பொங்கல்
எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.
ஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்துக்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
ஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.
எங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.
என்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.
மார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.
அடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.
ஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் "நாங்கெல்லாம் அந்த காலத்துல" என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!