Thursday, August 31, 2006

நானாத்தான் நாறீட்டனா???

என்னவெல்லாம் செய்யலாம்ன்னு 5 மாசத்துக்கு முன்னாடி ஒன்னு எழுதினேன். ரொம்பக் குறைவான பேருதான் படிச்சிருப்பாங்க. சரி மிச்ச நச்சமிருக்கிறதையும் போட்டுருவோம்ன்னு போட்டா இப்பவும் கொஞ்சம் பேருதான் படிச்சிருக்காங்க. என்னடா எழவு இதுன்னு என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தா ஒன்னு நான் நாறுன மாதிரி இருக்குற பதிவு இல்லைன்னா நாறுனது நாந்தான்னு நெனைச்சுட்டு கமெண்ட் வாங்கின பதிவுதான் ரொம்ப அதிகமாயிருந்தது. ஓ, அப்ப நானாத்தான் நாறிட்டு இருக்கேனா? காமெடியன் சொல்லறதையெல்லாம் மக்கள் காதுல வாங்கிக்க மாட்டோங்களோ? ந்னு வேலைய பார்த்துட்டு இருந்தேன். இப்படி நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இந்த 2005 சனிப் பெயர்ச்சிக்கு அப்புறம் வந்ததா இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். எங்க ஊரு கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். பக்கத்து ஊரு பசங்களுக்கும் எங்க ஊரு பசங்களுக்கும் மேட்ச். மத்தியானம் மொட்டை வெயிலில் கருப்பராயன் கோவில் குதிரைக்கு கீழே ஒண்டி உக்கார்ந்துட்டு இருந்தோம். வந்த பக்கத்து ஊரு பசங்க நேரா வந்து என்ன எங்களுக்கு பயந்துட்டு இப்படி உக்கார்ந்து இருக்கீங்களான்னு லந்து பண்ணவுடனே செந்திலுக்கு வந்ததே கோவம்,தைரியமான பசங்களா இருந்தா பேட்ல பேசுங்கடா, தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். பக்கத்து ஊரு பசங்க கொஞ்சம் கலவரமாயிட்டாங்க.

சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது. பேட்டிங் நாங்கன்னு சொல்லிட்டு வந்து செந்திலை பேட் புடிக்க சொன்னா எனக்கு கை ஈரமா இருக்கு, நீதான் சிக்ஸர் சிக்ஸரா அடிப்பியே நீயே முதல்ல ஆடுன்னு சொன்னான். எனக்கு தரைக்கு மேலெ ஓரடி பறக்கிற மாதிரி இருந்தது.

அதே வேகத்தில் பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு தொலைஞ்சிங்கடா என கர்ஜனை பண்ணீட்டு உள்ளே போனா ரொம்ப தூரத்தில் ஒருத்தன் பந்தோட நின்னுட்டு இருந்தான். எதுக்குடா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து பந்தை வீசி, ம்ம்ம்ம்??? அதெப்படியும் கலர் தோட்டத்துக்குள்ள நான் அடிச்சா போகப் போகுது. அலட்டிக்காம பக்கதிலிருந்து வீசுன்னு அவனை காமெடி பண்ணியதில் அவன் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லாம் பயம் என சிரிச்சிட்டே பந்தை அடிக்க தயாரானேன். முதல் பந்து நடு பிட்ச்சில் குத்தி லட்டு மாதிரி பேட்டுக்கு வந்தது. தூக்கி அடிச்சா பந்து நேர மேல மேல போயிட்டு நேர பந்து வீசினவன் கையிலயே விழுந்தது.

உணர்ச்சிவசப்பட்டு பேட்டை ரொம்ப ஓவரா தூக்கிட்டமே என தலையை தொங்க போட்டுட்டு வெளிய வரும் போது "முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.


மொத்தம் 27 ரன், அவ்வளவுதான். ஏன்டா போறவன் எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு அவுட் ஆகறீங்க, நின்னு விளையாடுங்கடான்னா பொடி சுடுதுடா, உள்ளையெல்லாம் ரொம்ப நேரம் நிக்க முடியலைன்னு நொள்ளை சொன்னாங்க. சரி வாங்கடா அவனுகளையும் அப்படியே உருட்டி எறிஞ்சிறலாம்ன்னு முதல் ஓவரை வீசப் போனேன். வேகமாக வந்து பந்தை எரிந்ததில் பேட்ஸ்மேன் தலைக்கு மேலெ பறந்த பந்து கீப்பரை ஒரு சாத்து சாத்திருந்தது. ரெண்டாவது பாலும் நேரா அவன் நெஞ்சு மேல விழுந்து இவன் பந்து வீசினா நான் பின்னாடி நிக்க மாட்டேன்னு ஓடிட்டான். இவன் இந்த பாலும் நேர வீச மாட்டானு பேட்ஸ்மேன் சும்மா நின்னுட்டிருந்தான். இந்த பந்து நேரே போய் ஸ்டம்பில் அடிச்சு அவன் அவுட். இப்படி ஓவருக்கு 14 பால் வீசி 3 பேரைக் காலி பண்ணியிருந்தேன். வைடு , நோ பாலுக்கு ரன் இல்லைன்னு அவுனக செட் பண்ணின ரூல் எங்களுக்கு நல்லா வேலை செஞ்சுது. இபபடியே போறவன் எல்லாம் 15, 16 பந்து வீசி 25 ரன்ல அவுனுக எல்லாத்தையும் சுருட்டியாச்சு.

தண்ணி காட்டீட்டம்லன்னு குதிச்சிட்டு இருந்தப்போ இந்த பொழப்புக்கு பேசமா எருமைக்கு தவிடு காட்டலாம் இவனுகளோட கிரிக்கெட்ன்னு எவனாவது வந்து கூப்பிட்டீங்க அங்கேயே கிடையா போட்டு மிதிப்பேனுட்டு போயிட்டான் ஒருத்தன். இதுலிருந்து என்ன தெரியுதுன்னா சனிப் பெயர்ச்சி எல்லாம் சாதாரணம்ன்னு தெரியுது. சேச்சே... இதை வைச்சுட்டெல்லாம் நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறதுன்னு முடிவு பண்ணக் கூடாதுன்னு திரும்ப கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

Wednesday, August 30, 2006

என்னவெல்லாம் செய்யலாம்-2

பெரியவனாகி என்னடா செய்யப் போற? என்ற கேள்விக்கு எரோப்ளேன் ஓட்டப் போறேன் என்றானாம் பள்ளிக்குப் போகாமல் டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வீரன் மகன். ஒழுகும் மூக்கை சரியாகத் துடைக்கத் தெரியாத சுபாவுக்கு தம்பி முருகனை பார்த்துக் கொள்ளும் ஆயா வேலை. தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் இன்னும் இந்த நிலைதான்.

திராவிட குஞ்சுகள், ஆரிய வந்தேறிகள், திமுக அடிவருடி, அதிமுக ரவுடி கும்பல்,பாமக மரம் வெட்டி கட்சி, சிதம்பரத்தில் தமிழ் மறுப்பு, பெரியார், ராஜாஜி ந்னு ஆளாளுக்கு அடி பின்னி எடுத்துட்டு இருந்தாலும் சத்தமில்லாமல் உதவி செய்யும் நிறைய நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் விளம்பரங்களை விரும்பாதவர்கள். ஆனால் இதை வெளியே சொன்னால் இவர்களால் உதவி பெற்று பள்ளிக்கு செல்லும் 10 வீரன் மகன், 10 சுபா 1000 மடங்காக பெருகக்கூடும். நான் இதைப் பற்றி ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன்.

இந்த பதிவு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கானது. பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு இந்திய ரூபாயை விட அதிகம் என்பதால் அவர்களின் குறைவான பங்களிப்பும் ஒரு நிறைவான செயலை செய்து முடிக்கும். இங்கு நிறைய பேரின் முன்னோர்கள் நிச்சயம் ஒரு கிராமத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அந்த கிராமத்திற்குண்டான அடிப்படை வசதிகளில் ஒரு பங்கை நிறைவேற்றி வைக்கலாம். இன்னமும் கிராமத்தில் காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கென ஒரு பொது கழிப்பறை இல்லாத கிராமங்கள் இன்னும் நிறைய. 10 கிராமத்துக்கு ஒரு ஆரம்ப சுகதார நிலையம் இருக்கும் ஆனால் வரும் நோயாளிகள் உட்கார ஒரு பலகை இருக்காது. ஆரம்பப் பள்ளி என ஒரு கட்டிடம் இருக்கும் ஆனால் 5 வகுப்புகளுக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடக்கும்.

இதைவிடக் கொடுமை பைபாஸ் சர்ஜரி, சிறுநீரகத்தில் கோளாறு போன்ற பணம் அதிகம் செலவு வைக்கும் வியாதிகள் வருவதென்னவோ தினக்கூலிக்கு செல்பவர்களின் குழந்தைகளுக்குதான். நல்லாத்தான் விளையாடிட்டு இருந்தான் திடீர்ன்னு சாமி கூப்பிட்டுக்கிச்சி என அவர்கள் ஆற்றாமையை அடக்க முடியாமல் கடவுள் மேல் பழியைப் போடுவார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை ஒரு சிறிய அளவு பணம் ஒதுக்கி உங்களால் இயன்ற அளவு உங்கள் கிராமத்துக்கு உதவலாம். உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Sunday, August 27, 2006

கேமரா கவிஞர்கள்

எங்காளு ஒருத்தன் வெளிய போயிட்டு வரலாம்னா கார் சாவி, வீட்டு சாவி எடுத்திருக்கானான்னு பார்க்க மாட்டான் கேமெராவைத்தான் முதலில் எடுப்பான். அவன் எடுத்த ஃபோட்டோ ஒன்னு ஏற்கனவே நான் இங்கே போட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மில்வாக்கீ வந்த முதல் வாரமே நாங்க ரெண்டு பேருமே சர்க்யூட் சிட்டியில $400 க்கு கேமரா + $80 க்கு மெமரி ஸ்டிக் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சதுல( அதுவே இன்டர்நெட்ல வாங்கிருந்தா இன்னும் சீப்பா இருந்திருக்கும், ஆனா எனக்கு இன்னைக்கே வேணும்ன்னு வாங்குனது) அவன் மட்டும் இன்னும் எடுத்துட்டே இருக்கான்.

சரி, சமாச்சாரம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஃபோட்டோ எல்லாம் எங்க புடிக்கிற நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதாலா ஃபோட்டோ ஏதாவது சுட்டுட்டு வரலாம்ன்னு flickR பக்கம் ஒதுங்கினேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி தேடிட்டு இருந்தா நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருந்த முகம் நான் ரொம்ப கூலா இருக்கானே ன்னு கேட்டுட்டு இருந்தது.

ரெகுலரான பட்டேல் ஸ்டைல் ஃபோட்டோகளோட கொஞ்சம் பார்க்கற மாதிரியும் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறான். அவன் எப்படியும் வாரம் ஒரு முறை ஃபோட்டோ சேர்ப்பது உறுதி. நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் எப்படியும் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கும்.


பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

Friday, August 25, 2006

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ

Long Islan

வரலாறு:

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீயானது முதன் முதலில் ஹேம்ப்டன் பேஸில் (Hampton Bays) உள்ள ஓக் பீச் இன் (Oak Beach Inn) பார் டெண்டர் ரோஸ்பட் (Rosebud) (அ) ராபெர்ட் பட் (Robert Butt) என்பவரால் 70களில் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது.

செய்முறை:

22.5 மில்லி டெக்கீலா, 22.5 மில்லி ஜின், 22.5 மில்லி வெள்ளை ரம், 22.5 மில்லி வோட்கா, கொஞ்சம் போல சர்க்கரை, எலுமிச்சை ரசம், கோலா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் கிளாஸில் ஊற்றி மேற்புறம் எலுமிச்சை துண்டை சொருகவும்.

*************கட்...கட்...கட்...****************

சர்வர் மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களையும் வைத்து விட்டு நகர்ந்தவுடன்,

நம்பர் 1: அந்த லெக் பீஸ் எடு மாப்பிள...

நம்பர் 2: டேய், நீ கைகாட்டி சொல்லிட்டு இருக்கிறது மீன் டா... மீன் ல லெக் பீஸ் கேட்ட முத ஆளு நீதான்டா...

கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: (தட்டில் இருந்ததை பார்த்துக் கொண்டே) என்ன கருமம்டா இது, வாயிலயே வைக்க முடியல...

நம்பர் 3: புடிக்கலைன்னா எனக்கு குடு நான் சாப்பிட்டு போறேன். சும்மா நை நைன்னு குதிச்சுட்டு இருக்க...

நம்பர் 4: தல, அவரு சொன்னது மீனை... இதுதான் சாக்குன்னு அப்படியே மொத்தமா உறுவரீங்க போல இருக்கு... உங்ககிட்ட உஷாரா இருக்கனும்...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: என்னடா வேணும் உனக்கு???

நம்பர் 4: நீங்க என்ன சொன்னீங்களோ அதையோ சொல்லுங்க...

நம்பர் 2: நான் குடிக்க தண்ணி கேட்டேன், அதையே சொல்லட்டுமா???

நம்பர் 4: என்னது தண்ணியா? அதை மனுஷன் குடிப்பானா? சாப்படறக்கு வேற ஏதவது சொல்லுங்க...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 1: மாப்பிள, நீ இந்த கோக் குடிக்கலைன்னா நான் எடுத்துக்கட்டுமா?

நம்பர் 2: சரி எடுத்துக்கோ. ஒரு நிமிஷம் இரு. ஸ்ட்ராவை திருப்பி போட்டுக்கிறேன். இப்போ குடி...

நம்பர் 1: அப்போத்தான் உன் எச்சை எல்லாம் நல்லா கோக்கில் கலக்குமா??? எல்லா என் நேரம்....

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 5: இனிமேல் நான் பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்....

நம்பர் 2: அப்புறம் அந்த சாந்தி ...

நம்பர் 5: சாந்திகூட எப்படியாவாது பேசிடலாம்னுதான் பார்க்கறேன்...

நம்பர் 2: பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை... எல்லாம் கலி முத்திப் போச்சு...


டிஸ்கி: லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீக்கும் மேற்கண்ட உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.

Wednesday, August 23, 2006

கொடுத்தேனா இதுவரை???

டீச்சர் அடித்தார் என
பள்ளியை மாற்றினார்
எனக்கு வந்த காமாலைக்கு
அவர் பத்தியம் இருந்தார்
நான் பரிட்சை எழுத
எனக்கு முன் முழித்தார்


எனக்கெது பிடிக்கும் என
பார்த்து பார்த்து
செய்வதில்
என் அம்மாவுக்கு நிகர்
என் அம்மாதான்
ஊரெல்லாம் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்



நீ இப்படிச் சொல்ல
இதுவரை கொடுத்தேனா
ஒரு வாய்ப்பு???

Tuesday, August 22, 2006

ஜன்னல் வழிக் கல்வி!!!

ஒரு மாற்றத்துக்கு ஆங்கிலப் பதிவு... ஹி ஹி ஹி... நிறைய வார்த்தைக்கு தமிழ் பதங்கள் தெரியலை (குறிப்பா அந்த சாய்ந்த எழுத்துக்களில்), அதனாலதான்... சொல்ப்ப அட்ஜஸ்ட் மாடி!!!

I am working mostly with the Windows operating system. The above windows key amuses me a lot even though there are lot other keys which are not present in the typewriter. I used almost all the shortcuts available using this key. Today I used the Windows+L to lock the computer and my collegue got surprised. Till now he was using the traditional ctrl+alt+delete to lock the computer. He was in learning mode (which tossed up my coffee plan) and I was explaining him all the possible shortcuts with the Windows key. How many shortcuts you know using the Windows key? Even if you doesn't know, it doesn't matter as you are already surviving without this!!! he he he .....

Windows key = Displays the Start Menu

Windows key + E = Opens the new Exporer Window

Windows key + R = Opens the new Run dialog box

Windows key + M = Minimizes all the open windows and shows the Desktop.

Windows key + Shift + M = Restores all opens windows and takes you right back to where you were.

Windows key + L = Locks the system.

Windows key + F = Opens the Find dialog box

Windows key + Pause/Break = Displays the Systems Properties dialog box.

Windows key + F1= Displays the Windows Help menu.

Windows key + D = Minimizes all the open windows and shows the Desktop. If you press it again opens all windows and takes you right back to where you were. This is a toggle key.

Monday, August 21, 2006

அருமை...


நிலவின் அருமை
அமாவாசையில்,
வெளிச்சத்தின் அருமை
இருட்டில்.











குடையின் அருமை
வெயிலில்,
மார்கழியின் அருமை
சித்திரையில்.











அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...

Saturday, August 19, 2006

டீ டைம்...


அலையாய் நான்,
கால் நனைக்க பயத்தில் குழந்தையாய் நீ!
உன்னை விழுங்கிவிடுவேன்
என்னும் பயம் எனக்கும் ...














உன் விழியில் மாட்டிய பூச்சி நான்,
சிலந்தியாய நீ!
ஏன என்னை விழுங்காமல்
அணு அணுவாய் சாகடிக்கிறாய்...













அம்மோவ்....படத்துக்கு ஏதாவது தலைப்பு வைக்கலாம்ன்னா மண்டை காய்ஞ்சிருச்சு. அப்புறம் கவிஞர் காத்துவாயன் தான் காப்பாத்தினார்... கவிதைன்னு 3 லைன் கிறுக்கி குடுத்துட்டு போயிட்டார்... ஆமா, போட்டோவுக்கு தலைப்பு????

Thursday, August 17, 2006

அண்ணனும் அண்ணியும்...



அண்ணனுக்கு கல்யாணம் என்றதும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா இருந்தது, அதுவும் என் அண்ணியுடன் என்றதும். அண்ணன் ரொம்ப நல்லவந்தான். எங்க பெரியப்பாவுக்கு தப்பாம பொறந்த நல்ல புள்ளை. தொழிலே அமையாமல் சும்மா சுத்திட்டு இருந்தான். அப்பவும் அவனை யாரும் வெட்டிப் பயலன்னு சொன்னதில்லை. பெரியப்பாவின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு உறுதியா நம்புனதோட மட்டும் இல்லாம அண்ணனை வைத்து தொழில் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. அண்ணன் அவனோட விடா முயற்சியால பொழைச்சுக்கிட்டான்.

அண்ணிக்கு என்னை விட 2 வயசுதான் அதிகம். அண்ணியோட கண்ணுல இருக்குற குறும்பை வைத்தே எல்லோரையும் தன் பக்கம் இழுத்து விடுவாள். அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்ங்கற மாதிரி அதிர்ஷ்டக்காரி! ஊரே அவள் பின்னால்தான் சுத்தி சுத்தி வந்தது, இன்னும் வந்துட்டுதான் இருக்கும். அவ எங்க போனாலும் ஜோ ன்னு இளவட்டப் பசங்க கூட்டம் கூடிருவாங்க...ஆனா எனக்கு என்னமோ அண்ணியோட குறும்பு பிடிச்சாலும் பின்னாடி எல்லாம் சுத்தினது கிடையாது.

ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிடிவாதம் அதிகம்ன்னு அவங்க கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு பெரியப்பா சொன்னதுக்கு அப்புறந்தான் நிறைய பேருக்கு தெரிஞ்சுது. அண்ணன் இப்போ இருக்குற நிலைமைக்கு அண்ணியை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா பெரியப்பா சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு உறுதியா இருந்தான். அண்ணியும் ரொம்ப பொறுமையா காத்துட்டு இருந்தாங்க.


அவங்க ரெண்டு பேருக்கும் கசமுசான்னு ஊருக்குள்ள பேச்சு வந்தப்போ, அவங்கப்பா ரொம்ப நல்லவரு, பையன் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான்னு ஒரு கும்பலும், அண்ணி இருக்கிற இருப்புக்கு இவனை எல்லாம் திரும்பி பார்ப்பாங்களான்னு ஒரு கும்பலும் மாறி மாறி பேசுச்சு. இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு.


கல்யாணத்துக்கு யாரையும் அழைக்கலை அதனால வருத்தப்படாதீங்கன்னு சிவகுமார் பெரியப்பா சொல்லிட்டாரு. எங்க தாத்தாதான் சொல்லுவாரு நான் அப்படியே சூர்யா அண்ணன் மாதிரி இருக்கேன்னு. பார்போம் எனக்கு அண்ணி ஜோதிகா மாதிரி பொண்ணு கிடைக்குதான்னு...

Wednesday, August 16, 2006

மசாலா மிக்ஸ்...

வேலை ரொம்ப அதிகம்ங்க, பிளாக் பக்கம் ஒதுங்கவே முடியலை. இருந்தாலும் நான் வயிறு வலிக்க சிரிச்ச சில மேட்டரை சொல்லாம இருக்க முடியலை.

Community

Orkutல friend, friend-oட friend, community, friend-oட community ன்னு போயிட்டே இருக்கலாம். அங்க பார்த்தா ஒரு community ஒரு சமூகத்தைச் சேர்ந்த்தது. அடடா, எல்லோரும் நல்ல இனப் பற்றோட இருக்காங்க (மத்த சமூகத்து மக்களுக்கும் இருக்கலாம், இது வரை என் கண்ணில் படவில்லை) சரி வந்ததுதான் வந்தோம் நமக்கு ஏதாவது புரியற மாதிரி, என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி இருந்தா எட்டிப் பார்த்துட்டு போலாம்ன்னா முதல் டாபிக்கே என்னை இழுத்து உள்ளே போட்டுவிட்டது. "காதல் கல்யாணத்தை நம் சமூகம் அங்கீகரிக்கிறாதா? எனக்கு காதல் மற்றும் வீட்டில் பார்த்து நடத்தும் arranage (ராகவன், உதவி பண்ணுங்களேன்) கல்யாணம் பண்ண ஆசை" ன்னு ஒருத்தர் ஆரம்பிச்சு வைச்சுட்டார். அதுக்கு பதில் "சரி, உன்னையெல்லாம் யாரு காதலிப்பா? (உன் ஃபோட்டோ பார்த்துட்டுத்தான் சொல்லறேன்)" ன்னு சரி நக்கலா இருந்தது. அடுத்தது அதுக்கு மேல: "நீ இந்த மாதிரி கேட்டு இங்கயே ஃபிகர் பிடிச்சு வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிக்குவ போல இருக்கு".

அப்புறம் கொஞ்சம் சீரியஸ்: "இந்த மாதிரி நம்ம சமூகத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிட்டா நாமளும் ஒரு நாள் டைனோசர் மாதிரி அழிஞ்சு போயுடுவோம், ஆதலால் காதல் செய்வீர்" ன்னு இருந்ததைப் பார்த்து அடப்பாவிகளா, வெறும் 300, 400 பேரு இருந்த ஊரை காதல் கல்யாணம் எல்லாம் இல்லாமலேயே இப்போ 100 கோடியைத் தாண்டி (மொத்த இந்தியாவையும் சொன்னேன்) இன்னும் கொஞ்ச நாள்ள நிக்க இடம் இல்லாம பண்ணீருவீங்க போலிருக்கு, டைனோசரோட ஒப்புமை இந்த இடத்தில் ரொம்ப தேவைதான்னு என் மனம் விட்டு சிரித்தேன்.

**********************************

chicken-copy

சைவம், அசைவம்ன்னு எங்க நண்பர்கள் கூட்டதுக்குள்ள அடிக்கடி அடிச்சுக்குவாங்க. ஐநா சபை ரேஞ்சுக்கு சமாதானம் எல்லாம் பண்ண வேண்டி வரும். இந்த மாதிரி சூடா விவாதம் (ஆமாங்க, ரெண்டு மூனு நாளுக்கு நடக்கும், இது வரைக்கும் வெட்டுக் குத்து இல்லை) நடந்து கொண்டிருந்த போன வாரத்தில் ரெண்டு வெவ்வேறு தொடர்பு இல்லாத இடங்களில் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கேட்டேன். ரெண்டுக்கும் சிரிக்காம இருக்க முடியலை.

"I Love Animals, only in the Lunch and Dinner"

"Why Make your stomach a graveyard"

நீ எந்த கட்சின்னு கேப்பீங்கன்னு தெரியும். அது என்னோட சந்தோசத்தைப் பொறுத்து. கட்சி மாறிட்டே இருப்பேன்.

**********************************

Sky-Diving-ani1

அப்புறம் நண்பன் ஒருத்தன் sky diving போன அனுபவத்தை அவனது சைட்ல போட்டிருந்தான். ரொம்ப நல்லா சொல்லிருந்தான். கடைசியா, காலை முதலில் கீழே நிலத்தில் வைக்காமல் நல்லா சௌகரியமா உக்காந்ததை சொல்லி முடித்தபோது என் கண்ணில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது. பின்னே, கடைசி லைன் இப்படி இருந்தா சிரிக்காம என்ன பண்ணுவது...

"Finally they gave me a nice little certificate, that certifies me, XXXXXX has actually jumped (!) from an airplane !!"

who landed on his ... ன்னு சேர்த்து படிச்சுப் பாருங்க, அப்பத் தெரியும் என் சிரிப்புக்கு காரணம்.

**********************************

இது ரொம்ப வித்தியாசமான விளம்பரம். முதுகு விளம்பரத்துக்குன்னு e-bay -ல பார்த்தேன்.

e-Bay


எங்கேயோ போயிட்டு இருக்கோம், நல்லதுக்குத்தானான்னு தெரியலை (நான் என் வேலையச் சொன்னேங்க, நீங்க வேற)..

Saturday, August 12, 2006

வாசுவும் வெடைக் கோழியும்-2

Part-1

நான்: சரி சரி... அழுகாதடா. உன் கதையை சொல்லு. நான் வேணா எம்பேர்ல போட்டுக்கறேன். ஆனா ஏதாவது பிரச்சினை ஆச்சு, அவ்வளவுதான். இதுக்கெல்லாம் நான் தார்மீக பொறுப்பேத்துக்கிட்டு ஊர்ல எல்லார் வாயிலும் விழுந்து எந்திரிக்க முடியாது, சொல்லிட்டேன்.

வாசு: நீதாண்டா நண்பன். ஒரு நாளு எங்க தோட்டத்து வழியா வளர் போயிட்டு இருந்தா. தோட்டத்துல யாருமே இல்லை. எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை, இன்னைக்கு இதை எப்படியாவது முடிச்சிறனும்ம்னு...

நான்: பாவம்டா வளர்மதி, ச்சீ, அவளைப் போயி???

வாசு: உன்னைய கதாசிரியன்னு சொன்னது தப்பா போச்சு. முழுசா கேளுடா வெண்ணை. அந்தன்னைக்கு வளர் கால்ல செருப்பும் போடலை. உடனே ஓடிப் போயி பொத்துன்னு அவ கால்ல உழுந்து வளர், ஏன் என் மேல இவ்வளவு கோவம் உனக்கு. செருப்பு கால்ல போடறதுக்கு மட்டுந்தான். அதை கையிலெடுத்துட்டு நீ இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணலாமான்னு அழுதுட்டேன்.

நான்: அதானே பார்த்தேன். எங்க வாசு தங்கம்டா. அதுக்கு அவ என்ன சொன்னா?

வாசு: அவ பெரிய வைராக்கியமுள்ள பொண்ணுடா. ஞாபகம் இருக்கா, 5வது படிக்கும் போது அம்மணியக்கா தோட்டத்துல இருந்து கொய்யாக்காய் யாருக்கும் தெரியாம பொறிச்சு நம்ம எல்லொருக்கும் தானம் பண்ணிட்டு இருந்தோமே, அப்ப வளரும் அங்க இருந்திருக்கா. அவ வரும்போது கொய்யாக்காய் தீர்ந்து போச்சு. அப்ப ஆரம்பிச்ச பிரச்சினையாம் இது. அப்புறம் ஒரு நாள் எங்க தோட்டத்துல ஒரு சிவப்பு தாவணி மட்டும் கிடந்தது. எருமை மேய்க்க போறப்ப தலைக்கு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டு போயிட்டேன். அது அவளோடதாம். துவைச்சுட்டு போகும்போது மறந்துட்டு போயிட்டா. நான் ரொம்ப ஸ்டைலா எருமை மேய்க்கற அழகை எவனோ ஒரு நாதாரி போய் வளர்கிட்ட போட்டுக் குடுத்துட்டான். அன்னையிலிருந்து இந்த புகை வளர்ந்துட்டு இருக்கு. அப்புறம் நான் அவளை ரெண்டு முணு தடவை பார்த்து ரொமாண்டிக்க்கா சிரிக்க அவள் பகைக்கு நெய் ஊத்துன மாதிரி ஆயிப் போச்சு. ஆனா இதையெல்ல்லாம் சொல்லிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு, அடடா... அதுக்காகவே சாகலாம்டா...

நான்: இவனைப் போய் ஒரு வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு இருந்தா பார்ட்டி பெரிய காமெடியனா இருக்குன்னு சிரிச்சிருப்பா...

வாசு: உனக்கு நான் எப்பவுமே காமெடியந்தான். நீ பண்ணின கூத்துக்கெல்லாம் டவுசர் கிழிய அடி வாங்குனது நாந்தான்டா. அதையெல்லாம் மறந்துடாதே...

நான்: அதான் இந்த கதையை போடறன்னு சொல்லிருக்கேன்ல.

வாசு: வளர் நாம் பேசி ஒரு சமாதனத்துக்கு வருவோமான்னு கேட்டேன். நீ ஊர்ல புறம்போக்கு, உருப்படாதவன்னு பேரு வாங்கிருக்க. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்க முதல்லன்னு சொல்லிட்டு மான் மாதிரி துள்ளிக் குதிச்சிட்டு திரும்பி திரும்பி பார்த்துட்டே போனா.

நான்: அடப்பாவி, நீ காமெடியாய் ஒன்னு பண்ணி இப்ப அந்த பொண்ணு அவளோட வாழ்க்கையவே பணயம் வெக்குது. பெண்புத்தி பின்புத்தி தான்டா.

வாசு: ஆம்பிள மாதிரி நடக்கனுமே என்ன பண்ணலாம்ன்னு பார்த்தா அவங்க அம்மா முட்டி வலி முட்டி வலின்னு முனகீட்டு வீட்டை விட்டு வெளிய வராமா எல்லா வேலையையும் வளரே பார்த்துட்டு இருந்தா. எங்க வீட்டுக்கு வரப் போற மகராணி வேலைக்காரி மாதிரி இருக்கறதான்னு, நீ எங்கப்பாவுக்கு முட்டி வலின்னா போட்டுக்கங்க மாமான்னு ஒரு கிரீம் குடுத்தைல்ல, அது ஒன்னை திருடிட்டு போயி குடுத்தேன். அமெரிக்காவிலிருந்து வந்தது. உடனே கேக்கும்ன்னு சொன்னேன். இப்போ அவங்க அம்மா வெளியவெல்லாம் நடமாடறாங்க.

நான்: அது நான் மாமாவுக்கு குடுத்ததுடா...

வாசு: அடுத்த தடவை வாங்கிட்டு வர்ரப்போ ஒன்னு சேர்த்து வாங்கிட்டு வா. எங்கப்பா கணக்கு கரெக்டா வைச்சிருப்பாரு. இப்போல்லாம் வளர் என்னை எங்க பார்த்தாலும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாரு...

நான்: நீ வழியறது இங்க கொஞ்ச நேரத்துல BBC நியூஸ் ல வரப் போகுது பாரு...

வாசு: மாப்பிள்ள, வளர் வந்துட்டு இருக்காடா. நான் ஆம்பிளைன்னு நிருப்பிக்க ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

நான்: ஏதாவது பண்ணி உடனே இழுத்துட்டு ஓடிறாதா. நான் 6 மாசம் கழிச்சு வரேன், அப்போ கல்யாணம் வெச்சிக்கலாம். இப்பொ என்ன பண்ணப் போற?

வாசு: கவுத்துக்காரர் வெடைக் கோழி வளர் வீட்டு கீரைப் பாத்தியை தினமும் கிளறி விட்டுருதாம். இங்க ஒரே சண்டை. இன்னைக்கு அந்த வெடைக் கோழியும் வருது. இந்தப் பக்கம் வளரும் வர்றா.. இப்போ மட்டும் கரெக்ட்டா கல்லெடுத்து அடிச்சு அந்த கோழியோட காலை முறிச்சுட்டேன்னு வைச்சுக்க அப்புறம் கெட்டி மேளம் கெட்டி மேளம்தான். அப்படியே லைன்லயே இரு. நல்ல கல்லா பார்த்து எடுத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான்டா , இந்த கோழி இன்னைக்கோட காலி.

அய்யோ என பெருங்குரலில் வளர்மதியின் அம்மா கத்துவது போனில் கேட்டது. நாசமாப் போன நாயே, சிவனேன்னு வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தவளை அமெரிக்கா களிம்புன்னு குடுத்து என்னை நடமாடவும் விட்டு இப்படி கல்லுல அடிச்சு ஜென்மத்துக்கும் நடக்கமுடியாமா பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியா? என்பதும் கேட்டது.

அர்ச்சுனனுக்கு மரத்திலிருந்த கிளி மட்டும் தெரிந்த மாதிரி நம்ம வாசுவுக்கு வளர்மதியின் வீடு கோழிக்குப் பின்னால் இருப்பது சுத்தமாக மறந்திருந்தது. எனக்கென்னமோ அந்த ஜோசியகாரன் சொன்னதுதான் வாசு விசயத்தில் நடக்கும் போலத் தெரியுது.

Thursday, August 10, 2006

வாசுவும் வெடைக் கோழியும்

வாசு என் அத்தை பையன். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள் நாங்கள். ஊரில் எந்த கோழியைக் காணவில்லையென்றாலும் எங்கள் இருவரையும்தான் ஊரார் தேடுவார்கள். ஊரில் பண்ணாத அட்டூழியங்களே கிடையாது. எங்க மாமா "டேய், நீ உருப்பட மாட்டே, உருப்பட்டா என் பேரை மாத்திக்கிறேன்" என சபதமே போட்டார் 10 வருடத்துக்கு முன்பு. "ஏன்டா, அவர்தான் அப்படி சொல்லிருக்காருல்ல, நாம அதை மாத்திக் காட்டுவோம்டா" என சொன்னதுக்கு "இல்லைடா மாப்பிள்ள, இதுல ஒண்ணாவது அவர் சொல்படி நடக்கலாம்ன்னு இருக்கேன். நான் உருப்பட்டு, 50 வயசுல பழனிசாமி அப்படிங்கற அவர் பேர எல்லோரும் பன்னிசாமின்னு கூப்பிட்டா நல்லா இருக்காது" என்று ஊரோடு தங்கி விட்டவன். நான் எங்க அம்மாவின் அழுகைக்கும், அப்பாவின் பெல்ட்டுக்கும் பயந்து எஞ்சினியரிங் படிக்க சேர்ந்தேன் (எல்லாம் எங்கப்பாவோட வட்டிப் பணம்தான், நான் வாங்கின மார்க்குக்கு டுட்டோரியல் காலேஜில்கூட சேர்க்க மாட்டார்கள் என காலேஜ் ப்ரின்சிபால் முன்பாகவே திட்டிக் கொண்டே பணத்தை டேபிள் மேல் கொட்டி சேர்த்தார்).

அப்படி இப்படி செமெஸ்டருக்கு ஒரு அரியர் என வாங்கி காலேஜ் முடிக்கும் போது ஆச்சாராமாய், சுத்த பத்தமாய் ஒரு கப்பும் இல்லாமல் வந்ததுக்கு எங்க பண்ணையத்தில் வேலையில் இருந்த எல்லொருக்கும் கறி சோறு சமைச்சு போட்டு எங்க ஆத்தா கொண்டாடினார்கள். அப்படியே கொஞ்ச நாள் நானும் வாசுவுமாய் சேர்ந்து வயக்காடு, வீடுன்னு திரும்ப பழையபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தோம். சனி எங்க அப்பாவின் பார்ட்னர் மகள் ரூபத்தில் வந்தது. "ஏன்டா, சாரதா எல்லாம் மெட்ராஸில பத்தாயிரம் சம்பளம் வாங்கறாளாம். நீ என்னடான்னன தினமும் நாட்டுக் கோழி ஒன்னை உறிச்சு முழுங்கிட்டு இருக்க" என திட்டியதில் உண்மையிலேயே கோபம் வந்து மெட்ராஸ் வந்து, இப்போ அமெரிக்கா வந்து 5 வருடம் ஆகிறது. சாரதா இப்போது 2 குழந்தைக்கு அம்மாவாம். எங்க அம்மா அவங்க வீட்டு பொங்கலுக்கு போனப்ப சாரதாவின் சித்தி என நினைச்சு சாரதாவிடம் பேசியதையும் பின் உண்மை தெரிந்து மானம் போனதையும் சொன்ன பொழுது உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

எது எப்படியோ வாரம் ஒரு முறை வாசுவிடம் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும். ஊரில் கடைசியாக அடை வைத்த கவுத்துக்காரர் கோழியிலிருந்து அம்மணி ஆயா கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டது வரை சகலமும் சொல்லுவான். ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் அவனுக்கு போன் செய்தால்

வாசு: மாப்பிள, ஒரு நிமிஷம் இரு வண்டியை எடுத்துட்டு வெளிய வந்தர்றேன்.

நான்: டேய், வண்டி ஓட்டிடே பேசப் போறியா, எங்காவாது போயி ஏத்திடப் போற..

வாசு: நீ வேற, இந்த மாதிரி ரோட்டுல வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருந்தாதானே கொஞ்சம் மரியாதையா இருக்கும். உன்னோட கதையெல்லாம் படிச்சேன்டா, ரொம்ப நல்லா எழுதறே, எங்கூட சுத்துனதுக்கு அப்புறமும் நீ எப்படிடா உருப்பட்ட???

நான்:(என் அப்பாவின் பெல்ட் கண் முன் வந்து விட்டுப் போனது) அதெல்லாம் தலையெழுத்து. ஆமா, நீ எங்க போயி அதைப் படிச்ச? உண்மையிலேயெ நல்லா இருந்துதாடா? இங்க அவனவன் என்னை கல்லால் அடிக்காத குறையா திட்டிட்டு இருக்கான்.

வாசு: உங்க வீட்டுல கம்ப்யூட்டர்ல ஒன்னும் தெரிய மாட்டேங்குதுன்னு மாமா வந்து பாக்க சொன்னாரா, அப்பத்தான் அத்தை உன் கதை புக்குல வந்ததை காட்டினங்க.

நான்: உனக்கு டிராக்டர், கிணத்து மோட்டார்தான்டா ரிப்பேர் பண்ணத் தெரியும். கம்ப்யூட்டர்ல என்னத்தடா நோண்டுன?

வாசு:இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. உங்க குடும்பத்துக்கே குசும்பு அதிகம்டா, பிளக்கை சொருகணும் வாடான்னு கூப்பிட்டா வரமட்டேன்னு சொல்லிட்டு உங்க அப்பாதான் கம்ப்யூட்டர் ரிப்பேர்னு வரச் சொல்லி கூப்பிட்டார். சரி சரி, உன்னையை எல்லொரும் கதை எழுதுனதுக்கு நோண்டி நொங்கெடுக்கறாங்கன்னு சொன்னையில்ல, நான் ஒரு கதை சொல்லறேன். அதைப் போடு உன்னை ஓஹோன்னு சொல்லுவாங்க.

நான்: நீ கதை வைச்சிருக்கியா? அது எப்பேர்பட்ட கதையா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். நீ ஊர்க்கதை மட்டும் சொல்லு அது போதும்.

வாசு: நீ போடாட்டி பரவாயில்லை. நான் சொல்லறேன் சும்மாவாச்சும் கேளு. ஒரு ஊர்ல வாசுன்னு ஒரு பையன்...

நான்: டேய், நிறுத்து. எதுக்கு உன் பேர்ல கதை சொல்லற?

வாசு: நீ மட்டும் உம்பேர்லயே கதை எழுதிக்கற. இந்த கதைக்கு நாந்தான் ஆசிரியர். நீ என் பேரைத்தான் கதாநாயகன் பேரா போடணும்.அந்த ஊர்ல வளர்மதின்னு ஒரு பொண்ணு.

நான்: உன்னை எங்கே பார்த்தாலும் காலிலிருக்கும் செருப்பை கையில் எடுத்து ஆட்டிக் காண்பிப்பாளே, அவ பேர் மாதிரி இருக்கு!!!

வாசு: ஆமாண்டா, இது எங்க கதைதான். எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அன்டர்ஸ்டேண்டிங்ல போயிட்டு இருக்கு. எப்படியாவது இதை மட்டும் நீ புத்தகத்துல போட்டுட்டன்னு வைச்சுக்க, இதைக் காட்டி அப்படி இப்படின்னு பேசி கூட்டிட்டி ஓடிருவேன்.

நான்: பெரியவங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்டா. கூட்டிட்டு ஓடரங்கற, உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா???

வாசு: உன் காதை நான் காலா நெனச்சுக்கறேன். தயவு செஞ்சு இந்த கதையை மட்டும் போட்டுடு. எனக்கு 35 வயசுலதான் கல்யாணம் ஆகும்ம்னு ஒரு நாசமா போன ஜோசியகாரன் வேற சொல்லிட்டு போயிட்டான்.

நான்: மங்களம் உண்டாகட்டும்.

வாசு: பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்ற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.

~தொடரும்.

Tuesday, August 08, 2006

நட்பு எனப்படுவதியாதெனில்.....

போன வாரம் நட்பு வாரம், நட்பு நாள்ன்னு ஆளாளுக்கு சென்டிமெண்ட் போட்டு தாளிச்சிட்டு இருந்தாங்க. நானும் நாலு பேருகிட்ட போயி நட்புன்னா என்னங்க, சூர்யான்னா என்னங்கன்னு கேட்டுட்டு வர்றதுக்குள்ள நட்பு வாரம் முடிஞ்சு போச்சாம்... அதுக்காக கேட்டுட்டு வந்ததை போடாம விட்டா எங்களுக்குள்ள இருந்த நட்பு என்னதுக்கு ஆகிறது.

வாசு, 5-ம் வகுப்பு: கலர் தோட்டத்துல கடலைக்காய் திருடி திங்க நானும் சீனுவும் போன போது எங்களை பார்த்துட்டு நாய் தொறத்துச்சு. அவன் மட்டும் ஓடிப் போகமா என்கூட நின்னு நாய் மேல கல்லை எடுத்து இட்டாம் பாருங்க, அதுதான் நட்பு.

மீனா, 8-ம் வகுப்பு: மாரியம்மன் பொங்கலப்போ சீதா அவளோட குஞ்சத்தை சடையில வைச்சுக்கிறக்கு குடுத்தா, அதுதான் நட்பு.

சசி 9- வகுப்பு: ராகவனோட டிவிஸ் 50 ஐ எப்போ ஓட்டிட்டு தரேன்னு சொன்னாலும் உடனே குடுப்பான், அதுதான் நட்பு.

சுதா 10-ம் வகுப்பு: புதுசு புதுசா ஏதாவது சமையல் பண்ணி எடுத்துட்டு வந்து எங்களுக்கு மத்தியானம் சாப்பிடக் குடுப்பா ராணி, அதுதான் நட்பு.

ராம் 12-ம் வகுப்பு: நான் யாருகிட்ட வேணா போய் லவ் லெட்டர் குடுத்துட்டு வாடான் சொன்னா வாரான் பாருங்க தனபால், அது நட்பு.

சுகன்யா, இளங்கலை முதலாம் ஆண்டு: எப்போ சனிக் கிழமை சினிமாவுக்கு போனாலும் , அம்மா, இன்னைக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு கொஞ்சம்கூட பயப்படாமல் சொல்லும் ஊர்வசியின் நட்புதான் நட்பு

இளங்கோ, இளங்கலை இறுதி ஆண்டு: எப்போ தண்ணி அடிச்சிட்டு பொங்கல் வைத்தாலும், வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு, ஆண்டி, இவனுக்கு தலை சுத்துதுன்னு சொன்னான். கொஞ்சம் இஞ்சி கசாயம் வைச்சுக் குடுங்கன்னு சொல்லும் ராஜாதான் நட்பின் இலக்கணம்.

பெரியசாமி, 2 குழந்தைகளுக்கு தகப்பன்: எப்போ போய் ஆஸ்பத்திரி செலவு, ஸ்கூல் செலவுன்னு கடன் கேட்டு நின்னா கருப்பன் யோசிக்காம காசை எடுத்து வீசுவான். அது நட்பு

இந்திரா, திருமணமானவர்: செல்வியும், கண்மணிக்கும் இருக்கறதுதான் நட்பு. அதாங்க, வளையல்கள் சீரியல்ல வருவாங்கல்ல? 7 மணிக்கு, சன் டிவில? நீங்க பார்க்கறதில்லை??

ஒரு தமிழ் வலைப் பதிவர்: குமுகாயத்தில் அனைவரும் தீவுகளாகி நிற்கிறோம். எதையும் பின்நவீனத்துவ கோணத்தில் சீர் தூக்கிப் பார்க்காமல், ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்து முகம் மறந்து, காலச் சக்கரத்தில் சில நுண்ணியல் கோட்பாடுகளை நிறுவி அதன் மேல் அரியணை அமர்த்தி தூங்கிக் கிடக்கும் மாக்களாகிப் போனோமே? நட்பு எனப்படுவதியாதெனில்.....

Sunday, August 06, 2006

நிஜமல்ல, கதை-3!

Part 1 Part 2

நிஷா இப்போதெல்லாம் உதயின் வழியலுக்கெல்லாம் பயப்படுவதில்லை போல உதய்க்கு தோன்றியது. அவளே இப்போதெல்லாம் காஃபி குடிக்கப் போலாமா? எனக் கேட்டு உதய்க்கு இன்ப அதிர்ச்சி குடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல படியா போயிட்டு இருக்கு, இப்படியே ஒரு ஆறு மாதம் என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் மெதுவா கேட்டுப் பார்க்கலாம். சரின்னு சொன்னா பிக்கப் இல்லைன்னா டிராப். வாழ்க்கையில இவ்வளவு சிம்பிளா எல்லாம் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தயார் பண்ணிக் கொண்டிருந்தான்.

உதய் என்ற நிஷாவின் தேன் குரலுக்கு எஸ் மேடம், சொல்லுங்க என்ன விஷயம்? என உதய் வேகமாக திரும்பினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். இல்லை, உங்கிட்ட நான் பேசணும் என நிஷா உதயின் முகத்தைப் பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டு பேசினாள். மச்சான் உதய், எங்கேயோ ஒரு மச்சம் இருக்கக்கூடாத இடத்துல இருக்கு போல இருக்கு. இப்போத்தான் ஆறு மாசம் வெயிட் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தாய். பாரு, அவள் உன் கண்ணைப் பார்த்து, உன்னைப் பார்த்து பேச கூட வெட்கப்படறா எனற் உதயின் மனசாட்சி DTS எபெக்டில் திரும்பத் திரும்ப உதயின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருந்தது. இப்போத்தான் ரொம்ப கவனமாக இருக்கணும், இல்லைன்னா சொதப்பி சின்னாபின்னமாயி சொந்தத்துல சூனியம் வெச்ச மாதிரி ஆயிடும், ரிலாக்ஸ் என மனசாட்சி அவனை உஷார் படுத்தியது. சரி, வா காஃபி சாபிட்டே பேசலாம் என்றான். இல்லை, இல்லை இதெல்லாம் ஆபீஸ்ல பேசற விஷயம் இல்லை, நாம வேணா இன்னைக்கு ஒன்னா வீட்டுக்கு போலாமா? என நிஷா கேட்க உதயால் சீட்டில் உட்கார முடியவில்லை. அதேதான் இது அதேதான் என உள்ளுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான்.

"சரி, அப்போ இப்போவே கிளம்பலாமா?" என கேட்ட உதய் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட், அது இது என எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தான். 5 நிமிஷம் வெயிட் பண்ணு, நானும் வர்றேன் என நிஷா சொல்லிவிட்டு சீட்டுக்கு ஓடினாள். "நான் உதய், மாசம் 50000 சம்பளம். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சா மட்டும் வேலைக்கு வந்தா போதும். அவுட்டர் ரிங் ரோடுல ஒரு வீடு வாங்கிரலாம். பெண் குழந்தைன்னா உங்க பாட்டி பேரு, ஆண் குழந்தைன்னா எங்க தாத்தா பேரு. அப்புறம்..." என உதய் யோசித்துக் கொண்டிருந்த போது "என்ன உதய், பயங்கர யோசனை" என்று கேட்டபடி நிஷா வந்தாள். "இல்லை, வாழ்க்கையில எல்லாம் திடீர் திடீர்ன்னு நடக்குதா? அதான் அதையெல்லாம் எப்படி சமாளிக்ககிறது"ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் என்று கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு பேசினான். ஆமாம், எனக்கும் அதே பிரச்சினைதான் என நிஷா சொன்ன பொழுது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என உதய் காற்றில் பறந்து கொண்டு இருந்தான்.

உதய் என நிஷா கூப்பிட்ட பொழுது, வானத்தில் பறந்து கொண்டு இருந்த உதய், "ம், சொல்லு நிஷா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கேன்" என உளறினான். "இதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை உதய். உங்கிட்ட இதை எப்படி சொல்லறது"ன்னு பயமா இருக்கு என வார்த்தைகளை மென்று முழுங்கி பேசினாள். நம் வாழ்க்கைத் துணைவி இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த உதய், "நிஷா, நான் உன்னோட... உன்னோட ஃபிரெண்டுன்னு நினைச்சிக்கோ. அன்னைக்கு உன் புரோகிராமில் ஒரு பெரிய டிசைன் பிரச்சினை வந்தப்போ, இதெல்லாம் நாம ரிவ்யூ பண்ணும் போது கண்டுபிடிச்சிருக்கணும்னு பிரச்சினையை நான் திசை திருப்பலை... அப்புறம் நீ பண்ண வேண்டிய அந்த டாக்குமெண்ட் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விடலை" என அவளுக்காக தான் பண்ணிய அளும்புகளைப் பட்டியல் இட்டான்.

இந்த பதிலகளால் சாமதானமாகியது போல தோன்றிய நிஷா, நான் இதை முதன் முதலில் உங்கிட்டதான் சொல்லேறென் என்றாள் நிஷா. "நிஷா, சில விஷயத்துக்கெல்லாம் வக்கீல் வைக்கக் கூடாது. நீ மனசில நினைச்சிருக்கிறதை அப்படியே சொல்லு. நீ என்ன சொல்லப் போறெங்கறதும் எனக்குத் தெரியும், கமான்" என ஆர்வத்தை அடக்க முடியாமல் சீட்டின் நுனிக்கு நகர்ந்திருந்தான் உதய். "எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க" என நிஷா வெட்கத்துடன் சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். இங்க பார்ரா... இப்போலாம், பொண்ணூங்க ரொம்ப தேறிட்டாங்க...லவ்வைச் சொல்லறதுக்கு உக்காந்து யோசிக்கிறாங்க என மனதுக்குள் நினைத்த உதய் ரோலர் கோஸ்ட்டரில் உச்சியைப் பார்த்து போவதைப் போல உணர்ந்தான். கையில் ஒரு ரோஜா இருப்பதை போலவும், அதை MGR ஸ்டைலில் முகர்ந்து பார்ப்பது போலவும் மூக்கில் கையைத் தேய்த்து விட்டு "சஸ்பென்ஸ் போதும், முழுசா சொல்லிடு... நான் சொர்க்கத்தை சீக்கிரமே பார்க்கணும்" என்றான் உதய்.

"அவர் அமெரிக்காவில இருக்கார். போன வாரம்தான், பொண்ணு பார்த்துட்டு போனார்" என நிஷா சொன்னபோது ஒரு டின் நிறைய ஐஸ்கட்டியை தலை மேல் கொட்டிய ஃபீலிங் இருந்தது உதய்க்கு. அந்த அதிர்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல், "ஓ, சும்மாதான் பார்த்துட்டு போயிருப்பாங்க, இந்த அமெரிக்கா பசங்களே இப்படித்தான். ஊருக்கு வந்தமோ எல்லொரையும் பார்த்தமா, போனாமன்னு இல்லாம, லைசென்ஸ் வாங்கிட்டு வீடு வீடா போய் சைட் அடிக்காறாங்க. பாரு, நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க" என இப்பொழுது டிபென்ஸ் ஆட்டத்துக்கு மாறி இருந்தான் உதய். "இல்லை... இல்லை அவர் ரொம்ப நல்லவர்... நானும் அவரும் 2 நாள் காஃபி சாப்பிடப் போனோமே" என்றாள் முகத்திலிருக்கும் வெட்கம் கொஞ்சம் கூட கலையாமல்."அட, எங்கூடவும்தான் நீ தினமும் காபி சாப்பிடுற. இதெல்லாம் சும்மா. நீ வேணா பாரேன், அவன் அடுத்த வாரம் அமெரிக்கா போறானா இல்லையான்னு" என இப்பொழுது தாக்குதல் ஆட்டத்துக்கு தயாரானான். " ஆமாம், அடுத்த வாரம் அவர் அமெரிக்கா போறார். அதுக்கு முந்தின நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம்" என்றாள் நிஷா. "பாரேன், அவன் நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் திரும்பி வரவே மாட்டான்" என இப்பொழுது கொஞ்சம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

"உதய், ரொம்ப கிண்டல் பண்ணாத, அவர் ரொம்ப நல்லவர். உண்மையா, அது எங்க ரிஜெஸ்டர் மேரேஜ். H4 விசாவுக்கு கல்யாண போட்டோவும், திருமண சான்றிதழும் வேணும் இல்லையா, அதுக்காக... இந்த ஐடியா எல்லாம் அவர்தான் குடுத்தார். இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் 6 மாதம் விசாவுக்காக வெய்ட் பண்ண வேண்டி வரும். இப்பொவே அப்ளை பண்ணிட்டா கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா கூட்டிப் போயிடலாம்ன்னு இந்த ஏற்பாடு." என நிஷா முகமெங்கும் பூரிப்பாக சொன்னாள். "அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் மல்லிகைப்பூ கண்ணுக்குத் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ரோஜாப் பூ தெரியுது" என மனதுக்குள் வெந்து புழுங்கிக் கொண்டிருந்தான். "உதய், இன்னும் ஒரு வாரத்தில அவரு அமெரிக்கா திரும்பி போயிடுவார். நீ எனக்கு உண்மையிலேயே நல்ல பிரெண்டுன்னு எனக்குத் தெரியும். நீ, என் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விட்டுட்டின்னா நான் நிம்மதியா அவர் கூட ஊர் சுத்துவேன்,பிளீஸ் உதய்" என செல்லம் கொஞ்சினாள். உதய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்திருந்தான். அதற்க்கப்புறம் நிஷா மட்டும் வழவழவென எதேதோ பேசிக் கொண்டிருந்தாள். "இதெல்லாம் நாளைக்கு ஆபிஸில் பார்த்துக் கொள்ளலாம், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என உதய் பஸ்ஸிலிருந்து இறங்கினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள்.

கில்லி விஜய் மாதிரி வலம் வந்து கொண்டிருந்த உதய், எங்கே செல்லும் இந்த பாதையில் வரும் சேது சீயானாய் மாறி கொஞ்ச நாள் சுற்றியதாகக் கேள்வி. விஜய லக்ஷ்மி என்னும் புதுப்பெண்ணின் வரவு மறுபடியும் அவனை கில்லி ஆக்கிவிட்டதாகவும் கேள்வி.

~முற்றும்.

கதையில் என் பெயரை வைத்தால் கூட விளங்க மாட்டேங்குது. ரொமாண்டிக் ஹீரோ கூட தண்ணியடித்து விட்டு இருமிக் கொண்டே பாடும் நிலைமைக்கு போயிடறாங்க. யாராவது பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன். தேன்கூடு போட்டிக்கு "உறவுகள்" தலைப்பில் கதை எழுத சொன்னார்கள். அதுக்கும் இந்த கதைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

Friday, August 04, 2006

நிஜமல்ல, கதை-2!

Part 1 Part 3

நிஷா, நேத்து நைட் உன்னை ஈஸ்ட் என்ட் சர்க்கிள்ல பார்த்தேனே, அங்கேயா தங்கிருக்க? என்று மெதுவாக நூல் விட ஆரம்பித்தான் உதய். ஈரோடையே திருவனந்தபுரத்துக்கு பக்கம்ன்னு சொன்னவன் இதுக்கு என்ன சொல்வானோ என நினைத்து இல்லை இல்லை நான் 9த் பிளாக், ராகி குட்டா பக்கம் என்றாள். நிஷா, நம்ம ரெண்டு பேருக்குள்ள என்னமோ இருக்கு, நானும் அங்கதான் என டன் டன்னாய் வழிந்துவிட்டு சாப்பாடெல்லாம் எங்க? என்றான். வீட்டில்தான் என்றவள் எதற்கு சொன்னேன் என்று நாக்கை கடிப்பதற்க்குள் அப்போ எப்போ சாப்பிடக்கூப்பிடப் போற? என அடுத்த ஜொள்ளாஸ்திரத்தை ஏவினான்.

எங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லறேன், அவன் தினமும் லேட்டா வீட்டுக்கு வரான் என அழுவது போல் சொன்னாள். சொல்லவே இல்லை, உங்க அண்ணன் கூடத்தான் இருக்கியா? நிதானமா கேட்டு சொல்லு ஒன்னும் அவசரம் இல்லை, நான் இங்கேதான் இருப்பேனெ என இடத்தைக் காலி செய்தான். இவளை கரெக்ட் பண்ணறதுன்னா இங்க கம்பெனியிலேயேதான் பண்ணனும் போல இருக்கு, ரொம்ப கஷ்டமாச்சேய்யா! சரி முன் வைச்ச காலை பின் வைக்கிறதில்லைன்னு அடுத்த திட்டத்துக்கு தயாரானான். அய்யோ என நிஷா தலையில் கைவைத்துக் கொண்டு சேரில் தொபுக் என சரிந்தாள்.

நிஷாவை அடிக்கடி சீட்டுக்கு கூப்பிட்டால் வந்து கையை கட்டிட்டு நிக்கறா, கொஞ்ச நஞ்சம் யோசிச்சு வைச்சு இருக்கற ஐடியாவும் மறந்து போகுது. நாமதான் இனிமேல் சிச்சுவேஷன் கிரியேட் பண்ணிக்கணும், இனிமேல் அவ சீட்டுக்கு போயிட வேண்டியதுதான் என திட்டம் போட்டுப் போனால் அங்க சரவணன் சைடுல பெஞ்ச் மேல உக்கார்ந்து வறுத்துக் கொண்டிருந்தான், இவளும் கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன நடக்குது இங்க, நிஷா நான் ஒரு டிசைன் டாக்குமெண்ட் பிரிண்ட் பண்ணிருக்கேன் போய் எடுத்துட்டுவா என்றான் உதய். சரி நான் கிளம்பறேன் என சரவணன் கிளம்பினான்.

டேய், நீ நில்லு. எங்க வந்த, எதுக்கு வந்த, நான் வந்தவுடனே கிளம்பறே? நல்லாயில்லை இதெல்லாம்... நானெல்லாம் ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்கடி, உன்னோட ரேட்டிங் எங்கையில இருக்குன்னு தெரிஞ்சும் இந்த ஆட்டம் ஆடுற? மகனே, அடுத்த தடவை ஆட்டறதுக்கு குடுமி இருக்காது, சொல்லிட்டேன் என்று உதய் சொல்லும் போது நிஷா வேகமா வந்து பிரிண்டர்ல ஒரு டாக்குமெண்ட்டும் இல்லையே என டென்ஷனாக சொன்னாள். ஓ, நான் பிரிண்ட் குடுக்கலை போல. சரி, இப்போ குடுக்கறேன், போய் எடுத்துட்டுவா என சாதாரணமாக என்றான்.

தலை, தெரியாம பண்ணிட்டேன். என்னோட கன்பெர்மேஷன்ல கை வைச்சிராதீங்க. நான் என் சீட் விட்டு இனிமேல் எந்திரிக்க மாட்டேன் என்று சொல்லி முடிப்பதற்க்கும் நிஷா வந்து சேருவதற்க்கும் சரியாக இருந்தது. நிஷா, கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில ஷாருக்கான் மாதிரி இருக்கே என சரவனன் சத்தமாக சொல்லி முடித்தவுடன் எல்லோரும் நிஷாவை திரும்பி பார்த்தார்கள். அவள் கண்கள், கரை புரண்டோடும் கபிணி டேம் மாதிரி இருந்தவுடன் உதய்க்கு பொத்துக் கொண்டு வந்ததே கோபம். மூதேவி, நீயும்தான் ப்ளொரசண்ட் பச்சை சட்டை, புளூ பேண்ட் போட்டுட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்க. பொம்பளை புள்ளைகளை இப்படியெல்லாம் அவமானப் படுத்தறியே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா என சொல்லி விட்டு நிஷாவின் கையிலிருந்த டாக்குமெண்டை வாங்கி அவன் கையில் திணித்து இதை படிச்சிட்டு என்ன இருக்குன்னு சொல்லு, வா இப்போ இடத்தைக் காலி பண்ணு என்று நகர்ந்தான்.

தலை, என்னைய பத்தி அவ தப்பா நினைக்கனும்ன்னுதான் அப்படி சொன்னேன். ரேட்டிங்ல குத்தீறாதீங்க, நீங்க நல்லா இருப்பீங்க என்றான் சரவணன். என்னையப் பத்தி நல்ல விதமா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை என்றான் உதய். தலை, அப்போ நாளைக்கு நடக்குற கலாச்சர தின சிறந்த ஆடை அணிபவருக்கான ஓட்டை அவளுக்கும், உங்களுக்கும் போட்டுறேன், சரியா? , நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், இனிமேலாவது தெரிஞ்சுக்க. அவளுக்கு ஓட்டு போட்டு அவ ஜெயிச்சா எல்லோரும் நம்புவாங்க, நான் ஜெயிச்சா காறித் துப்ப மாட்டாங்க, ஒழுங்கா அவளுக்கு மட்டும் ஓட்டுப் போடு என சொல்லிவிட்டு நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம் என யோசனை செய்யத் தொடங்கினான்.

அடுத்த நாள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சைட் அடிக்க லைசென்ஸ் குடுத்தது மாதிரி இருந்தது உதய்க்கு. தளமெங்கும் இருந்த வண்ணக்கோலங்களை பார்த்துவிட்டு சார், நீங்க யாருக்கு சார் ஓட்டுப் போடுவீங்க என பயல்கள் வழிய வந்து கேட்க, அதெல்லாம் நாங்க ஜெயிக்கறவங்களுக்குத்தான் போடுவோம், நீங்க, உங்க ஓட்ட ஒழுங்கா போடுங்கடா வென்ட்ரு பசங்களா என சிங்கம் மாதிரி கர்ஜித்தான்.

சாயங்காலமாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் நிஷா ஜெயித்திருக்கவில்லை. டென்ஷனாக போட்டி நடத்திய வனிதாவிடம் போய் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும் என சத்தமாக சொன்னான் உதய். உன் ஆளுக்கு எவ்வளவு ஓட்டுன்னு தெரியணுமா, யார்கிட்டையும் சொல்லாதே இல்லைன்னா எல்லோரும் வந்து கேப்பாங்க. சரி அந்த துரதிர்ஷ்டக்காரி பேரை சொல்லு என்றாள். பேரைக் காதில் சொன்னதும் அடப்பாவி, அவ இன்னைக்கு சாதாரண சுடிதாரில் வந்திருந்தாள், அவளுக்கும் என 5 பேரு ஓட்டுப் போட்டிருக்கீங்க, ரொம்ப பரிதாபமாய் 5 ஓட்டுதான் விழுந்திருக்கு. பரவாயில்லை, உனக்கு இப்போ போட்டி ரொம்ப கம்மியில்லை என சிரித்தாள். எங்க அந்த சரவணன் என உதய் வெடித்துக் கிளம்பினான். வனிதா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சரவணன் சாகவாசமாக புதிதாக சேர்ந்த ஃபிகருடன் சாகுபடி செய்து கொண்டிருந்தான். உதயைப் பார்த்ததும், தலை என தெறித்துக் கொண்டு ஓடி வந்தான். தலை, இப்படி ஆயிப்போச்சே தலை என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். இப்போ நீதான் ஆயி போகப் போற என்று சரவணனை மேலிருந்து கீழாய் முறைத்தபடி பார்த்தான். நான்கூட நிஷாவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் தலை என்றான். 1986 தமிழக உள்ளாட்சி தேர்தல்ல எங்க பங்காளி கவுன்சிலருக்கு நின்னாரு. அப்போ எனக்கு 6 வயசு. அப்போவே நான் 10 ஓட்டு போட்டிருக்கேன் மிஸ்டர் சரவணன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தலை என சரவணன் புரியாமல் கேட்டான். நிஷாவுக்கு விழுந்தது 5 ஓட்டு, இப்போத்தான் வனிதாகிட்ட கேட்டுட்டு வரேன். அப்போ இன்னும் 3 பேரு யாருங்க என அப்பாவியாய் கேட்டான் சரவணன். அவசரப்படறீயே கண்ணா, அஞ்சையும் போட்டது நானு, எனக்கே காது குத்தறியா என சரவணன் கழுத்தை உதய் பிடிக்கப் போக சரவணன் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். இன்னும் சரவணன் கம்பெனிக்கு திரும்பி வரவில்லையென்று கேள்வி...

~தொடரும்.

Thursday, August 03, 2006

நிஜமல்ல, கதை!

Part 2 Part 3

உதய் (விடுங்களேன், கதையிலயாவது ஹீரோவா இருக்க விடுங்களேன்...) அலுவலகத்தில் என்ட்ரி குடுத்ததும் பார்த்தது நீளமான கூந்தல். ஆஹா, முடியே இவ்வளவு சீரா அழகா இருக்கே, முகம் எப்படி இருக்கும் என கூந்தலின் பின்னாலே போனால், உதய், ட்ரிப் எப்படி இருந்தது, உன் சீட் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம். 3 வாரமா ஆபீஸ் பக்கம் வராம நிறைய மெயில் வந்திருக்கும், அதை பார்த்து முடி, பிராஜெக்ட் ஸ்டேட்டஸ் நான் உனக்கு அதுக்கப்புறம் தரேன் என என் பிராஜெக்ட் மானேஜர் சாலினி உதயைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு சீட்டில் உட்கார வைத்தார். திரும்பி பார்த்தால் கூந்தல் அழகி எஸ்கேப். இந்த ஃப்ளோரில்தான் இருக்கப் போவது, பார்த்துட்டா போச்சு என மெயில் பார்க்க திரும்பி விட்டான்.

உதய், ரொம்ப பிஸியா? அவன் ஷேர் மார்க்கெட்டில் விட்ட சொத்தெல்லாம் எப்ப திரும்பி வரும் என கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போது சாலினி கேட்ட கேள்வி இது. கூடவே என் கூந்தல் அழகி! கொஞ்சம் பிஸி, ஆனா நீங்க கேட்டா வேலை இல்லைன்னுதான் சொல்லுவேன் சாலினி என்றான் உதய். ஆஹா, பொங்கு சனி ஆரம்பமாயிடுச்சு. குவாலிட்டி, C, C++, ஜாவா எது கேட்டாலும் ஓஓஓ... தெரியுமேன்னு சொல்லணும்ன்னு முடிவு பண்ணி சாலினி பார்க்காத போது ஹாய் என்றான் உதய். இது நிஷா, உன் பிராஜெக்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு கேட்டாயில்லையா? இவளுக்கு ஜாவா தெரியாது, நீ சொல்லிக் குடுத்து ரெடி பண்ணிக்க, சரியா? என சாலினி கிளம்பிவிட்டார்.

நிஷா, ஜாவா ரொம்ப ஈசி. நான் இருக்கேன், கவலைப்படாதே. அப்புறம், நீ எந்த ஊரு நிஷா? கலக்கிட்டடா உதய், நல்ல ஆரம்பம் பாதி வழி போய் சேர்ந்த மாதிரி என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். நான் திருவனந்தபுரம், ஆனா அப்பா, அம்மா தமிழ் என்றாள் நிஷா.. அப்படியா நிஷா, நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம், நான் கூட உங்க ஊருக்கு போற வழிதான். அப்படியா, நீங்களும் கேரளாவா, கொல்லமா? என ஆச்சர்யத்துடன் கேட்டாள். இல்லை, போற வழியில... ஈரோடு. ஈரோடு திருவனந்தபுரம் போற வழியிலதான் இருக்கு என சிரித்துக் கொண்டே ஸ்டைலாக பார்த்தான். சரி, இப்பவே பாடத்தை ஆரம்பிக்கலாம். ஜாவா முதல்ல கத்துக்கறக்கு முன்னாடி நாம ஏன் இந்த வேலையை பண்றோம்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு ஆரம்பித்து வெட்டியாய் ஒரு ஒன்னே கால் மணி நேரம் பேசினான். 3 நிமிஷம் பேசறக்கு 3 நாள் தயார் பண்ணனும், ஆனா 3 மணி நேரம் பேசறதுக்கு ஒன்னுமே பண்ணத் தேவை இல்லை என்பதை மிகச் சரியாக நிருபித்து விட்டு நிஷா, வாயேன் போய் காஃபி சாப்பிட்டு வந்து பேசலாம் என்றான்.

உதய் விட்ட ஜொள்ளில் ஆடிப் போன நிஷா, என் ஃபிரெண்டு சுருதி வரேன்னு சொன்னாள், அவளையும் கூப்பிட்டுக்கட்டுமா என ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் போனாள். ஒரே கல்லுல... ஏனோ காதலா காதலா டயலாக் மனதில் வந்து போனது உதய்க்கு. ஓ, கண்டிப்பா போலாமே? எங்க அந்த பொண்ணு? என அந்த இடத்தில் ஒரு குட்டி ஆறு ஓடத் தொடங்கி இருந்தது. சுருதியையும் சேர்த்துக் கொண்டு ஜொள்ளாற்றுப் படையை படைக்க ஆரம்பித்தான் காஃபி ஷாப்பில். வந்த வேகத்தில் கூகிளில் தடவி, ஒரு நாலைந்து நல்ல டுட்டோரியலிருந்து உருவி ஒரு டிரெயினிங் மெட்டீரியல் ரெடி பண்ணினான். நிஷா, இது உனக்காகவே நான் பண்ணது, படிச்சிட்டு நாளைக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு. நீ எப்போ வீட்டுக்கு போற? இன்னொரு முறை காஃபி என இழுத்துக் கொண்டு போய்விடுவான் என மனதுக்குள் நினைத்தாளோ எண்ணவோ, இதை பிரிண்ட் எடுத்துட்டு உடனே கிளம்பிருவேன், வெளிய கொஞ்சம் வேலை இருக்கு என்றாள். சொக்கா, நீ எப்பவும் என்கூடத்தான் இருக்கிறாய் என மனதுக்குள் துள்ளிக் குதித்து விட்டு ஓ, அப்படியா? வா எங்கூட பைக்கில போயிடலாமே? என்றான். இல்லை, இல்லை... சுருதி வரேன்னா, நான் அவள் கூட போய்க்கிறேன் என மான் மாதிரி துள்ளி ஓடினாள். சுருதி, உன்னை முதலில் ஊறுகாய்ன்னு நினைச்சேன், நீ மொத்த சாப்பாட்டுக்கும் உலை வைக்கிறயே, இரு உன் லீடரை கொஞ்சம் ஸ்குரூ ஏத்தி விடறேன் என மனதுக்குள் கருவிக் கொண்டான் உதய்.

~தொடரும்.

Tuesday, August 01, 2006

பிருந்தாவனமும் நொந்த குமாரனும்...

oops

Oops! That was reverse eh?

மோசம் போய்ட்டேனேய்யா என்று உங்களை அலர வைக்கும் விஷயம் இது....

ஒரு ஃபிகரும் உங்களை பார்க்காத காரணத்தால் அல்லது நீங்கள் பார்க்கும் பாவைகளுகெல்லாம் ஆள் அமைதல், நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஆவதால், நான் கட்டை பிரம்மச்சாரி, அனுமார் தான் என் கடவுள்ன்னு 27 வருஷமா ஏமாந்துட்டு இருந்தவங்க லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா? உங்களை (என்னையும், ஹிஹிஹி...) அனுமார் கைவிட்டுட்டார்... அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சாம்.

மேலதிக விவரங்களுக்கு...

http://members.tripod.com/panch_kasi/id21.html

இந்த உலகத்தில் நம் தோல்விகளை மறைக்க எந்த கடவுளுமே இல்லையா? இது என்ன இளைஞர்களுக்கு வந்த சோதனை... இனிமேல் நாங்கள் எதை சொல்லி தப்பிப்பது?