Monday, February 03, 2014

அலகிலா விளையாட்டு - பா.ராகவன்

நிலமெல்லாம் இரத்தம் மூலம் எனக்கு பா.ராகவன் அறிமுகம். 2006ல் படித்ததாக ஞாபகம். கிழக்குப் பதிப்பகத்தில் பல எழுத்தாளர்களுக்கு வேள்வி மாதிரி செம்மைப்படுத்துகிறார் என கேட்டிருக்கிறேன் மற்றும் என்.சொக்கன் அதை எழுத்தில் சொல்லியும் இருக்கிறார். ட்வீட்டரிலும்  தொடர்ந்து பார்த்துக்
கொண்டிருக்கிறேன், வெண்பாம் போடுவார், குறுமிளகு மாதிரி பல டிவீட்கள். நேரத்தைப் பற்றி கவலைப்படாத, நேரத்தை வீணாக்காத எழுத்தாளர். அலகிலா என்ற ஒரு சொல்தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. தமிழ் வழி இயற்பியலில் படித்தது 20 வருடம் கழித்து ஒரு புத்தகத்தின் தலைப்பாய். unitless, countless, infinity and so on. என்னால் கதை எந்த தளத்தில் எழுதப்பட்டிருக்கும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. விஷ்ணுபுரம் வாங்கி 5 வருடம் முழுதாக முடிந்து விட்டது. சிந்தித்து பார்த்ததில் விலை மற்றும் பக்கங்கள் குறைவு. ஒரு ஸ்டார்பக்ஸ் நடையைக் குறைத்தால் அசிடிட்டிக்கும் நல்லது என்ற அடிப்படையிலும் பாரா மேல் உள்ள நம்பிக்கையிலும் வாங்கியது.



இந்த புத்தகத்தை தூக்கம் வராமல் சனி இரவு வாசிக்க ஆரம்பித்து சரியாக 2 அத்தியாங்களில் என்னை தூங்க வைத்து விட்டது. (எனக்குப் பிடித்த) வேதியியல் புத்தகத்துக்குத்தான் இந்த பெருமை அதிக முறை. ஒரு பக்கம் படித்தாலும் அது சம்பந்தமான நிகழ்வுகள் அது இது என பல பக்கம் போய் வருவேன்.  NFL சூப்பர் பவுல் ஞாயிறு மதியம் 3 மணிக்குத்தான் அது வரை படிப்போம் என 1 மணிக்கு ஆரம்பித்தேன். சூப்பர் பவுல் முடியும் முன்பே படித்து முடித்து விட்டேன். X-Men ஹீரோ Hugh Jackman Fox-11ல் இங்க என்ன சொல்லுதுன்னா டென்வர், ஆனா ஜெயிக்கப் போறது சியாட்டில் சொன்னவுடன் எடுத்த புத்தகம் என்றால் மிகச்சரி. அதுவும் டென்வர் முதல் ஆரம்பமே கந்தலாகி சொதப்பியவுடன் முழு மூச்சாக படித்து முடித்தேன். நான் நினைத்த அணி வெற்றி பெறவில்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. இந்தக் கதைதான் மனம் முழுவதும்,  முழுவதுமாய்.

கதையின் நாயகன் யார், எங்கு நடக்கிறது என எந்தக் குறிப்பும் இல்லாமல் கதை ஆரம்பித்து விட்டது. பனி லிங்கம் - ஊர் பத்ரிநாத் அருகில் ஏதோ, சத்திரம், வேட்டி, வத்தக்குழம்பு - வயதான பிராமணன் என ஒரு வடிவம் கட்டிக் கொண்டிருக்கையில் தூக்கம் வந்து விட்டது, கதையின் தலைப்பை உணர்ந்துதான் நான் தூங்கியிருக்க வேண்டும். பாலகுமாரனின் இரும்புக் குதிரை படிக்க முடியாமல் வீசியிருக்கிறேன். அப்போது அது எனக்கான கதையல்ல. பகவத்கீதையும், பைபிளும் வீட்டில்  இருந்திருக்கிறது. கடினமான மொழி நடைக்காகவே தொடாமல் ஒதுக்கி வைத்திருந்தேன்.

ஆரம்பித்து 20வது பக்கத்தில் கதை சொல்பவன் சாகப் போவதாய் உணர்வதாய் வந்தால் எப்படி இருக்கும். முதலில் பேரைச் சொல்லிட்டு அப்புறம் சாகு என தூங்கப் போனேன். கடைசி வரையில் பேரே இல்லை. முடிந்தவரை கதை நாயகனாக மாறி கதையைப் படித்து முடிப்பதுதான் என்னளவில் படித்து முடிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை. எனக்கு சம்பந்தமில்லாத கதை, உண்மையை சொல்லப் போனால் நானும் ஒரு யாத்ரீகனாய் சத்திரத்தில் உக்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அழுத்தக்காரர்கள், எதோ ஒரு காரணத்துக்காக எல்லாவற்றையும் விட்டு யாருக்கும் சுமையாகவும் இல்லாமல் வந்து விட்ட வயதானவர்கள் குளிருக்கு பயப்படுவது, மாத்திரை தவறாமல் சாப்பிடுவது, சோறு, வத்தக்குழம்பு என நாக்குக்கு தீனி போடுவது என சராசரி மனிதர்களாகக் காட்டினாலும் அவர்கள் வழியாக ஓயாமல் சிந்திக்க வைக்கிறார்.

குளிரை வைத்து ஒரு உள்மனப் போரே நடந்து விட்டது. 2 மாதம் முன்பு முன்னறிவிப்பில்லாமல் திடீரென குளிரெடுத்த ஒரு நாளில் எப்போதும் போல் தூங்கப் போய் காய்ச்சலுடன் எழுந்து 2மாதம் இன்னமும் முடியவில்லை. காய்ச்சல் வந்து முடியாமல் அனத்திக் கொண்டு படுத்திருப்பது எத்தனை பட்டா பட்டி டவுசர் போட்டலும் பேஸ்மெண்ட் வீக் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். கவுரவம் பார்த்தால் நாளைக்கு இருப்போமா என்பதே தெரியாது.

ஒரு கதைக்குள் இழுத்துப்போட மசாலா தேவையில்லை, படிக்கும் மனம்தான் காரணம். பூரணியின் அப்பா நடத்திக் கொண்டிருந்த பாடசாலை என சொல்ல ஆரம்பித்தவுடன் ஒரு பிளாஷ்பேக் வருது என வரிந்து கட்டி உட்கார்ந்தால் மீண்டும் தத்துவ விசாரம். அறியாத வயசு புரியாத மனசு; கேள்விகள், கேள்விகள், கேள்விகள் மட்டுமே. பச்சை மண்ணைக் குழைத்து எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இங்கு சேர்த்து விட்டு உயர்ந்த படிப்பு என சொல்கிறார்களே, அந்தப் படிப்பு சொல்லிக் கொடுப்பவர் வீட்டில் மருந்துக்கூட மகிழ்ச்சி இல்லை. அம்மா ஆசிரியர் வீட்டு சோகத்தை உன் சோகமாய் என்னாதே என பலப்பல.

கதையின் ஊடாகவே 40களின் காந்தியைப் பற்றிய பேச்சுக்களை சொல்லி இவர் ஏன் அவரை மகாத்மா என நினைக்கிறார் என்றும் வேலை என்று வந்தால் தனக்குப் பிடித்த வேலை என்பது கடைசிதான் கிடைதத வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதுவே போதும் என்ற மனநிலைமையும் சொல்லி இருக்கிறார்.

பூரணி பூரணமானவள். விரக்த்தியின் விளிம்பில் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவள். அண்ணன் சொன்னான் என ஒருத்தனைக் கல்யாணம் பண்ண ஒத்துக் கொண்டு பத்திரிக்கை அனுப்புபவள் அதே அண்ணனை அனுப்பி போஸ்ட் மாஸ்டரை கல்யாணம் செய்திருக்கலாம். அச்சுபிழை காரணமாக புத்தகத்தில் வெள்ளைப் பக்கங்கள். மொத்தம் 8 பக்கங்கள் எழுத்தில்லாமல் வெளுப்பாய். நல்ல வேளையாக 2 பக்கத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி இருந்ததால் ஒரு மாதிரி கதையை புரிந்து கொண்டு நகர்ந்து விட்டேன்.

போஸ்ட் மாஸ்டரோ வாழ்வில் எதன் பொருட்டும் ஈடுபாடு இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். வீட்டில் அனைவரும் இவரை வழிக்கு கொண்டுவர முடியாதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கை முறை மாறியதும் இவரது மாறாத கொள்கையும் காரணம். இருபக்க நியாயங்கள் என்பதை மீறி மூன்றாவது பக்கமும் இருக்கும். நேர்க்கோட்டில் எதிரெதிர் திசைகளில் செல்பவர்கள் மற்றொரு பக்கத்தை சீண்டக்கூட மாட்டார்கள். திருவையாறு, சென்னை, மைசூர், கொல்கத்தா, கயா மற்றும் பத்ரிநாத். கோபாலகிருஷ்ண ஹெக்டேவிடம் மைசூரில், கயாவில் புத்த பிக்குகளிடம் உரையாடல் என எதிலும் தேங்காமல் ஓடும் இவர் எங்கு திருப்தி அடைவார் என தேடிக் கொண்டே படித்து கொண்டே இருந்தால் கையிலாயம். அதுவும் பூரணியுடன். ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தி.