Sunday, February 18, 2007

உலகின்(ல்) உயிர்

மெயிலில் வந்த கவிதை இது.

On 2/18/07, Parthiban Subramanian wrote:

Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.


எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.

கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்

இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.

தீபாவளி

திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.

கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.

ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.

கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.

சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.

நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.

பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...

காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.

Friday, February 09, 2007

திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...

காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.

http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute

இது ஒரு நடுநிலையான கட்டுரை இல்லையென முகப்பிலேயே சொல்லி இருக்கும் போதிலும் உங்கள் மேலான கருத்துக்களை அதில் இணைப்பதன் மூலம் தமிழர்களின் காவேரி வாதம் இணையத்தில் இன்னும் வலுப்படும்.

என் பார்வையில்:

  1. தமிழ், தமிழன் என்றால் பிச்சைக்கார கூட்டம், அடுத்தவன் சொத்த்துக்கு ஆசைப்படுபவர்கள் என்னும் எண்ணம் எவருக்கும் வரும்படி மிக அழகாக, கோர்வையாக அடுக்கப்பட்டுள்ளது.
  2. 92' கலவரம் மிகவும் மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசி வரிகளில், "தமிழ்நாட்டிலும் இதேபோல் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது" என்று சொல்வதன் மூலம் அந்த கலவரத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி தெளிவாக தெரிகிறது.
  3. பழைய வரலாறு மிக அதிகமாகவும், கலவரம் பற்றிய குறிப்பு மிக குறைவாக இருக்கிறது என்ற எதிர்ப்புக்கு "91ல் இணையம் இல்லை, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்" என்பதுதான் பதில்.
  4. 2002 நாடகம் என்று சொல்வதின் மூலம் ஆசிரியரின் "நடுநிலை" வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
  5. "காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை - ஒரு கன்னடரின் பார்வையில்" என்பதுதான் மிகச்சரியான தலைப்பு. கட்டாயமாக ஒரு நடுநிலைமைக் கருத்தை என்னிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது கொஞ்சம் அதீதமாக தோண்றியது.
  6. நான் வாழும் காலத்திலேயே இணையத்தில் மிகப் பெரிய திறந்த மூலத்தில் வரலாறு திருத்தி எழுதப்படுகிறது. இதை சரியான முறையில் வெளிக் கொணரவில்லையெனில் என் முதல் கருத்து முற்றிலும் உண்மை என பின்னால் நிறுவப்பட்டுவிடும்.
  7. வழக்கம் போல், தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு இன்னொரு தலைமுறை நகர்ந்து கொண்டிருக்கும்.


என் நண்பன் சுவாமிநாதன் இதற்காகவெல்லாம் வாதாடி இருக்கிறான் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பா!!!

இந்த வாதங்களை இங்கே பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute

நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?

Monday, February 05, 2007

IT மக்கள் அசுரர்களா?

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்! என்ற கட்டுரைக்கு என் பின்னூட்டம் இது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் இணையத்தில் உலாவியதாலோ என்னவோ ஒரு பதிவுக்கு தேவையான அளவு சேர்ந்துவிட்டது.

=========
அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.

1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????

2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???

4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.

5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.