காதலும் காதல் நிமித்தமும்...
இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ, பத்திரிக்கைகளோ விரல் விட்டு எண்ணி விடலாம். பெற்றோர்களின் பார்வையில் இந்த காதலை மையப்படுத்தி எந்த கதையையும், சினிமாவையும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. அப்படி இருந்தாலும், பிள்ளைகளின் காதலை தெரிந்த பெற்றோர்களின் இயல்பை, சந்தோசத்தை, பயத்தை, பரிதவிப்பை முழுதாக சித்தரித்தது மிகவும் குறைவே (இருந்தால் சொல்லுங்களேன், பார்த்து விடலாம்.)
20, 25 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த நம் குழந்தை எடுத்த முடிவு தப்பாகி விடவா போகிறது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். உலகம் தெரியாத பையன் விளையாட்டுத்தனமா செய்யறதையெல்லாம் ஏத்துக்க முடியாது என சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அதீதமாக சிந்தித்து எக்குத்தப்பான முடிவு எடுக்கும் பெற்றோர்களும் உண்டு. காதலை துணையிடம் சொல்லத் தெரிந்த மனதுக்கு பெற்றோருக்கு தெரியப்படுத்தும் எண்ணம் ஏனோ பெரும்பாலும் இருப்பதில்லை. வயது, நமது சமூக கட்டமைப்பு என பல விசயங்களை சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், பெற்றோர்களின் பார்வையில் காதல் என்பது தீண்டாமையா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு வருடம் உனக்கே உனக்காக அழைந்து திரிந்து ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக்கும் அந்த சுகம் இனிமேல் இருக்கப் போவதில்லை; கல்யாண கோலாகலத்தில் ஒரு மூன்று மாதம் அலைந்து திரிந்து எனக்கு ஓய்வே இல்லை என புலம்ப முடியாது; கல்யாண அலைச்சலில் பிளட் பிரசர் ஏறி ஒரு நாலு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க முடியாது; உன் அக்காவுக்கு மறு சீர் என சொல்லி அவள் கல்யாணத்துக்கு செய்த அதே அளவு திரும்ப சீர் செய்ய முடியாது; பெண் வீட்டு பெருமையெல்லாம் நானே சொல்ல முடியாமல் உன்னைக் கேட்டு சொல்ல வேண்டி இருக்கும்; பரவாயில்லை உன் சுகமே எங்களுக்கும் சுகம் என சொல்லும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
இருக்கறதுலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்கறதுதான் என பதிலுக்கு மல்லுக்கட்டி காதலை தூக்கியெறிபவர்களும் இருப்பார்கள். வீழ்வது நம் கனவாக இருப்பினும் வாழ்வது நம் காதலாக இருக்கட்டும் என காவிய வசனங்கள் பேசமால், கிடைத்த வாழ்க்கையில் டையப்ப்ர் மாத்திக் கொண்டிருக்கும் இப்போதைய அம்மா அப்பாக்கள் என்ன செய்வார்கள்?