை உன் சோகமாய் என்னாதே என பலப்பல.

கதையின் ஊடாகவே 40களின் காந்தியைப் பற்றிய பேச்சுக்களை சொல்லி இவர் ஏன் அவரை மகாத்மா என நினைக்கிறார் என்றும் வேலை என்று வந்தால் தனக்குப் பிடித்த வேலை என்பது கடைசிதான் கிடைதத வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதுவே போதும் என்ற மனநிலைமையும் சொல்லி இருக்கிறார்.

பூரணி பூரணமானவள். விரக்த்தியின் விளிம்பில் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவள். அண்ணன் சொன்னான் என ஒருத்தனைக் கல்யாணம் பண்ண ஒத்துக் கொண்டு பத்திரிக்கை அனுப்புபவள் அதே அண்ணனை அனுப்பி போஸ்ட் மாஸ்டரை கல்யாணம் செய்திருக்கலாம். அச்சுபிழை காரணமாக புத்தகத்தில் வெள்ளைப் பக்கங்கள். மொத்தம் 8 பக்கங்கள் எழுத்தில்லாமல் வெளுப்பாய். நல்ல வேளையாக 2 பக்கத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி இருந்ததால் ஒரு மாதிரி கதையை புரிந்து கொண்டு நகர்ந்து விட்டேன்.

போஸ்ட் மாஸ்டரோ வாழ்வில் எதன் பொருட்டும் ஈடுபாடு இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். வீட்டில் அனைவரும் இவரை வழிக்கு கொண்டுவர முடியாதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கை முறை மாறியதும் இவரது மாறாத கொள்கையும் காரணம். இருபக்க நியாயங்கள் என்பதை மீறி மூன்றாவது பக்கமும் இருக்கும். நேர்க்கோட்டில் எதிரெதிர் திசைகளில் செல்பவர்கள் மற்றொரு பக்கத்தை சீண்டக்கூட மாட்டார்கள். திருவையாறு, சென்னை, மைசூர், கொல்கத்தா, கயா மற்றும் பத்ரிநாத். கோபாலகிருஷ்ண ஹெக்டேவிடம் மைசூரில், கயாவில் புத்த பிக்குகளிடம் உரையாடல் என எதிலும் தேங்காமல் ஓடும் இவர் எங்கு திருப்தி அடைவார் என தேடிக் கொண்டே படித்து கொண்டே இருந்தால் கையிலாயம். அதுவும் பூரணியுடன். ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தி.


Saturday, January 25, 2014

வெட்டுப்புலி - தமிழ்மகன்

வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்துக்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டு ஆகிறது - புத்தகத்தின் பின்னட்டை வாசகம்.




80-90 களில் கில்லி, பம்பரம், கோலிக்கு அடுத்த படியாக அதிகம் விளையாடிய விளையாட்டு தீப்பெட்டி அட்டை. தீப்பெட்டி மற்றூம் சிகரெட் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்து தட்டையான கல்லை தூர இருந்து வீசி வட்டத்துக்கு வெளியே தள்ள வேண்டும். வெட்டுப்புலி அட்டைக்கு மதிப்பு அதிகம். காரணம், அது ஊர்ப்பக்கத்தில் அதிகமாக கிடைக்காது. பெர்க்லீ சிகரெட் அட்டைக்கும் இதே கதைதான். ஈரோடு CSI ஆஸ்பத்திரி போய் திரும்பி வரும்போது வெட்டுப்புலியை ரோட்டில் பொறுக்கிய நினைவு. வெட்டுப்புலி ஒரு உண்மை சம்பவமாம். திருவள்ளூர் பூண்டி ஏரி அருகே நடந்த கதை. அதையும், தமிழ் சினிமாவையும், திராவிட இயக்கத்தையும் வளைத்துக் கட்டியதுதான் இந்த நாவல்.



தசரத ரெட்டி, லட்சுமண ரெட்டி, ருத்ரா ரெட்டி, சின்னா ரெட்டி, குணவதி - வெட்டுப்புலி கிளை. ஆறுமுக முதலி மற்றும் சிவகுரு சினிமாவுக்கான கிளை. கணேசன், மகன் நடேசன் மற்றும் தியாகராசன் திராவிடர் கிளை. ஆறுமுக முதலி சின்னா ரெட்டியிடம் மூங்கில் வாங்க பேசுவதும், லட்சுமண ரெட்டி வீட்டை விட்டு ஒடிப்போய் ஆறுமுக முதலி தியேட்டரில் வேலை செய்வதும் ஒரு முடிச்சு. ஆறுமுக முதலியும், கணேசனும் அண்ணன் தம்பிகள்.

இந்த நாவலின் பலமே நாம் அதிகம் மேலோட்டமாக கேட்ட கதையை அந்த காலகட்டத்தில் எப்படி பார்த்திருப்பார்கள் என அடுக்கிக் கொண்டே வருவதுதான். ஆசிரியர் நிறைய உழைத்திருக்கிறார். 30களில் மெதுவாக ஆரம்பிக்கும் நாவல் எடுத்த உடனே குதிரையில் பறக்கிறது. ஆசிரியர் மிக நிதானமாக பல செய்திகளை கதை மாந்தர்கள் வழியாக சொல்கிறார்.

முப்பதுகளில் இனாம் அகரத்தில் (காரணப் பெயர்) ஏழெட்டு ஐயர் வீடுகள் மட்டுமே. மீதி எல்லாம் டெல்லி, பாம்பே, கல்கத்தா என அரசாங்க வேலைகளில். நிலத்தை சமன் செய்பவன் ஒருத்தன், உழுபவன் ஒருத்தன், விளைச்சலில் பாதி ஜமீனுக்கு, இதற்கு அப்புறம் வெள்ளைக்காரன்.

30களின் உப்புமா மற்றூ காபி பற்றி ஒரு பேச்சு மிக அருமை. பீட்சா மற்றும் பர்கர் வந்த போதும் சீ இந்தப் பழம் புளிக்கும் என சொல்லாமல் லைன் கட்டி நிற்பது தலைமுறை மாற்றம்.  அதே மாதிரியான ஒரு துண்டு 60-70 சுயமரியாதை திருமணத்தின் போது மக்கள் எல்லம் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது. எல்லோரும் சமம் என தசரத ரெட்டியும் விசாலட்சியும் பேசுவதும். 60 களில் தியாகராஜனும் ஹேமலாதாவும் பேசுவதும் வருடம்தான் வேறே ஒழிய புதிதான ஒன்றை மக்கள் ஒரே மாதிரிதான். பார்க்கிறார்கள்.

சுதந்தரம் பற்றிய 30களில் மணி ஐயர் கருத்தாக எழுதியது மிகை கிடையாது. எங்க ஏரியாவில் விடுதலைப் போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறைவு (0 என எழுத முடியவில்லை, இந்த ஆராய்ச்சிக்கு நிறைய உழைப்பு தேவை).  கதைகள் கூட கேட்டது கிடையாது. என் அம்மாவின் பாட்டி கட்டிக் கொடுத்த பொங்கலூரிலிருந்து அவர் அப்பா ஊரான ஊத்துக்குளி ஜேடர்பாளையம் வரை நடந்து வந்தது, ராகி/கம்பு களி, பஞ்சம், பட்டினி பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கும். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும், 1930 அமெரிக்க கிரேட் டிப்ரஷன் பற்றி விலாவாரியாக படித்து வைத்திருக்கிறோம் நாம். கதையில் கூட சிறுத்தை வெட்டப்பட்டது உண்மைதான், ஆனால் திரைக்கதை ஊருக்கு ஊர் ஆளுக்கு ஆள் மாறுகிறது.

லட்சுமண ரெட்டிதான் கதையின் முதலில் குதிரையேறியவர். ஹீரோ என்றால் காதல் இல்லாமலா? இலக்கணப்படி அவருக்கும் குணவதி மேல் காதல். பூண்டி ஏரி வெட்டி கரையெழுப்பும் கூட்டத்தில் ஒரு தலைக் காதலும் வளர்கிறது. சாதியின் பெயரால் காதல் சிதைக்கப்படும் போது சாதியின் மேல் கோபம் கொண்டு அதை மாற்ற நினைக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி திகவாகவும், திக திமுகவாகவும் வளர்ந்த வராலறு நன்கு எழுதப்பட்டுள்ளது. இதை கதை, பொய் என பலரும் சொல்லலாம், ஆனால் ஒரு கோர்வையாக ஒரு சம்பவத்தின் ஒரு பக்கத்தை தொகுத்துள்ளது. பெரியார் சாக இருக்கும் நேரத்தில் சௌந்திரபாண்டிய நாடார் ‘நாடார் குல மித்ரன்’ என்ற பத்திரிக்கையை லட்சுமண ரெட்டிக்கு வாசிப்பதாக ஒரு பகுதி. பெரியார் சொன்னதெல்லாம் பார்ப்பனரை எதிர்ப்பதுதான் மற்ற சாதி எல்லாம் அப்படியே இருக்கிறதே என்பதாக ஆசிரியர் ஒரு சுழட்டு சுழட்டி விட்டுப் போகிறார்.

லட்சுமண ரெட்டி சமத்துவத்தை காப்பதாக சொல்லி செய்யும் செயல்கள், ஊருக்குள் அவருக்கு இருக்கும் மரியாதை எல்லாம் அவரளவில் அதில் வெற்றி பெற்றதாக தோன்றுகிறது. 30, 40, 50, 60, 70 என விலாவரியாக போகும் நூல் ஒரு நல்ல வரலாற்று அனுபவத்தை தருகிறது. பாடப் புத்தகங்களில் உள்ள வரலாறெல்லாம் அவரவர் போக்குக்கு வளைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதால் இது ஒன்றும் பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் இல்லை.

80, 90, 2000 just like that முடித்துக் கொண்டது பெரிய ஏமாற்றம். சற்று கற்பனை கூட குறைய 80, 90களை எழுதி இருந்தால் எந்த கழகம் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த புத்தகம் வெளி வந்து இருக்காதோ என்னவோ?  தலைவரின் மகன் காரில் அழகான பெண்களை தூக்கிச் செல்வதாக ஒரு வரி வருகிறது. இது கற்பனையோ நிஜமோ தெரியாது, சென்னையிலிருந்து 500 கீமீ தொலைவில் நானும் கேட்டிருக்கிறேன். இது ஒன்றுதான் சர்ச்சைக்குரிய பகுதி.

கழகக் கருதுக்களில் ஈர்க்கப் படவேண்டுமானால் கழகக் கருத்துக்களில் மூழ்கி திளைத்தவர், ஒரு முன்னோடி இருக்க வேண்டும். நடேசன் மற்றூம் தியாகராசன் அவர்கள் அப்பாவையும், நடராசன் அவர் மாமா பாலுவையும் பின்பற்றி நடக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி திராவிடர் இயக்கத்தை முன்னெடுத்து வள்லர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருப்பதை இந்த நாவலும் பதிவு செய்திருக்கிறது. லட்சுமண ரெட்டியின் மகன் நடராசனுக்கும், கிருஷ்ணப்ப்ரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் திராவிட பார்ப்பனீய வேறுபாட்டுக்கு இந்த புத்தகத்தில் வரும் மற்றொரு சிறப்பான பகுதி. 99% மக்களை 1%  மக்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும் என்ற கேள்வியும் பதிலும். நீ என்னவாக னைக்கிறாயோ அதுவாக இங்கே இருக்கிறது. இரண்டு பக்கத்திலும் உக்கார்ந்து ரசித்துப் படித்தேன்.


திராவிட கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய இரண்டு குடும்பங்கள் சொல்லொனா துன்பத்துக்கு ஆளான மாதிரியும், மிதமாக பின்பற்றிய ஒரு குடும்பம் கடைசி மகனால் சீரழிந்ததாகவும்,  இவர்கள் யார் மேல் வன்மம் கொண்டு திரிந்தார்களோ அவர்கள் சேமமாக இருப்பதாகவும் கதை முடிகிறது. தினமணியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் கொள்கைக்காக வண்ணத்திரையில் தன் மகன் ரவியை சேரச் சொன்னான் நடேசன் என திராவிட கொள்கை பிடிப்பைப் பற்றி முகத்தில் அறைந்திருக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என யாரும் சிந்திக்கும் மனநிலையிலும் கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் வழி வழியாக தொங்கிக் கொண்டு இருக்கிறோமோ என சிந்திக்க வைக்கிறார். தமிழ்மகன் தினமணியில் மூத்த உதவி ஆசிரியர்.

வரலாறு திரித்து எழுதப்படும்போது 2 -3 தலைமுறை உண்மையான நோக்கத்தை அடையாளம் கொள்ளாமல் வேறு பாதையில் செல்லும் அபாயம் இருப்பது உண்மைதான். பெரியார் காங்கிரஸை விட்டு வெளியில் வந்ததும், வவேசு ஐயரின் குருகுலக் கல்வியும் வரலாறு. இந்தமாதிரியான அனுபவம் இருக்கும் ஒவ்வொருவரும் தான் திராவிடக் கொள்கையை பின்பற்ற வேண்டுமென்றால் பெரியார் யாருக்கு எதிராக கருத்துகள் சொன்னாரோ அவர்கள் பெரியாரின் பெண் விடுதலை கருத்தை மிகச் சரியாக பின்பற்றியிருக்கிறார்கள், அரிசனங்கள் இன்னும் அறியாத சனங்களாக இருக்கும் வரை இதே காட்சி தொடரும், பெரியார் உயிரோடிருந்தால் தமிழர்களை நோக்கி சத்தம் போட்டிருப்பார் என நறுக் வசனங்கள்.

வெங்கட் சுவாமிநாதனின் வெட்டுப்புலி விமர்சனமும் அதற்கான கேள்விகள்/பதில்கள்
http://www.tamilhindu.com/2011/09/tamilmagans-vettupuli-book-review/