Sunday, August 24, 2014

6174



புத்தகம் நிறைய வாங்கியிருக்கேன் படிக்க முடியுமா என இருந்த நிலையிலிருந்து "அட, இந்த புத்தகம் மட்டும் ஏன் தொடாமால் இருக்கு?" என சனிக்கிழமை காலை ஆரம்பித்த புத்தகம். 400 பக்கங்களை சின்னச்சின்ன இடைவெளிகளில் 12 மணி நேரத்தில் முடித்து விட்டேன். அட்டகாசம்!

பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், காந்தளூர் கடிகையின் கதை என ராஜா கதை படித்த காலங்களில் இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் திகில் கிளப்பும். வீட்டில் எல்லோரும் இருக்கும் இடங்களில் மட்டும் உக்கார்ந்து படிப்பேன். மர்மதேசம் ஏன் தினமும் ஒளிபரப்பக்கூடாது எனவும், 30 நிமிட திங்கள் எபிசோடை அடுத்த வாரம் வரை அலசிக்கொண்டும், அடுத்த என்ன நடக்கும் என திகிலோடு காத்துக் கொண்டிருப்போம். ஓலைச்சுவடியிலிருந்து படிக்கும் பாட்டையும் கூறு போடுவோம். இந்த treasure hunt type கதைகள் பிடித்ததினால் Indiana Jones எந்த சச்சரவும் இல்லாமல் என் all time favorite படங்களில்  இருக்கிறது. 

டான் பிரவுனின் ராபர்த் லேங்டன் மூலமாக ஐரோப்பா முழுதும் ஓடி ஓடி தேடிவிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் DC யையும் Google earth ல் அங்குலம் விடாமல் அலசியாகி விட்டது. டான் பிரவுன் எழுதுவது புதினமாக இருந்தாலும் இடங்களைப்பற்றிய உண்மை தகவல்களை வைத்து ஒரு எட்டாத கற்பனையை சரக்கென்று கண் முன் நிறுத்தி விடுவார். ஒவ்வொரு புதினம் படிக்கும்போதும் என் பெரும்பாலான நேரம் அவர் சொன்ன தகவல்களை விக்கியில் தேடிப்படிக்கவும் சரிபார்க்கவும் செலவிடப்படும். நான் சரியான ஊர் சுற்றியாய் இருந்ததும் இந்த மாதிரியான கதைகளில் ஆர்வம் வரக்காரணமாக இருக்கும்.

6174 - 2014 சென்னை புத்தககண்காட்சி சமயத்தில் பரவலான கவனம் பெற்ற அறிவியல் புனை கதை, எக்கச்சக்க தரவுகளுடன், தகவல்களுமாய் அருமையாக இருக்கிறதென படித்தேன். கர்ணனின் கவசம் வாங்கி படித்த பிறகு புத்தகங்களை திரும்ப வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால் இதை வாங்கினேன். என்ன சமாச்சாரம் என தெரியாமல் படிக்க ஆரம்பித்து... அப்புறம் என்ன, 12 மணி நேரம் புத்தகமும் கையுமாக திட்டு வாங்கி கொண்டிருப்பது தெரியாமல் நடந்து, படுத்து, நிமிர்ந்து உக்கார்ந்து வாசித்த புத்தகம். 6174 ஐ மிக சாமர்த்தியமாக இந்த புனை கதையில் நடுவில் வைத்த திறமை - அற்புதம்!

இதற்கு மேல் எதை சொன்னாலும் சுவாரசியம் குறைந்து விடும். புத்தகம் ஆன்லைனிலும் கிடைக்கிறது.

அதிபயங்கர உழைப்பு இந்த நாவலுக்குப் பின் இருக்கும் என தெரிந்தாலும் சுதாகர் கொடுத்த reference link ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருக்கிறேன். 

GRE score பற்றிய தகவலும், இரட்டை கடற்கரை கிராமத்தைப் பற்றி வரும் இடங்களில் பெயர் மாறி இருப்பதும், டபுள் கேம் ஆடும் குழுக்கள் பற்றி கொஞ்சம் குழப்பம் (என் புரிதலாகக் கூட இருக்கலாம்) என்பதை அடுத்த பதிப்பில் தெளிவிக்கலாம்.

0 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!: