கற்றது தமிழ்
முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்!!!
பிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. "தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்? என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமிழின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.
மானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.
பிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. "நிஜமாதான் சொல்லறியா?" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை!
காலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.
சாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; இயக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.
தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். "இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்" என்னும் காரணம் உச்ச கட்டம்.
சாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர்.
எங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.
யவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார்.
கற்றது தமிழ்; ஒழுக்கமல்ல.