Sunday, March 02, 2014

கூள மாதாரி - பெருமாள் முருகன்

இந்த வருட ஆரம்பத்தில் வாங்கிய புத்தகங்களில் கூள மாதாரியும் ஒன்று. 2006ல் இணயத்தில் புழங்க ஆரம்பித்த பொழுது முத்து தமிழினி இதைப் பற்றி எழுதி இருந்தார், ஊர்ப்பக்கத்துக்  கதையாக இருக்கிறது என நினைத்தேனே ஒழிய வாங்கி படிக்கவில்லை. இப்போது இரண்டாம் பதிப்பை வாங்கியிருக்கிறேன். முதல் பதிப்பு 2000, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.



ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் என்ன கதை இருக்கும் என நீங்கள் நினைக்க வைக்க முடியாத கதை. இந்தப் புத்தக்கமும் என் பால்யத்தைக் கோழிக்காலால் கிளறி ஒரு ஒழுங்கின்றி இறைத்து விட்டுப் போயிருக்கிறது. நீளக் கிணறு தோட்டத்தில் தேங்காய் பறிக்க மரம் ஏறி பின் ஆயா பார்த்து காடு காடாய் ஒட்டி சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தது வரலாறு. இப்படி காடு காடாய் சுற்றினாலும் நடு நடுவில் விளையாட்டும் உண்டு. கூளையன் ஆடுகளுடன் பெரியகாட்டில் இறங்கிய போது நானும் எனக்கு வசதியாக எஙக ஊர் ஒடைக்காட்டையும் பொழிக்கால் காட்டையும் நினைத்துக் கொண்டேன்.

ஆடு மேய்க்கும் பண்ணையத்து ஆளுகளின் சோத்துப் போசியைப் பார்த்தால் 3 பேர் சாப்பிடுவது மாதிரி இருக்கும். பெரும்பாலும் நீராகரமாகத்தான் இருக்கும்.  3 ஆள் வேலையை ஒரே ஆள் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் சாப்பிடவேண்டும் என குசுகுசுப்பாய் பேசிக் கொள்வோம். காட்டில் குருவி, கிளி பிடிக்க, எலந்தைப் பழம் உலுக்க, மழைக் காலங்களில் நண்டு புடிக்க  என போகும் போது ஆள் குறைந்தால் அவர்களையும் சேர்த்துக் கொள்வோம். கூளையன், நொண்டி, பொடுசா, செங்காயன் எனத் தெரியுமோ தவிர அவர்களின் பெயர் என்ன என ஒரு நாளும் கேட்டதில்லை.

ஓணான் அடித்து அரை உயிராய் இருக்கும் போது எருக்கம் பால் விட்டு மசை எழுப்பி விடுவது, தலை தட்டி விளையாடுவது, கல் குமித்து விளையாடுவது என பொழுது போவதே தெரியாது. இதற்கு நடுவே, கடலை புடிங்கிய பிறகு மேல் கடலை பொறுக்குவது, பருத்திமார் பிடுங்கிவருவது, கீரை பறிப்பது என வீட்டுக்கும் ஒத்தாசையாக இருந்ததால் பெரும்பாலான சனிக்கிழமைகளில் வீடு தங்கியது கிடையாது. இதெல்லாம் எழுதி மாளாது. இவை அனைத்தையும் நினைத்துப் பார்க்க வைத்த கதை.

பண்ணையத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி ஆண்டுக்கு ஒருமுறை, தினம் இரண்டு வேளை சோறு, வருடத்துக்கு ஒரு செட் துணி. வருடக்கூலியை ஏதாவது ஒரு காரணம் சொல்லி பாதியிலேயே வாங்கி பொங்கல் வைத்துவிடும் அப்பாக்கள். தினமும் மூன்று முறையாவது கடுசாய் பேசினால்தான் வேலை ஒழுங்காய் நடக்கும் எனும் கவுண்டச்சிகள். இதுதான் வாழ்க்கை முறை என்று ஏர்றுக் கொண்டு வயதுக்கேற்ற இயல்புடன் ஆடுகளை பேர் சொல்லிக் கூப்பிடுவதும், மற்ற ஆடு மேய்க்கும் சிறுவர்களுடன் விளையாடுவது, சண்டை போடுவது என கதை அதன் பாட்டுக்கு நகர்கிறது.

உரையாடல் பாணியிலேயே சென்ற கதையில் எம்ஜிஆரால் திருப்பம். படம் பார்க்கப் போன சமயத்தில் ஆடு திருடு போய் கவுண்டரிடம் அடி வாங்குகிறான். தேங்காய் திருடி மாட்டி கிணற்றில் தலை கீழாய் தொங்கும் போது  தீடீரென தடம் மாறி கூளயைனின் எண்ணங்களை சொல்ல ஆரம்பித்ததும் பதறினேன். பதறிய படியே முடிவும். தனக்கு அமைந்தது ஒரு ஒழுங்கான வாழ்வாக நினைத்து வாழ்கையில் ஏற்படும் ஒரு சிறு அதிர்வு கூளையனை பகல் முழுவதும் தூங்க வைக்கிறது, சாப்பாட்டு நினைவை மறக்க வைக்கிறது. பாட்டியுடன் இருந்த நாட்களில் வேறு உலகத்தைப் பார்ப்பதும் அது அவனுக்கு திரும்ப கிடைக்காது என்பதால்தான் நெடும்பன் என்ன சொல்லியும் ஓடாமல் கிணற்றில் குதிக்கிறான். வட்டார வழக்கில் ஒரு நல்ல புனைவு.