Wednesday, December 23, 2015

உயிர் உறையும் நேரம்

வாட்சப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் விபத்து தொடர்பான கோரமான ஒளித்துண்டுகள் பதிவோருக்கு இந்தக் கதை சமர்ப்பணம்-துரை.உதயகுமார்அருண்  ஆகிய எனக்கு  25 வயதுதான். சின்னப்பையன், இன்னும் கொஞ்சநாள் போகட்டும் அப்புறம் பெண்பார்க்க ஆரம்பிக்கலாம் என என் அம்மாவே ஊர் வாயை அடக்கிவிடுவதால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பைல்ஸ், சுகர் மற்றும் இரத்த அழுத்தம் அதிகமுள்ள அப்பா; படிப்பு  விசயத்தில் அவர் என்ன வேண்டும் என நினைத்தாரோ அதைச் செய்ததினால் என் மேல் அசாத்திய நம்பிக்கை. கை கொள்ளாமல் இப்போது சம்பளமும் வாங்குவதால் அவருக்கு என்னிடம் குறை சொல்ல ஒன்றுமில்லை.

எனக்கு சின்ன வயதிலிருந்தே எதிலும் முதலில் வரவேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்துவிட்டேன். வீட்டுப்பாடத்திலிருந்து  எல்லாமே முதல்தான்; முதல் மார்க், முதல் பெஞ்ச், முதல் கால்குலேட்டர், முதல் வீடியோ கேம் என எல்லாமே முதல்தான். இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததே அளவு கடந்த வேலைப்பளுவுக்காகத்தான். வெறி ஏறிய   டெவெலப்பராக வேலையைச் சொன்ன நேரத்தில் முடிப்பதால் கம்பெனியில் மிக நல்லபெயர். ஐடியா சிக்காத சில நேரங்களில் கூட வேலை செய்பவர்களுடன் சேர்ந்து தம் அடிக்க பழகியிருக்கிறேன் . வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதலாய் வந்ததால் இப்போதெல்லாம் எதிலுமே ஒரு பிடித்தம் இல்லை எனக்கு. சோசியல்மீடியா  தோற்பவர்களின் கூடாரம் என அந்த பக்கம் ஒதுங்கியதே இல்லை. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்சப் என பேருக்கு இருந்தேன்.

அதெல்லாம் வீரம் விளைஞ்ச மண்ணு எனும் வாட்சப் குருப்பில் சேரும் வரைதான். இப்போதெல்லாம் போனும் கையுமாகத்தான் திரிகிறேன். எங்கிருந்துதான் இந்தமாதிரி வீடியோ பிடிக்கிறார்களோ என எனக்கு வேர்த்து விட்டது. சிங்கம் மானைத் துரத்தி வேட்டையாடி ரத்தம் வர கறி திண்பதில்  ஆரம்பித்து முதலை மனிதனின் காலை கடிப்பது, டிராபிக்கில் மாட்டி நொறுங்கும் கார், ரயில் தண்டவாளத்தில் குதித்து  தற்கொலை செய்வது என எல்லாம் அதிரிபுதிரியான வீடியோக்கள். ஸ்மார்ட்போனில்  வாட்சப் நோடிபிகேசன் பார்த்ததும் தலைதெறிக்க ஒடிப்போய் டாய்லெட்டில் உட்கார்ந்து 5 முறை பார்த்தவுடன்தான்  சமநிலைக்கு திரும்புகிறேன். சில வீடியோக்களில் சவுண்ட் இல்லாததில் எனக்கு பெரும் வருத்தம்... 

ஒரு நொடி கூட யோசிக்காமல் வீடியோ எடுத்தால் இப்படித்தான் ஆகும். சம்பவம் எப்போது நடக்கும் என யாருக்கும் தெரியாது, ஆனால் நடக்கும்போது ஒரு குண்டுமணி கூட சிதறாமல் பிடிப்பவன்தான் உண்மையான வேலைக்காரன், அதுவும் நானாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு செய்த முதல் காரியம் நல்ல ஸட்டர்ஸ்பீடு உள்ள ஸ்மார்ட்போன் தேடி வாங்கியதுதான். வீடியோ கேமரா எல்லா இடத்திலும் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது என்பதை விட அதை பிராசஸ் செய்து யூடுயுபில் போடுவதற்குள் வேறு யாராவது சப்பையான வீடியோவை முதலில் போட்டுவிடுவார்கள் என இந்த எற்பாடு.

ஒரு லாரி ஒரு காரின் மீது மோதும்போது முன்னாலோ பின்னாலோ இருக்கக்கூடாது. அல்லையில் இருந்தால் ஒரு பெர்ஸ்பெக்ட்டில் பெரிய ஏரியாவை ஃபிரேமில் கொண்டு வந்து விடமுடியும். லக் இருந்தால் சேதம் நானிருக்கும் பக்கம் அதிகமாகி சிந்தாமல் சிதறாமல் கேமராவில் அடைத்து விடலாம். 

ரயில் முன் பாய்ந்து ஒருத்தி சாகிறாளென்றால் அதில்  இரண்டு பாகங்கள். ரயிலுக்கு பாய்வதற்க்கு முன் மற்றும் பின் என. எவன் எப்போ என்ன செய்வான் என தெரியாததால் கேமரா எப்போதும் ரோலிங்கில் இருக்க வேண்டும். எட்டு நொடிக்கு ஒரு முறை அதே இடத்தை புகைப்படம் எடுக்கும் வகையில் சுத்திக்கொண்டிருந்தால் எதுவும் தப்பாது. இது ரயிலில் பாய்வதற்கு முன்பான ஷாட். கொஞ்சம் வெட்டி ஓட்டினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

என் பிரச்சினையே ரயிலுக்கு முன் பாய்ந்தபின் என்ன நடக்கும் என்பதுதான்.  ரயில் நேர்கோட்டில் வரும்போது மெதுவாய் வருவது மாதிரி தெரிந்தாலும் விசுக்கென்று வந்து அடியில் கிடப்பவனை அறைத்து விடும். ரயில் வருவதற்கு முன்னாலேயே விழுந்தானெனில் சக்கரம்தான் முதலில் ஏறும். இரண்டு சக்கரம் ஏறும் வரை  தாங்குவானா இல்லை நாலு அஞ்சு சக்கரம் தாங்குமா என எனக்கு இப்போது பெரிய தலைவலி. ஒரு வாரமாக இதே நினைப்புத்தான். வேலையில் கூட இவ்வளவு சிரமப்பட்டதாக நினைவில்லை.

மெயின் ரோடில் இருக்கும் கடையில் ஒரு தம்மடித்துவிட்டு வந்தால் ஒரு வேளை தெளிவு பிறக்கும் என நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு கிளம்பினான். ஃபோனில் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டு ஒருவன், வாட்சப்பில் நொடிக்கு மூன்று கெட்ட வார்த்தை டைப் செய்யும் ஒருவன், அஜீத்-விஜய் சண்டை போடும் இருவர் என மிகச்சாதரணமான மந்தை இது. நான் என் புதுப்பழக்கமான வீடியோ ரெக்கார்டிங்கில் தொலைந்து விட்டேன்.

அதென்ன சாப்ட்வேர் கம்பெனிகள் இருக்கும் இந்த இடத்தில் என்ன இத்தனை கூட்டம்? கிரேன் , வண்டிகள், பெரிய லைட் என சந்தைக்கடை மாதிரி என யோசித்த போது ஒருவன் வாய் திறந்தான் அது ட்விங்கிள் ஸ்டாரின் படத்துக்கான சூட்டிங்க் என்று. மணி நாலுதான் ஆகுது அவன் இன்னமும் எந்திரிச்சே இருக்கமாட்டான் என இன்னொருத்தன். ஸ்டார்ட் கேமெரா, ஏக்சன்  என ஸ்பீக்கரில் கத்துவது கேட்டது.  கூடி அழும் சீனுக்கு எதுக்கு ஏக்சன்ன்னு சொல்றாங்கன்னு சொன்ன நேரத்தில் கூட்டத்தில் இருந்து பெரிய சத்ததுடன் ஒரு கார் சீறி வந்தது. எப்படியும் ஐந்து பேராவது குறுக்கு உடைந்து மாவுக்கட்டுடன் இருப்பது உறுதி என சந்தோசத்துடன் ஃபோகஸ் செய்ய ஆர் ஆரம்பித்தேன். 

கூட வந்தவர்கள் சடாரென்று நடை மேடையில் ஏறிவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்தேன். இது எனக்கான தருணம், நான் யார் என்பதை உங்களுக்கு காட்டுகிறேன் என வேகமாக வண்டி வரும் திசையில் நகரும்போது பார்த்தால் ட்விங்கிள் ஸ்டார்தான் டிரைவிங் சீட்டில்.  கன நேரத்தில் கார் என்னை நோக்கி திரும்பி வேகமாக வந்து கொண்டிருக்கும்போது ஜூம் செய்து பார்த்தால் அவன் கண் விழி சொருகிய நிலையில் வந்து கொண்டிருந்தான்.

ங்கோ...என கத்தும்போதே அருணின் சோலி முடிந்திருக்கும். அவன் அந்த கடைசி வார்த்தை முழுதாக சொன்னான எனத் தெரியவில்லை. இந்த பாடை சூட்டிங்  வந்தாலும் பிரச்சினை வரலைன்னாலும் பிரச்சினை என புரடக்சன் மேனேஜர் சத்தம் போட்டுக்கொண்டே  வந்து ட்விங்கிள் ஸ்டார் தலையில் துண்டைப் போட்டு கேரவேனுக்கு இழுத்துப்போனான். இன்னொரு ஆள் டிரைவிங் சீட்டில் உக்கார்ந்து கொண்டான். நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லியபின் காருக்கு கீழே குனிந்து அருண்... அருண்... என சத்தம் போட்டபடி இருந்தனர். 

கேமரா இவர்களின் சத்தத்தையும் சேர்த்துதான் பதிவு செய்யும். ஆனால் வாட்சப்பில் பரப்புகிறவன் இதை வெட்டுவிடுவானா இல்லையா என தெரியவில்லை.