தென்றல் வந்து தீண்டும் போது
நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...
நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.
கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.
கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...
http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?