பாஸ் வேர்டு கூத்துக்கள்
அந்த காலத்தில் (சுமார் 3 வருடங்களுக்கு முன்பு வரை) பாஸ் வேர்டு பரிமாறிக் கொள்வது என்பது IT கம்பெனிகளில் சகஜமான ஒன்று. அந்த கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை இதை எழுத வைக்கிறது.
முதலில் நடந்தது இது. வேலையில் சேர்ந்திருந்த நேரம். நண்பன்(1) அவன் பாஸ் வேர்டாக ஒரு பெண்ணின் பெயரை வைதிருக்கிறான் என நண்பன்(2) சொன்னான். நாங்கள் யாரும் நண்பன்(2)வை நம்பவில்லை. இதில் உசுப்பேறிய நண்பன்(2) கீ போர்டில் டைப் செய்யும் எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணும் சாப்ட்வேர் நண்பன்(1)வின் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் பண்ணி எங்களுக்கு அதை நிருபித்தான். (நண்பன்(2) இன்னமும் அப்படித்தான்). நண்பன்(1)வை கையும் களவுமாக பிடித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால் நண்பன்(1) அது என் அம்மாவின் பெயர் என சொன்ன பொழுது நாங்கள் நம்பித்தான் தீர வேண்டி இருந்தது.
இன்னொரு நாள் ஒருத்தனிடம் யுனிக்ஸ் பாஸ் வேர்டு கேட்டால் F***123 ட்ரை பண்ணு இல்லைன்னா c@#$, இல்லைன்னா P^&*( என சத்தமா சொன்னான். ஏன் உனக்கு இவ்ளோ கெட்ட வார்த்தை மட்டும்தான் தெரியுமா என பின்னாடி எங்க பிராஜெக்ட் மேனேஜர் வந்து நின்றார். எங்க ஊரில டவுசர் கழண்ட்ருச்சுன்னு சொல்லுவாங்க, எனக்கு ஏற்கனவே பல முறை டவுசர் கழண்டிருந்தாலும் அடுத்தவனுக்கு நடக்கும் போது பார்ப்பது அலாதி சுகம்.
ஒரு பெண் நண்பி அலுவலகம் முடிந்து சென்ற பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு மெயில் அனுப்பவில்லை என்று. இது எங்கள் மேனஜருக்கு தெரிந்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்று அந்த பெண் பதறிக் கொண்டு எனக்கு போன் செய்து நீ அனுப்பிவிடுகிறாயா என கேட்டாள். நானும் அவள் மெயில் பாக்ஸை திறக்க பாஸ் வேர்டு கேட்டேன். அவள் கூட வேலை செய்பவன் பெயரை சொல்லி கூட 3 நம்பர் சொன்னாள். எல்லாம் அனுப்பிய பிறகுதான் தோன்றியது அட மவனே இது காதல் செய்யும் பாடு என்று. அடுத்த நாள் அவளே வந்து நான் பாஸ் வேர்டு மாத்திட்டேன் யாருகிட்டையும் சொல்லாதே என்றாள். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என தைரியம் சொன்னேன். (அவள் பாஸ் வேர்டை மட்டும்தான் மாற்றியிருக்கிறாளா இல்லை ஆளையும் மாற்றி விட்டாளா என எனக்கு இப்போது தெரியாது.)