Monday, July 31, 2006

மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...

nose

ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டுக் கொண்டிருந்த நேரம். எங்கிட்ட இருந்த PDA (Palm Tungsten E) வில் mp3 பாட்டு கேக்கலாம். 100 பாட்டு எப்பவும் இருக்கும் அதில். புதுசு, குத்து, சோகம், ரிலாக்ஸ்ன்னு வகை வகையா பிரிச்சு வைச்சுக்கிட்டு பஸ்ஸில் பாட்டு கேட்பேன். 1 மணி நேர பயணம் மினிமம் கியாரண்டி என்பதால் குறைந்தது 10 பாட்டு கேட்கலாம்.

அன்னைக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா யார் கூடவோ ரொம்ப நேரம் பேசினதில் சந்தோஷமா இருந்தேன். ஸ்கூல், காலேஜ், கோயில் என எல்லா இடத்திலுமே கடைசியில் நின்னு நின்னு அதே பழக்கத்தில் பஸ்ஸில் கடைசி சீட்டுக்கு போனால் ஏற்கனவே 3 பெண்கள் உக்கார்ந்து கொண்டு தமிழில் சும்மா சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சரி, வந்தது வந்தாச்சுன்னு அதற்க்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் உக்கார்ந்து கொண்டேன். ஐடி கார்டை பெல்ட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன்.

சீட்டில் உக்கார்ந்த பிறகு வழக்கம் போல ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உக்கார்ந்திருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களது டிரெயினிங், யுனிக்ஸ் என பேசியதால் அதுவும் போர் அடித்தது. ரொம்ப சந்தோஷமா இருந்ததாலோ என்னவோ உலகத்தில் மற்றவர்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக இயங்குவதாக தோன்றியது. என் PDA வை எடுத்து (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) நோண்ட ஆரம்பித்தேன்.

இதை கவனித்த ஒரு பெண், "பாருடி பீட்டரை... கால்குலேட்டரை கையில் வைச்சுக்கிட்டு பால்ம்டாப் கையில இருக்கிற நினைப்புல மிதக்கிறதை"...

"ஆமாண்டி, வந்தவுடன் ஐடி கார்டை அவசர அவசரமா எடுத்து ஒளித்து வைத்ததை பார்த்தியா? இப்போதான் ட்ரையினிங் பேட்ச்சில் சேர்ந்திருப்பான் போல"

"புதன் கிழமை பக்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வந்திருக்கான். அவன் பேக் பாரேன், 3 புக் உள்ள இருக்கு, நிச்சயம் டிரெயினிங் பேட்ச்தான்"

அதுவரை பேசாமல் இருந்த ஒரு பெண், "ஏண்டி, அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுட்டு இந்த ஓட்டு ஓட்டறீங்க... அவனை பார்க்காமல் கிண்டல் பண்ணுங்க. அவனை பத்தி பேசுறம்ன்னு தெரிஞ்சு எவன் கிட்டையாவது அர்த்தம் கேட்டு தொலைக்கப் போறான்"

சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க. சரி நமக்கு விதிச்சது அவ்வளவுதான்... தமிழ் பொண்ணுகளா இருக்கு, அப்படியே பிக்கப்,ட்ராப், எஸ்கேப்ன்னு பிளான் பண்ணினா நம்மை பஞ்சர் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல வழிஞ்சா நல்லா இருக்காதுன்னு பாட்டு கேக்க என் சோனி இயர் ஃபோனை எடுத்தேன்...

"அது கால்குலேட்டர் இல்லடி, 50 ரூபாய்க்கு விக்கிற FM ரேடியோ, செம ஹாட் மச்சி" ன்னு சுசித்ரா மாதிரி ஹஸ்கி வாய்சில் சொல்லி வயித்தை புடிச்சி சிரிச்சாங்க. நான் இந்த இழவையெல்லாம் கேக்கணும்னு இருக்கே,"கடவுளே, உனக்கு கண்ணே கிடையாதா??? இப்படியெல்லாம் அழும்பு பண்ணாறாங்க, நான் ஆடம் டீஸ்ன்னு கேஸ் கூட போட முடியாதே" என புலம்பினேன். இருந்த பதட்டத்தில் இயர் ஃபோனை PDA வில் சொருகினேனா என பார்க்காமல் காதில் மட்டும் மாட்டிக் கொண்டு குத்து பிளே லிஸ்ட் செலெக்ட் பண்ணினேன்.

கோடம்பாக்கம் ஏரியா, கூத்து பார்க்க வாரியா ந்னு எங்கேயோ தூரத்தில் கேக்குது. என்னடா ஆச்சு நம்ம இயர் ஃபோனுக்கு, சும்மா ஹோம் தியேட்டர் எபெக்ட் குடுக்குமே, இன்னைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்தா இயர் ஃபோனை சொருகவே இல்லை. அவ்வளவுதானான்னு இயர் ஃபோனை சொருகிட்டு தலையை தூக்கிப் பார்த்தா 3 பொண்ணுகளும் பேயறஞ்ச மாதிரி என்னையவே பார்த்தாங்க...

அட இதுக்கே பயந்துட்டீங்க, நீங்கெல்லாம் கண்ணகி பரம்பரைன்னு நினைச்சா இப்படி பம்முறிங்க, அய்யோ அய்யோ... ன்னு நான் பாட்டில் மூழ்கி விட்டேன். அப்புறம் அந்த 3 பெண்களும் உக்கார்ந்து இருந்த இடத்தில் இன்னொரு ஆள் உட்காரும் அளவுக்கு இடம் உருவானது. அவர்கள் நான் இறங்கும் வரை வாயை திறக்கவே இல்லை என்பது கூடுதல் செய்தி.

Friday, July 28, 2006

பார்வைகள்

2006, ஜுன் இரண்டாம் வாரம் அது. ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டில் அட்டென்டண்ஸ் குடுத்து வந்ததால் நேரம் தவறாமல் சகாக்களுடன் வீட்டின் முன் உள்ள புளிய மரத்தினடியில் நின்று பேசி கொண்டிருந்தேன்.என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. திடீரென பாட்டிக்கு காய்ச்சல் அதிகமாகி விட்டதால் டாக்டரை வீட்டுக்கு வரச் சொல்லாம் என கட்டியிருந்த லுங்கியுடன் கிளம்பி விட்டேன்.

அப்போது இரவு 8 மணி. டாக்டர் கிளீனிக்குக்கு 1 கிலோமீட்டர் போக வேண்டும். டாக்டரை பற்றி ஒரு சின்ன முன்னுரை. எங்கள் ஊருக்கு 15 வருடமாக சிகிச்சை அளிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் (எனக்கு உடம்பு சரியில்லைன்னா பாட்டிதான், டாக்டர் எல்லாம் கிடையாது). ஆனால் அவர் முழு நேர அலுவல் பெருந்துறை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியும்.

கிளீனிக்குக்கு போன பொழுது டாக்டர் உள்ளே ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டரின் மகள் நிறைய சாக்லெட் வைத்துக் கொண்டு உக்கார்ந்திருந்ததால் என்ன பிறந்த நாளா என கேட்டேன். இல்லை 10 ம் வகுப்பில் 1010 மார்க் எடுத்திருக்கேன் அதுக்கு என்றாள். ரொம்ப சந்தோசம் எந்த ஸ்கூல், எந்த குரூப் என கேட்பதற்க்குள் டாக்டர் என்ன வீட்டுக்கு போலாமா என கேட்டுக் கொண்டே வெளியே வந்தார். என்ன டாக்டர் உங்களை மாதிரியே டாக்டருக்கு படிக்க வைக்க போகிறீர்களா என சொல்லிவிட்டு நான் என் நிலைமையை சொன்னேன்.

என்னப்பா, வீட்டுக்கு போகும் நேரத்துல இந்த மாதிரின்னு என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். டாக்டர், இது உங்களுக்கு புதுசில்லை ஆனால் எஙக பாட்டிக்கு புதுசு... வீட்டுக்கு போற வழிதானே பார்த்துட்டு போலாமே என்றேன். 15 வருடமாக எங்கள் ஏரியாவில் மருத்துவம் செய்து கொண்டு இருந்தாலும் எங்கள் வீட்டுக்கு வழி தெரியாது என்றதால் வழி சொல்லிவிட்டு வீட்டுக்கு முன்னே போனேன்.

எங்கள் பழைய வீட்டை இடித்துக்கட்டி 2 வருடம் ஆகிறது. வீடு கட்டும் பொழுது நான் அருகில் இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதை எல்லாம் வைத்து வீட்டை என் மனதில் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஒரு வருடத்துக்கு முன் வீட்டிற்க்கு சென்ற பொழுது என் கற்பனைக்கும் வீட்டுக்கும் நிறைய இடைவெளி இருந்ததால் அது சரியில்லை இது சரியில்லை என ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன்.

எங்க வீட்டுக்கு பெரிய கேட் இருக்கும். என்ன பெயின்ட் அடிப்பதுன்னு பெரிய பட்டிமன்றமே நடத்தி கருப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்திருந்தோம். அதுவரைக்கும் வீட்டில் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது என்ன இது கேட்டுக்கு கருப்பு பெய்ண்ட் என்று கேட்டதில் எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் (அவர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை இப்பொழுது யாரும் குறை சொல்வதில்லையாதலால்). டாக்டர் காரை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு சொன்ன முதல் வார்த்தை கேட் ரொம்ப நல்லா இருக்கு, அதுவும் இந்த கருப்பு மஞ்சள் காம்பினேஷன் ரொம்ப இருக்குன்னு சொல்லிட்டே வீட்டுக்குள் வந்தார்.

பாட்டிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே வீட்டை நன்கு பார்த்துக் கொண்டிருந்தார். அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்குன்னு சொன்னவர் கடைசியாக வரிசையாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்தார். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதை தொகுப்பு, Da Vinci Code, A monk who sold his Ferrari, Angels and Demons, The Alchemist என கலந்து இருந்ததை பார்த்து இதெல்லாம் யாரு இந்த கிராமத்தில படிக்கிறதுன்னு கேட்டார்.

எல்லாம் எஙக பையன்தான்னு பாட்டி சொன்னாங்க. அதுவரை என்னிடம் சரியாக பேசாத டாக்டர் திரும்பி, நீ என்னப்பா படித்திருக்கிறாய் என கேட்டார். என்ஜினியரிங் என்று சொல்லியதும், அதை படிச்சிட்டு இந்த கிராமத்துல என்ன பண்ணிட்டு இருக்கிறாய் என ஆச்சர்யமாக கேட்டார். இல்லைங்க, பெங்களூரில் இருக்கிறேன், வார இறுதியில் ஊருக்கு வந்துவிடுவேன் என்று சொன்னதும், வார வாரம் வர்றியே, சாப்ட்வேரா கம்பெனியிலயா இருக்க? என கேட்க ஆம் என் சொன்னேன். திரும்பவும் ஆச்சர்யபட்டார். டாக்டர் ரொம்ப ஆச்சர்ய படாதீங்க, உங்க உடம்புக்கு ஒத்துக்காது என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

உன் உடையை பார்த்து உன்னை நான் தவறாக நினைத்துவிட்டேன். என் பார்வையை நான் சரி செய்து கொள்ளவேண்டும் என்றார். நீங்களும் இந்த வீட்டை பற்றிய என் பார்வையை சரி செய்துவீட்டீர்கள். இங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பார்த்து கட்டிய வீட்டை அது சரியில்லை இது சரியில்லை என எதாவது நொல்லை சொல்லிக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவருடைய பார்வையும் அது வைக்கும் அளவுகோலும் வித்தியாசம். என்னுடையதுதான் பெருசு என்பதில்தான் பிரச்சினை. இப்போ இதை புரிஞ்சிக்கிட்டதால இனி மேல் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். எங்கள் வீட்டில் அனைவரது முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.

புரபொஷனல் டாக்ஸ்: நிதி அமைச்சரும் சிவாஜியும்

முந்தின பதிவு எழுதும் போது கொஞ்சம் சூடா இருந்தேன். என்னை சாந்தி (!) அடைய வைக்கும் மாதிரியான மெயில் வந்தது. ஓவர் டூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி, சாப்ட்வேர் என்ஜினியர், பாஞ்சாலங்குறிச்சி (வேளாங்கண்ணி இருக்கும் பொழுது, ம்ம்ம்... இருக்கலாம் தப்பில்லை) கன்சல்டிங் இன்கார்ப்பொரேஷன் மற்றும் நிதி அமைச்சர் பி.சிதம்பரம்...

பி.சிதம்பரம்: நீர் தான் சாலரீடு எம்ப்ளாயீ'ஓஓ....

சிவாஜி: நீர் தான் பி.சிதம்பரமோ...

பி.சிதம்பரம்: இதுவரை வருடம் ரூபாய் 2500 செலுத்தி வந்த புரபொஷனல் டாக்ஸ் இனிமேல் வருடம் ரூபாய் 7500, அதாவது மாதம் ரூபாய் 625 வரி அரசுக்கு செலுத்த வேண்டும்.....

சிவாஜி: வரி, வட்டி, கிஸ்தி... யாரை கேட்கிறாய் வரி... எதற்க்கு கேட்கிறாய் வரி.. பக் பொழிகிறது.. ரெவின்யூ விளைகிறது.. உனக்கேன் கட்ட வேண்டும் வரி. பிராஜெக்ட் குவிகிறது வருமனம் வருகிறது உனக்கேன் கட்ட வேண்டும் வட்டி...

எங்களோடு சப்போர்ட்டுக்கு வந்தாயா?
பக் ஃபிக்ஸ் பண்ணினாயா?
டாக்குமென்டேஷன் செய்தாயா? அல்லது,
கொஞ்சி விளையாடும் பெஞ்சில் உள்ளவர்களுக்கு ட்ரெயினிங் தான் கொடுத்தயா? கிளயெண்ட்டா? பிராஜெக்ட் மானேஜரா? மானங்கெட்டவனே...

ஆர்வக் கோளாறும் அரை வேக்காட்டுத்தனமும்...

இந்த அறிவுப்பசி அண்ணாசாமிகளை திருத்தவே முடியாது!!! எனக்கு வந்த ஃபார்வார்ட் மெயிலில் கீழ்க்கண்ட சங்கதி இருந்தது.

mail starts...

IT strike

Employees of IT Companies in Hyderabad, Bangalore, Chennai, have decided to stage a walk out on Monday, the 31st of July owing to the raise of Professional Tax. Kindly forward this to all IT employees, colleagues, friends to turn on this awareness. The best means is Forwarding messages and It Employees are no less a centurion in sending forwards. For once, for their own sake let them forward this mail around and circulate all over to create this awareness.

For those who are still not aware,

Every month Rs 200 is deducted from our salary as Professional Tax and 300 in March Totaling the Yearly Amount to Rs 2500. Now Instead of Rs 2500/Year we will be charged Rs.7500/Year i.e. - Rs. 625/Month will be deducted from now ..........

mail ends...

என்னடா இது, IT மக்கள் கூட்டமா சேருவாங்கா போலிருக்கு... அதுக்கு நம்ம இங்கிலீஷ் தினத் தந்தியில் இவ்வளவுதான் மரியாதையான்னு (ஒரு வரியில சொல்லிட்டாங்க) ஒரே சோகமா இருந்தேன். சரி இந்த அறிவுப்பசி அண்ணாசாமிக்கு நிறைய வேலை இருந்திருக்கும். அதனால விரிவான செய்தி சொல்லாமல் விட்டிருக்கலாம்ன்னு படத்தில் கிடைத்த விவரங்களை வைத்து தேடிப் பார்த்தால் த்த்தூஉஊ.... காறித் துப்பலாம் போல இருந்தது... மேட்டர் என்னன்னா அது Income tax department, Information Technology இல்லை...

கீழே படத்தை பாருங்க... அதே பேப்பரில் இதை எப்படி போட்டிருக்காங்கன்னு

I-T strike

நம்ம மக்களாவது இதுக்கெல்லாம் ஒன்னு சேருவதாவது... பில்லிங், டெட்லைன், இம்பிளிமென்டேஷன், கமிட்மென்ட் ஒதுங்கிடுவாங்க...

இது (Professional tax hike) 2004 முதலே பேசப்பட்டு வந்தாலும் இப்போதான் அமுல்படுத்திருக்காங்க... 2004ல் பிரேம்ஜியின் வார்த்தைகள் இங்கே...

ஒன்று மட்டும் நிஜம்... கொஞ்சம் விசாரிக்காம நாமளும் வார்த்தையை விட்டுட்டா கடைசி வரைக்கும் அதுக்கு சப்பைகட்டு கட்டவே நேரம் சரியாக இருக்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம்...

Tuesday, July 25, 2006

புதிர்

kr1

ஆப்பிரிக்கா காட்டில் ஒரு நாள் உங்களை தலை கீழாக மேலே உள்ள படத்தில் இருப்பது போல் கட்டி வைத்துள்ளார்கள். மெழுகுவர்த்தி மெதுவாக உங்களை கட்டியிருக்கும் கயிற்றை எரித்துக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் 3 நாள் சாப்பிடாத சிங்கம் உங்களுக்காக பசியுடன் காத்திருக்கிறது. உங்களை காப்பாற்ற ஒருவரும் அருகில் இல்லை. உங்களது உயிர் இப்போது அந்த கயிற்றிடம் உள்ளது.

நீங்கள் எப்படியாவது அந்த சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மெழுகுவர்த்தியை அணைக்கச் செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை:

2

Monday, July 24, 2006

மப்பு சுல்தான்

சாப்ட்வேர் குஞ்சுகளுக்கு லொள்ளு மற்றும் வேகம் அதிகம், அதிலும் கட்டுடைப்பு என்றால் முன்னாடி நிற்பார்கள். TIP சுல்தான் என ஒருவரை Microsoft Office tip குடுக்க அனுப்பினால் அவர் அடுத்த நாள் திரும்பி வரும் முன்னர் மப்பு சுல்தானை இறக்கி விட்டிருந்தார்கள் அவருக்கு போட்டியாக...

image002

யாதுமாகி நின்றாய் - 1

broken-heart-2

மண்டைக்குள் எப்பொழுதும் குதிரைக் குளம்பின் சத்தம் வந்து கொண்டிருக்கிறதா? கண்ணை மூடினால் கடைசியில் நீங்கள் விளிம்பில் தொங்கிக் கொண்டு யாரவது வந்து தூக்கி விடுவார்களா என படுக்கையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறீர்களா? இன்னைக்கு ட்ரீட் என்னுடையது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் என நண்பர்கள் யாரவது சொன்னால் என் இதயம் கவர்ந்தவளுடன் ஏரிக் கரையில், நிலவு வெளிச்சத்தில் என சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்களா? எந்த ஜோடி மரத்தை சுத்தி டூயட் பாடிக் கொண்டிருந்த்தாலும் நாயகனின் முகத்தில் உங்கள் ஃபோட்டோவையும் நாயகி முகத்தில் ஒரு கேள்விக்குறியை மாட்டி டூயட் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? ஜாதகம் வந்திருக்கு என அம்மா ஃபோனில் சொன்னால் இங்க நான் சாதிக்க (?) வேண்டியது நிறைய இருக்கு, அப்புறம்தான் கல்யாணம் என சாமாளிக்கிறீர்களா? அந்த பெண்ணிடம் ஃபோனில் பேச ஒன்றும் இல்லாமல் அப்புறம் அப்புறம் அப்புறம் ... என 100 தடவை சொல்லிக் கொண்டிருக்கீறீர்களா? அவளிடம் பேச காரணம், மெயில் அனுப்ப காரணம் தேடிக் கொண்டிருகிறீர்களா?

எதோ என்னால் முடிந்த வகையில் உங்களுக்கு உதவ (உபத்திரவம்?) முயலும் முதல் முயற்சி!!!

என் தூக்கமில்லா இரவுகளுக்காக உன்னை சபிக்கலாம் போல இருக்கிறது; உனக்கொரு மகன் பிறப்பான், அவன் என் மகள் பின்னால் பைத்தியமாக சுற்றுவான், இப்போது நான் உன் பின்னால் சுற்றுவதை போல.

ஆனால் நாம் ஏன் அந்த பிஞ்சுகளுக்கு இந்த கொடூரத்தை செய்ய வேண்டும்,
அவர்கள் அண்ணன் தங்கையாக இருந்துவிட்டு போகட்டுமே!!!

இதை யாரிடமாவது சொல்லி உயிரோடு இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த சேவையை தொடர எனக்கு அது மேலும் ஊக்கமளிக்கும் :-)

பின்குறிப்பு:- தலைப்பை தனியாக விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

Friday, July 21, 2006

காலை வணக்கம்!!!


எழுதிய நாள்: மே 12, 2006
எழுதிய நேரம்: காலை 8:30 மணி

இது நான் யாருக்கு சொல்லியிருப்பேன், இல்லை யாரை நினைத்து எழுதி இருப்பேன்னு பெரிய விவாதமே நடந்தது...

Thursday, July 20, 2006

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்! -2

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்! -1

இதையே போய் கலைஞரிடம் போய் சொன்னா முரசொலியில் தம்பிக்கு கடிதம் எழுதி உனை எங்க பார்த்தாலும் தோலை உரிச்சி உப்புக் கண்டம் போடுங்க, திராவிட காக்கைக்கு உணவாகட்டும்ன்னு சொல்லுவார். ன்னு சொல்லிட்டே 3வது குலக் கொழுந்து என்ட்ரி குடுத்தது. ராமன் ஆரியன், ஹிட்லர் அவன் வம்சாவழி, அப்போ ராவணன் ஒரு யூதர்!!! மக்கா, நாம 3 பேரும் ஒரு பெரும் உண்மைய கண்டு பிடிச்சிருக்கோம். சாயங்காலம் எல்லோரும் பியர் அடிச்சு கொண்டாடிருவோம் ன்னு அவன் காரியத்துல குறியா இருந்தான்.

பின்னாடியே வந்த ஒரு கப்பி பய, என்னையும் சேர்த்துக்கங்க, நாம இன்னொரு உண்மையையும் கண்டுபுடிச்சிருக்கோமேன்னான். என்னடா உஷார் பண்ணின பியருக்கு பங்கு வந்துருச்சேன்னு 3வது குலக் கொழுந்து கொஞ்சம் யோசித்தது. என்ன சொல்லித் தொலைன்னு வேண்டா வெறுப்பா கேட்டான்.

கலைஞர் அவர் மகனுக்கு ஸ்டாலின்னு பேரு வைக்க காரணம் அவர் ஒரு ரஷ்யர். அவர் கொண்டாடும் ராவணன் ஒரு ஜெர்மனியர், இவங்களெல்லாம் சேர்ந்து எதிர்ப்பது 10 ஜன்பத் சாலையில் இருக்கும் இத்தாலி நாட்டு மக்களின் இந்திய அரசியல் பிரவேசத்தை. இது வரை நீங்கள் இதை ஒரு இந்திய பிரச்சினையாக பார்க்கிறீர்கள், ஆனால் இது ஒரு சர்வ தேச பிரச்சினை. ஐ நா சபை மட்டுமே இதை தலையிட்டு தீர்க்க முடியும். என கப்பி பயல் சொல்லி முடித்தான்.

குலக் கொழுந்து 1: 0 கண்டு பிடிச்சது இந்தியர்கள். ராவணனுக்கு (யூதர்) 10 தலை, தசரதனுக்கு(ஆரியர்+ஜெர்மானியர்) 10 ரதம்... அப்போ எல்லொரும் ஆரியர்கள்.

குலக் கொழுந்து 2: குரங்குக்கும்தான் 10 விரல் இருக்கு, அப்போ அதுவும் ஆரியர்களா?

கொடாக் கண்டன்: ஹரியானா காரங்கதான் உண்மையான் ஆரியர்கள் ஏன்னா hariyana வில ஹ வை எடுத்துப் பாருங்கள், ஆரியன்னு வரும்.

விடாக் கண்டன்: wait wait... அப்போ ஹரியானா காரங்க எல்லாம் குரங்குங்கறியா???

குலக் கொழுந்து 2: சமஸ்கிருதத்துல ஆர்யான்னா ஆசிரியர்ன்னு அர்த்தம். ஆகவே சாஃப்ட்வேர் ஆசாமிகள் எல்லாம் திராவிடர்கள்.

குலக் கொழுந்து 3: இல்லையே , இது சரி வரலையே... உன்னுடைய தியரி சாஃப்ட்வேர் ஆசாமிகள் எல்லாம் ஆரியர்கள் இல்லைன்னுதான் சொல்லுது. திராவிடர்கள் என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது.

குலக் கொழுந்து 2: நான் சொல்ல வரதும் கிட்டத்தட்ட அதுதான்... எனக்கு சாஃப்ட்வேர் மக்கள் எல்லாம் குரங்குக இல்லைன்னு நிருபிக்கணும்... என் வீட்டு ஓனர் பொண்னை நாங்கெல்லாம் வரிசையா டாவடிக்கறதால அவர் சாஃப்ட்வேர் மக்கள் எல்லாம் குரங்குன்னு உறுதியா சொல்லிட்டு திரியறார்.

மேனேஜர்; நீங்க ஆரியனா? திராவிடனா? ஜெர்மானியனா? ரஷ்யனா? குரங்கன்னா என்னால சொல்ல முடியாது. ஆனா வெட்டிப்பசங்கன்னு உறுதியா சொல்ல முடியும்.... காலையிலிருந்து எவனும் ஒரு துரும்பையும் அசைக்காம, கேள்வி கேட்டவனே மறந்து போயிட்டான். 3 நாளா இதையே பேசிட்டு, போயி வேலையை பார்க்கறீங்களா, கண்ணுகளா???

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்!

இது 1999 வருடம் நடந்த உண்மை சம்பவம். சாஃப்ட்வேர் குஞ்சுகளை வெட்டித்தனத்தில் மிஞ்ச யாருமே இல்லை என்பதை நிருபித்த நாட்கள் அவை. நான் அந்த உரையாடலின் போது அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் இதுவரை இதற்க்கு யாரும் காப்பிரைட் கேட்காததால் இதை நான் வலையேற்றுகிறேன். இதில் வரும் கதாபாத்திரங்களை தற்போதைய வலை பதிவர்களுடன் நீங்கள் ஒப்பீடு செய்து அவரா இவர்? இவரா அவர்? என கேட்க வந்துவிடாதீர்கள்.

Who or what is Maithili, in context of Indian literature?

இதுதானப்பா கேள்வி... தெரிஞ்சா சொல்லணும் இல்லைன்னா தெரியலைன்னு நடையைக் கட்ட வேண்டியதுதானே. கேள்வி கேட்டவனுக்கு சொந்தமா சூனியம் வைச்சது தெரியவர 3 நாளு ஆச்சு. ஒரு 3 மணி நேரத்துக்கு ஒருத்தன் கிட்டையும் பதில் இல்லை. கேட்டவனும் சரி வேலையை பார்க்கலாம்ன்னு மூழ்கிட்டான். அப்போதுதான் அல்டா விஸ்டா, கூகுல் எல்லாம் வந்த நேரம். ஒரு அறிவுப்பசி அண்ணாசாமி எங்கேயே தேடி அலைந்து வந்து சொன்ன பதில் கீழே:

மைதிலி என்பது மத்திய பீகாரில் பேசப்படும் ஒரு மொழி. அதற்கென தனியே இலக்கியங்கள் உள்ளன. இது ஒரு பழமையான் மொழி. ஏறக்குறை ஹிந்தி மொழி போல இருக்கும்.

அற்புதம் , அருமைன்னு கேள்வி கேட்டவன் நிம்மதியா சாப்பிட்டு வந்து வேலைய பார்க்க ஆரம்பிச்சான். இன்னொரு கொடாக்கண்டன், அவன் தாத்தா பாட்டிக்கெல்லாம் ஃபோன் பண்ணி ஒரு முக்கியமான் தகவலை சொல்லறென்னு ஊரை கூட்டி கீழே இருக்கறதை சொன்னான்.

மைதிலி பிராமணர்கள் அவர்களின் உணவு வகைகளுக்கு பெயர் போனவர்கள்! ராமாயணத்தில் கூட சீதையின் அப்பா ஜனகன் மிதிலையை ஆண்டதாக வருகிறது. அந்த பகுதியில் பேசப்பட்ட மொழிதான் மைதிலி.

அவன் பங்குக்கு உளறிவிட்டு கணிணியில் தலையை புதைத்துக் கொண்டான்.

அதே இடத்தில் ஒரு விடாக் கொண்டன் இதையெல்லாம் கவனித்து விட்டு கொடாக் கண்டனை வாரிவிட இதுதான் நல்ல சந்தர்ப்பம்ன்னு அவன் பங்குக்கு போட்டுத் தாக்கியது கீழே:

நேத்து (1999 ல்)கூட ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் அந்நியர் பிரதமராகும் பிரச்சினையில், சீதா பிராட்டி கூட அந்நியர்தான் ஏனெனில், அவர் பிறந்த ஜனகபுரி நேபாளத்தில் இருக்கிறதுன்னு சொல்லியிருக்கிறார், நீ பீகாரை ஜனகர் ஆண்டார்ன்னு சொல்லற, என்ன எங்களுக்கு மண்டையில மசாலா இல்லைன்னு நினைச்சிட்டியா? ன்னு தாளிச்சிட்டான்.

ஆபீஸுக்கு ரொம்ப லேட்டா வந்த குலக் கொழுந்து 1 சோனியா விவகாரத்தைத்தான் காலையில் இருந்து பேசி கொள்வதாக நினைத்துக் கொண்டு அப்படியே இன்னொரு குலக் கொழுந்துவிடம் போய்

இவனுக மசாலா இல்லாத பசங்க, சிவ பெருமான் இருக்கறதா சொல்லற கையிலாயம் சீனாவுல இருக்கு, புத்தர் பிறந்த லும்பினி நேபாளத்துல இருக்கு, குரு நானாக் பொறந்த தல்வாண்டி பாகிஸ்தான்ல இருக்கு, பேச வந்துட்டானுக என முனகினான்.

சின்ன வயதில் காளி கோவிலில் தேங்காய் உடைக்கும் போது கரணம் போட்டும் தேங்காய் பொறுக்க முடியாத ஆத்திரத்தில் நாத்திகனாக மாறிய குலக் கொழுந்து 2 குலக் கொழுந்து 1 வின் வாதத்தில் ஒத்துப் போனாலும் கடவுளை பற்றி பேசியதால்

அட, அதையெல்லாம் என்கிட்ட சொல்லாத. அத்வானி பாகிஸ்தான்ல பொறந்தாரு, அமர்த்யா சென் வங்காள தேசத்தில் பொறந்தாரு ந்னு சொல்லு ஒத்துக்கிறேன்.

இப்படி குலக் கொழுந்து 1 அடிக்கடி சாமி பற்றி பேசுவதால் இவன் வாயை அடக்க இதுதான் நல்ல சமயம் என எண்ணி

நீ ராமனை கும்பிடரயே அவரு ஆரியர், ஹிட்லரும் ஆரியர்ன்னு சொல்லிக்கிட்டார், அப்போ ஹிட்லர் ராமர் வம்சம். ஹிட்லர் பண்ண கொடுமையை யாரும் இன்னும் மறக்கலை, புரிஞ்சுக்கோ தம்பி!
ராவ ணனை கொன்னுட்டு புஷ்பக விமானத்திலேறி அயோத்தி வந்த ராமர் அதை நேரா ஃபிராங்பர்ட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாரு. அதுதான் இப்போதைய லூப்தான்ஸா...

பேயறந்தால் கூட கண்ணாமுழி பிதுங்காது குலக் கொழுந்து 1க்கு. ஆனால் இப்போது லேசாக கண்ணாமுழி பிதுங்க ஆரம்பித்திருந்தது.

இதை நீ நம்ப மாட்டேன்னு எனக்குத் தெரியும், புஷ்பக விமானத்தை ஓட்டியது அன்னப் பறவையின் வம்சம், லூப்தான்ஸாவின் சிம்பல் அன்னப் பறவை, இப்போ புரியுதா???

குலக் கொழுந்து 2 ரொம்ப குதிக்கிறான், அவன் வழியிலே போயி அவன் வாயிக்கு பிளாஸ்திரி போடல என் பேரு படையப்பா இல்லைன்னுட்டு

ராவணன் தான் ஜெர்மனிக்காரன். ஏன்னா புஷ்பக விமானத்துக்கு அவந்தான் ஓனர். புஷ்பக விமானத்துல ஒரு தடவை போனதால ராமன் ஜெர்மனிக்காரன் ஆக முடியாதுன்னு

வாதம் பண்ணினான்.

--தொடரும்.

Tuesday, July 18, 2006

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

அமெரிக்க பயணம் முடிவானவுடனே இந்த முறை ரொம்ப நல்லா பிளான் பண்ணி போகணும்ன்னு முடிவு பண்ணி சில காரியங்கள் செய்தேன். குறைந்த நேரம் மட்டும் ஏர்போர்ட்டில் செலவு செய்வது மாதிரியான பயண திட்டம் அமைத்துக் கொடுத்தார்கள். பெங்களூர் டூ டெல்லி கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் என்றதும் என்னையும் அறியாமல் கிங்ஃபிஷர் காலேண்டரும் F TV யும் ஞாபகத்திற்க்கு வந்தது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் 3+3 சீட். அதில் எனக்கு எயில் சீட், பக்கத்தில் ஒரு மத்திம வயது பெண் மற்றும் ஒரு பாட்டி, இந்த பக்கம் ஒரு ஹை ஃபை இளைஞன், அவனுக்கு பக்கத்தில் இரு பாட்டிகள். என் பெயர் என்னன்னு பக்கத்தில் இருந்த மத்திம வயது பெண் ஆரம்பிக்க நான் என் வாழ்க்கை வரலாற்றை சொன்னேன். அந்த மத்திம வயது பெண் உடனே என் பெயர் சவிதா, H இல்லைன்னு சொன்னாள். தென்னிந்தியர்கள் எல்லா இடதிலும் H போடுவீங்க, ஹிந்தியிலதான் சரியாக எதையும் சொல்வார்கள் என துதி பாடினாள். ஓ, அப்படியா, J I T K A என ஒவ்வொரு எழுத்தாக சொல்லி என்னுடன் வேலை செய்யும் செக்கோஸ்லோவியா பெண்ணின் பெயர், இதை எப்படி ஹிந்தியில் கூப்பிடுவீர்கள் என கேட்டேன். யோசிக்காமல் ஜிட்கா என்றாள். செக் மொழியில் அது இட்கா, ஜிட்கா இல்லை. அவரவர் மொழியில் எப்படி உச்சரிக்க வேணுமோ அப்படி சொல்லிக் கொடுங்கள், நாங்கள் சொல்லுவோமே, அதை விட்டுவிட்டு வெட்டி தனமாக பதில் சொல்லக் கூடாதுன்னு கொஞ்சம் காட்டமாக சொன்னேன்.

அதன் பிறகு என் தொழில் விவரங்கள் கேட்டறிந்தாள். அந்த பெண் ஒரு டீச்சர் என்பதால் இப்போதைய குழந்தைகள் படும் அவஸ்தைகள் மற்றும் எங்கள் காலத்தில் நாங்கள் இருந்தற்க்கும் அவர்களின் இப்பொதைய பண்புகளை சிறிது நேர்ம் அலசி ஆராய்ந்தோம். எனக்கு திடீரென மூக்கு அடைத்த மாதிரி இருந்ததால் கிங்ஃபிஷர் அழகி (ஏர் ஹோஸ்டஸ் என்பது அவர்களை அவமானப்படுத்தும் என நினைக்கிறேன்)யிடம் சொன்ன மாத்திரத்தில் கேண்டி, தண்ணீர் பாட்டில், மாத்திரை என நன்கு கவனித்தாள்.
இதையெல்லாம் கவனித்த ஹை ஃபை இளைஞன், அவனாக வந்து பெங்களூர் ஒரு வெட்டியான ஊரு, இவ்வளவு வரி குடுத்தும் டிராபிக் ஜாம், குறுகலான ரோடுகள், ரோட் சென்ஸ் இல்லாத மக்கள் என திட்டி தள்ளினான். இந்த இடத்தில் நானும் கொஞ்சம் ஒத்துப் போனதால் ஆமாம் போட்டு வைத்தேன். டெல்லிதான் சிறந்த ஊர், இங்க இல்லாததே இல்லை, டிராபிக் சுத்தமாகவே இல்லை என சொன்னான். அப்புறம் ரஜினி பற்றி பேச்சு வந்தது. அவன் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு சந்திர முகி படத்தின் முதல் சணடையை கலாய்த்துக் கொண்டிருந்தான். கிருஷ் பார்த்துட்டையான்னு கேட்டேன். பார்த்தேன், நல்ல படம்ன்னு சொன்னான். நான் சிரித்துக் கொண்டு விமானத்தை விட்டு இறங்கி லக்கேஜ் எடுக்க அவனுடன் ஒன்றாக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுதும் அவன் ரஜினி பற்றியே ஒயாமல் பேசிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வெள்ளை நிற கதர் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் , தோளில் ஒரு ஜோல்னா பை வேகமாக மின்னல் மாதிரி வந்து கொண்டிருந்தது. திரையிலேயே பார்த்து பழகிய முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த போது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். சரியாக அவர் என்னை கடக்கும் போது, சட்டென்று என் குரல் எனையும் அறியாமல் வெளி வந்தது. சிவாஜி சூட்டிங் முடிஞ்சுதா சார்? நாங்கெல்லாம் ரொம்ப ஆர்வமாக இருக்கோம் என்றேன். சட்டென என்னிடம் கையை நீட்டி குலுக்கிக் கொண்டே நல்லா வந்துட்டு இருக்குங்க அப்படின்னு சொன்னார். வரேன் என என் பதிலுக்கு காத்திராமல் மின்னல் மாதிரி வெளியேறினார். அடடா, கேமரா கையிலேயெ இருக்கு, பேனா இருக்கு ஒன்னும் தோணவே இல்லைன்னு என் நெற்றியில் தட்டிக் கொண்டிருந்தேன். அது ரஜினியா,இவ்வளவு சிம்பிளா இருக்காரு? என அந்த டெல்லிக்காரன் அசந்து போய் கேட்டான். ஆமாம், ரஜினி கிட்ட அப்படி என்ன இருக்குன்னு கேட்டியே, எவ்வளவு உயர்த்தில இருந்தாலும் அவரு யாருன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நமக்குத்தான் மத்தவங்க பண்ணுவது தப்பாகவே தெரிகிறது என்றேன்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் -ஷட்டில் என்பதால் எங்களை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி வேறு ஒரு கார் மூலம் அழைத்துச் சென்றார். டெல்லி ரோடெல்லாம் ரொம்ப அகலமாகத்தான் இருந்தது, ஆனால் 5 கிலோ மீட்ட்ர் செல்ல 45 நிமிடம் பிடித்தது. ஏர்போர்ட்டில் இறங்கும் போது ஏனோ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது ஞாபகத்துக்கு வந்தது.

Tuesday, July 04, 2006

கரம், சிரம் உள்ளே நீட்டாதீர்!!!

கரம், சிரம் புறம் நீட்டாதீர்ன்னு எல்லா அரசு பேருந்துகளிலும் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது ரொம்ப தப்பான கருத்து என்பதை நிருபிக்கும் நிகழ்ச்சி இன்னைக்கு காலைல நடந்தது.

பெங்களூரில் ஒசூர் ரோடு டிராபிக் பத்தி நான் தனியா சொல்ல வேண்டியதில்லை. வேண்டிய மட்டும் கேட்டிருப்பீர்கள் இல்லைன்னா அனுபவத்திருப்பீர்கள். என்னோட கைக்கணிணியில் புதுப்பேட்டையிலிருந்து "ஒரு நாளில்" பாட்டை செலக்ட் செய்துவிட்டு அப்படியே ஜன்னலில் சாய்ந்து கண்ணை மூடலாம் என நினைத்தால் அருகில் வந்து கொண்டிருந்த ஹுண்டாய் சான்ட்ரோவில் ரெண்டு கைகள் ஒரே சமயத்தில் கியர் ராடின் மேல் இருந்தது.

இது என்னடா வித்தியாசமான விளையாட்டே இருக்கே யாருன்னு பார்த்தா ரெண்டு IT ப்ரொபசனல்ஸ் (வேற யாரு இந்த கூத்தெல்லாம் பட்ட பகலில் பண்ணுவாங்க). நகராத வண்டிக்கே சும்மா மாத்தி மாத்தி கியர் போட்டுட்டு இருந்தாங்க. அப்புறம் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சு முகத்தை முகத்தை பார்த்துட்டே இருந்தாங்க ஆனா வாயை மட்டும் தொரக்கவே இல்லை. அப்படி இப்படின்னு 5 நிமிஷம் போச்சு. முன்னாடி இருந்த குப்பை லாரி எல்லா புகையையும் நேரா சான்ட்ரோ மேலே மொத்தமாக வாரி இறைத்துவிட்டு (குப்பை லாரி வாழ்க!!!) மெதுவாக 20 அடி நகர்ந்தது. சான்ட்ரோ அப்படியே ஸ்டெடியா நின்ன இடத்திலேயே நிக்க என் பஸ்ஸும் நகர ஆரம்பித்தது. சரி காலைக் காட்சி முடிந்ததன்னு பாட்டை கேக்கலாம்ன்னு போன டமார்ன்னு ஒரு சவுண்ட். சான்ட்ரோ பார்ட்டிகள் ரோட்டில் அவர்கள் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சும்மா நச்சுன்னு சான்ட்ரோவின் முன்பக்கதை குப்பை லாரியில் பார்க்கிங் செய்திருந்தார்கள்.

அப்பாடா, இனி நிம்மதியாக பாட்டுக் கேக்கலாம்ன்னு தலையை சாய்ச்சா எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகுதான் கண்ணை முழித்தேன்.

கரம், சிரம் உள்ளேயும் நீட்டாதீர்!!!!

Monday, July 03, 2006

இன்னா ஆறு

இன்னாருகிட்ட இன்னதுதான் பேச வேண்டும், இன்னாருகிட்ட இப்படித்தான் நடந்துக்கணும்னு வீட்டு பெருசுகள் சொல்லி சின்ன வயசுலிருந்தே நீங்கள் மனதில் உருப்போட்டிருந்தாலும் அவர்கள் செய்யாத விஷயங்களை நீங்கள் செய்து இன்னலில் மாட்டிக் கொள்வது மிக சகஜமான ஒன்றாக மாறி விட்டது. எனது கேள்வி ஞானத்தில் தலையான இன்னா ஆறை இங்கே கிறுக்கி உள்ளேன்.

1. பல ஃபிகர்களுக்கு ஒரே சமயத்தில் ரூட் போடாதீர்.

எதிர் வினை: பின்னாடி உதவும் என பழகும் பெண்களிடம் எல்லாம் நீதான் என் BF (அதாங்க, Best Friend) என சொல்லுவீர்கள். பெண்கள் இதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்புறம், நீங்கள் அப்படி இப்படி போடும் பிட்டில் உருகி அடுத்த ஸ்டேஜ் போகும் போதுதான் கலவரம் ஆரம்பமாகும். ஏன்டீ,அவன் ரொம்ப நல்லவன் இல்லை?. எத்தனை பொண்ணுங்க பழகுனாலும் என்னை மட்டும்தான் BF ந்னு சொன்னான் அப்படின்னு மெதுவாக சொல்ல அந்த ஜிகிடியும் என்னையும்தான் சொன்னான் சொல்லி விட்டு ரெண்டு பேரும் காளியாய் மாறி பின்னி பெடலெடுத்து விடுவார்கள். அப்புறம், மாலா, நீ எனக்கு BF, கீதா, நீ எனக்கு Forever Friend, சுமா, நீ எனக்கு Dearest Friend ன்னு சொல்லிட்டு வெட்டியா பிரயோசனம் இல்லாமல் காபி ஷாப்புக்கெல்லாம் கூட்டி போகணும்.

வினை: ஒன்னே ஒன்னுன்னு டார்கெட் வெச்சு அடிச்சீங்கன்னு வைச்சுக்குங்க, ஏற்கனவே செட் ஆகியிருந்தாலும் பையன் நல்லவன்னு மத்த ஃபிகருக்கு ரெகமெண்ட் செய்யும் வாய்ப்புகள் அதிகம். இல்லைன்னா, மாலா நீதான் இல்லைன்னு ஆகிடுச்சு உன் தங்கச்சின்னு இழுத்து அப்படியே போகிட்டே இருக்கலாம்.

2. பெண்ணை பிடித்து விட்டால் சுற்றி வளைத்து பேசாதீர்.

எதிர் வினை: எனக்கு OK, அவளுக்கு OK வா? என கேட்டு சொல்லறியா என அவள் ஃபிரெண்டிடம் கெஞ்சுவீர்கள். அந்த லொள்ளு ஃபிரெண்ட் என்னை கரெக்ட் பண்ணாமால் தூது போக சொல்கிறான் என மொத்தமாக கும்பலாக இருக்கும் போது கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டே சொல்ல மற்றவர்கள் குலவையிடுவார்காள் பாருங்கள், அவ்வளவுதான். ஜென்ம ஜென்மத்துக்கும் ஹூஹூம்....

வினை: நல்ல ஒப்பன் டைப், பட்டுன்னு சொல்லிட்டான். அந்த தைரியத்துக்கெ OK சொல்லலாம் என முதலில் கோபப்பட்டாலும் மூணு மாதம் கழித்து மிஸ்ஸுடு கால் விடும் வாய்ப்புகள் அதிகம்.

3. தவறு செய்ய ஆயிரம் வாய்ப்புகள் கிடைக்கும், அதை சொந்த ஊரில் செய்யாதீர்.

எதிர் வினை: ஃபிரெண்டெல்லாம் கம்பெல் பண்ணினாங்கன்னு ரெகுலர் சரக்கு அடிக்காமல் கண்டதையும் மிக்ஸ் பண்ணி ஊத்திவிட்டு நைட்டு பதினோரு மனிக்கு மேல் வீட்டுக்கு போய் நடு வாசலில் உவ்வே என பொங்கல் வைத்தால் கொஞ்ச நஞ்ச மிச்சமிருக்கும் மரியாதையும், கோவிந்தா கோவிந்தா.....

வினை: பையன் சொக்க தங்கம், வீட்டை விட்டு அனாவசியமாக வெளிய சுத்த மாட்டான், மூணு வேளையும் வீட்டில்தான் சாப்பிடுவான் என அக்கம் பக்கத்து ஆன்டிகள் உங்களுக்காக போகும் கல்யாண வீட்டிலெல்லாம் பெண் பார்ப்பார்கள்.

4. பெரியவர்களிடம் எடக்கு மடக்காக பேசாதீர்.

எதிர் வினை: பெருசு ஒரு நல்ல ஃபிகரை மனதில் வைத்துக் கொண்டு உங்களிடம் சம்பளம் எவ்வளவு எனக் கேட்டால் ஏன், தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க, சுவிஸ் பேங்க் ஏதாவதுல வேலை செய்யறீங்களா என நக்கல் அடித்தால் கதை கந்தலோ கந்தல். யாரவது ஒரு பொண்ணு வீட்டில் இருந்து சம்பந்தம் வந்தால் இவர் சம்பந்தமே இல்லாமல் உங்க ஊரு காரை வீட்டுக்காரர் மருமகனின் வீட்டில் கடலை எடுப்பவரின் பேரன் நான் என போட்டுத்தாக்கி அவர் வகையில் அவர் சாந்தி தேடிக் கொள்வார். நீங்கள் அப்புறம் அட்டெணன்ஸ் ஆர்டரில் பெண் தேட வேண்டியதுதான்.

வினை: பெருந்துறையில் 12 செண்ட் நிலம் இருக்கு, வாங்கலாமா என கேட்கும் பெருசிடம் விவசாயா பூமியா கிரையம் பண்ணினா பத்திர செலவு கம்மி, 20 சென்ட்டா கேட்டு பார்க்கலாம் என போட்டுத் தாக்குங்கள். துரையன் பையன் அப்பனையே தூக்கி சாப்பிடுவான் போல, வரப்பாளையத்துக்காரங்க வம்சம்லன்னு ஊரெல்லாம் இலவச விளம்பரம் சூரியன் FMல் வருவது போல. அடுத்த அட்டாக் நீங்கள் பண்ணும் வரை தாங்கும். இந்த மாதிரி அப்பப்போ துணிக்கடை விளம்பர ஜிங்கில் மாதிரி மாத்தி மாத்தி போட்டுத்தாக்கினால் என்னைக்கும் நீங்கதான் ஹீரோ.

5. வேலை வேலை என அதை மட்டும் கட்டிக்கொண்டு(!) அழுகாதீர்கள்.

எதிர் வினை: மேனஜருடன் 7 மணிக்கு மீட்டிங், கிளயண்ட் விசிட் நான் கூடவே இருக்கணும், ஒரு வாரத்துக்கு பார்க்கவேணாமே பிளீஸ்... என்பது போன்ற வார்த்தைகள் தான் நீங்கள் அம்பேல் என்பதற்கான அறிகுறி.

வினை: எனக்கு பயங்கர வேலை, இருந்தாலும் வர்ர வழியில் இன்னைக்கு பெருமாள் கோவிலில் உனக்கு அர்ச்சனை பண்ணினேன் என துளசி குடுத்து பாருங்கள். பத்து வாரம் கழித்தும் அது எப்பவும் அவள் கூடவே சுத்தும் ஹேண்ட் பேக்கில் பத்திரமாக இருக்கும்.

6. காதல் போதையில் உளறாதீர்.

எதிர் வினை: செத்து போயிடனும் போல இருக்கு, உன் மடியில் இப்படி படுத்திருக்கும்போதே. இப்படி ஜூனூன் தமிழில் டயலாக். பர்த்டேக்கு ஒரு பெரிய பொக்கே ஆர்டர் பண்ணி நைட் 12 மணிக்கு அவள் வீட்டுக்கே கொண்டு போய் அன்பை பொழிந்தால் உங்களுக்கு 6அடி குழி அட்வான்ஸ் குடுத்து நீங்களே வெட்டிக் கொள்கிறீர்கள். அப்புறம் நீங்க முன்ன மாதிரி இல்லைன்னு உங்கள் வரலாறு அடிக்கடி புரட்டிப் பார்க்கப்படும்.

வினை: இம்பெரெஸ் பண்னனும் மண்டையை உடைத்து ஐடியாவெல்லாம் யோசிப்பதில்லை, ஆனா எனக்கு என்ன பிடிக்கும்ன்னு பார்த்து பார்த்து பண்ணும் அந்த ஒரு குணம் போதும் என யோசிப்பது மிக அதிக சதவீதம் பேர்!!!

அப்பா ராசா, கூப்பிட்டதால இன்னா நாற்பதை இன்னா ஆறாக்கி விட்டேன். இதில் டாக்ட்ரேட் வாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்பதால் இத்துடன் இதுக்கு டாட்டா...

MLM மார்க்கெட்டிங் மாதிரி ஆயிடுச்சு எல்லொரும் ஏற்கனவே விளையாண்டு முடிச்சிட்டாங்க. ஆறு பேரை பிடிக்க முடியவில்லை, யாராவது மிச்சம் மீதி இருந்தா சொல்லுங்க, கோர்த்து விடரேன்.

Sunday, July 02, 2006

சிவாஜி தந்த மறுவாழ்வு!!!

http://www.hindu.com/fr/2006/06/23/stories/2006062302590400.htm

இந்த லிங்க் படி சிவாஜி 90 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. திருப்பதி தந்த திருப்பத்தில் இருந்து AVM சரவணன் மீண்டும் சிரிப்பதற்க்கான வாய்ப்பு!!!