Wednesday, May 28, 2014

கோழி வளரும் கதை


ஆமையைக் காணவில்லை என அறிவுப்பு பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். அப்படியே பின்னோக்கி போய் ஊரில் கோழியைக் காணோம் எனத் தேடும் ஆயாக்கள் நினைவுக்கு வந்தார்கள். கோழி ஊரெல்லாம் குப்பையைக் கிளறினாலும் பொழுதானால் சரியாக சாய்த்து வைத்த கூடையில் ஐக்கியமாகி விடும். சிறு சிறு சத்தங்களுடன், பொழுது போய் ஒரு மணி நேரத்தில் அடங்கி விடும். பாம்போ, பல்லியோ அதன் இருப்பை கலைக்காதிருந்தால் காலை வரை  சத்தம் கேட்காது.

கோழி காட்டுக்குள் திரியும் வரை பிரச்சினை இல்லை. போகும் போது வரும் போது வழியில் இருக்கும் குப்பையை கிளறி வெட்டுக்குத்து அளவுக்கு போய் விடும். கோழி நன்றாக வளருவதைப் பார்த்தால் குப்பையை கிளறும் வரை பொறுத்து பின் சமயம் பார்த்து கல்லெடுத்து எறிந்து ஆத்திரத்தை அடக்கிக் கொள்வார்கள்.



கோழி குஞ்சுகள்தான் ஏழரையுடன் பிறந்திருக்கும். நோய் கொண்டு போகுமோ, காக்கா கொத்துமோ, கழுகு தூக்குமோ, வெயில் தாங்காமல் சுருண்டு விழுமோ என்ற பயங்களுக்கு நடுவில் திக்கு தெரியாமால் சில சமயம் காணாமலும் போய் விடும். அம்மா கோழியைக் காணாமல் அலை மோதும். பொடியன் எவனாவது இது அன்னக்கொடி அக்கா வீட்டுக்குஞ்சு என பாய்ந்து அமுக்கி பிடிக்கும் கணத்தில் இழுத்த காற்றுதான் கடைசி மூச்சாக இருக்கும். விழுக் விழுக் என இரண்டு முறை காலைக் கூட முழுதாக இழுக்க முடியாமல் போய் சேர்ந்திருக்கும். சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது கோழி மிதித்தெல்லாம் குஞ்சு சாவாது, வேண்டுமானால் நொண்டலாம்.

ஊருக்குள் வந்து போகும் யாரோ ஒருவர் ஒரு கோழிக் குஞ்சு தனியாக அல்லாடுகிறது என எதிர்ப்பட்ட ஒருவரிடம் சொன்னால் போதும் பொட்டி வந்துருச்சாமா பொட்டி வந்துருச்சாமா என ஆண்பாவத்தில் சொல்வது மாதிரி நொடியில் ஊரெல்லாம் தெரிந்துவிடும். காட்டுக்கு வேலைக்குப் போகாமல் வீட்டில்  இருந்தால் கூந்தலை அள்ளி முடிந்து வந்து விரட்டிக் கொண்டு போவார்கள். பொதுவாகவே வேலையிலிருந்து திரும்பி வந்தவுடன் ஊர் மேயும் கோழிகளை எண்ணிப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். கோழி தினமும் ஒரே இடத்தில்தான் முட்டையிடும். அதை எடுத்து சேர்த்து வைத்து அடைக்கு வைப்பது கில்லாடியான வேலை. முட்டையிடும் இடத்தை கண்டுபிடிக்கவில்லையெனில் கோவிந்தாதான்.

இதெல்லாம் தாண்டி குஞ்சு கொஞ்சம் வளர்ந்து தனியாக மேயும் பருவத்தில் ஆபத்து புளிய மரத்தடியிலோ, சாவடியிலோ நிழலுக்கு அமர்ந்திருக்கும் மைனர் குஞ்சு ரூபத்தில் வரும். ஆள் இல்லாத சமயம் பார்த்து கோழியை அமுக்கி, இறக்கை இரண்டையும் சேர்த்து திருகிவிடுவார்கள். அது என்ன ஏது என சுதாரிப்பதற்குள் தலைகீழாக ஒரு கையில் பிடித்து இன்னொரு கையால் கழுத்தின் மேல் வீசினால் தலை திருகி விடும். அதை அப்படியே எதாவது ஒரு காட்டுக்கு எடுத்துப் போய் கிடைத்த விறகுகளை வைத்து அடுப்புக்கூட்டி சாறு வைத்து விடுவார்கள்.

மைனர்களின் சமையல் திறமை அலாதியானது. சட்டி உடைந்ததாக இருக்கும், சமயத்தில் விறகு ஈரமாக இருக்கும், எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவுதான் இருக்கும். சினன வெங்காயம் மற்றும் வர மிளகாய்தான் மசாலா பொருட்கள். ஒரு மணி நேரத்தில் சுட சுட வறுவல் தயார். இந்த சம்பவம் நடந்த இடத்தை அவர்களே காட்டினாதால் உண்டு, யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அவ்வளவு தொழில் நேர்த்தி. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என ஒட்டிய மண்ணை தட்டி விட்டுக் கொண்டு எழுந்து நடந்து விடுவார்கள்.

கோழிய பாத்தியா என யாராவது கேட்டு, அட ஆமாம் இங்கதான் மேஞ்சுட்டு இருந்தது என அடையாளம் சொல்லி தேடும்போது ஒன்றிரண்டு கோழி இறகுகளைப் பார்த்தால் அவ்வளவுதான், அதற்க்குப் பிறகு வர ஆரம்பிக்கும் எந்த வார்த்தைகள் எதையும் அச்சில் ஏற்ற முடியாது. ப்பீப் - ப்பீப் - ப்பீப் - ப்பீப் மட்டுந்தான் கேட்கும். விதம் விதமாக திட்டுவதில்லாமல் அண்ணாமருக்கு கோழி குத்தி சாபம் விடறேன், முட்டை மந்திரித்து வைக்கிறேன், திருடினவன் கை விளங்காம போயிடும், சாப்பிட்ட வாய் கோணிக்கும் என பீதி கிளப்பி விடுவார்கள்.

இதெல்லாம் பலிக்குமா என கேட்டால் ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிடாக கதையாக, செவியூரில இப்படித்தான், ஊதியூரில் இப்படித்தான் என போய் விசாரித்து வர முடியாத ஊரில் நடந்ததாக சொல்வார்கள். நம்பிக்கை இல்லாமல் கேட்டால் அம்மணி அக்காவின் ரெண்டாவது கொழுந்தியாவின் மச்சாண்டார் பேத்தியை அங்கதான் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என தரவு தருவார்கள். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் யாருக்காவது நக சுத்தி வாந்தாலும் பார்வை வேறுமாதிரிதான் இருக்கும். நக சுத்தி வந்தவருக்கு பிடிக்காதவர்களோ இவ சுத்த பத்தமா இருந்து சாபம் விட்டிருந்தா முழுசா பலிச்சிருக்கும் என கோழியத் தொலைத்தவரை திட்டிக் கொண்டிருப்பார்கள்.

இது அத்தனையும் தாண்டி கோழி வளர்ந்தாலும் வீட்டுக்கு மச்சான் மற்றும் மாப்பிள்ளைகள் வரும் நாளில் காரியம் முடிந்திருக்கும்.

0 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!: