Thursday, July 19, 2007

இழக்காதே!!!




நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல.


இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் போய்ட்டு வந்த நம்ம பசங்க எல்லாம் எதோ 15-20 வருசம் பின்னாடி இருக்கறதா ஃபீல் பண்றாங்க. சத்தமில்லாம நம்ம ஊர் சாஃப்ட்வேர் கம்பெனி எல்லாம் பிலிப்பைன்ஸ்ல கால் ஊன்றாங்களாம். சீனாகாரன் வேற இங்கிலீஸ் படிச்சுக்கிடே இருக்கறான். தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பானு நம்மளை விட கம்மியா கூலி வாங்கிட்டு மாரடிக்க நெறையப் பேரு தயாரா இருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சாஃப்ட்வேர் வேலை எல்லாம் இந்தியாவுக்கு வந்த மாதிரி இந்தியாவுல இருந்தும் அதை விடக் கொறைவான செலவுல செய்து தரக் கூடிய நாட்டுக்குப் போகும்னு சொல்றாங்க. சொல்றது என்ன? அது ஏற்கனவே சத்தமில்லாம நடந்துக்கிட்டு இருக்கு.


இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வேலைல இருக்க முடியும்னு தெரியல. வேலையை விடவும் முடியாது. சோத்துக்கு வழி வேணும்ல? சுயமா எதாவது பிசினஸ் பண்ணலாம்னாலும் அதுக்கு துணிச்சல் இல்லை. ஆபீஸ்க்கு போய்க்கிட்டு அப்படியே சைடுல எதாவது பண்ணலாமானு யோசிச்சா அதுவும் முடியாது போல இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி அதை ஒரு ஆப்ஷனா வெச்சுக்கலாமா? Early retirement க்கு அது உதவுமா? இப்படியெல்லாம் மண்டையைக் கொடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப, சொல்லி வெச்ச மாதிரி அதே செய்தியை ஒரு புத்தகம் ஆணித்தரமா சொல்லுது, அதுவும் தமிழில்.


சக வலைப்பதிவர் மற்றும் என் கல்லூரி சீனியர் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகம் கீழ்க்கண்ட நம்பிக்கை கலந்த வாசகத்தோட முடிஞ்சு நமக்குள்ள ஒரு ஆரம்பத்தை உருவாக்கத் தூண்டுது.


"துணிச்சலாக வேலையைத் துறந்து விட்டு, சுய தொழில் செய்ய முடியாத சூழலில், மாதச் சம்பளத்தில் இருப்பவர்களின் லட்சிய வேட்கையை நிறைவு செய்யும் சாதனமாகப் பங்கு முதலீடு விளங்குகிறது. உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாண்டு, மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி, தீர்க்க தரிசனத்துடன் நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து சராசரியாக வருடம் 20 சதவிகிதம் வளர்ச்சியை எட்டுவீர்களானால், செல்வந்தராக ஓய்வு பெறுவீர்கள் என்பது நிச்சயம். வயதான பிறகா? இல்லவே இல்லை. நடுத்தர வயதிலேயேகூட விரும்பி ஓய்வு பெறலாம்."
கடைசி வரி இப்படின்னா, ஆரம்பம் இப்படி..
"வருடமெல்லாம் உழைக்கிறோம். மும்பையில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார் முதலாளி. அவரை மேலும் பணக்கார் ஆக்குவதற்கே நம் உழைப்பு போகிறது.'


புத்தகத்தின் மற்ற பக்கங்களைக் கவனமாகப் படிக்கும் போது, அந்த வரிகள் நிஜம் என்று உறுதியாகத் தெரிகிறது. மற்றவனுக்கு ஊழியனாக வேலை செய்து இந்த உலகத்தில் எவனுமே பெரிய ஆளானது கிடையாது. நமக்கெல்லாம் வேலையை விடற அளவுக்கு தைரியம் கெடையாது. அப்படியே விட்டாலும் பொண்ணு கெடைக்காது. ஆனா, ஷேர் மார்க்கெட் நல்ல மேட்டரா தெரியுது. நம்ம செய்யற வேலை நாளைக்கு அல்லது பத்து வருசத்துல தென் ஆப்பிரிக்காவுல கேப்டவுன் நகர்ல யாராவது செய்யலாம். ஆனா, நாம நல்லா முதலீடு செய்ய கத்துக்கிட்டா அதே தென்னாப்பிரிக்க கம்பெனில பங்குதாரரா இருக்கலாம்.


ஆனா, முதலீடு செய்யறதுக்கு என்ன தெரியணும், எவ்வளவு தெரியணும், எது சரி, எது தப்பு, எதை நம்பணும், எதை நம்பக் கூடாது அப்படீங்கற வெவரம் எல்லாத்தையும் ரொம்ப நல்லா தொகுத்திருக்கார் நம்ம குப்புசாமி.
"நீங்க படிக்கற எந்த புத்தகமும், செய்தியும் உங்களைத் தவறா வழி நடத்த அனுமதிக்காதீங்க, இந்தப் புத்தகம் உட்பட" என்பது அவரது யோசனை. But, every page of this books seems to be rich in content and mean a lot. எல்லாமே சரியா வழி நடத்துது. அல்லது யாரும் நம்மைத் தப்பா வழி நடத்தாமக் காப்பாத்திக்க உதவுது.


இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இரண்டு எண்ணம் ஏற்படுகிறது. ஒன்று, இவ்வளவு மேட்டர் இருக்கா என்பது. மற்றது, அட இவ்வளவுதானா(எளிமை) என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நமக்குத் தோன்றுகிறது.


சில புத்தகங்கள் பாமரத்தனமா இருக்கும். சிலது ரொம்ப ஹை லெவலா நமக்குப் புரியாத பாஷைல இருக்கும். இது இந்த இரண்டு வகையிலும் வராது. எளிமையாவும், விவரமாவும் இருக்கு. ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியாதவங்க நெறைய தெரிஞ்சுக்கலாம். ஏற்கனவே தெரிஞ்சவங்க இன்னும் தெரிஞ்சுக்கலாம்.


யாரு கண்டா? 40 வயசுல தேவைக்கு அதிகமான பணத்தோட ரிட்டையர்ட் ஆகறதுக்குத் தேவையான பாதையில் நீங்க எடுத்து வைக்கிற முதல் அடியாக இந்த நூல் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


புத்தகத்தை ஆன்லைனில் பெற http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&itemid=292

8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

மிக அழகாக தந்துள்ளீர்கள்!

வாழ்த்துக்கள்!

குப்புசாமி செல்லமுத்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

said...

நல்ல விசயமா இருக்கே ...

நல்ல புத்தகத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி .

said...

ம்ம்.. புள்ள வளருது.. ரைட்.

புஸ்தகம் நிசமாவே நல்லா தான் இருந்துச்சு..

said...

// சுந்தர் / Sundar said...
நல்ல விசயமா இருக்கே ...
நல்ல புத்தகத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி . //

ரிப்பீட் :)))

said...

//மிக அழகாக தந்துள்ளீர்கள்!//

அதே அதே!! இளவஞ்சி வாடை நெறையவே வீசுது. வாத்தியார் கூட சேர்ந்து கெட்டுப் போய்ட்டீங்க போல இருக்கு. நூல் அறிமுகத்திற்கு/விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

//குப்புசாமி செல்லமுத்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!// நன்றிங்க சிவா.

said...

நக்கலும் நையாண்டியுமா திரிஞ்சிட்டு இருந்த புள்ளய யாரோ எதிர்காலத்த பத்தி யோசிக்க சொல்லி கெடுத்துட்டாங்களே! என்ன கொடுமை சார் இது?! Anyway this is what the kind of thing wanted from you!! Keep up the good work!!!

said...

நக்கலும் நையாண்டியுமா திரிஞ்சிட்டு இருந்த புள்ளய யாரோ எதிர்காலத்த பத்தி யோசிக்க சொல்லி கெடுத்துட்டாங்களே! என்ன கொடுமை சார் இது?! Anyway this is what the kind of thing wanted from you!! Keep up the good work!!! Congrats to Mr.Chellamuthu for the book!!!!

said...

நண்பர் செல்லமுத்துவின் புத்தக அறிமுகமே வாங்க தூண்டும் வண்ணம் இருக்கிறது.
நல்ல அறிமுகம்

வாங்கிவிடுகிறேன்.

செல்லமுத்துவிற்கு வாழ்த்துக்கள்.