Monday, February 03, 2014

அலகிலா விளையாட்டு - பா.ராகவன்

நிலமெல்லாம் இரத்தம் மூலம் எனக்கு பா.ராகவன் அறிமுகம். 2006ல் படித்ததாக ஞாபகம். கிழக்குப் பதிப்பகத்தில் பல எழுத்தாளர்களுக்கு வேள்வி மாதிரி செம்மைப்படுத்துகிறார் என கேட்டிருக்கிறேன் மற்றும் என்.சொக்கன் அதை எழுத்தில் சொல்லியும் இருக்கிறார். ட்வீட்டரிலும்  தொடர்ந்து பார்த்துக்
கொண்டிருக்கிறேன், வெண்பாம் போடுவார், குறுமிளகு மாதிரி பல டிவீட்கள். நேரத்தைப் பற்றி கவலைப்படாத, நேரத்தை வீணாக்காத எழுத்தாளர். அலகிலா என்ற ஒரு சொல்தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. தமிழ் வழி இயற்பியலில் படித்தது 20 வருடம் கழித்து ஒரு புத்தகத்தின் தலைப்பாய். unitless, countless, infinity and so on. என்னால் கதை எந்த தளத்தில் எழுதப்பட்டிருக்கும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. விஷ்ணுபுரம் வாங்கி 5 வருடம் முழுதாக முடிந்து விட்டது. சிந்தித்து பார்த்ததில் விலை மற்றும் பக்கங்கள் குறைவு. ஒரு ஸ்டார்பக்ஸ் நடையைக் குறைத்தால் அசிடிட்டிக்கும் நல்லது என்ற அடிப்படையிலும் பாரா மேல் உள்ள நம்பிக்கையிலும் வாங்கியது.



இந்த புத்தகத்தை தூக்கம் வராமல் சனி இரவு வாசிக்க ஆரம்பித்து சரியாக 2 அத்தியாங்களில் என்னை தூங்க வைத்து விட்டது. (எனக்குப் பிடித்த) வேதியியல் புத்தகத்துக்குத்தான் இந்த பெருமை அதிக முறை. ஒரு பக்கம் படித்தாலும் அது சம்பந்தமான நிகழ்வுகள் அது இது என பல பக்கம் போய் வருவேன்.  NFL சூப்பர் பவுல் ஞாயிறு மதியம் 3 மணிக்குத்தான் அது வரை படிப்போம் என 1 மணிக்கு ஆரம்பித்தேன். சூப்பர் பவுல் முடியும் முன்பே படித்து முடித்து விட்டேன். X-Men ஹீரோ Hugh Jackman Fox-11ல் இங்க என்ன சொல்லுதுன்னா டென்வர், ஆனா ஜெயிக்கப் போறது சியாட்டில் சொன்னவுடன் எடுத்த புத்தகம் என்றால் மிகச்சரி. அதுவும் டென்வர் முதல் ஆரம்பமே கந்தலாகி சொதப்பியவுடன் முழு மூச்சாக படித்து முடித்தேன். நான் நினைத்த அணி வெற்றி பெறவில்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. இந்தக் கதைதான் மனம் முழுவதும்,  முழுவதுமாய்.

கதையின் நாயகன் யார், எங்கு நடக்கிறது என எந்தக் குறிப்பும் இல்லாமல் கதை ஆரம்பித்து விட்டது. பனி லிங்கம் - ஊர் பத்ரிநாத் அருகில் ஏதோ, சத்திரம், வேட்டி, வத்தக்குழம்பு - வயதான பிராமணன் என ஒரு வடிவம் கட்டிக் கொண்டிருக்கையில் தூக்கம் வந்து விட்டது, கதையின் தலைப்பை உணர்ந்துதான் நான் தூங்கியிருக்க வேண்டும். பாலகுமாரனின் இரும்புக் குதிரை படிக்க முடியாமல் வீசியிருக்கிறேன். அப்போது அது எனக்கான கதையல்ல. பகவத்கீதையும், பைபிளும் வீட்டில்  இருந்திருக்கிறது. கடினமான மொழி நடைக்காகவே தொடாமல் ஒதுக்கி வைத்திருந்தேன்.

ஆரம்பித்து 20வது பக்கத்தில் கதை சொல்பவன் சாகப் போவதாய் உணர்வதாய் வந்தால் எப்படி இருக்கும். முதலில் பேரைச் சொல்லிட்டு அப்புறம் சாகு என தூங்கப் போனேன். கடைசி வரையில் பேரே இல்லை. முடிந்தவரை கதை நாயகனாக மாறி கதையைப் படித்து முடிப்பதுதான் என்னளவில் படித்து முடிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை. எனக்கு சம்பந்தமில்லாத கதை, உண்மையை சொல்லப் போனால் நானும் ஒரு யாத்ரீகனாய் சத்திரத்தில் உக்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அழுத்தக்காரர்கள், எதோ ஒரு காரணத்துக்காக எல்லாவற்றையும் விட்டு யாருக்கும் சுமையாகவும் இல்லாமல் வந்து விட்ட வயதானவர்கள் குளிருக்கு பயப்படுவது, மாத்திரை தவறாமல் சாப்பிடுவது, சோறு, வத்தக்குழம்பு என நாக்குக்கு தீனி போடுவது என சராசரி மனிதர்களாகக் காட்டினாலும் அவர்கள் வழியாக ஓயாமல் சிந்திக்க வைக்கிறார்.

குளிரை வைத்து ஒரு உள்மனப் போரே நடந்து விட்டது. 2 மாதம் முன்பு முன்னறிவிப்பில்லாமல் திடீரென குளிரெடுத்த ஒரு நாளில் எப்போதும் போல் தூங்கப் போய் காய்ச்சலுடன் எழுந்து 2மாதம் இன்னமும் முடியவில்லை. காய்ச்சல் வந்து முடியாமல் அனத்திக் கொண்டு படுத்திருப்பது எத்தனை பட்டா பட்டி டவுசர் போட்டலும் பேஸ்மெண்ட் வீக் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். கவுரவம் பார்த்தால் நாளைக்கு இருப்போமா என்பதே தெரியாது.

ஒரு கதைக்குள் இழுத்துப்போட மசாலா தேவையில்லை, படிக்கும் மனம்தான் காரணம். பூரணியின் அப்பா நடத்திக் கொண்டிருந்த பாடசாலை என சொல்ல ஆரம்பித்தவுடன் ஒரு பிளாஷ்பேக் வருது என வரிந்து கட்டி உட்கார்ந்தால் மீண்டும் தத்துவ விசாரம். அறியாத வயசு புரியாத மனசு; கேள்விகள், கேள்விகள், கேள்விகள் மட்டுமே. பச்சை மண்ணைக் குழைத்து எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இங்கு சேர்த்து விட்டு உயர்ந்த படிப்பு என சொல்கிறார்களே, அந்தப் படிப்பு சொல்லிக் கொடுப்பவர் வீட்டில் மருந்துக்கூட மகிழ்ச்சி இல்லை. அம்மா ஆசிரியர் வீட்டு சோகத்தை உன் சோகமாய் என்னாதே என பலப்பல.

கதையின் ஊடாகவே 40களின் காந்தியைப் பற்றிய பேச்சுக்களை சொல்லி இவர் ஏன் அவரை மகாத்மா என நினைக்கிறார் என்றும் வேலை என்று வந்தால் தனக்குப் பிடித்த வேலை என்பது கடைசிதான் கிடைதத வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதுவே போதும் என்ற மனநிலைமையும் சொல்லி இருக்கிறார்.

பூரணி பூரணமானவள். விரக்த்தியின் விளிம்பில் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவள். அண்ணன் சொன்னான் என ஒருத்தனைக் கல்யாணம் பண்ண ஒத்துக் கொண்டு பத்திரிக்கை அனுப்புபவள் அதே அண்ணனை அனுப்பி போஸ்ட் மாஸ்டரை கல்யாணம் செய்திருக்கலாம். அச்சுபிழை காரணமாக புத்தகத்தில் வெள்ளைப் பக்கங்கள். மொத்தம் 8 பக்கங்கள் எழுத்தில்லாமல் வெளுப்பாய். நல்ல வேளையாக 2 பக்கத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி இருந்ததால் ஒரு மாதிரி கதையை புரிந்து கொண்டு நகர்ந்து விட்டேன்.

போஸ்ட் மாஸ்டரோ வாழ்வில் எதன் பொருட்டும் ஈடுபாடு இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். வீட்டில் அனைவரும் இவரை வழிக்கு கொண்டுவர முடியாதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கை முறை மாறியதும் இவரது மாறாத கொள்கையும் காரணம். இருபக்க நியாயங்கள் என்பதை மீறி மூன்றாவது பக்கமும் இருக்கும். நேர்க்கோட்டில் எதிரெதிர் திசைகளில் செல்பவர்கள் மற்றொரு பக்கத்தை சீண்டக்கூட மாட்டார்கள். திருவையாறு, சென்னை, மைசூர், கொல்கத்தா, கயா மற்றும் பத்ரிநாத். கோபாலகிருஷ்ண ஹெக்டேவிடம் மைசூரில், கயாவில் புத்த பிக்குகளிடம் உரையாடல் என எதிலும் தேங்காமல் ஓடும் இவர் எங்கு திருப்தி அடைவார் என தேடிக் கொண்டே படித்து கொண்டே இருந்தால் கையிலாயம். அதுவும் பூரணியுடன். ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தி.


Saturday, January 25, 2014

வெட்டுப்புலி - தமிழ்மகன்

வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்துக்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டு ஆகிறது - புத்தகத்தின் பின்னட்டை வாசகம்.




80-90 களில் கில்லி, பம்பரம், கோலிக்கு அடுத்த படியாக அதிகம் விளையாடிய விளையாட்டு தீப்பெட்டி அட்டை. தீப்பெட்டி மற்றூம் சிகரெட் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்து தட்டையான கல்லை தூர இருந்து வீசி வட்டத்துக்கு வெளியே தள்ள வேண்டும். வெட்டுப்புலி அட்டைக்கு மதிப்பு அதிகம். காரணம், அது ஊர்ப்பக்கத்தில் அதிகமாக கிடைக்காது. பெர்க்லீ சிகரெட் அட்டைக்கும் இதே கதைதான். ஈரோடு CSI ஆஸ்பத்திரி போய் திரும்பி வரும்போது வெட்டுப்புலியை ரோட்டில் பொறுக்கிய நினைவு. வெட்டுப்புலி ஒரு உண்மை சம்பவமாம். திருவள்ளூர் பூண்டி ஏரி அருகே நடந்த கதை. அதையும், தமிழ் சினிமாவையும், திராவிட இயக்கத்தையும் வளைத்துக் கட்டியதுதான் இந்த நாவல்.



தசரத ரெட்டி, லட்சுமண ரெட்டி, ருத்ரா ரெட்டி, சின்னா ரெட்டி, குணவதி - வெட்டுப்புலி கிளை. ஆறுமுக முதலி மற்றும் சிவகுரு சினிமாவுக்கான கிளை. கணேசன், மகன் நடேசன் மற்றும் தியாகராசன் திராவிடர் கிளை. ஆறுமுக முதலி சின்னா ரெட்டியிடம் மூங்கில் வாங்க பேசுவதும், லட்சுமண ரெட்டி வீட்டை விட்டு ஒடிப்போய் ஆறுமுக முதலி தியேட்டரில் வேலை செய்வதும் ஒரு முடிச்சு. ஆறுமுக முதலியும், கணேசனும் அண்ணன் தம்பிகள்.

இந்த நாவலின் பலமே நாம் அதிகம் மேலோட்டமாக கேட்ட கதையை அந்த காலகட்டத்தில் எப்படி பார்த்திருப்பார்கள் என அடுக்கிக் கொண்டே வருவதுதான். ஆசிரியர் நிறைய உழைத்திருக்கிறார். 30களில் மெதுவாக ஆரம்பிக்கும் நாவல் எடுத்த உடனே குதிரையில் பறக்கிறது. ஆசிரியர் மிக நிதானமாக பல செய்திகளை கதை மாந்தர்கள் வழியாக சொல்கிறார்.

முப்பதுகளில் இனாம் அகரத்தில் (காரணப் பெயர்) ஏழெட்டு ஐயர் வீடுகள் மட்டுமே. மீதி எல்லாம் டெல்லி, பாம்பே, கல்கத்தா என அரசாங்க வேலைகளில். நிலத்தை சமன் செய்பவன் ஒருத்தன், உழுபவன் ஒருத்தன், விளைச்சலில் பாதி ஜமீனுக்கு, இதற்கு அப்புறம் வெள்ளைக்காரன்.

30களின் உப்புமா மற்றூ காபி பற்றி ஒரு பேச்சு மிக அருமை. பீட்சா மற்றும் பர்கர் வந்த போதும் சீ இந்தப் பழம் புளிக்கும் என சொல்லாமல் லைன் கட்டி நிற்பது தலைமுறை மாற்றம்.  அதே மாதிரியான ஒரு துண்டு 60-70 சுயமரியாதை திருமணத்தின் போது மக்கள் எல்லம் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது. எல்லோரும் சமம் என தசரத ரெட்டியும் விசாலட்சியும் பேசுவதும். 60 களில் தியாகராஜனும் ஹேமலாதாவும் பேசுவதும் வருடம்தான் வேறே ஒழிய புதிதான ஒன்றை மக்கள் ஒரே மாதிரிதான். பார்க்கிறார்கள்.

சுதந்தரம் பற்றிய 30களில் மணி ஐயர் கருத்தாக எழுதியது மிகை கிடையாது. எங்க ஏரியாவில் விடுதலைப் போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறைவு (0 என எழுத முடியவில்லை, இந்த ஆராய்ச்சிக்கு நிறைய உழைப்பு தேவை).  கதைகள் கூட கேட்டது கிடையாது. என் அம்மாவின் பாட்டி கட்டிக் கொடுத்த பொங்கலூரிலிருந்து அவர் அப்பா ஊரான ஊத்துக்குளி ஜேடர்பாளையம் வரை நடந்து வந்தது, ராகி/கம்பு களி, பஞ்சம், பட்டினி பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கும். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும், 1930 அமெரிக்க கிரேட் டிப்ரஷன் பற்றி விலாவாரியாக படித்து வைத்திருக்கிறோம் நாம். கதையில் கூட சிறுத்தை வெட்டப்பட்டது உண்மைதான், ஆனால் திரைக்கதை ஊருக்கு ஊர் ஆளுக்கு ஆள் மாறுகிறது.

லட்சுமண ரெட்டிதான் கதையின் முதலில் குதிரையேறியவர். ஹீரோ என்றால் காதல் இல்லாமலா? இலக்கணப்படி அவருக்கும் குணவதி மேல் காதல். பூண்டி ஏரி வெட்டி கரையெழுப்பும் கூட்டத்தில் ஒரு தலைக் காதலும் வளர்கிறது. சாதியின் பெயரால் காதல் சிதைக்கப்படும் போது சாதியின் மேல் கோபம் கொண்டு அதை மாற்ற நினைக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி திகவாகவும், திக திமுகவாகவும் வளர்ந்த வராலறு நன்கு எழுதப்பட்டுள்ளது. இதை கதை, பொய் என பலரும் சொல்லலாம், ஆனால் ஒரு கோர்வையாக ஒரு சம்பவத்தின் ஒரு பக்கத்தை தொகுத்துள்ளது. பெரியார் சாக இருக்கும் நேரத்தில் சௌந்திரபாண்டிய நாடார் ‘நாடார் குல மித்ரன்’ என்ற பத்திரிக்கையை லட்சுமண ரெட்டிக்கு வாசிப்பதாக ஒரு பகுதி. பெரியார் சொன்னதெல்லாம் பார்ப்பனரை எதிர்ப்பதுதான் மற்ற சாதி எல்லாம் அப்படியே இருக்கிறதே என்பதாக ஆசிரியர் ஒரு சுழட்டு சுழட்டி விட்டுப் போகிறார்.

லட்சுமண ரெட்டி சமத்துவத்தை காப்பதாக சொல்லி செய்யும் செயல்கள், ஊருக்குள் அவருக்கு இருக்கும் மரியாதை எல்லாம் அவரளவில் அதில் வெற்றி பெற்றதாக தோன்றுகிறது. 30, 40, 50, 60, 70 என விலாவரியாக போகும் நூல் ஒரு நல்ல வரலாற்று அனுபவத்தை தருகிறது. பாடப் புத்தகங்களில் உள்ள வரலாறெல்லாம் அவரவர் போக்குக்கு வளைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதால் இது ஒன்றும் பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் இல்லை.

80, 90, 2000 just like that முடித்துக் கொண்டது பெரிய ஏமாற்றம். சற்று கற்பனை கூட குறைய 80, 90களை எழுதி இருந்தால் எந்த கழகம் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த புத்தகம் வெளி வந்து இருக்காதோ என்னவோ?  தலைவரின் மகன் காரில் அழகான பெண்களை தூக்கிச் செல்வதாக ஒரு வரி வருகிறது. இது கற்பனையோ நிஜமோ தெரியாது, சென்னையிலிருந்து 500 கீமீ தொலைவில் நானும் கேட்டிருக்கிறேன். இது ஒன்றுதான் சர்ச்சைக்குரிய பகுதி.

கழகக் கருதுக்களில் ஈர்க்கப் படவேண்டுமானால் கழகக் கருத்துக்களில் மூழ்கி திளைத்தவர், ஒரு முன்னோடி இருக்க வேண்டும். நடேசன் மற்றூம் தியாகராசன் அவர்கள் அப்பாவையும், நடராசன் அவர் மாமா பாலுவையும் பின்பற்றி நடக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி திராவிடர் இயக்கத்தை முன்னெடுத்து வள்லர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருப்பதை இந்த நாவலும் பதிவு செய்திருக்கிறது. லட்சுமண ரெட்டியின் மகன் நடராசனுக்கும், கிருஷ்ணப்ப்ரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் திராவிட பார்ப்பனீய வேறுபாட்டுக்கு இந்த புத்தகத்தில் வரும் மற்றொரு சிறப்பான பகுதி. 99% மக்களை 1%  மக்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும் என்ற கேள்வியும் பதிலும். நீ என்னவாக னைக்கிறாயோ அதுவாக இங்கே இருக்கிறது. இரண்டு பக்கத்திலும் உக்கார்ந்து ரசித்துப் படித்தேன்.


திராவிட கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய இரண்டு குடும்பங்கள் சொல்லொனா துன்பத்துக்கு ஆளான மாதிரியும், மிதமாக பின்பற்றிய ஒரு குடும்பம் கடைசி மகனால் சீரழிந்ததாகவும்,  இவர்கள் யார் மேல் வன்மம் கொண்டு திரிந்தார்களோ அவர்கள் சேமமாக இருப்பதாகவும் கதை முடிகிறது. தினமணியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் கொள்கைக்காக வண்ணத்திரையில் தன் மகன் ரவியை சேரச் சொன்னான் நடேசன் என திராவிட கொள்கை பிடிப்பைப் பற்றி முகத்தில் அறைந்திருக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என யாரும் சிந்திக்கும் மனநிலையிலும் கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் வழி வழியாக தொங்கிக் கொண்டு இருக்கிறோமோ என சிந்திக்க வைக்கிறார். தமிழ்மகன் தினமணியில் மூத்த உதவி ஆசிரியர்.

வரலாறு திரித்து எழுதப்படும்போது 2 -3 தலைமுறை உண்மையான நோக்கத்தை அடையாளம் கொள்ளாமல் வேறு பாதையில் செல்லும் அபாயம் இருப்பது உண்மைதான். பெரியார் காங்கிரஸை விட்டு வெளியில் வந்ததும், வவேசு ஐயரின் குருகுலக் கல்வியும் வரலாறு. இந்தமாதிரியான அனுபவம் இருக்கும் ஒவ்வொருவரும் தான் திராவிடக் கொள்கையை பின்பற்ற வேண்டுமென்றால் பெரியார் யாருக்கு எதிராக கருத்துகள் சொன்னாரோ அவர்கள் பெரியாரின் பெண் விடுதலை கருத்தை மிகச் சரியாக பின்பற்றியிருக்கிறார்கள், அரிசனங்கள் இன்னும் அறியாத சனங்களாக இருக்கும் வரை இதே காட்சி தொடரும், பெரியார் உயிரோடிருந்தால் தமிழர்களை நோக்கி சத்தம் போட்டிருப்பார் என நறுக் வசனங்கள்.

வெங்கட் சுவாமிநாதனின் வெட்டுப்புலி விமர்சனமும் அதற்கான கேள்விகள்/பதில்கள்
http://www.tamilhindu.com/2011/09/tamilmagans-vettupuli-book-review/

Thursday, January 16, 2014

எட்றா வண்டியெ – வா.மு.கோமு

நவம்பர் 2008ல் கடைசியாக இந்த லிங்கை தொட்டது. அவ்வப்பொழுது எழுச்சி விழா காணுங்கள் என பல மொழிகளில் ஒரே கருத்தாக பேசுபவர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட பதிவில் தொடர்ந்து ஆடிக்கொரு தரமும் அமாவாசைக்கு ஒரு தரமும் மழை மாதிரி வந்து விட்டு போவார்கள். காலம்தான் எவ்வளவு வலிமையானாது? நேற்று உயிரானது இன்றைக்கு கால் தூசிக்கும் இன்னும் கீழே. வேலை வேலை என்று அப்படியே பறந்து பரந்து கிடந்தாயிற்று. குடும்பமும் குட்டியும் ஆன பிறகு விட்டத்தை பார்த்துக் கொண்டு உட்கார எல்லாம் நேரம் இல்லை. தெரு விளக்கு வெளிச்சத்தில் 10-11 மணி வரை அரட்டை அடிப்பதெல்லாம் கானல்தான். சும்மா கிடந்ததை சுத்தம் செய்து புலம்பலுக்கும், அவ்வப்போது அலும்புகளுக்கும் வேலை கொடுக்கலாம், இனி ஸ்டார்ட் மூசிக்!!!

புத்தாண்டு அற்புதமாக 10 புத்தங்களுடன் ஆரம்பித்தாயிற்று.  ஒரு முன் கதை சுருக்கம்; வா மு கோமுன்னா கதை கோக்குமாக்கா இருக்கும் என நினைத்துக் கொண்டு இருந்தவனை பேஸ்புக்கில் வா மணிகண்டன் போகிற போக்கில் அடிச்சு விடாதீங்க படிச்சுட்டு பேசுங்கன்னு லெப்ட்ல ஒன்னு ரைட்ல ஒன்னு விட்டார். அடிபட்ட சிங்கமாய் வலிக்காத மாதிரியே ஒரு புக் வாங்கித்தான் பார்க்கலாமே என தேடிய போது கிடைத்த முதல் தலைப்பு இது. 




எட்றா வண்டியெ - படையப்பா படத்தில் ஒரு மிக முக்கியமான காட்சிக்கு முன்னாடி இதைச் சொல்லி ரஜினி சுருட்டை பற்ற வைத்துக் கொண்டே நடப்பார். இதிலும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு நேரத்தில் இந்த வசனம். மூங்கில் பாளையம் மண் ரோடில் ஓட ஆரம்பிக்கும் வண்டி விஜயமங்கலம் பைபாஸ் வழியாக வேகமெடுக்கிறது.

இந்தக் கதையில் வரும் அத்தனை பேரையும் ஏதோ ஒரு தருணத்தில் கூட அமர்ந்து பார்த்த நினைவு. மூங்கில்பாளையம், விஜயமங்கலம், கள்ளியம்புதூர், கிணிப்பாளையம், ஆயிகவுண்டன் பாளையம், சீனாபுரம், பெருந்துறை என சின்ன வயதில் காடு காடாய் சில சமயம் காலில் செருப்பு கூட இல்லாமல் இட்டேரி இட்டேரியாய் சுத்தி வந்திருக்கிறேன். என் ஊர் மற்றும் என் மக்கள். இது ஒரு மெகா காரணம். புத்தகத்தில் பக்கத்து ஊர் பேரெல்லாம் பார்க்க ஒரே ஆனந்தம். அடுத்த முறை எங்க ஊர் பேர் வருதான்னு எழுத்தாளர் கிட்ட கேட்க வேண்டும்.

கிறுக்கு (சின்ன) கவுண்டிச்சி சரோஜாவாய் ஒரு பத்து பேராவது கண் முன் வந்து போனார்கள். 6 மாதம் வரை கர்ப்பம் மறைத்தவள், மூன்றாவது மனைவியாகி 45 வயது ஆளுடன் ஒடியவள், ஊரை விட்டு ஓடிப் போய் மாட்டிக் கொண்டு அந்த இரவே ஒரு தியாகிக்கு மனைவியானவள் என வெரைட்டியாக வந்து போனார்கள். பங்காளிகளுக்குள் ஆயிரத்தி ஒன்று கூட இருக்கும். ஒரு ஞாயிறு மதியம் சரக்கு அதிகம் போனால் மண்டை உடைந்து கட்டிய துணிமணி கிழிந்து பெருந்துறை போலிஸ் ஸ்டேசனுக்கும், சுந்தர்ராஜ் ஆஸ்பத்திரிக்கும் போய் வந்து லீவு நாள் சுபமாய் முடியும். ஆனால் பிரச்சினை என்று கண்ணை கசக்கி வீட்டில் போய் நின்றால் எட்றா வண்டியெதான். எங்கிருந்து வருமோ பாசம்; ஒத்தைக்கு ஒத்தையெல்லாம் இல்லை, லாரி வைத்து ஆள்கூட்டிப்போய் அடித்து விட்டு வருவார்கள். அப்படியே இயல்பாய் கதைக்குள் போய் உக்கார்ந்து  சுகமாய் வேடிக்கை பார்த்த அனுபவம். 

சாமிநாதன் மாதிரி, சுப்பன் மாதிரி அறியாத சனங்கள் ஏராளம். எது சொன்னாலும் நம்பும் அப்பாவிகள், கொலை கூட தற்கொலையாய்தான் தெரியும்.  உபத்திரவத்தையும் ஆனந்ததையும் ஒரே மாதிரிதான் பார்ப்பார்கள். 70 ரூபாய் குவார்ட்டர்தான் கொண்டாட்டத்துக்கும், அதே குவார்ட்டர்தான் குமுறியழுவதற்கும். 

விவசாயம் மட்டுமே பார்த்து வந்த ஊரில் கைத்தறி வந்தது. ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. விவசாயம் பார்த்தவர்கள் காட்டின் ஓரத்தில் தறிக்குடோன் கட்டிக் கொண்டார்கள். பரம்பரை பரம்பரையாக பண்ணையம் போனவர்கள் விசைத்தறி வந்ததும் தறி குடோனுக்கு மாறினார்கள். அப்போதும் மொழி, பழக்க வழக்கங்களில் அவ்வளவு பெரிய மாறுதல் இல்லை, அதே பண்ணையத்தில் வேறு வேலை அவ்வளவுதான். சிப்காட்டும், பனியன் கம்பெனியும் வந்ததற்கு அப்புறம் ஒரு பெரிய வளர் சிதை மாற்றம் பெருந்துறை வட்டாரத்தில். வெளியூர்காரர்கள் பேசுவதை பார்த்து அதே மாதிரி பேசுவது, லுங்கியிலிருந்து ஜீன்ஸ், TVS லிருந்து கியர் வண்டி, தாவணியிலிருந்து சுடிதார் என வேறு முலாம் பூசிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். கெத்து காட்டுவதற்கும், ரப்பு பேசுவதற்கும் மட்டும் கொங்கு மொழி புழக்கத்தில். சாமிநாதன் மற்றும் ராஜேந்திரன் மற்றவர்களிடம் பேசும் போதும் பிரியாவுடனும் மல்லிகாவுடன் பேசும் போதும் உணர முடியும்.

செல்போன் வந்து உருப்பட்டது ஒன்றையும் காணோம், உருப்படியானதுதான் நிறைய. அப்படி என்னாதான் மணிக்கணக்கில் கொஞ்சுவாங்களோ என்பதற்கான பக்கங்கள் இதில் கொஞ்சம் அதிகம். எழுத்தாளரின் நோக்கமே அந்த கிரகத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்பதாகத்தான் இருக்கும். காதலர்களின் பரிசுப் பொருளெல்லாம் சிரிக்கும் படியாக இருக்கும், செல்போன் ரீசார்ஜ் தான் இப்போ டாப். 

சரோஜா அக்கான்னு ஒரு கேரக்டர். எதற்கும் பயப்படாத, எல்லா விசயத்துக்கும் முன்னாடி நிற்கும் ஆள். இந்த கேரக்டரை வைத்தே இன்னொரு 100 பக்கம் எழுதும் அளவுக்கு போக்குவரத்து அதிகம். அளவாய், உப்பு மாதிரி தேவையான அளவுக்கு வருகிறது

கட்டம் சரியில்லாமல் போனால் எதுவும் நடக்கும் என்பது சாமிநாதன் கதையில் 100% உண்மை. கல்யாணம் பண்ணியவளை ஒரு நிமிட வீராப்பில் ஒதுக்குவது, விருந்துக்கு போன ஊரில் சலம்பி விட்டு வருவது, எஸ்கேப்பாக உதவப் போய் கோமணம் அவுருவது என தொட்டதெல்லாம் நாசமாய் போகிறது. இது என்னை நைநை என இரண்டு நாள் படுத்திவிட்டது. நானும் இரண்டு நாளாய் பார்க்கறேன் ஊர்ல பேசிட்டு இருக்கறமாதிரியே பேசிட்டு இருக்க, என்ன ஆச்சு என இல்லாள் கேட்டதும் பாரத்தை இறக்கி விட்டு 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினத்தை எடுத்தேன்.

அலங்காரம், அலட்டல் இல்லாமல் எங்க ஊர் எகத்தாளம் மற்றும் குசும்புடன் ஒரு நாவல் படிக்க வேண்டுமானால் எட்றா வண்டியெ...

Saturday, November 01, 2008

LAPD நாய்கள், Shoot 'em Up, கொலை வெறி

என்னுடன் பணிபுரிய வந்தவரை அழைத்து வர லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் உள்ளே நுழைந்த போது என் காரை தனியாக ஒதுக்கி மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தார்கள். எனக்கு முன்பிருந்த காரிலும் இந்தியர் அல்லது தெற்காசிய நாட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு குடும்பம்தான் இருந்தது. அவர்களுக்கும் இதே சோதனை. என்னை நடு ரோட்டில் வைத்து முழுவதும் உறுவி தடவிப் பார்த்த மாதிரி இருந்தது. ங்கோ**தா, தா**ழி என சராமாரியாக திட்டிக் கொண்டே இருந்தேன் அவன் என் கார் முழுவதும் சோதனை போடும் வரை. அந்த பாடுகளும் மொழி புரியாமல் நான் எதோ பாடிக் கொண்டிருந்தேன் என நினைத்திருக்கலாம். உலகத்தில் இருக்கும் அத்தனை மலங்களையும் கொண்டு வந்து அங்கு கொட்ட வேண்டும் என்ற ஆத்திரம் இருந்தது. மெட்டல் டிடெக்டர் சோதனையை நூறு தடவை ஏர்போர்ட்டில் செய்திருந்தாலும் இன்று என்னை இது என்னவோ பண்ணியது.

கடந்த முறை கொழும்பு வழியாக அமெரிக்கா வந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அது எனக்கு கொடுமையாக தெரியவில்லை. பெருமையாக இருந்தது. கோவையிலிருந்து கொழும்பு வந்ததும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் கட்டுநாயக விமான நிலையத்திலிருந்து பாம் ட்ரீ ரெஸ்ட்டாரெண்ட் வந்து சாப்பிட்டு விட்டு ஆற அமர சிங்கள சிப்பாய்களைப் பார்த்து விட்டு (சாதரண மனிதர்களே கண்ணில்படவில்லை) உள்ளே நுழையும் போது இமிக்ரேஷனில் கேள்வி கேட்டு குடைந்தார்கள். மிகப் பொறுமையாக (பெருமையாகவும்) இருந்து பதில் சொல்லி, கேள்விக்கு பதில் கேள்வி என ஹீரோ மாதிரி உணர்ந்தேன். தமிழ்நாட்டிலிருந்து நான் இங்க வந்ததுக்கு காரணம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். அவங்களை கேள்வி கேப்பீங்களா? என நக்கலடித்து விட்டு நகர்ந்தேன்.

அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனிலும் ஏதோ சம்திங் சம்திங் என்னை திட்ட வைத்து விட்டது.

********************************

இமிக்ரேஷன் முடித்து வெளியே வருபவர்களின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்குமாறு பார்த்து அமர்ந்தேன். சனியன் பிடிச்ச ஊருக்கு வந்துட்டமே என சில முகங்கள்;அழகான முகம் மற்றும் அனிமேட்டடு உரையாடல்களுடன் ஏர்ஹோஸ்டஸ்; பிரிந்த குழந்தைகளைப் பார்த்ததும் தாவி வந்து எடுத்த அப்பா; அப்பாவிடம் சொல்ல வேண்டும் என லிஸ்ட் வைத்து ஒவ்வொன்றாக சொல்லிய குழந்தைகள்; என்னையும் அணைக்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் மனைவி; பல நாட்கள் அம்மாவை பிரிந்து இருந்ததால் மறந்து போன குழந்தை மற்றும் அழும் நிலையிருந்த அம்மா;மருமகளின் உப்பியிருந்த வயிற்றை தடவிப் பார்த்தபடி மகனை மறந்த ஊரிலிருந்த வந்த அம்மா; எஜமானனை பார்த்ததும் துள்ளிக் குதித்து தாவி வந்து தன் வாஞ்சையை வெளிப்படுத்திய நாய். எனக்கு அது நாய்தானா என்ற உணர்வு நீண்ட நாள் கழித்து இன்று வரை இருக்கிறது.
*************************************

Shoot 'em Up படத்தை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன். உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களா என கேள்வி கேட்க வைத்து விட்டார்கள். தமிழ் இயக்குநர்கள் பார்வையில் இது பட்டால் சாம் ஆண்டர்சன் அல்லது ஜே.கே.ரித்தீஷ்க்கு பொருத்தமான கதை. பழைய ரஜினி, மிதுன் சக்கரவர்த்தி படங்கள் தான் இதுக்கு இன்ஸ்பிரேஷன் டைரக்டர் ஒத்துக் கொள்வார்ன்னு நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி பொறி கலங்க வைத்த காமெடி....

Vantage Point
பார்த்தேன். கதையை முதலிலேயே கேட்டதால் படம் கொஞ்சம் சுவாரசியம் குறைவாகவே ஆரம்பித்தது. படுத்துக் கொண்டு ஆரம்பித்து முடியும் போது நேராக உக்கார்ந்திருந்தேன்.

**************************************

பேத்தனாமாக பேசும் கும்பல் ஒரு புறம், கலவர பூமியிலும் விருது வாங்கி கிளுகிளுப்பைக் கூட்டும் கும்பல் ஒரு புறம்; தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்களைப் பார்த்து கொலை வெறிதான் வருதுப்பா... என்ன இழவு எடுத்த இறையாண்மையோ ஒன்னும் புரியல...

**************************************

பின் குறிப்பு: தலைப்பில் ஒரு கமா குறைவதாக இல்லைனா அதிகமா இருக்குன்னு நினைக்கறீங்களா???

Saturday, October 18, 2008

சினிமா - தூள் சீன்மா!

எதாவது எழுதலாம் என முனைப்புடன் இருந்த போது கப்பி அன்போட கேட்டவுடன் ஆரம்பித்த பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு நினைவு தெரியாத நாளிலிருந்தே படம் பார்க்க ஆரம்பித்து விட்டேனாம்! எனக்கு உறவுக்கூட்டம் நிறைய இருந்ததால் யார் சினிமா போனாலும் என்னையும், ரசம் சோற்றையும் சேர்த்தே தூக்கிக் கொண்டு போய் படம் பார்த்திருக்கிறார்கள். எங்க ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் போனால் தான் தியேட்டர் என்பதால் வேலை எல்லாம் முடிந்த பிறகு இரவுக் காட்சிதான் எப்போதும். தியேட்டரில் விற்கும் முறுக்கு சேர்த்து நன்றாக ரசம் சோறு சாப்பிட்டு விட்டு படம் ஆரம்பித்ததும் தூங்கி விடுவேனாம். சில சமயம் பால் மட்டும் குடித்து விட்டும் தூங்கியிருக்கிறேனாம். ஊர் உறவு ஒன்னா சேர்ந்தால் இதெல்லாம் மறக்காமல் பேசப்படும் காமெடி என்பதால் இதெல்லாம் மறக்கவே மறக்காது. ஆனால் நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் என்பது குழப்பமாகவே உள்ளது.

படிக்காதவன் நான் பார்த்த முதல் ரஜினி படம், The Protector நான் பார்த்த முதல் ஜாக்கிசான் படம் என வேண்டுமானால் சொல்லாம். ஈரோட்டில் அபிராமி தியேட்டர் ஆரம்பித்த வருடம் பார்த்த படம் The Protector. தியேட்டர்ல குளிருதும்மா போலாம்ன்னு சொன்ன பயல் நான். A/C தியேட்டரில் புஷ்பேக் சீட்டுடன் படம் பார்த்ததை பல வருடம் நண்பர்களிடம் சொல்லித் திரிந்திருக்கிறேன்.

தூங்காமல் முழுதும் பார்த்த முதல் தமிழ்ப்படம் படிக்காதவன். சின்ன வயசு ரஜினி கேரக்டர் எப்பவுமே என்னை இம்ப்ரெஸ் செய்து விடுவான். அதனால் பெரிய ரஜினியை இயல்பாகவே பிடித்து விட்டது. Mr. பாரத் படத்துக்கு முதல் வரிசையில் உக்கார்ந்து மாமா/பங்காளிகள் கிழித்துக் கொடுத்த லாட்டரி சீட்டை தூக்கி திரையின் மேல் எறிந்தது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.

பாடும் வானம்பாடி படம் பார்த்து ஆனந்த்பாபு மாதிரி கை காலை ஆட்டிக் கொண்டே இருந்திருக்கிறேன். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதா வாங்கி வந்தேன் என முதுகில் வாங்கி இருக்கிறேன். காற்றுக் குயிலு மனசுக்குள்ள பாட்டை ஒரு வரி விடாமல் மனப்பாடமாக பாடியிருக்கிறேன்.

பேபி சாலினியின் படங்கள் ஒன்னு விடாமல் பார்த்தவன் நான். என் பொம்முகுட்டி அம்மாவுக்கு பார்த்துவிட்டு ஓவென அழுதவன் நான். சங்கர் குரு இன்னமும் நினைவிருக்கிறது. பேபி ஷாம்லியின் அஞ்சலி, துர்கா என அனைத்தையும் பார்த்திருக்கிறேன்.

இந்தியன் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். +2 படிக்க நோட் வாங்க ஈரோடு நான் மட்டும் கிளம்ப, துணைக்கு மாமா, மாமாவின் நண்பர்கள் என பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் வரும் போது பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது. நல்ல கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி சட்டைய கழற்றி முன்னால் சீட்டில் போட்டுவிட்டுதான் படம் பார்த்தோம். படம் பார்த்து முடித்து விட்டுத்தான் எல்லோரும் கேட்டார்கள் "ஆமா எதுக்கு ஈரோடு வந்தோம் ன்னு?"

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா. ஊரு விட்டு ஊரு வந்து, ஊர் சுத்திப் பார்க்க வந்த நண்பர்களை கூட்டிக் கொண்டு போய் பார்த்த படம். நல்லாத்தான் இருந்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான்.

நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மிகவும் தாக்கிய முதல் சினிமா உன்னால் முடியும் தம்பி. எனது சுற்றுப்புறத்தையும் அந்த மாதிரி மாற்ற கமல் வர மாட்டாரா என ஏங்க வைத்த படம். சேது, பிதாமகன், சித்திரம் பேசுதடி மற்றும் சுப்பிரமணியபுரம் படங்களும் பாதிப்பை ஏற்படுத்தின. எல்லாப் படங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. கெட்ட கெட்ட வார்த்தையில் இயக்குநரை, நடிகர்களை மற்றும் பார்க்க வைத்த நண்பர்களை திட்டுவது கூட பாதிப்புதானே?

விஜயகாந்த் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், வானத்தைப் போல ன்னு வரிசையா பார்த்திருக்கிறேன். கஜேந்திரா, அரசாங்கம் மட்டும் இன்னமும் பார்க்கவில்லை :-)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இந்த கூத்தெல்லாம் பாட்ஷாவுக்கும் பின்னால்தான் கவனிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தை ஆண்டவன் கூட காப்பற்ற முடியாது என சொன்னதும் அதன் பின் நடந்ததையும் வியந்து பார்த்தேன்.

சண்டியர் விசயம் கொஞ்சம் அதீதமாகவே பட்டது. பாய்ஸைப் போட்டு கும்மியதை ஏற்க முடியவில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

மை டியர் குட்டிச்சாத்தான். 3-டி மேட்டர் மற்றும் குழந்தைகள் சுவற்றில் நடப்பது என என்னை ஆவென வாய் பிளக்க வைத்த படம்.

இந்தியன். கமலின் பிசிறில்லாத மேக்கப்பும், வெங்கியின் கிராபிக்ஸும். (தாசவாதரம் கிராபிக்ஸ் மொக்கையாக இருந்தது)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், தினமலர், தினத்தந்தி, மாலை மலர், வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ் என கிடைத்தில் எல்லாம் வாசித்திருக்கிறேன். குருவியாருக்கு உண்மையிலேயே கேள்வி அனுப்பறாங்களா இல்லை அவங்களே அந்த நடிகை இடுப்பில் கிள்ள ஆசைன்னு கேட்டுக்குவாங்களான்னு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

7. தமிழ்ச்சினிமா இசை?

அது மட்டுந்தான் இசை எனக்கு! 80-90 களில் வந்த இளையராஜாவின் பாட்டுக்கள் அற்புதம். இப்போது மற்றவர்கள் முன்னொடுத்துச் செல்கிறார்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

5 வயது முதலே அதிரடி ஆங்கில படங்களை பார்க்க ஆரம்பித்தாகி விட்டது. தூர்தர்ஷனின் மாநில மொழி திரைப்படங்களில் நிறைய படம் பார்த்த ஞாபகம். பெயர் சொல்லும்படி ஒன்றும் நினைவில்லை. மணிச்சித்திரத்தாழ், வாத்ஸல்யம் மற்றும் பெரும்பாலான திலீபின் காமெடி மலையாள படங்கள் பார்த்து விடுவேன். இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன, ஆக்ரோசம் என மசாலா மிகுந்த தெலுகு டப்பிங் படங்கள் பார்த்தும் உள்ளேன். தியேட்டர் போய் பார்த்த ஹேப்பி டேஸ் நல்லாத்தான் இருந்தது. பொம்மரில்லு 4 தடவை பார்த்தேன்.

சத்ய்ஜித்ரேயின் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். மனுசன் இவ்வளவு மெதுவா படம் நகர்த்தராறென்னு. மசாலா ஹிந்தி படங்கள் பார்ப்பேன். பிரெஞ்சில் அமேலி மற்றும் ப்ளூ பார்த்து கொஞ்சம் அசந்து போய் விட்டேன். அவர்கள் ஃபோர்னோ படம் மட்டுந்தான் எடுப்பார்கள் என நினைத்திருந்த என் அறிவுக்கண்ணாடியை கழட்டி விட்டேன்.

IMDB மூலமாக பார்த்த நல்ல ஆங்கிலப் படங்கள் ஏராளம். அமெரிக்காவில் ஒரு நல்ல வசதி என்னவென்றால் டிவிடி எல்லாம் லைப்ரரியில் எடுத்துப் பார்க்கலாம். World War II படங்கள், Wild West படங்கள், திரில்லர், நாடகம் என கலந்து கட்டி அவர்கள் எடுத்து வரும் DVD என கணக்கு வழக்கில்லாமல் பார்த்த நல்ல படங்கள் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் தினமும் ஒரு படம் பார்க்காமல் தூங்க மறுத்த என் நண்பர்கள் பாலா மற்றும் கிருஷ்ணா.

கடைசியாக பார்த்த NACHO LIBRE நன்றாக சிரிக்க வைத்தது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
90களில் கோபிசெட்டிபாளையத்தில் எதாவது சினிமா சூட்டிங் நடந்து கொண்டேதான் இருக்கும். கோபிக்கு அருகில்தான் எங்க ஊர். இது நம்ம ஆளு படத்தில் சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்ன்னு ஒரு பாட்டு வருமே? அந்த பாட்டில் நானும் கூட்டத்தில் இருந்தேன். பாரியூர் தீ மிதி திருவிழா முடிந்த அடுத்த வாரம் என நினைக்கிறேன். மூனாவது நாள் சூட்டிங்கின் போது போயிருந்தோம். கலைஞானம் பணத் தட்டை மேடையில் வைப்பாரே அந்த சீன் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ஷாட்டில் பாக்கியராஜின் டூப்தான் மேடையில் இருந்தார். பாக்கியராஜ் கேமரா அருகில் இருந்தார்.

எங்க ஊர் பசங்க கதை, கவிதைன்னு சுத்திட்டு இருந்தப்போ மாரியம்மன் பொங்கலுக்கு நாடகம் ஒன்னு போட்டாங்க. அதியமான் அதுக்கு வந்திருந்தாரு (தொட்டாசிணுங்கி ரிலீஸ் ஆன சமயம்). தங்கராசு மற்றும் ராஜாவை அசிஸ்டெண்டா கூட்டிடும் போயிட்டாரு. ரொம்ப நாள் கழிச்சு தங்கராசு என்னைப் பார்த்து கதை ரெடியா இருக்கு, 10 லட்சம் இருந்தா முதல் செட்யூல் முடிச்சிராலாம்ன்னு சொன்னார். என்னுடைய இயலாமைய சொல்லிட்டு இங்க வந்துட்டேன். ஒரு நல்ல தயாரிப்பாளரை தமிழ் திரையுலகம் அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பெல்லாம் தவறிப் போகவில்லை. ஆனால் ஒரு நாள் அவங்க டைரக்ஷன்ல ஒரு படம் வரும்ன்னு நம்பறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

படம் பார்க்கறதெல்லாம் குறைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு ஒன்னும் ஆகாது.

இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பவர்கள்:

தமிழன் எட்வின்
ரவி ஆதித்யா
பூச்சாண்டி
வினிதா
புனித் கைலாஷ்

Saturday, October 11, 2008

ஆயாசம், பாயாசம், பொங்கல் மற்றும் இன்ன பிற...

இந்த வயதில் ஆயாசம் என்பது சற்று அதீதமாகத்தான் தோன்றுகிறது. பார்க்கும், கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்திலும் ஒரு விமர்சகனாகவே அணுகுகின்றேனா என்று எனக்கு நானே கேள்வி கேட்டால் அதற்கு பதில் ஒன்றும் இல்லை. முதுகுத் தண்டு வளையும் அளவுக்கு உழைத்தாலும் உலக நிகழ்வுகளை ஆவலுடன் கவனித்துத்தான் வந்துள்ளேன். அதிலெழுந்த நிறைய கேள்விகள் என்னுள்ளே புதைக்கப்பட்டாலும், அங்கங்கே தெளித்து வைத்துள்ளேன். எதற்கும் எதிர் கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

TBCD எப்போது பதிவு போட்டாலும் முதல் ஆளாய் இல்லாவிட்டாலும் ஒரு எதிர் கருத்தை பதிந்து விட்டுத்தான் மறு வேலை. அதை அவர் பதில் சொல்லும் விதத்தைப் பொறுத்து பதிவில் தொடரும் இல்லையேல் சாட்டில். மொத்தத்தில் ஒரு பங்காளி மனப்பான்மையுடனே அவரது பதிவுகளை அணுகுகிறேன் என நினைக்கிறேன். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் IT பற்றிய தவறான புரிதல் மற்றும் பதிவுகளுக்கும் சென்று மறுப்பு எழுதியதைத் தவிர வேறெதையும் நான் வெளியில் சொன்னதில்லை.
******************************

சீரோ டிகிரி படித்து அதைப் புரிந்த ஆத்மா ஏதாவது இந்த வலையுலகத்தில் இருந்தால் கேள்வி கேட்டு பின்நவீனத்துவத்தை உள் வாங்கிக் கொள்ளலாம் என்று பதிவு எழுதி வைத்து பல மாதங்களாகிறது. அதற்கு பிறகு சாரு ஹாட் டாபிக் ஆகி வெட்டிப்பயல், லக்கிலுக் எல்லாம் முறை வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டதில் அந்த பதிவு ஒரு சின்ட்ரோம் மாதிரி இருக்கும் என பதிக்கவேயில்லை.

விஷ்ணுபுரம் படிக்கவே வேண்டாம் என அனுசுயா அன்புக் கட்டளையிட்டும் இந்தியாவிலிருந்து வாங்கி வந்து இன்னமும் 100 பக்கம் கூட தாண்டவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. நிறைய கேள்விகள் மற்றும் புரிதலின்மை; அதனால்தான் அதை அங்கேயே சலிப்புடன் நிறுத்தி விட்டேன். இதுக்கும் ஒரு பதிவு எழுதி வைத்து பின் சினிமா பிரச்சினையில் ஆளாளுக்கு ஜொமோவை கும்மியதால் அதுவும் குப்பைக் கூடைக்குப் போயிற்று.

டிவின் டவர் சாய்ந்தது என் டவர் சாயவில்லை என வைரமுத்து எழுதிய போது அதற்கும் ஒரு கேள்வி வைத்திருந்தேன். கடைசியில் அதை யாரும் அவ்வளவு சுவராசியமாக விவாதிக்காததால் அப்படியே விட்டுவிட்டேன். என்ன முரண் பாருங்க? யாரவது அதைப் பற்றி விவாதித்தாலும் வேண்டாம்; விவாதிக்கவில்லை என்றாலும் வேண்டாம்; வேறு என்னதான் வேண்டும் எனக்கு???

**************************************

பார்ப்பனீய மற்றும் கழக சண்டைகள் ஒரு ஓரத்தில் நடந்தாலும் டுபுக்கு, ஜொள்ளுப்பாண்டி, இளவஞ்சி, ராசா, கைப்புள்ள என எனக்கு blog எழுத நிறைய காரணங்கள் இருந்தன. இப்பொழுது அதே ஆட்டம் மொக்கை, கும்மி என மாறி இருந்தாலும் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. வயசாகிடிச்சோ????

ரொம்ப நாளைக்கு அப்புறம் ரத்னேஷ் மற்றும், முரளி கண்ணன் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். தெரிந்த தலைகள், தெரியாத தகவல்கள் என்பதற்காக ரத்னேஷையும், தெரிந்த சினிமா, தெரியாத தகவல்கள் என்பதற்காக முரளி கண்ணனும்... ஆனால் இதுவரைக்கும் ஒரு வரி கூட அவர்களது பதிவில் எழுதியது கிடையாது.

**************************************

என் தொழிலில் Certification என்பது முன்பு பெருமைக்காக இருந்தது. இப்போது இருந்தே ஆக வேண்டும் என எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்தியா ஒன் டே மேட்ச் ஆடுகிற மாதிரி இருக்கிற எல்லா எக்சாமும் எழுதி முன் மண்டை வலிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் எக்சாம் பற்றிய விவரம் கேட்டு வந்த எந்த மெயில் பார்த்தாலும் இப்போது காத தூரம் ஒடிக் கொண்டிருக்கிறென். நான் பட்ட கஷ்டம் அவர்களும் படட்டும் என்ற கண்றாவி மனோநிலையிலா நான் இருக்கிறேன்?

**************************************


கேமரா ஆர்வம் பொங்கி Canon Rebel XTi வாங்கி 6 மாதம் ஆகிறது. ஒன்றுக்கு ரெண்டாக லென்சும், ட்ரை பாடும் வேறு சேர்ந்து கொண்டது. ஊர் மாறிய கூத்தில் சார்ஜரைத் தொலைத்து 1 மாதத்திற்கு மேல் ஆகி நேற்றுதான் ஆர்டர் செய்தேன். இன்று குப்பைகளை எடுத்து தூர எறியும் போது குப்பையோடு குப்பையா சார்ஜரும் கிடைத்தது. இப்போது 1 க்கு 2 சார்ஜர் மற்றும் 3 பேட்டரி. அறுக்க முடியாதவன் இடுப்புல 58 அறுவாள் சொருகி வைத்திருந்தான் கதை ஆகி விட்டது. ஏதாவது ஒன்றைப் பிடித்து தொங்கிக் கொண்டே மேற் சொன்ன ஆயசத்தைக் குறைப்பதற்கான வழி இதுவோ????


**************************************

என் கூடப் படித்தவர்கள் யார் பெயரும் இது வரையில் பத்திரிக்கையில் வந்ததில்லை என சில மாதங்கள் முன்பு வரை நினைத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் ராஜா தயவில் சிவபாலன் பெயர் பத்திரிக்கையில் வந்ததும் கொஞ்சம் பதறித்தான் போனேன். இன்னமும் அவன் எங்கிருக்கிறான் என தெரியவில்லை என தெரிந்தவர்கள் சொல்லும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. நம்மைச் சுற்றி நடப்பவை என்றால் துக்கம் மற்றவை எல்லாம் செய்தி என மூளை நினைக்கிறதே எனவும் ஆயாசம்....



**************************************

பின்குறிப்பு: சாரு நிவேதிதா மற்றும் அவர்தம் புத்தகங்கள் பற்றிய நாகார்ஜுனன்
பதிவு. இதுக்கும் யாரவது நோட்ஸ் எழுதினால் நல்லாவே இருக்கும். (சாமனியனான) எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!

Saturday, July 26, 2008

ராமர் பாலமா? மணல் திட்டா?

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.

பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.

இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!
'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.

'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.

இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.

இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.

தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.

சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.

ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.

'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.

இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.

ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?

தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?

ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?

'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.

ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?

ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)

லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.

இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.

கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.

பாஜக இந்தப்பிரச்சினையில் ராமன் பெயரைச் சொல்லி தனக்கெனெ ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்க முயல்கிறது. ஏற்கெனெவே கரசேவையை ஆதரித்த, மோடிக்காக பரிந்து பேசிய ஜெயா இக்கும்பலுடன் ஐக்கியமாகாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம். ஏற்கெனவே, கிறித்துவ மீனவர்கள் வலை காயவைக்கும் பாறையை விவேகானந்தர் பாறை எனக் கைப்பற்றி கன்னியாகுமரியில் காலூன்றியது போல் இவ்விசயத்தையும் இக்கும்பல் கையில் எடுத்துள்ளது.


நன்றி:-
செந்தில்குமார்.

தட்ஸ்தமிழ்.காமில் கமெண்ட் பகுதியில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது மட்டுமே அதிகமாக இருக்கும். ஒரு மாறுதலுக்காக, செந்தில்குமார் என்ற பெயரில் ஒருவர் எழுதிய கருத்து இது. அரசியல் வாதிகளைப் பற்றிய அவர் கருத்தும் என் கருத்தும் ஒன்று என்பதால் அதை மட்டும் ctrl+c, ctrl+v செய்து விட்டேன். முழுக் கட்டுரையும் வாசிக்க
தட்ஸ்தமிழ்.காம் செல்லவும்.

Sunday, July 13, 2008

அன்பே என் அன்பே - தாம் தூம்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ வர நதியலையாய் ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனான்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ?
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ?
அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலினே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும்

[அன்பே என் அன்பே]

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தினை ஜெயிப்பேனே?
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே?
எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

[அன்பே என் அன்பே]

<p><a href="undefined?e">undefined</a></p>

கமல் உலக நாயகனா?


http://youtube.com/watch?v=6dnyHOYeyz0

தாசவதாரத்தை எல்லோரும் இணையத்தில் துவைத்து காய வைத்த போது
அதைப் பற்றி பேசினாலே சலிப்பு வந்துவிட்டது. ஆசிப் மீரானின் இந்த பதிவைப் பார்த்து ஒரு கமல் ரசிகர் உலக நாயகனின் படம் வேறு, இந்த படம் வேறு ; இதை ஒப்பீடு செய்வதன் மூலம் அவர் வக்கிரம் வெளிப்படுவதாக சொல்லி ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு விளக்கம் கேட்டு கமெண்ட் போட்டால் அந்த பதிவின் சுவடே இப்போது இணையத்தில் எங்கும் இல்லை.

எதோச்சையாக சதிலீலாவதி படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்த போது இந்த கிளைமாக்ஸை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்த பொழுது பஞ்ச தந்திரத்தில் இதே மாதிரி இருக்கே என நகர்ந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து பின் மண்டையில் ஒரு பல்பு எரிந்தது. அவ்வை சண்முகியிலும் அதே அதே கிளைமாக்ஸ். உலக நாயகனுக்கு சரக்கு பஞ்சம் இருக்காது, இந்த இயக்குநர்கள் தான் காரணம் என சொல்லவும் முடியாது. சங்கர் "கமலுடன் பணி புரிவது காலேஜ் புரொபசருடன் வேலை செய்வது மாதிரி, எல்லாம் திருப்தியாக இருந்தால்தான் கேள்வி கேட்க மாட்டார்" என ரூம் மேட் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.

கமல் உலக நாயகனா? கேள்விக்கு அப்பாற்பட்டவரா?


Saturday, April 26, 2008

மின்னல் அழகே மின்னும் அழகே

முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.

Wednesday, April 02, 2008

கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க இன்னமும் இருக்கிறாங்க.





காலங்கார்த்தால சூரியன் சுள்ளுன்னு அடிக்கும் முன்னே சுடுகாட்டுப் பக்கம் போயிட்டு பனங்காய் பொறுக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால் பள்ளிக்கூடம் கிளம்ப சரியாக இருக்கும். லீவு நாட்களில் விளையாட போயிட்டு கடனை கழிச்சதே மறந்து போயி காடு காடாய் சுத்தி எலந்தை, கொய்யா என மரத்தில் காய்க்கும் அத்தனையும் பறிச்சு சாப்பிட்டு சாயங்காலம் காய்ந்து போய் வீடு வந்த சேர்ந்த கதையெல்லாம் இருக்கும். அரளிக்காயை மட்டும் எப்படி விடுவது என அதையும் அரைச்சு ஓணானுக்கு குடுத்த கதையும் இருக்கும்.


கக்கூஸ்ன்னுதான் இது எங்களுக்கு அறிமுகமானது. வீட்டில் கக்கூஸ் இருந்தாலும் காலற நடந்து ஊரிலிருக்கிற மாமன் மச்சான் எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்ட வர சுகம் இல்லைன்னு அவசரத்துக்கு மட்டும் போய் வர ஆரம்பிச்சாங்க. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் லெட்ரின்ல பக்கத்துல பக்கத்துல சீட் போட்டு உக்கார்ந்துட்டு தியரி ஆப் மெக்கானிக்ஸ் கதை கேட்டவங்களும் இருந்தாங்க. இந்து இன்னைக்கு என்ன சுடிதார் போடுவான்னு பந்தயம் கட்டிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. இதனால கடுப்பாகி பாத்ரூமிலிருந்து பக்கெட் நிறைய தண்ணி அள்ளி அவனுக தலைக்கு மேல கொட்டுனவனுகளும் இருந்தாங்க.




ரயில் தண்டவாளத்தில எல்லாம் எவன்டா இருந்து வைக்கிறான் அறிவே இல்லையா என திட்டிய ஆட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் ரயில் எசகுபிசகாக ஆடி வைக்க அதுக்கப்புறம் "போதி மரத்தடியில் ஞானம் பெற்ற" அப்படிங்கற மாதிரி "ரயில் லேவட்டரி" புகழ் அப்படின்னு பேர் சொல்லற அளவுக்கு ஞானம் தெளிஞ்ச ஆட்களும் இருக்காங்க.







சலவைக்கு குடுத்த தேய்ச்ச சட்டை பேண்ட் கசங்காம இருக்கணும்ன்னு எல்லாத்தையும் மடிச்சி வைச்சுட்டு, ஏசி போட்ட ரூம்ல, கால் மேல் போட்டு எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு யோசிச்ச ஆட்களும் இருந்தாங்க.கோட் டெலிவரி சாயங்காலம் வைச்சிட்டு, ஒரு பெரிய டிஃபெக்ட்டை எப்படி சரி பண்ணலாம்ன்னு நாலாபுறம் அலைஞ்சிட்டு ஒன்னும் முடியாம போய் குத்த வைச்சி ரெண்டு கையிலையும் பின்னந்தலைக்கு முட்டுக் கொடுத்த உக்காந்தா எகனை மொகனையா ஐடியா வந்து பிரிஞ்சு பிரிஞ்சு விழும் ஆசாமிக கூட இருந்தாங்க.







பிளைட்ல கொஞ்சம் தண்ணி போறதுக்கு அந்த சவுண்டு வருதேன்னு தலைய உள்ள விட்டுப் பார்த்தவங்களும் இருக்காங்க. பாட்டு பாடுனாத்தான் போவுது, தம்மடிச்சாத்தான் போவுதுன்னு இந்தியாவுல இருந்தப்போ சொன்னாங்கன்னா, புக் இல்லைன்னா போக மாட்டேங்குதுன்னு கைல கிடைச்ச பேப்பர், லேப்டாப்பை பொறிக்கிட்டு போயிட்டு போறவங்களும் இருக்கறாங்க. 'ஆய்'ரம்தான் இருந்தாலும் கம்மாக்கரை மாதிரி வருமுங்கல்லா...அது அதுதான் இது இதுதான்...








குறிப்பு:


இது ரெஸ்ட்ரூமிலிருந்து லாப்டாப்பில் தட்டச்சி அனுப்பட்டது. This mail is sent from my handheld ன்னு படம் காட்டுவாங்கல்ல, இந்த குறிப்பு அந்த வகைய சேர்ந்தது இல்லை.

உண்ணாவிரதம்-ரஜினி பங்கேற்பாரா?

சென்னை: பெங்களூரில் தமிழர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் எதிராக கன்னட அமைப்பினர் மேற்கொண்டுள்ள வன்முறையைக் கண்டித்து 4ம் தேதி தமிழத் திரையுலகினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.

பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் ஒன்று திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக நேற்று நடந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகினர் அத்தனை பேரும் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.

வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எங்கிருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் சினிமாவில் இனிமேல் நடிக்க முடியாது. அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்போது போகஸ் ரஜினிகாந்த பக்கம் திரும்பியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் பிரகாஷ் ரய், அர்ஜூன் சர்ஜா, முரளி, பிரபு தேவா உள்ளிட்ட அனைத்து கன்னட கலைஞர்கள் பக்கமும் இப்போது தமிழக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.கடந்த 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து, பாரதிராஜா தலைமையில் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் ரஜினியைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அதில் கன்னட நடிகர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய கலைஞர்கள் ரஜினியைப் போய் பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு வந்தனர்.

இது வேறு மாதிரியான சிக்னலை கர்நாடகத்திற்கு அனுப்பியது. ரஜினி தமிழ் திரையுலகோடு சேர்ந்து நமக்கு எதிராக போராடவில்லை. தனியாகத்தான் இருக்கிறார் என்பது போல அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மேலும், நெய்வேலி போராட்டத்தை ரஜினி விமர்சித்தும் பேசினார். உச்சநீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாத பிரச்சினையை இந்தப் போராட்டம் தீர்த்து விடுமா என்று அவர் கோபமாக கேட்டார்.

அத்தோடு நில்லாமல், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். ரஜினிகாந்த்தின் அறிக்கையை அப்போது சரத்குமார்தான் செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் தனியாக உண்ணாவிரதம் இருக்கக் காரணம், கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் என்றும் கூறினார் ரஜினிகாந்த். அவர் கூறியதில் நியாயம் இருந்ததும் நிஜம்.இந்த நிலையில் மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். இம்முறை ரஜினிகாந்த் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது என்ற மூடில் திரையுலகம் இருப்பதாக தெரிகிறது.

சென்னை திரும்பினார் ரஜினி:

இந் நிலையில் குசேலன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.

உண்ணாவிரதம் குறித்து தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதன் இறுதியல் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து ரஜினி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவர் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்(ன்) கலந்துகிட்டா என்ன கலந்துக்காட்டா நமெக்கென்ன? அது அவங்க துறை சம்பந்தபட்ட விசயம். ஒதுக்கி வைப்பதும், ஒட்டி உறவாடுவதும் அவங்க பாத்துப்பாங்க. ஊதிப் பெருசாக்கலைன்னா இந்த நான்காவது எஸ்டேட் ஆசாமிகளுக்கு சோறு இறங்காதோ????) அவன் டவுசர் சரியா போடலை, **த்து தெரியுதுன்னு சொல்லியே அதுவரைக்கும் **த்து இருக்கா இல்லையான்னே தெரியாதவனுக்கும் தெரிய வைச்சிடுவாங்க... வாழ்க பத்திரிக்கை சனநாயகம், இந்த திட்டம் நிறைவேறலைன்னா எவ்வளவு கஷ்டம், சேதம்ன்னு எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே?

Sunday, March 30, 2008

21

Bringing Down the House என்ற ஆங்கில நாவலின் தழுவல்தான் இந்த 21. ஏற்கனவே இந்த நாவலின் பெயரில் ஒரு காமெடி படம் வந்துவிட்டதால் 21 என பெயர் வைத்துள்ளார்கள். 21க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் (நான் இந்த நாவலை இன்னமும் படிக்கவில்லை) என மண்டையை குழப்பிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்திலேயே "21 will come only once in your life and enjoy it" "என கதாநாயகனின் அம்மா சொல்வதால் தெரிகிறது. (அடப்போங்கப்பா, இதுக்கா நான் இவ்வளவு நேரம் தலையைப் பிச்சிக்கிட்டேன்?)



MIT-யே பெரும்பாலனவர்களுக்கு கனவாகவும், குறைந்தபட்சம் ஒரு ஃபோட்டா ஆவது அந்த கேம்பஸில் நின்று எடுத்து விட வேண்டும் என என்று நினைக்கும் நேரத்தில் ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் சேர வேண்டும் என நினைக்கும் MIT மாணவனின் கதை. கிளைமேக்ஸின் கொஞ்சம் காட்சிகளை முன்பே காட்டி, பின்வரும் 20-25 நிமிட உரையாடல்களுக்காக மக்களை கட்டிப் போட நினைத்திருக்கிறார் இயக்குநர். பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சாமி வரம் குடுத்தும் பூசாரி வரம் குடுக்காதாது மாதிரி ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் அட்மிசன் கிடைத்தும் முழு ஸ்காலர்ஷிப் கிடைக்க தனித்துத் தெரியும் வாழ்க்கை அனுபவம் வேண்டும் என ஒரு ஆபிசர் (ரொம்ப முக்கியம், வந்துள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி தகுதியுடன் இருப்பதால் இது ரொம்பவே முக்கியம் என சொல்கிறார்) கையாட்டிக் கொண்டே சொல்கிறார். MIT மாணவர்கள் என்றாலே புத்தகப் புழுக்கள் தான்(?) , சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் பெண்களைப் பற்றி "பேசி மட்டுமே" மகிழ்ச்சி அடையமுடியும் என ஒரு உள்குத்து வைத்திருப்பதாக தெரிகிறது.

Black Jack கிளப்பில் சேர்வதால் நிறைய பணம் கிடைக்கும் மற்றும் திரில் இருக்கும் என புரொபசர் சொல்லும் போது கேட்காத நாயகன் கதை நாயகி கழுத்தில் டை போட்டு சொன்னவுடன் நாய் மாதிரி பின்னாடியே போவது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கிறது. (வயித்தெரிச்சல் எல்லாம் இல்லை, ஆனால் கொஞ்சம் லைம் சோடா குடித்தால் சரியாகி விடும் என நினைக்கிறேன்).


நாம் இருவரும் Black Jack Club-ல் இருக்கிறோம், நண்பர்கள் என்பதைத்தவிர வேறேதும் இல்லை என நல்ல பிள்ளையாக (MIT மாணவியாக) சொல்லும் நாயகி, வேகாஸில் ஸ்ட்ரிப் கிளப்பில் உக்கார்ந்து கொண்டு நாயகனை பேச்சால் மயக்கி முத்தமிடும் போது வேகாஸின் வாஸ்து சரியில்லை என நினைப்பது தவிர்க்க முடியாததாகிறது.


சேர்த்த பணத்தையெல்லாம் பத்திரமான இடத்தில் வைக்காமல் ரூமிலேயே ஒளித்து வைக்கும் மாணவனின் (எதையும் உணர்ச்சிபூர்வமாக அனுகாமல் நிகழ்தகவின் பட் பார்க்கும் மாணவனின்) லாஜிக் கொஞ்சம் இல்லை ஏணி வைத்து எல்லாப் பக்கமும் உதைக்கிறது.

தோற்பது கூட சறுக்கல் இல்லை, ஆனால் தோற்றபின் நான் தப்பே பண்ணவில்லை என சொல்வதுதான் பெரிய சறுக்கல் என்பது எல்லோருக்குமே பொருந்தும். ஏனோ இந்த டையலாக் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 300,000 டாலர் இருந்தால் இதை விட்டு ஓடிவிடுவேன் என ஆரம்பக் காட்சியில் சொல்வதும், எனக்கு ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் இதுதான் பிடிச்சிருக்கு என நாயகிடம் சொல்லும்போது பெண்களை விட பணம் ரொம்ப போதையானது என சொல்லியிருக்கிறார்களா? (எனக்கு ஏனோ சொல்லணும் போல இருக்கு :-) )


வேகாஸ் லாஸ் பிரிவென்சன் ஸ்பெசலிஸ்ட் கொஞ்சம் நேரம் வந்து அடிதடி+ காமெடி பணியிருக்கிறார். கடைசியில் வில்லத்தனமும் கொஞ்சம் சேர்த்து கொடுத்த காசுக்கு நிறைவாக செய்திருக்கிறார்.


இப்படியே எழுதிக் கொண்டே இருந்தால் "21 படத்தில் 21 குறைகள்" ன்னு ஒரு புத்தகம் எழுதிவிடுவேன் என நினைக்க வேண்டாம். ஒரிஜினல் புத்தகத்தை படிக்காததினால் மேற் சொன்னவைகளையும் மீறி என்னால் படத்தை ரசிக்க முடிந்தது. மொத்தமாக அத்தனையும் எழுதி உங்களை குழப்புவதற்கு பதில்


மீதியை வெண்திரையில் காண்க!!!


பி.கு:- இதை எழுதும் போது நான் கோட் சூட் போட்டுக் கொண்டு காலாட்டிக் கொண்டே எழுதவில்லை.

Wednesday, March 26, 2008

ஒரு கைதியின் டைரி...

அக்பர்-பீர்பால் கதை ஒன்னு YouTube-ல பார்க்க வேண்டியதாப் போச்சு. அதுல பெர்சிய மன்னர் அக்பருக்கு பொழுது போகட்டுமேன்னு புதிர் ஒன்னு அனுப்பி வைப்பாரு. பொழுது போகலைன்னா டீக்கடைக்கு போயி 2 போண்டா, பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு மாலை மலர் படிச்சிட்டு வர வேண்டியதுதானே? பக்கத்து வீட்டு குழந்தை சாப்பிட அடம் பண்ணினதால அந்த புதிரை நாங்களும் தீர்க்க வேண்டியதா போச்சு.


*****************************


IT உலகத்துலயே ரெண்டு பேரு பேசரது மட்டும் ஒன்னுமே புரியாது. Solution Architect ன்னு சொல்லிட்டி BPEL, WSDL, XPATH, XLANG ன்னு எழுத்துக்கூட்டிப் படிச்சாலும் புரியாத மொழியில முற்றுப்புள்ளி வைக்காம பேசி பேசி பெரிய அறிவாளி ரேஞ்சுக்கு படம் காட்டுவாங்க. துரை இங்கிலீசு எல்லாம் பேசுது என முக்குக்கு முக்கு நின்னு தம் போட்டுட்டு கடைசில எல்லாமே XML தான்டா மாப்பிள என நம்ம டெவலப்பர் மக்கள் 6 மணி நேர பிரவுசிங், 6 மணி நேர கோடிங்ன்னு அவங்க வேலைய பார்க்க ஆரமிச்சிருவாங்க. கடைசியில என்ன ஆகும்ன்னுதானே கேக்கறீங்க? கீழ படத்தை பாருங்க....











ரெண்டாவது இந்த டாப் லெவெல் டேமேஜர்ஸ்...CEO, CFO, CIO, COO என பல பதவியில உக்கார்ந்துட்டு பின்நவீனத்துவ எழுத்தாளர்களே தோத்துப் போகும் அளவுக்கு நாக்கு சுளுக்க பேசுவாங்க... எந்த அளவுக்கு புரியாத மொழியில பேசறீங்களா, அந்த அளவுக்கு பங்கு, சம்பளம், சொம்பு தூக்க ஆட்கள்ன்னு களோபரமா இருக்கும்.



"The business world is being disrupted by the combined effects of growing emerging economies, shifts in global demographics, ubiquity of technology and accountability regulation. xxxxxx believes that to compete in the flat world, businesses must shift their operational priorities."

**********

டிஸ்கி:- இந்த பதிவில் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே...யாரையும் புண்படுத்தினால் அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...

Sunday, March 23, 2008

லாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு

கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.

இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

இதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.

பா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.

`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.

பாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.

தத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.

சரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.

-தினமலர்.

Wednesday, October 31, 2007

கற்றது தமிழ்


முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்!!!


பிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. "தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்? என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமிழின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.


மானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.


பிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. "நிஜமாதான் சொல்லறியா?" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை!


காலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.


சாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; இயக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.


தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். "இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்" என்னும் காரணம் உச்ச கட்டம்.


சாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர்.


எங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.


யவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார்.



கற்றது தமிழ்; ஒழுக்கமல்ல.

Saturday, October 27, 2007

நிலா நிலா ஓடி வா...




பூமியை நெருங்கிய நிலா என படித்த போது தினமும் பார்க்கும் நிலாதானே என நினைத்தேன். இனறு அதை பார்த்த பிறகு ஒரு சின்ன பரவசம்; பெரிதாக எதைப் பார்த்தாலும், கடல், யானை, ரங்க ராட்டினம் பார்க்கும் போது வருமே அது மாதிரி.


சின்ன வயதில், பாட்டி கையில் பிசைந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே "நிலாவில யாரு பாட்டி இருக்கா?" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க" என சொல்ல "இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா?" என கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்த விட்டது.


யார் கண்டது, 8 மணி கூட்டத்திற்கு 10 மணிக்கு வரும் தலைவரை எதிர்பார்த்து வானத்தை பார்த்த தொண்டர்கள்; நிலாவைக் காட்டி ரெண்டு வாய் சாதம் சேர்த்து ஊட்டும் அம்மாக்கள்; நிலாவில் முதல்ல கால் வைச்சவரை எல்லாரும் சொல்லிடுவீங்க, அங்க முதல்ல ஒன்னுக்கு போனவர் பேர் தெரியுமா? என கேட்டவர் மற்றும் அவர் நண்பர்கள்; இன்றைக்காவது மனனவியை வெளியே கூட்டிப் போக வேண்டும் என எப்போதும் போல் லேட்டாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் கணவர்கள்; இருட்டு மூலையில் நிலாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சின்னதும் பெரிதும் முத்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள் என பல தரப்பட்ட மக்களிடமும் ஒரு சின்ன சலனத்தை ஒரு சில கணங்களாவது விதைத்திருக்கும்.


அதையும் மீறி, ஞானியின் நெளியும் பூணூல், தெஹெல்கா ஆப்பரேசன், சென்செக்ஸ் 20000 தாண்டுமா, தீபாவளி பலகாரம், சிவப்பு சுடிதார் உனக்கு, மஞ்சள் அவனுக்கு, வெள்ளை எனக்கு என பாகப் பிரிவினை செய்பவர்களும் இருப்பார்கள்தான்.
முழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே!!!

Monday, July 23, 2007

காதலும் காதல் நிமித்தமும்...

இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ, பத்திரிக்கைகளோ விரல் விட்டு எண்ணி விடலாம். பெற்றோர்களின் பார்வையில் இந்த காதலை மையப்படுத்தி எந்த கதையையும், சினிமாவையும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. அப்படி இருந்தாலும், பிள்ளைகளின் காதலை தெரிந்த பெற்றோர்களின் இயல்பை, சந்தோசத்தை, பயத்தை, பரிதவிப்பை முழுதாக சித்தரித்தது மிகவும் குறைவே (இருந்தால் சொல்லுங்களேன், பார்த்து விடலாம்.)


20, 25 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த நம் குழந்தை எடுத்த முடிவு தப்பாகி விடவா போகிறது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். உலகம் தெரியாத பையன் விளையாட்டுத்தனமா செய்யறதையெல்லாம் ஏத்துக்க முடியாது என சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அதீதமாக சிந்தித்து எக்குத்தப்பான முடிவு எடுக்கும் பெற்றோர்களும் உண்டு. காதலை துணையிடம் சொல்லத் தெரிந்த மனதுக்கு பெற்றோருக்கு தெரியப்படுத்தும் எண்ணம் ஏனோ பெரும்பாலும் இருப்பதில்லை. வயது, நமது சமூக கட்டமைப்பு என பல விசயங்களை சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், பெற்றோர்களின் பார்வையில் காதல் என்பது தீண்டாமையா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வருடம் உனக்கே உனக்காக அழைந்து திரிந்து ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக்கும் அந்த சுகம் இனிமேல் இருக்கப் போவதில்லை; கல்யாண கோலாகலத்தில் ஒரு மூன்று மாதம் அலைந்து திரிந்து எனக்கு ஓய்வே இல்லை என புலம்ப முடியாது; கல்யாண அலைச்சலில் பிளட் பிரசர் ஏறி ஒரு நாலு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க முடியாது; உன் அக்காவுக்கு மறு சீர் என சொல்லி அவள் கல்யாணத்துக்கு செய்த அதே அளவு திரும்ப சீர் செய்ய முடியாது; பெண் வீட்டு பெருமையெல்லாம் நானே சொல்ல முடியாமல் உன்னைக் கேட்டு சொல்ல வேண்டி இருக்கும்; பரவாயில்லை உன் சுகமே எங்களுக்கும் சுகம் என சொல்லும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

இருக்கறதுலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்கறதுதான் என பதிலுக்கு மல்லுக்கட்டி காதலை தூக்கியெறிபவர்களும் இருப்பார்கள். வீழ்வது நம் கனவாக இருப்பினும் வாழ்வது நம் காதலாக இருக்கட்டும் என காவிய வசனங்கள் பேசமால், கிடைத்த வாழ்க்கையில் டையப்ப்ர் மாத்திக் கொண்டிருக்கும் இப்போதைய அம்மா அப்பாக்கள் என்ன செய்வார்கள்?

Sunday, July 22, 2007

என் எட்டாத எட்டு...


எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. அனுசுயா வின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து என்னுடைய எட்டாவது எட்டு இது!

1. நான் தொலைத்த செருப்புகளின் எண்ணிக்கையை கேட்டால் நீங்க ஒரு செருப்பு கடையே வைக்கலாம். அட பராவாயில்லையே, இந்த செருப்பு 3 நாள் கழிச்சுத்தான் தொலைஞ்சுபோச்சு என பல முறை பாராட்டுப் பத்திரம் வாங்கியிருக்கிறேன். நின்ன இடம், உக்கார்ந்த இடம், போன் இடம், வந்த இடம் என எல்லா இடங்களிலும் என் முத்திரை பதித்து விட்டு வருவேன். ஆனால், அது என்றும் அதன் எஜமானனை தொடர்ந்ததே இல்லை. இது பத்தாம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தது. அது எப்படிடா, பாடம் எல்லாம் தூக்கத்தில கேட்டாலும் ஒப்பிக்கற, செருப்பு என்ன பாவம் பண்ணியது என நிறைய முறை கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன்.


2. பத்தாம் வகுப்பின் இறுதி நாளன்று எடுத்த போட்டோவை இப்போது பார்த்தால் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த போட்டோவில் எனக்கு இரு பக்கமும் நிற்கும் நண்பர்கள் அகால மரணம் அடைந்துவிட்டனர், இரு வேறு சந்தர்ப்பங்களில். அந்த போட்டோ மட்டும் என்னிடம் 2 காப்பி இருக்கிறது. அந்த இரண்டாவது காப்பி என்னிடம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து மொத்த கும்பலையும் பைத்தியம் பிடிக்க வைக்க விருப்பமில்லாததால் இத்துடன் முற்றுப் புள்ளி.


3. கேலியும் கிண்டலுமாக பத்தாவதை என் நண்பர்கள் முண்ணனியுடன் மொத்தமாக தாண்டியதும்தான் வந்ததது பிரச்சினை. சில பேர் +1 அதே பள்ளியில் சேர, பாலிடெக்னிக்கில் சேர என அப்ளிகேசன் வாங்க போக எனக்கும் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம். பள்ளியில் TC தராமல் "அவனுதான் முதல் அட்மிஷன், முதல் மாணவனுக்கு முதல் மரியாதை. சேர்க்கை கட்டணத்தை கட்டிட்டு போங்க, பாலிடெக்னிக் பத்தி பேசினா பல்லை உடைச்சிடுவேன்" ன்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என் அப்பாவின் மாமாவும், பள்ளியின் துணை தலைமையாசிரியருமான கிருஷ்ணன். என் விருப்பம் எல்லாம் என்றும் நிறைவேறாது என விரக்தியுடன் சுத்தி திரிந்த காலம் அது!


4. என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முக்கியமான நிகழ்வு என்றால் இதுதான். நான் +2 முடித்து விட்டு என்ஜியனிரிங் கவுன்சிலிங் போயிருக்கிறேன். IRTT Mechanical Engg, Kongu Computer Science & Engg என வீட்டுக்கு பக்கதிலிருக்கும் கல்லூரிகளில் சீட் இருந்தும் GCT Production என யாரோ எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபரின் பேச்சைக் கேட்டு எடுத்தேன். தவறு செய்து விட்டேனா என பல நாள் குழம்பி, மூட்டை முடிச்செல்லாம் கட்டி காலேஜ் சேர்ந்து முதல் நாள் Electrical Engineering கிளஸுக்கு வந்த புரொபசர் எபினேசர் ஜெயகுமாரைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அவர் தான் அந்த பெயர் தெரியாத ஆள்! ஆறு மாதம் கழித்து ஞாபகமாக கேட்டார் "இப்பொழுது எந்த குழப்பமும் இல்லையே?" என்று.


5. இதுவும் எனக்கு ஷாக் குடுத்த எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம்தான். மன்த்திலி டெஸ்டில் கூட பெயில் ஆனதே கிடையாது என இறுமாப்புடன் திரிந்த எனக்கு மேரி மாதா (எங்க எலெக்ட்ரிக்கல் லெக்சரர்) கருணையினால் முத இன்டெர்னல் தேர்வில் 11/30 வாங்கினேன். எங்க டிபார்ட்மெண்ட்டில் மட்டும் புரொக்ரஸ் கார்டு மாதிரி அனுப்பித் தொலைவார்கள். வீட்டிலிருந்த தாத்தா வந்தவுடன் தான் எனக்கு விசயமே உறைத்தது. எப்போதும் முதல் 10க்குள் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் அங்கேதான் ஒட்டிக் கொண்டது. அத்தனை களோபரத்திலும் "வீட்டு நினைப்பா இருக்கும் உனக்கு. எங்களை பத்தியெல்லாம் கவலைப்படாதே, படிக்கத்தான் உன்னை இங்க அனுப்பியிருக்கோம்" என சொன்ன தாத்தாவின் வார்த்தைகள் இன்னொரு சம்மட்டி அடி!


6. பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் "Come on, Give me a Break" என சிவாஜி ஸ்டைலில் சொல்ல நினைத்தாலும், "Cool" என சொல்லி நிலைமையை சமாளிப்பதே வேலையாக போய் விட்டது. அதே கேள்வியே, அதே நபருக்கு திருப்பி கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை :-)


7. சிலதெல்லாம் ஏன் நடக்கும், எதுக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். முதலில் பெங்களூருவில் சேர சொல்லி அழைப்பு அனுப்பிய Infosys அதையே ஒரு மாதம் கழித்து மங்களூரூவில் 2 மாதம் கழித்து சேர்ந்தால் போதும் என பேதி கொடுத்தது. Sepember 11 வேறு வந்து மங்களூரூவில் இருந்து வீட்டுக்குப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காய்ச்சல் வர வைத்தது. அப்படி எதுவும் நடக்காமல், ஹைதராபாதில் உங்கள் சேவையை தொடருங்கள் என அனுப்பி வைத்தார்கள். அங்கேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டி விட்டு பின் பெங்களூரு வாசம் ஒரு வருசத்துக்கு. அங்கிருந்து கிளம்பி அமெரிக்கவாசியான பிறகு(Infosys-ல் சேர்ந்து 2 வருடம் கழித்து) எனக்கு பெங்களுருக்கே ட்ரான்ஸ்பர் குடுத்து விட்டதாக வந்த மெயிலைப் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உலகம் உருண்டைதான்!!!


8. நான் ரொம்ப ஜோவியலனா, ஜாலியான ஆள் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஆனால், நான் ரொம்ப அமைதியான, என் ரகசியம் எனக்கு மட்டும் என பொத்தி வைத்திருக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி!!! இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங்... இந்த கருமத்தையும் நினைத்து நினைத்து நான் குழம்பி போனதுதான் மிச்சம். ஒன்றுடன் ஒன்று மோதாத வரை "ENJOY MAADI"

Thursday, July 19, 2007

இழக்காதே!!!




நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல.


இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் போய்ட்டு வந்த நம்ம பசங்க எல்லாம் எதோ 15-20 வருசம் பின்னாடி இருக்கறதா ஃபீல் பண்றாங்க. சத்தமில்லாம நம்ம ஊர் சாஃப்ட்வேர் கம்பெனி எல்லாம் பிலிப்பைன்ஸ்ல கால் ஊன்றாங்களாம். சீனாகாரன் வேற இங்கிலீஸ் படிச்சுக்கிடே இருக்கறான். தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பானு நம்மளை விட கம்மியா கூலி வாங்கிட்டு மாரடிக்க நெறையப் பேரு தயாரா இருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சாஃப்ட்வேர் வேலை எல்லாம் இந்தியாவுக்கு வந்த மாதிரி இந்தியாவுல இருந்தும் அதை விடக் கொறைவான செலவுல செய்து தரக் கூடிய நாட்டுக்குப் போகும்னு சொல்றாங்க. சொல்றது என்ன? அது ஏற்கனவே சத்தமில்லாம நடந்துக்கிட்டு இருக்கு.


இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வேலைல இருக்க முடியும்னு தெரியல. வேலையை விடவும் முடியாது. சோத்துக்கு வழி வேணும்ல? சுயமா எதாவது பிசினஸ் பண்ணலாம்னாலும் அதுக்கு துணிச்சல் இல்லை. ஆபீஸ்க்கு போய்க்கிட்டு அப்படியே சைடுல எதாவது பண்ணலாமானு யோசிச்சா அதுவும் முடியாது போல இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி அதை ஒரு ஆப்ஷனா வெச்சுக்கலாமா? Early retirement க்கு அது உதவுமா? இப்படியெல்லாம் மண்டையைக் கொடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப, சொல்லி வெச்ச மாதிரி அதே செய்தியை ஒரு புத்தகம் ஆணித்தரமா சொல்லுது, அதுவும் தமிழில்.


சக வலைப்பதிவர் மற்றும் என் கல்லூரி சீனியர் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகம் கீழ்க்கண்ட நம்பிக்கை கலந்த வாசகத்தோட முடிஞ்சு நமக்குள்ள ஒரு ஆரம்பத்தை உருவாக்கத் தூண்டுது.


"துணிச்சலாக வேலையைத் துறந்து விட்டு, சுய தொழில் செய்ய முடியாத சூழலில், மாதச் சம்பளத்தில் இருப்பவர்களின் லட்சிய வேட்கையை நிறைவு செய்யும் சாதனமாகப் பங்கு முதலீடு விளங்குகிறது. உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாண்டு, மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி, தீர்க்க தரிசனத்துடன் நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து சராசரியாக வருடம் 20 சதவிகிதம் வளர்ச்சியை எட்டுவீர்களானால், செல்வந்தராக ஓய்வு பெறுவீர்கள் என்பது நிச்சயம். வயதான பிறகா? இல்லவே இல்லை. நடுத்தர வயதிலேயேகூட விரும்பி ஓய்வு பெறலாம்."
கடைசி வரி இப்படின்னா, ஆரம்பம் இப்படி..
"வருடமெல்லாம் உழைக்கிறோம். மும்பையில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார் முதலாளி. அவரை மேலும் பணக்கார் ஆக்குவதற்கே நம் உழைப்பு போகிறது.'


புத்தகத்தின் மற்ற பக்கங்களைக் கவனமாகப் படிக்கும் போது, அந்த வரிகள் நிஜம் என்று உறுதியாகத் தெரிகிறது. மற்றவனுக்கு ஊழியனாக வேலை செய்து இந்த உலகத்தில் எவனுமே பெரிய ஆளானது கிடையாது. நமக்கெல்லாம் வேலையை விடற அளவுக்கு தைரியம் கெடையாது. அப்படியே விட்டாலும் பொண்ணு கெடைக்காது. ஆனா, ஷேர் மார்க்கெட் நல்ல மேட்டரா தெரியுது. நம்ம செய்யற வேலை நாளைக்கு அல்லது பத்து வருசத்துல தென் ஆப்பிரிக்காவுல கேப்டவுன் நகர்ல யாராவது செய்யலாம். ஆனா, நாம நல்லா முதலீடு செய்ய கத்துக்கிட்டா அதே தென்னாப்பிரிக்க கம்பெனில பங்குதாரரா இருக்கலாம்.


ஆனா, முதலீடு செய்யறதுக்கு என்ன தெரியணும், எவ்வளவு தெரியணும், எது சரி, எது தப்பு, எதை நம்பணும், எதை நம்பக் கூடாது அப்படீங்கற வெவரம் எல்லாத்தையும் ரொம்ப நல்லா தொகுத்திருக்கார் நம்ம குப்புசாமி.
"நீங்க படிக்கற எந்த புத்தகமும், செய்தியும் உங்களைத் தவறா வழி நடத்த அனுமதிக்காதீங்க, இந்தப் புத்தகம் உட்பட" என்பது அவரது யோசனை. But, every page of this books seems to be rich in content and mean a lot. எல்லாமே சரியா வழி நடத்துது. அல்லது யாரும் நம்மைத் தப்பா வழி நடத்தாமக் காப்பாத்திக்க உதவுது.


இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இரண்டு எண்ணம் ஏற்படுகிறது. ஒன்று, இவ்வளவு மேட்டர் இருக்கா என்பது. மற்றது, அட இவ்வளவுதானா(எளிமை) என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நமக்குத் தோன்றுகிறது.


சில புத்தகங்கள் பாமரத்தனமா இருக்கும். சிலது ரொம்ப ஹை லெவலா நமக்குப் புரியாத பாஷைல இருக்கும். இது இந்த இரண்டு வகையிலும் வராது. எளிமையாவும், விவரமாவும் இருக்கு. ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியாதவங்க நெறைய தெரிஞ்சுக்கலாம். ஏற்கனவே தெரிஞ்சவங்க இன்னும் தெரிஞ்சுக்கலாம்.


யாரு கண்டா? 40 வயசுல தேவைக்கு அதிகமான பணத்தோட ரிட்டையர்ட் ஆகறதுக்குத் தேவையான பாதையில் நீங்க எடுத்து வைக்கிற முதல் அடியாக இந்த நூல் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


புத்தகத்தை ஆன்லைனில் பெற http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&itemid=292