Monday, March 20, 2006

லைவ் ஷோ காமெடிகள்

சன் மியூசிக்கில் வரும் SMS வாழ்த்துக்களை படிப்பது என்பது மிக சுவாரஸ்யமானது. நீயில்லாமல் வாழமுடியாது, தலை அஜீத் வாழ்க, மானே தேனே போன்ற SMSகளுக்கு நடுவே சில சுவாரஸ்யமான SMSகளையும் படிக்கலாம். ஒரே ஆள் ஊரிலிருக்கும் எல்லா பெண்களையும் லவ் பண்ணுவதாக நிறைய SMS வரும். அதில் அந்த ஆள் அவரின் கடை பெயர் செல்வி மளிகை கடையையும் சேர்த்து டைப் பண்ணிருந்தான். அந்த ஆள் இப்போ கட்டாயம் ஹாஸ்பிடலில்தான் இருக்க வேண்டும்.
இன்னொரு SMS; Navin: I Love Geetha, 89,முதல் தெரு,ரெண்டாவது கிராஸ், பெருந்துறை என முழு அட்ரஸோடு வரும். இது நவின் மேல் கடுப்பிலிருக்கும் ஏதோ குப்பனோ சுப்பனோ செய்யும் சித்து வேலை என நினைக்கிறேன்.

சன் மியூசிக் தொகுப்பாளர்கள் பாடு படு திண்டாட்டம்தான் போங்கள். ஹேமாவிடம், நீங்க நரிகுறத்தி மாதிரி இருக்கீங்க, கண்ணுக்கு மை நல்லா அழுத்தமா போடறீங்க, கைல போடற வளையலை காதில போடறீங்க என ஏகத்துக்கும் வாரி விட்டான் ஒருத்தன். இந்த பொண்ணோ பேசினதுக்கு ரொம்ப நன்றி, நீங்க விரும்பிக்கேட்ட பாடலை பாருங்க என சத்தமில்லாமல் முடித்துக் கொண்டது. அந்த பக்கம் போய் அவன் நம்பரை வாங்கி ஒரு படையை அனுப்பி துவம்சம் செய்தாலும் செய்திருக்கும் யார் கண்டது.

இன்னொரு பெண் ஆனந்தக்கண்ணனிடம் பேசும் பொழுது, நீங்க டிசம்பர் 31 எங்க மெடிக்கல் ஷாப்பில் விக்ஸ் வாங்கினீங்களே, ஞாபகம் இருக்கா என கேட்க, இவரும் ஞாபகம் இருக்கு அந்த அன்னைக்கு எனக்கு த்ரோட் பெயின். இவ்வளோ ஞாபகம் வைச்சிருக்கீங்க, நல்ல வேளை நான் வேற எதுவும் வாங்கலை என பெருமூச்சுடன் சொன்னார். இது அந்த பெண்ணுக்கு புரியவில்லை. ஆனால் கூட இருந்த இன்னொருத்தர்(பிரஜன்) அடப்பாவி, இதெல்லாம் கூட பண்ணறயாடா என கேட்க அதற்க்கு அப்புறம் அந்த பெண் சரி நான் போனை வைக்கிறேன் என வைத்து விட்டார். அப்புறம் ஆனந்தக்கண்ணன் அது இது என சமாதனம் செய்யவேண்டியதாகி விட்டது. கூட இருந்த பிரஜன்னுக்கு டின் கட்டியிருப்பாருன்னு நினைக்கறேன்.

Wednesday, March 15, 2006

காதல் கவிதைகள்

எனக்கு கவிதையெல்லாம் எழுத வராது. அதிலும் குறிப்பாக காதல் கவிதைகள். உருகி உருகி இந்த மாதிரி கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் வரும். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதா வாங்கி வந்தேன் என நான்காம் வகுப்பு படிக்கும் போது என் அத்தை மகளைப் பார்த்து பாடி முதுகில் அடி வாங்கிய பிறகு எனக்கும் கவிதாவுக்கும் (கவிதையும் தான்) எந்த சம்பந்தமும் இல்லாமல் போனது.

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர் சொன்னது என்னை உண்மையிலேயே சிந்திக்க வைத்தது. கவிதை எல்லாமே அனுபவத்தில் எழுதுவதில்லை. சில நேரங்களில் அது நடக்காதா என்ற ஏக்கம் கூட கவிதையாக மாறும். பொய்தான் கவிதை என்றார். அவர் எழுதிய இரு கவிதைகள் இங்கே:
1:
காதலே சற்றே உறங்கு!!
அன்பு தந்து அமுதூட்டிய அன்னையை மறந்தேன்

பண்பு தந்து பண்பூட்டிய தந்தையை மறந்தேன்
சிறு பொட்டிற்கும் சண்டையிட்டு விட்டுக் கொடுத்த தங்கையை மறந்தேன்
கடைத்தெருவில் பார்த்ததெல்லாம் வாங்கித்தந்த தாத்தாவை மறந்தேன்
எல்லாம் நீ வந்ததால்!!!......
கண்ணனாகிய மன்னன் ஒருவனை மணம்முடித்து வைப்பார்கள்
அது வரை காதலே சற்றே உறங்கு........
உன்னை என் புத்தகத்தினில் தாலாட்டுகிறேன்
அது வரை காதலே சற்றே உறங்கு........
2:
உன் கண்ணில் நான் என் கண்ணில் நீ
எனினும் தயங்குகிறோம்......
நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!!
உன் மனதில் நான் என் மனதில் நீ
எனினும் தயங்குகிறோம்......
நம் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள!!!
நம் கண்களால் ஆயிரம் பேசிக்கொள்கிறோம்.....
காதல் பரிமாற்றம் தவிர!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆனால் என்ன காரணத்தாலோ 2 கவிதைகளுக்கும் அவர் தலைப்பு வைக்க மறந்து விட்டார். அப்புறம் வார்த்தைகளுக்கு நடுவில் அந்த புள்ளிகள். அவர் நிறைய சிந்திப்பதாக அர்த்தமா?

Tuesday, March 14, 2006

எனக்குப் பிடித்தவை

சமயங்களில் சில தமிழ் பாட்டைக் கேட்டால் கேட்பதற்க்கு போட்டது போட்டபடி உக்கார்ந்துவிடுவேன். அந்த பாடல் ஆரம்பிக்கும் விதம், வரிகள், இசை, படமாக்கிய விதம், சூழ்நிலை என பல காரணங்கள் அதற்க்கு. என்னை அவ்விதம் உட்கார வைக்கும் மாதிரியான சில பாடல்கள் இங்கே.

1. தாலட்டு மாறி போனது (உன்னை நான் சந்தித்தால்)
2. பிள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)
3. கடவுள் உள்ளமே கருணை இல்லமே (அன்புள்ள ரஜினிகாந்த்)
4. தேனே தென்பாண்டி மீனே (உதய கீதம்)
5. அம்மா என்றழைக்காத (மன்னன்)
6. ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப்)
7. பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
8. கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)
9. பூங்காற்றே பூங்காற்றே (பாரதி கண்ணம்மா)
10. உன் பேரை சொன்னாலே (டும் டும் டும்)
11. பூவே செம்பூவே (சொல்லத் துடிக்குது மனசு)
12. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)
13. நானாக நானில்லை தாயே (தூங்காதே தம்பி தூங்காதே)
14. உன் குத்தமா என் குத்தமா (அழகி)

15. அவரவர் வாழ்க்கையில் (பாண்டவர் பூமி)
16. தென்பாண்டி சீமையிலே (நாயகன்)
17. என் காதலே காதலே (டூயட்)

18. பூவே பூச்சூடவா (பூவே பூச்சூடவா)
19. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)

இந்த பாடல்கள் ஏன் பிடித்தது என மேலே சொல்லிவிட்டேன். அதைவிட அந்த அந்த காலங்களில் அது என் மனநிலையை பிரதிபலித்திருக்கலாம் என என் நண்பன் சொன்னான். எனக்கு அப்படி தோணவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Monday, March 13, 2006

கருவாச்சி காவியம் - அத்தியாயம் 5

ஆனந்த், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது இவனுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று. ஹாஸ்டலில் இருந்து கிளாஸுக்கு நடக்க ஆகும் 5 நிமிடத்தை 50 நிமிடம் சத்யஜித்ரே படம் மாதிரி சொல்லுவான். திருக்குறள் பிடிக்காததற்க்கு காரணமே அது மிகவும் சிறியதாக இருப்பதால்தான் என டூப் விட்டு திரிவான். உண்மையில் விகடன் முழுதாய் எழுத்துக் கூட்டி படிக்க அவனுக்கு ஒரு நாள் பிடிக்கும். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஐஸ் ஹவுஸ்க்கு வழி சொல்லும் பாரிக்கே இவன் வழி சொன்னால் தலை கிறுகிறுத்துவிடும்.

ஆனந்த் எப்படியோ புது புயலின் பெயர் சாரதா என தெரிந்து வைத்திருந்தான். எல்லோருக்கும் முன்னால் அவளிடம் பேசி அவளை பட்டா பூமி ஆக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் முதல் வரிசையில் உக்கார்ந்து இருந்தான். சாரதா பாரதிராஜா படத்தில் வரும் தேவதை மாதிரி வெள்ளை உடையில் வந்திருந்தாள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வந்திருந்த ஆனந்தின் முகம் அவளை பிடிக்கவில்லை என காட்டிக் கொடுத்தது.

வேலுவுக்கு தான் ஒரு பெரிய ரவுடின்னு நினைப்பு. அவன் உருவத்துக்கும் அவன் செய்யும் சேட்டைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. பெண்கள் ஒரு அடி அடித்தால் நிலத்துக்குள் புதைந்து விடுவது போல் இருந்து கொண்டு சடையைப் பிடித்து இழுப்பது, அவனைவிட ரெண்டு அடி உயரமுள்ள ஜூனியரை ராகிங் செய்வது என வயதுக்கு மீறிய செயல்கள் செய்வது மட்டும் பிடிக்கும். தன்னுடைய ஆந்தை குரலில் உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே என அவளை ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு உயர்த்தி பாடி வைத்தான். சாரதா வகுப்புக்கு புதிது என்பதால் சும்மா முறைத்து மட்டும் வைத்தாள் இல்லை இவன்கூட எல்லாம் எதற்க்கு சாகவாசம் என நினைத்தாளோ என்னவோ.

சின்ன ராசுவுக்கு ஆனந்துடன் ஊர் வம்பு பேசாமல் நைட் தூக்கமே வராது. யார் யாருடன் வெளியே சுற்றுகிறார்கள் என்பதை ஆனந்த் டேட்டாபேஸில் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும். டேய் ஆனந்த், என்னடா சைலண்ட்டா இருக்க என்ன மேட்டர் என சின்ன ராசு சாம்பிராணி புகை போட்டுவிட்டு முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொண்டான். இல்லடா அது வந்து என ஆனந்த் ஆரம்பித்தவுடன் சின்ன ராசுவுக்கு ஜாக்பாட் அடித்த ஃபீலிங். ஆஹா, இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நல்லா பொழுதுபோகும் என மற்ற அடிப்பொடிகளுக்கும் சிக்னல் கொடுத்தான்.

எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள, சாரதா இன்னைக்கு வெள்ளை கலர் சுடிதார் போட்டு வந்தால்ல, அது அவளுக்கு நல்லாவே இல்ல. அவளோட டார்க் கலருக்கு அது சூட் ஆகவே இல்லை. அப்படியே வெள்ளை இருந்தாலும் மத்த கலர் எல்லாம் தூவின மாதிரி சுடிதார் போட்டிருந்தா நல்லா இருக்கும் என ஃபேஷன் டெக்னாலஜி 4 வருடம் படித்த மாதிரி பேசிக் கொண்டே இருந்தான் ஆனந்த். டேய் விடுடா, அவகிட்ட இருந்த ஒரே துவச்ச சுடிதார் அதாத்தான் இருக்கும். நீ ரொம்ப ஃபீல் பண்ணாத என சின்ன ராசு சமாதானம் சொன்னான்.

டேய் ஆனந்த், நானும்தான் அவளை பார்த்தேன். எங்க ஊர் மாரியம்மன் சிலைக்கு எண்ணெய் பூசி வெள்ளை சேலை கட்டின மாதிரி இருந்தா, கருப்புதாண்டா அழகு என ஒப்புக்கு சொல்லி வைத்தான் சின்ன ராசு. ஆனந்தை ஏற்றி விடுவதாக நினைத்துக் கொண்டு சின்ன ராசு சொன்ன இந்த பொய் அவனுடைய மீதியுள்ள காலேஜ் வாழ்க்கை முழுவதையும் வெறி நாய் மாதிரி துரத்தப் போகிறது என்பது அவனுக்கு தெரியவில்லை.

-தொடரும்.

Friday, March 10, 2006

கருவாச்சி காவியம்

கருவாச்சி காவியத்துக்கு கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து அசந்து போய்விட்டேன். மொத்தமே 2 கமெண்ட், அதில ஒன்னு நான் போட்டது.எண்ணெயை தேச்சுட்டு மணலில் புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும். ஒரிஜினல் கருவாச்சி காவியத்துக்கு இதனால் பெரும் இழுக்கு நேரும் என நினைத்து அட போடா, இதெல்லாம் ஒத்து வராது என கருவாச்சி காவியத்தை மூட்டை கட்டி விட்டு நான் உண்டு என் எக்ஸாம் உண்டுன்னு படிக்கப் போயிட்டேன்.

அப்புறம்தான் யோசித்தேன், கஜினி 17 முறை படையெடுதிருக்கான். விக்கிரமாதித்தன் இன்னும் வேதாளத்தை பிடிச்சானேனு தெரியலை, சிந்துபாத் கன்னித் தீவை வீட்டு வெளிய வந்தானானு இன்னும் தெரியல. ஆனா அவங்க இன்னும் டிரை பண்ணிட்டு இருக்காங்கன்னு பாட்டிகள் கதை சொல்லிட்டும், சன் டிவியில் தொடராவும் வந்துட்டு இருக்கு. அதெல்லாம் விட, 26 வருஷமா மாட்டாத ஃபிகர் இன்னைக்கு மாட்டிரும் நாளைக்கு மாட்டிரும்ன்னு நாக்கை தொங்கப் போடாமல் இன்னும் தேடும் நான் இல்லை என என் மனசாட்சி சொல்லி என்னை உசுப்பேற்றி விட்டது.

அது மட்டும் இல்லாமல் கூடவே சுத்தும் இன்னொரு மனசாட்சியும் எத்தனைதான் பொண்ணை பார்த்தாலும் புதுசா ஒரு பொண்ணு வந்தா நீ என்ன பார்க்காமல போற? ஃபிகரா இல்லையாங்கறது எல்லாம் அப்புறம் என தத்துவம் சொல்லியது. அதானே, ஒருத்தரும் பின்னூட்டம் எழுதலை அப்படிங்கறதுக்காக யாரும் படிக்காம இல்லைன்னு நானே என்னை தேற்றிக்கொண்டேன். இப்போதைக்கு நான் கருவாச்சி காவியம் எழுதப் போவது இல்லை ஆனால் கட்டாயம் எழுதி முடிப்பேன் என சபதம் செய்துள்ளேன்.

பின்குறிப்பு:- கதையை எப்படி நகர்த்துவது என தெரியாமல் நட்டுக்கிட்டு நிக்குதுன்னும் பையன் இன்னும் கதாநாயகி பெயர் வைக்க முடியாமல்தான் கதை எழுதவில்லைன்னு யாரவது சொன்னா தயவு செய்து நம்பாதீங்க.

Monday, March 06, 2006

என்னவெல்லாம் செய்யலாம்?

நான் யாரையும் இதை செய்ய வற்புறுத்தவில்லை. ஆனால் முயன்று பாருங்களேன். உலகத்தில் அடிப்படை தேவையான அனைத்தும் எனக்கு கிடைப்பதால் ஏன் அதில் ஒரு சிறு பகுதியை தேவையானவர்களுக்கு கிடைக்கும்படி செய்யக்கூடாது என்று சில நாட்களாக நான் செய்து வந்தாலும் இப்பொழுதுதான் அதை மற்றவர்களும் செய்தால் நிறைய பேர் பயனடைவார்கள் என எனக்கு தோன்றியது. நான் வருமான வரி கட்டுகிறேன், அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. அப்படி நினைப்பவர்கள் இது ஒரு காத்துவாயன் கவிதையென மறந்து விடுங்கள்.

உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளியில் சென்று என்னவெல்லாம் தேவையோ அதை முடிந்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொடுக்கலாம். நீங்கள் அரசு பள்ளியில் படித்திருந்தால் உங்களுக்கே தெரியும் அதன் தேவைகள் என்ன என்று. மேப், டெஸ்க், விளையாட்டுக் கருவிகள் என எத்தனையோ.

ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என கேட்பார்கள். அவர்களுக்கு தினசரி சாப்பாடு கிடைக்கிறதா என்பதே முக்கியம். பெரியவர்களுக்கு அதனால் ஒரு தீங்கும் நேராது என்றாலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கலாம்.

பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் இப்பொழுதெல்லாம் காசு கேட்பதில்லை. மாறாக உங்கள் நேரத்தைத்தான் கேட்கிறார்கள். வார இறுதியில் அங்கே சென்று குழந்தைகளுக்கு பாடம் சொல்வது, விளையாடுவது என உங்கள் நேரத்தை ஆக்கபூர்வமாக களிக்கலாம்.

உங்களை நான் ஒன்றும் தியாகி ஆகுங்கள் என்று சொல்லவில்லை. உங்களுடைய ஆடம்பர செலவில் ஒரு பகுதியை குறைத்தால் இதை தாரளமாக செய்யலாம். அப்புறம் நீங்கள் இதை செய்வதாக இருந்தால் கூட்டத்துடன் சேர்ந்து கும்மி அடிக்காதீர்கள். இதை அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.தனியாக, ஏதாவது சின்னதாக செய்து பாருங்கள். மன நிறைவு ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்து செய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Friday, March 03, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 4

இந்த ஒரு வருட காலத்தில் சின்ன ராசு சைட் அடிக்காத பெண்களே காலேஜில் இல்லை என்பதை விட சின்ன ராசு சைட் அடிக்கும் பெண்களெல்லாம் உடனே அடுத்தவர்களுடன் செட்டில் ஆகிறார்கள் என்ற செய்தி மற்றவர்களிடம் நன்றாக பரவியிருந்தது. டேய் சின்னராசு, எனக்கு அந்த பொண்ணு மேல ஒரு இதுடா, நீ எப்படியாவது அவகூட ஒரு வாரம் பேசிட்டு இரேன் என்று யாரும் வந்து சொல்லாததுதான் பாக்கி. நொந்து நூலாகி விட்டிருந்தான் சின்ன ராசு.

இரண்டாவது வருடத்தில் சில சிறிய மாற்றங்கள் சின்ன ராசுவின் கூட்டத்தில். மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் சில புதிய நண்பர்கள் சேர்ந்தாலும் ஒரு பெண்கூட மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் இலையென்பதால் டிபார்ட்மெண்ட் வாரியாக சின்ன ராசு எல்லா மக்களிடமும் தொடர்பு வைத்திருந்தான். அந்த நண்பர்களை பார்க்கும் சாக்கில் ஃபிகர்களை நோட்டம் விடலாம் என்பதுதான் உண்மையென்றாலும் முதல் வருடம் எல்லோருக்கும் பொதுவான பாடம் என்பதால் ஒன்றாக கும்மியடித்ததை மறக்க முடியவில்லை என கதை விட்டுக்கொண்டிருந்தான்.

அதே நேரம் சின்ன ராசு உருப்படியாவதற்கான சூழலும் அந்த புதிய நண்பர்கள் வட்டத்தில் உருவாகி இருந்தது. மற்றவர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று சி, சி++ படிக்க தனியாக உட்காரப் பிடிக்காமல் இவனும் சேர்ந்திருந்தான். டேய், இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது எனக் கேட்டால் செங்கனி மேடம் இன்னைக்கு சூப்பர டிரெஸ் பண்ணிருந்தாங்க, எங்கதான் சுடிதார் எடுக்கராங்களோ என சொல்லிக் கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்திருந்தான். நண்பர்கள் எல்லாம் இவன் படிப்பதற்கான காரணம் சி சொல்லிக் கொடுக்கும் பெண்ணே ஒழிய சி மேல் உள்ள ஆர்வத்தில் இல்லை என சத்தியமாக நம்பினார்கள்.

டேய் கண்ணா, எலெக்ட்ரிக்கல் மேடம் உயிரை எடுக்காறாங்கடா, எதாவது பண்ணுடா என நைசாக சின்ன ராசு கண்ணனின் காதை கடித்தான். ஒரு ஃபிகர் கும்பல் கிளாஸை கடந்து போனதுதான் அதற்க்குக் காரணம் என தெரியாத அப்பாவி கண்ணன், "மேரியம்மா, மேரியம்மா, உன் கிளாஸ் போரு அம்மா போரு அம்மா" என கரகாட்டக்காரன் ராமராஜன் மாதிரி பெருங் குரலெடுத்து பாட ஆரம்பித்து விட்டான். அது வரைக்கும் சாந்தமாக இருந்த லெக்சரர் மேரிக்கு இவன் பாட்டைக் கேட்டதும் சாமி வந்து விட்டது. இப்பொ யாரு பாடுனாங்கண்ணு சொல்லும் வரை நான் உங்களை வெளியே விட மட்டேன் என சொல்லி அனைவரையும் எரிக்கும் பார்வையில் பார்க்க ஆரம்பித்தார்.

டேய் கண்ணா, நான் உன்கிட்ட என்ன சொன்னேன். நீ இப்படி பழிவாங்கிட்டயேடா என ஃபிகர் பார்க்க முடியாத வருத்ததில் சின்ன ராசு புலம்ப ஆரம்பித்தான். மேரி மேடமை சமாதனப் படுத்த சீட்டுக் குலுக்கியதில் சின்ன ராசு பெயர் மாட்டியது. கையில் காலில் விழுந்து வாழ்க்கையில் கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்டு சமதானப்படுத்தியிருந்தான் சின்ன ராசு. ஆனால் என்னவோ இவன் சொன்னால் எல்லாம் நடக்கும் என்பது மாதிரி மக்களிடம் உதார் விட்டுக் கொள்ள ஆரம்பித்தது அன்று முதல்தான்.

லேட்ரல் என்ட்ரியாக ஒரு பெண் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் சேர்ந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியிருந்தது காலேஜ் எங்கும்.

--தொடரும்.

Wednesday, March 01, 2006

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் மேல் எனக்கு தீறாக் காதல் பிறந்தது என் 11வது வயதில். என் பாட்டிக்கு படித்துக் காட்டுவற்காக முதல் முறை உட்கார்ந்தது முதல் இன்று வரை 5 முறை முழுதாக படித்து விட்டேன். ஆனால் அதன் மீதான மோகம் மட்டும் இன்னும் தீரவில்லை. என் அக்காள் மகளுக்கு நந்தினி என்று பெயர் நான் சொல்லிய பொழுது எனக்கு அது உரைக்கவில்லை.

4 ஆண்டுகள் கழித்து என் அக்காவுக்கு பையன் பிறந்த பொழுது பெயர் தேடச் சொன்னார்கள். அப்பொழுது என் அக்கா "டேய், பழுவேட்டரையன், ஆதித்தன், அருள் மொழி, வந்தியத் தேவன் என பெயர் சொல்லிவிடாதே" என சொல்லிய பொழுதான் பொன்னியின் செல்வன் மீதான என் காதல் உரைத்தது.

அருள் மொழி தேவன் பெரியவனா இல்லை வந்தியத் தேவன் பெரியவனா என என்னால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை. நந்தினி அழகில் சிறந்தவளா, இல்லை குந்தவையா என இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

All the credits goes to kalki!!!! Today, I was browsing through the blog திண்ணை அரட்டை and this came to my mind. நன்றி சுபா அவர்களே!!!

Also, வரலாறு is having details about the tamil history. You might be interested in it. This also I got from the திண்ணை அரட்டை only.

I have already posted an incident about my Ponniyin selvan book hunt in Bangalore

தமிழ்நாடும் அதன் தலையெழுத்தும்

தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று இந்த அரசியல்வாதிகள் நினைத்து விட்டார்கள் போலும். வெற்றி கொண்டான் என்ற தி.மு.க. பேச்சாளர் பல்லடத்தில் போன வாரம் பேசிய பேச்சு விகடனில் வந்திருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு.
தமிழ் நாட்டை கலைஞருக்கு மீட்டுக் கொடுப்பதாம். நாடு இவர்களுக்கா, இல்லை நாட்டுக்கா இவர்களா? அனைத்து மத்திய அரசு விளம்பரங்களிலும் கலைஞர் தவறாமல் இடம் பெருகிறார். இவர் என்ன மத்திய அமைச்சரா இல்லை, தமிழ் நாட்டில் தான் இவர் முதலமைச்சரா? பகுத்தறிவு பகுத்தறிவு என மேடை தோறும் முழங்கிவிட்டு தங்களது சொந்த தொலைக்காட்சியில் காட்டுவதெல்லாம் வேலன், சூலம், வேப்பிலைக்காரி போன்ற ஒன்றுக்கும் உதவாத, மூட நம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மட்டுமே.

தமிழ்க்குடிதாங்கியின் பேரப் பிள்ளைகள் படிப்பதோ ஆங்கிலப் பள்ளியில். ஆனால் இவர் ஆங்கில பதாகைகளை தார் பூசி அழிக்கிறார் திண்டிவனத்தில்.வட மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி ரோட்டில் போட்டதில் கின்னஸ் சாதனை செய்தவர்கள் இவர்கள்.

அம்மா மட்டும் என்ன சும்மாவா? தமிழ் நாட்டில் வெற்றி பெற்றதற்க்கு நன்றிக் கடன் குருவாயூர் கோயிலுக்கு யானை. தமிழ் மக்களுக்கோ வரிச் சுமையும் வேலை இழப்பும்தான்.

வேலை நிறுத்தம் மற்றும் உண்டியல் குலுக்க மட்டும் செய்யத் தெரியும் இடது சாரி கட்சிகளுக்கு.

இதை எல்லாம் பார்த்தும் எதையும் மாற்ற முடியாத நிலைமையில் நான் என நினைக்கும் பொழுதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.