Monday, May 26, 2014

டாலும் ழீயும், கரும்புனல், மாதொருபாகன்

வருட ஆரம்பத்தில் வைராக்கியத்துடன் புத்தகம் வாங்கி, வழக்கம் போல் கோழி அடைக்கு உக்காரும் கதையாக ஆகிவிடுமோ என நினைத்திருந்தேன். பரவாயில்லை, எண்ணிலடங்கா புடுங்கல்கள் மத்தியிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மேய்ந்து கொண்டிருக்கிறேன். 

முதலில் டாலும் ழீயும் - விழியன்




நான் ஒரு கதைசொல்லி இல்லையென்றாலும் ஒரு ஊரில் என இழுத்து இழுத்து கன்னித்தீவு மாதிரி சொல்லி சமாளிக்கலாம் என நினைத்தால் ப்ரித்திவ் இன்னமும் கதை கேட்க தயாராக இல்லை. ஒரு விநாடி கதை கேட்டால் அடுத்த விநாடி சைக்கிளில், அடுத்த விநாடி அம்மா மடியில் என்று சுத்துகிறவனுக்கு ஒரு நிமிடம் பெரிய விசயம். விழியன் குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என்பதை விட பெற்றோர்களுக்கு ஒரு மேப் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கதை கேட்பவர்களுக்கு தகுந்த மாதிரி கதைசொல்லிகள் அத்தியாயங்களை எப்போது விருப்பமோ அப்போது முடிக்கலாம். 

உங்கள் குழந்தை தானே படிக்கும் வயதில் இருந்தாலும் பிரச்சினை இல்லை. பக்கங்கள் குறைவு, குழந்தை தலைக்கு வைத்து தூங்கும் அபாயமும் இல்லை, நழுவி விழுந்து எலும்பு முறியும் துன்பமும் இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் அழகான தலைப்பு மற்றும் படம். இரண்டு குழந்தைகள் சேர்ந்து இதை வாசித்தால் என்ன மாதிரியான உரையாடல் இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். 2000 பக்கம் தாண்டியும் அது போகும் வாய்ப்புகளைத்தான் கதையாக சொல்லியிருக்கிறார். 

அவரின் மற்ற படைப்புகளை வாசிக்கவில்லை, என் வாரிசு கதை கேட்கும் பருவத்திற்கு I am waiting.

*************************************************************
கரும்புனல் - ராம்சுரேஷ்



இந்த வருட புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின்  பெஸ்ட் செல்லர் புத்தகம் கரும்புனல். பெனாத்தல் சுரேஷ் பிளாக்கை 2005 தமிழ்மணம் காலத்தில் இருந்து வாசித்து வருகிறேன். இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல என டிஸ்கி போடாமல் எல்லா நான் அனுபவித்ததுதான் கூட வந்து பாருங்கள் என ஜார்க்கண்ட் கூட்டிபோகிறார். நிலக்கரி, ஆதிவாசிகள், அரசாங்கம் என கதை. முதல் அத்தியாயம் வாசிக்கும்போது ஜிலீர் என்றது. அதுவும் பழகினா சரியாப்போகும் என்பதான மைண்ட்செட் கலவரத்தை உண்டு பண்ணியது. நாயகி இல்லாத கதையை சொன்னால் யாரும் வாசிக்க மாட்டார்கள் என நினைத்தாரோ என்னவோ தமிழ்ப்பட கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவே இதிலும். இந்த கதையை விருமாண்டி பாணியில் பலவிதமாக சொல்லலாம். நாயகனை லீகல் ஆள் என இறக்கியதில் இவர் எதோ நட்ட நடு செண்டரில் சொல்வார் என நினைத்தேன். பார்த்ததை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். 

எனக்குப் புரியாத பூமி, தொழில் மற்றும்  பிரச்சனை. பள்ளியில் படித்த புவியியல் பாடம் மற்றும் கூகுள் மேப் துணையுடன் முதலில் இடத்தைப் பார்த்தேன். கற்பனையான சுரங்கம் என்றாலும் விவரிக்கும்போது மேப்பில் சரியாக புள்ளி வைத்து மார்க் வாங்கி விடலாம். சுரங்கத்தைப் பற்றி எழுதியதை வைத்து ஒரு மாதிரி மனதில் கோடு போட்டு வைத்திருந்தேன். புத்தகத்தைப் படித்துவிட்டு பொகாரோ சுரங்கம் எப்படி இருக்கும் என பார்க்கலாம் என்றால் பிங்கோ!!! என் மனதில் நினைத்தது படமாக இருந்தது. விரல் விட்டு எண்ணி விடும் பாத்திரங்கள், ஆனால் எல்லா பக்கத்து பார்வையும் பதிவு செய்ய தோதான பாத்திரங்கள். கதையின் கட்டமைப்பு அருமை. மெதுவாக உள்ளிழுத்து பிரச்சினையின் வடிவத்தை சொல்லி, பிரச்சினையின் ஊடாகவே பயணித்து அதைத் தீர்க்கும் வரைக்கும் வந்த பிறகு அடுத்த பக்கத்தில் சுபம் என முடிப்பார் என நினைத்தால் ஒரு பைனல் கிக்!

இந்தியா ஒளிர வேண்டும் என்றால் சுரங்கம் அவசியம், நக்சல், மாவோயிஸ்ட் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என நினைப்பவர்கள் இந்த புதினத்தைப் படிப்பார்களே ஆனால் கொஞ்சமாவது  இதைப்பற்றி சிந்திப்பார்கள். ஆனாலும் இந்த புதினத்திலும் மேலோட்டமாகவே சொல்லியிருக்கிறார் என சொல்வேன். திவ்யாவுக்கு பதில் தமிழ் பேசத்தெரிந்த அலோக் இருந்திருந்தாலும் ஆசிரியர் நினைத்த திருப்பங்கள் இருந்திருக்கும். ஒரே இரவில் வாசித்தாலும் 3 நாட்கள் சுரங்கம் பற்றிய தேடல்தான் நிறைந்து இருந்தது.

*************************************************************
மாதொருபாகன் - பெருமாள் முருகன்



மாதொருபாகன்- திருச்செங்கோடு அர்த்தநாறீஸ்வரின் இன்னொரு பெயர். ஆணும் பெண்ணும் சமமென உடலை சரிபாதி பிரித்து வைத்திருக்கும் சாமி. கதை சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் நடப்பதால் ஆசிரியரின் முன்னுரையை வாசித்து விட்டு கதைக்கு செல்லாம் என்றால் ரெட் அலெர்ட்.  சொல்ல வந்த விசயம் அப்படிப்படதென்பதால் தன் உழைப்பை,ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

பெயர் சொல்லாமல் ராஜாஜியை திட்டியிருக்கிறார், திருச்செங்கோட்டு கோயில் அய்யர் பாவாத்தாவை மறைத்ததை சொல்கிறார், குத்தல் பேச்சுக்களால் இயல்பு மாறும் வறடியின் கோபங்களை சொல்கிறார். காளியும் பொன்னாளும் கதையின் தலைப்பை அத்தனை பக்கங்களிலும் நிறைத்துக்கொண்டே வருகிறார்கள். சாமியின் பெயர்க்காரணத்துக்கு ஏற்ப வாழ்ந்து சாமி ஆனார்களா இல்லை சாமி குழந்தை இருந்தால் போதும் என இருந்தார்களா? வாசகர்களிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு பதினாலாம் நாள் திருவிழாவை கண் முன் நிறுத்துகிறார். கலவையான ஒரு மனநிலையில் நான்.

*************************************************************
பாதி வருடம் முடிக்கப் போகிறேன், இடையில் வந்த சிறு தொய்வைத்தவிர நான் படிப்பதற்காக நேரம் பெயரளவுக்காவாது வைத்திருக்கிறேன். ஹேப்பி அண்ணாச்சி!!!

0 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!: