திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.
கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.
ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.
கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.
சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.
நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.
பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...
காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.