கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.
இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
இதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.
பா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.
`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.
பாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.
தத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.
சரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.
-தினமலர்.