Saturday, October 18, 2008

சினிமா - தூள் சீன்மா!

எதாவது எழுதலாம் என முனைப்புடன் இருந்த போது கப்பி அன்போட கேட்டவுடன் ஆரம்பித்த பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு நினைவு தெரியாத நாளிலிருந்தே படம் பார்க்க ஆரம்பித்து விட்டேனாம்! எனக்கு உறவுக்கூட்டம் நிறைய இருந்ததால் யார் சினிமா போனாலும் என்னையும், ரசம் சோற்றையும் சேர்த்தே தூக்கிக் கொண்டு போய் படம் பார்த்திருக்கிறார்கள். எங்க ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் போனால் தான் தியேட்டர் என்பதால் வேலை எல்லாம் முடிந்த பிறகு இரவுக் காட்சிதான் எப்போதும். தியேட்டரில் விற்கும் முறுக்கு சேர்த்து நன்றாக ரசம் சோறு சாப்பிட்டு விட்டு படம் ஆரம்பித்ததும் தூங்கி விடுவேனாம். சில சமயம் பால் மட்டும் குடித்து விட்டும் தூங்கியிருக்கிறேனாம். ஊர் உறவு ஒன்னா சேர்ந்தால் இதெல்லாம் மறக்காமல் பேசப்படும் காமெடி என்பதால் இதெல்லாம் மறக்கவே மறக்காது. ஆனால் நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் என்பது குழப்பமாகவே உள்ளது.

படிக்காதவன் நான் பார்த்த முதல் ரஜினி படம், The Protector நான் பார்த்த முதல் ஜாக்கிசான் படம் என வேண்டுமானால் சொல்லாம். ஈரோட்டில் அபிராமி தியேட்டர் ஆரம்பித்த வருடம் பார்த்த படம் The Protector. தியேட்டர்ல குளிருதும்மா போலாம்ன்னு சொன்ன பயல் நான். A/C தியேட்டரில் புஷ்பேக் சீட்டுடன் படம் பார்த்ததை பல வருடம் நண்பர்களிடம் சொல்லித் திரிந்திருக்கிறேன்.

தூங்காமல் முழுதும் பார்த்த முதல் தமிழ்ப்படம் படிக்காதவன். சின்ன வயசு ரஜினி கேரக்டர் எப்பவுமே என்னை இம்ப்ரெஸ் செய்து விடுவான். அதனால் பெரிய ரஜினியை இயல்பாகவே பிடித்து விட்டது. Mr. பாரத் படத்துக்கு முதல் வரிசையில் உக்கார்ந்து மாமா/பங்காளிகள் கிழித்துக் கொடுத்த லாட்டரி சீட்டை தூக்கி திரையின் மேல் எறிந்தது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.

பாடும் வானம்பாடி படம் பார்த்து ஆனந்த்பாபு மாதிரி கை காலை ஆட்டிக் கொண்டே இருந்திருக்கிறேன். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதா வாங்கி வந்தேன் என முதுகில் வாங்கி இருக்கிறேன். காற்றுக் குயிலு மனசுக்குள்ள பாட்டை ஒரு வரி விடாமல் மனப்பாடமாக பாடியிருக்கிறேன்.

பேபி சாலினியின் படங்கள் ஒன்னு விடாமல் பார்த்தவன் நான். என் பொம்முகுட்டி அம்மாவுக்கு பார்த்துவிட்டு ஓவென அழுதவன் நான். சங்கர் குரு இன்னமும் நினைவிருக்கிறது. பேபி ஷாம்லியின் அஞ்சலி, துர்கா என அனைத்தையும் பார்த்திருக்கிறேன்.

இந்தியன் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். +2 படிக்க நோட் வாங்க ஈரோடு நான் மட்டும் கிளம்ப, துணைக்கு மாமா, மாமாவின் நண்பர்கள் என பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் வரும் போது பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது. நல்ல கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி சட்டைய கழற்றி முன்னால் சீட்டில் போட்டுவிட்டுதான் படம் பார்த்தோம். படம் பார்த்து முடித்து விட்டுத்தான் எல்லோரும் கேட்டார்கள் "ஆமா எதுக்கு ஈரோடு வந்தோம் ன்னு?"

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா. ஊரு விட்டு ஊரு வந்து, ஊர் சுத்திப் பார்க்க வந்த நண்பர்களை கூட்டிக் கொண்டு போய் பார்த்த படம். நல்லாத்தான் இருந்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான்.

நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மிகவும் தாக்கிய முதல் சினிமா உன்னால் முடியும் தம்பி. எனது சுற்றுப்புறத்தையும் அந்த மாதிரி மாற்ற கமல் வர மாட்டாரா என ஏங்க வைத்த படம். சேது, பிதாமகன், சித்திரம் பேசுதடி மற்றும் சுப்பிரமணியபுரம் படங்களும் பாதிப்பை ஏற்படுத்தின. எல்லாப் படங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. கெட்ட கெட்ட வார்த்தையில் இயக்குநரை, நடிகர்களை மற்றும் பார்க்க வைத்த நண்பர்களை திட்டுவது கூட பாதிப்புதானே?

விஜயகாந்த் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், வானத்தைப் போல ன்னு வரிசையா பார்த்திருக்கிறேன். கஜேந்திரா, அரசாங்கம் மட்டும் இன்னமும் பார்க்கவில்லை :-)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இந்த கூத்தெல்லாம் பாட்ஷாவுக்கும் பின்னால்தான் கவனிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தை ஆண்டவன் கூட காப்பற்ற முடியாது என சொன்னதும் அதன் பின் நடந்ததையும் வியந்து பார்த்தேன்.

சண்டியர் விசயம் கொஞ்சம் அதீதமாகவே பட்டது. பாய்ஸைப் போட்டு கும்மியதை ஏற்க முடியவில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

மை டியர் குட்டிச்சாத்தான். 3-டி மேட்டர் மற்றும் குழந்தைகள் சுவற்றில் நடப்பது என என்னை ஆவென வாய் பிளக்க வைத்த படம்.

இந்தியன். கமலின் பிசிறில்லாத மேக்கப்பும், வெங்கியின் கிராபிக்ஸும். (தாசவாதரம் கிராபிக்ஸ் மொக்கையாக இருந்தது)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், தினமலர், தினத்தந்தி, மாலை மலர், வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ் என கிடைத்தில் எல்லாம் வாசித்திருக்கிறேன். குருவியாருக்கு உண்மையிலேயே கேள்வி அனுப்பறாங்களா இல்லை அவங்களே அந்த நடிகை இடுப்பில் கிள்ள ஆசைன்னு கேட்டுக்குவாங்களான்னு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

7. தமிழ்ச்சினிமா இசை?

அது மட்டுந்தான் இசை எனக்கு! 80-90 களில் வந்த இளையராஜாவின் பாட்டுக்கள் அற்புதம். இப்போது மற்றவர்கள் முன்னொடுத்துச் செல்கிறார்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

5 வயது முதலே அதிரடி ஆங்கில படங்களை பார்க்க ஆரம்பித்தாகி விட்டது. தூர்தர்ஷனின் மாநில மொழி திரைப்படங்களில் நிறைய படம் பார்த்த ஞாபகம். பெயர் சொல்லும்படி ஒன்றும் நினைவில்லை. மணிச்சித்திரத்தாழ், வாத்ஸல்யம் மற்றும் பெரும்பாலான திலீபின் காமெடி மலையாள படங்கள் பார்த்து விடுவேன். இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன, ஆக்ரோசம் என மசாலா மிகுந்த தெலுகு டப்பிங் படங்கள் பார்த்தும் உள்ளேன். தியேட்டர் போய் பார்த்த ஹேப்பி டேஸ் நல்லாத்தான் இருந்தது. பொம்மரில்லு 4 தடவை பார்த்தேன்.

சத்ய்ஜித்ரேயின் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். மனுசன் இவ்வளவு மெதுவா படம் நகர்த்தராறென்னு. மசாலா ஹிந்தி படங்கள் பார்ப்பேன். பிரெஞ்சில் அமேலி மற்றும் ப்ளூ பார்த்து கொஞ்சம் அசந்து போய் விட்டேன். அவர்கள் ஃபோர்னோ படம் மட்டுந்தான் எடுப்பார்கள் என நினைத்திருந்த என் அறிவுக்கண்ணாடியை கழட்டி விட்டேன்.

IMDB மூலமாக பார்த்த நல்ல ஆங்கிலப் படங்கள் ஏராளம். அமெரிக்காவில் ஒரு நல்ல வசதி என்னவென்றால் டிவிடி எல்லாம் லைப்ரரியில் எடுத்துப் பார்க்கலாம். World War II படங்கள், Wild West படங்கள், திரில்லர், நாடகம் என கலந்து கட்டி அவர்கள் எடுத்து வரும் DVD என கணக்கு வழக்கில்லாமல் பார்த்த நல்ல படங்கள் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் தினமும் ஒரு படம் பார்க்காமல் தூங்க மறுத்த என் நண்பர்கள் பாலா மற்றும் கிருஷ்ணா.

கடைசியாக பார்த்த NACHO LIBRE நன்றாக சிரிக்க வைத்தது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
90களில் கோபிசெட்டிபாளையத்தில் எதாவது சினிமா சூட்டிங் நடந்து கொண்டேதான் இருக்கும். கோபிக்கு அருகில்தான் எங்க ஊர். இது நம்ம ஆளு படத்தில் சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்ன்னு ஒரு பாட்டு வருமே? அந்த பாட்டில் நானும் கூட்டத்தில் இருந்தேன். பாரியூர் தீ மிதி திருவிழா முடிந்த அடுத்த வாரம் என நினைக்கிறேன். மூனாவது நாள் சூட்டிங்கின் போது போயிருந்தோம். கலைஞானம் பணத் தட்டை மேடையில் வைப்பாரே அந்த சீன் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ஷாட்டில் பாக்கியராஜின் டூப்தான் மேடையில் இருந்தார். பாக்கியராஜ் கேமரா அருகில் இருந்தார்.

எங்க ஊர் பசங்க கதை, கவிதைன்னு சுத்திட்டு இருந்தப்போ மாரியம்மன் பொங்கலுக்கு நாடகம் ஒன்னு போட்டாங்க. அதியமான் அதுக்கு வந்திருந்தாரு (தொட்டாசிணுங்கி ரிலீஸ் ஆன சமயம்). தங்கராசு மற்றும் ராஜாவை அசிஸ்டெண்டா கூட்டிடும் போயிட்டாரு. ரொம்ப நாள் கழிச்சு தங்கராசு என்னைப் பார்த்து கதை ரெடியா இருக்கு, 10 லட்சம் இருந்தா முதல் செட்யூல் முடிச்சிராலாம்ன்னு சொன்னார். என்னுடைய இயலாமைய சொல்லிட்டு இங்க வந்துட்டேன். ஒரு நல்ல தயாரிப்பாளரை தமிழ் திரையுலகம் அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பெல்லாம் தவறிப் போகவில்லை. ஆனால் ஒரு நாள் அவங்க டைரக்ஷன்ல ஒரு படம் வரும்ன்னு நம்பறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

படம் பார்க்கறதெல்லாம் குறைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு ஒன்னும் ஆகாது.

இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பவர்கள்:

தமிழன் எட்வின்
ரவி ஆதித்யா
பூச்சாண்டி
வினிதா
புனித் கைலாஷ்

1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

தூள்! :)