Thursday, January 16, 2014

எட்றா வண்டியெ – வா.மு.கோமு

நவம்பர் 2008ல் கடைசியாக இந்த லிங்கை தொட்டது. அவ்வப்பொழுது எழுச்சி விழா காணுங்கள் என பல மொழிகளில் ஒரே கருத்தாக பேசுபவர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட பதிவில் தொடர்ந்து ஆடிக்கொரு தரமும் அமாவாசைக்கு ஒரு தரமும் மழை மாதிரி வந்து விட்டு போவார்கள். காலம்தான் எவ்வளவு வலிமையானாது? நேற்று உயிரானது இன்றைக்கு கால் தூசிக்கும் இன்னும் கீழே. வேலை வேலை என்று அப்படியே பறந்து பரந்து கிடந்தாயிற்று. குடும்பமும் குட்டியும் ஆன பிறகு விட்டத்தை பார்த்துக் கொண்டு உட்கார எல்லாம் நேரம் இல்லை. தெரு விளக்கு வெளிச்சத்தில் 10-11 மணி வரை அரட்டை அடிப்பதெல்லாம் கானல்தான். சும்மா கிடந்ததை சுத்தம் செய்து புலம்பலுக்கும், அவ்வப்போது அலும்புகளுக்கும் வேலை கொடுக்கலாம், இனி ஸ்டார்ட் மூசிக்!!!

புத்தாண்டு அற்புதமாக 10 புத்தங்களுடன் ஆரம்பித்தாயிற்று.  ஒரு முன் கதை சுருக்கம்; வா மு கோமுன்னா கதை கோக்குமாக்கா இருக்கும் என நினைத்துக் கொண்டு இருந்தவனை பேஸ்புக்கில் வா மணிகண்டன் போகிற போக்கில் அடிச்சு விடாதீங்க படிச்சுட்டு பேசுங்கன்னு லெப்ட்ல ஒன்னு ரைட்ல ஒன்னு விட்டார். அடிபட்ட சிங்கமாய் வலிக்காத மாதிரியே ஒரு புக் வாங்கித்தான் பார்க்கலாமே என தேடிய போது கிடைத்த முதல் தலைப்பு இது. 




எட்றா வண்டியெ - படையப்பா படத்தில் ஒரு மிக முக்கியமான காட்சிக்கு முன்னாடி இதைச் சொல்லி ரஜினி சுருட்டை பற்ற வைத்துக் கொண்டே நடப்பார். இதிலும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு நேரத்தில் இந்த வசனம். மூங்கில் பாளையம் மண் ரோடில் ஓட ஆரம்பிக்கும் வண்டி விஜயமங்கலம் பைபாஸ் வழியாக வேகமெடுக்கிறது.

இந்தக் கதையில் வரும் அத்தனை பேரையும் ஏதோ ஒரு தருணத்தில் கூட அமர்ந்து பார்த்த நினைவு. மூங்கில்பாளையம், விஜயமங்கலம், கள்ளியம்புதூர், கிணிப்பாளையம், ஆயிகவுண்டன் பாளையம், சீனாபுரம், பெருந்துறை என சின்ன வயதில் காடு காடாய் சில சமயம் காலில் செருப்பு கூட இல்லாமல் இட்டேரி இட்டேரியாய் சுத்தி வந்திருக்கிறேன். என் ஊர் மற்றும் என் மக்கள். இது ஒரு மெகா காரணம். புத்தகத்தில் பக்கத்து ஊர் பேரெல்லாம் பார்க்க ஒரே ஆனந்தம். அடுத்த முறை எங்க ஊர் பேர் வருதான்னு எழுத்தாளர் கிட்ட கேட்க வேண்டும்.

கிறுக்கு (சின்ன) கவுண்டிச்சி சரோஜாவாய் ஒரு பத்து பேராவது கண் முன் வந்து போனார்கள். 6 மாதம் வரை கர்ப்பம் மறைத்தவள், மூன்றாவது மனைவியாகி 45 வயது ஆளுடன் ஒடியவள், ஊரை விட்டு ஓடிப் போய் மாட்டிக் கொண்டு அந்த இரவே ஒரு தியாகிக்கு மனைவியானவள் என வெரைட்டியாக வந்து போனார்கள். பங்காளிகளுக்குள் ஆயிரத்தி ஒன்று கூட இருக்கும். ஒரு ஞாயிறு மதியம் சரக்கு அதிகம் போனால் மண்டை உடைந்து கட்டிய துணிமணி கிழிந்து பெருந்துறை போலிஸ் ஸ்டேசனுக்கும், சுந்தர்ராஜ் ஆஸ்பத்திரிக்கும் போய் வந்து லீவு நாள் சுபமாய் முடியும். ஆனால் பிரச்சினை என்று கண்ணை கசக்கி வீட்டில் போய் நின்றால் எட்றா வண்டியெதான். எங்கிருந்து வருமோ பாசம்; ஒத்தைக்கு ஒத்தையெல்லாம் இல்லை, லாரி வைத்து ஆள்கூட்டிப்போய் அடித்து விட்டு வருவார்கள். அப்படியே இயல்பாய் கதைக்குள் போய் உக்கார்ந்து  சுகமாய் வேடிக்கை பார்த்த அனுபவம். 

சாமிநாதன் மாதிரி, சுப்பன் மாதிரி அறியாத சனங்கள் ஏராளம். எது சொன்னாலும் நம்பும் அப்பாவிகள், கொலை கூட தற்கொலையாய்தான் தெரியும்.  உபத்திரவத்தையும் ஆனந்ததையும் ஒரே மாதிரிதான் பார்ப்பார்கள். 70 ரூபாய் குவார்ட்டர்தான் கொண்டாட்டத்துக்கும், அதே குவார்ட்டர்தான் குமுறியழுவதற்கும். 

விவசாயம் மட்டுமே பார்த்து வந்த ஊரில் கைத்தறி வந்தது. ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. விவசாயம் பார்த்தவர்கள் காட்டின் ஓரத்தில் தறிக்குடோன் கட்டிக் கொண்டார்கள். பரம்பரை பரம்பரையாக பண்ணையம் போனவர்கள் விசைத்தறி வந்ததும் தறி குடோனுக்கு மாறினார்கள். அப்போதும் மொழி, பழக்க வழக்கங்களில் அவ்வளவு பெரிய மாறுதல் இல்லை, அதே பண்ணையத்தில் வேறு வேலை அவ்வளவுதான். சிப்காட்டும், பனியன் கம்பெனியும் வந்ததற்கு அப்புறம் ஒரு பெரிய வளர் சிதை மாற்றம் பெருந்துறை வட்டாரத்தில். வெளியூர்காரர்கள் பேசுவதை பார்த்து அதே மாதிரி பேசுவது, லுங்கியிலிருந்து ஜீன்ஸ், TVS லிருந்து கியர் வண்டி, தாவணியிலிருந்து சுடிதார் என வேறு முலாம் பூசிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். கெத்து காட்டுவதற்கும், ரப்பு பேசுவதற்கும் மட்டும் கொங்கு மொழி புழக்கத்தில். சாமிநாதன் மற்றும் ராஜேந்திரன் மற்றவர்களிடம் பேசும் போதும் பிரியாவுடனும் மல்லிகாவுடன் பேசும் போதும் உணர முடியும்.

செல்போன் வந்து உருப்பட்டது ஒன்றையும் காணோம், உருப்படியானதுதான் நிறைய. அப்படி என்னாதான் மணிக்கணக்கில் கொஞ்சுவாங்களோ என்பதற்கான பக்கங்கள் இதில் கொஞ்சம் அதிகம். எழுத்தாளரின் நோக்கமே அந்த கிரகத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்பதாகத்தான் இருக்கும். காதலர்களின் பரிசுப் பொருளெல்லாம் சிரிக்கும் படியாக இருக்கும், செல்போன் ரீசார்ஜ் தான் இப்போ டாப். 

சரோஜா அக்கான்னு ஒரு கேரக்டர். எதற்கும் பயப்படாத, எல்லா விசயத்துக்கும் முன்னாடி நிற்கும் ஆள். இந்த கேரக்டரை வைத்தே இன்னொரு 100 பக்கம் எழுதும் அளவுக்கு போக்குவரத்து அதிகம். அளவாய், உப்பு மாதிரி தேவையான அளவுக்கு வருகிறது

கட்டம் சரியில்லாமல் போனால் எதுவும் நடக்கும் என்பது சாமிநாதன் கதையில் 100% உண்மை. கல்யாணம் பண்ணியவளை ஒரு நிமிட வீராப்பில் ஒதுக்குவது, விருந்துக்கு போன ஊரில் சலம்பி விட்டு வருவது, எஸ்கேப்பாக உதவப் போய் கோமணம் அவுருவது என தொட்டதெல்லாம் நாசமாய் போகிறது. இது என்னை நைநை என இரண்டு நாள் படுத்திவிட்டது. நானும் இரண்டு நாளாய் பார்க்கறேன் ஊர்ல பேசிட்டு இருக்கறமாதிரியே பேசிட்டு இருக்க, என்ன ஆச்சு என இல்லாள் கேட்டதும் பாரத்தை இறக்கி விட்டு 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினத்தை எடுத்தேன்.

அலங்காரம், அலட்டல் இல்லாமல் எங்க ஊர் எகத்தாளம் மற்றும் குசும்புடன் ஒரு நாவல் படிக்க வேண்டுமானால் எட்றா வண்டியெ...

2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

Welcome back after 6 years

said...

வருக. ஆறு வருஷம் கழுச்சு எழுதறதே எம்மாஞ்சொகம்?