Sunday, July 22, 2007

என் எட்டாத எட்டு...


எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. அனுசுயா வின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து என்னுடைய எட்டாவது எட்டு இது!

1. நான் தொலைத்த செருப்புகளின் எண்ணிக்கையை கேட்டால் நீங்க ஒரு செருப்பு கடையே வைக்கலாம். அட பராவாயில்லையே, இந்த செருப்பு 3 நாள் கழிச்சுத்தான் தொலைஞ்சுபோச்சு என பல முறை பாராட்டுப் பத்திரம் வாங்கியிருக்கிறேன். நின்ன இடம், உக்கார்ந்த இடம், போன் இடம், வந்த இடம் என எல்லா இடங்களிலும் என் முத்திரை பதித்து விட்டு வருவேன். ஆனால், அது என்றும் அதன் எஜமானனை தொடர்ந்ததே இல்லை. இது பத்தாம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தது. அது எப்படிடா, பாடம் எல்லாம் தூக்கத்தில கேட்டாலும் ஒப்பிக்கற, செருப்பு என்ன பாவம் பண்ணியது என நிறைய முறை கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன்.


2. பத்தாம் வகுப்பின் இறுதி நாளன்று எடுத்த போட்டோவை இப்போது பார்த்தால் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த போட்டோவில் எனக்கு இரு பக்கமும் நிற்கும் நண்பர்கள் அகால மரணம் அடைந்துவிட்டனர், இரு வேறு சந்தர்ப்பங்களில். அந்த போட்டோ மட்டும் என்னிடம் 2 காப்பி இருக்கிறது. அந்த இரண்டாவது காப்பி என்னிடம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து மொத்த கும்பலையும் பைத்தியம் பிடிக்க வைக்க விருப்பமில்லாததால் இத்துடன் முற்றுப் புள்ளி.


3. கேலியும் கிண்டலுமாக பத்தாவதை என் நண்பர்கள் முண்ணனியுடன் மொத்தமாக தாண்டியதும்தான் வந்ததது பிரச்சினை. சில பேர் +1 அதே பள்ளியில் சேர, பாலிடெக்னிக்கில் சேர என அப்ளிகேசன் வாங்க போக எனக்கும் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம். பள்ளியில் TC தராமல் "அவனுதான் முதல் அட்மிஷன், முதல் மாணவனுக்கு முதல் மரியாதை. சேர்க்கை கட்டணத்தை கட்டிட்டு போங்க, பாலிடெக்னிக் பத்தி பேசினா பல்லை உடைச்சிடுவேன்" ன்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என் அப்பாவின் மாமாவும், பள்ளியின் துணை தலைமையாசிரியருமான கிருஷ்ணன். என் விருப்பம் எல்லாம் என்றும் நிறைவேறாது என விரக்தியுடன் சுத்தி திரிந்த காலம் அது!


4. என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முக்கியமான நிகழ்வு என்றால் இதுதான். நான் +2 முடித்து விட்டு என்ஜியனிரிங் கவுன்சிலிங் போயிருக்கிறேன். IRTT Mechanical Engg, Kongu Computer Science & Engg என வீட்டுக்கு பக்கதிலிருக்கும் கல்லூரிகளில் சீட் இருந்தும் GCT Production என யாரோ எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபரின் பேச்சைக் கேட்டு எடுத்தேன். தவறு செய்து விட்டேனா என பல நாள் குழம்பி, மூட்டை முடிச்செல்லாம் கட்டி காலேஜ் சேர்ந்து முதல் நாள் Electrical Engineering கிளஸுக்கு வந்த புரொபசர் எபினேசர் ஜெயகுமாரைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அவர் தான் அந்த பெயர் தெரியாத ஆள்! ஆறு மாதம் கழித்து ஞாபகமாக கேட்டார் "இப்பொழுது எந்த குழப்பமும் இல்லையே?" என்று.


5. இதுவும் எனக்கு ஷாக் குடுத்த எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம்தான். மன்த்திலி டெஸ்டில் கூட பெயில் ஆனதே கிடையாது என இறுமாப்புடன் திரிந்த எனக்கு மேரி மாதா (எங்க எலெக்ட்ரிக்கல் லெக்சரர்) கருணையினால் முத இன்டெர்னல் தேர்வில் 11/30 வாங்கினேன். எங்க டிபார்ட்மெண்ட்டில் மட்டும் புரொக்ரஸ் கார்டு மாதிரி அனுப்பித் தொலைவார்கள். வீட்டிலிருந்த தாத்தா வந்தவுடன் தான் எனக்கு விசயமே உறைத்தது. எப்போதும் முதல் 10க்குள் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் அங்கேதான் ஒட்டிக் கொண்டது. அத்தனை களோபரத்திலும் "வீட்டு நினைப்பா இருக்கும் உனக்கு. எங்களை பத்தியெல்லாம் கவலைப்படாதே, படிக்கத்தான் உன்னை இங்க அனுப்பியிருக்கோம்" என சொன்ன தாத்தாவின் வார்த்தைகள் இன்னொரு சம்மட்டி அடி!


6. பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் "Come on, Give me a Break" என சிவாஜி ஸ்டைலில் சொல்ல நினைத்தாலும், "Cool" என சொல்லி நிலைமையை சமாளிப்பதே வேலையாக போய் விட்டது. அதே கேள்வியே, அதே நபருக்கு திருப்பி கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை :-)


7. சிலதெல்லாம் ஏன் நடக்கும், எதுக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். முதலில் பெங்களூருவில் சேர சொல்லி அழைப்பு அனுப்பிய Infosys அதையே ஒரு மாதம் கழித்து மங்களூரூவில் 2 மாதம் கழித்து சேர்ந்தால் போதும் என பேதி கொடுத்தது. Sepember 11 வேறு வந்து மங்களூரூவில் இருந்து வீட்டுக்குப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காய்ச்சல் வர வைத்தது. அப்படி எதுவும் நடக்காமல், ஹைதராபாதில் உங்கள் சேவையை தொடருங்கள் என அனுப்பி வைத்தார்கள். அங்கேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டி விட்டு பின் பெங்களூரு வாசம் ஒரு வருசத்துக்கு. அங்கிருந்து கிளம்பி அமெரிக்கவாசியான பிறகு(Infosys-ல் சேர்ந்து 2 வருடம் கழித்து) எனக்கு பெங்களுருக்கே ட்ரான்ஸ்பர் குடுத்து விட்டதாக வந்த மெயிலைப் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உலகம் உருண்டைதான்!!!


8. நான் ரொம்ப ஜோவியலனா, ஜாலியான ஆள் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஆனால், நான் ரொம்ப அமைதியான, என் ரகசியம் எனக்கு மட்டும் என பொத்தி வைத்திருக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி!!! இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங்... இந்த கருமத்தையும் நினைத்து நினைத்து நான் குழம்பி போனதுதான் மிச்சம். ஒன்றுடன் ஒன்று மோதாத வரை "ENJOY MAADI"

7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

உங்களுக்கு செருப்பு என்றால் எனக்கு பேனா.
நன்றாக ரசித்தேன்.

said...

பொரபஸ்ர மேட்டர் எனக்கும் அதிர்ச்சிதான்.
//இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங். //
ரெமோவுமா?
உங்களை நம்ம ஊர்ல நல்ல புள்ளைன்னு இல்லே சொல்லிட்டு இருக்காங்க, இங்கே இப்படியா. அடுத்த தடவை ஊருக்கு நீங்க போகும்போது திண்டல்ல இருந்து வீடு வரைக்கும் போஸ்டர் அடிச்சு ஒட்ட கூட்டாளிங்ககிட்டே சொல்லிவிடுறேன்.

said...

//பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் //

interesting lines machhi...!!

said...

சவுண்ட்,

சூப்பருங்க.... :)

said...

ஏனுங்க நிறைய மேட்டர் same pinchnga உங்களுக்கு செருப்பு எனக்கு கொலுசு.

அதெல்லாம் இருக்கட்டும் உங்க ரெமோ கேரக்டர் பத்தி சொல்லவே இல்ல. :)

அடுத்த போஸ்ட்ல ரெமோ பத்தி எதிர்பார்க்கிறேன். :)

said...

உதய்,

அருமையான எட்டு! படிக்கையில பெரிய மூளைக்கார புள்ளயா இருந்திருப்பீர் போல! :)

நீர் பக்கா ரெமோ பேர்வழி எனத்தெரியும். உமக்குள்ள ஒரு அம்பியும் இருக்கானா? என்ன ஒரு ஆச்சரியம்!!

said...

அட நீங்களாவது பரவாயில்லைங்க..செருப்பு, பேனா இப்படித்தான்..நான் பல நேரங்களில் என் மனசயையே தொலைச்சுருக்கேன்..