Monday, March 13, 2006

கருவாச்சி காவியம் - அத்தியாயம் 5

ஆனந்த், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது இவனுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று. ஹாஸ்டலில் இருந்து கிளாஸுக்கு நடக்க ஆகும் 5 நிமிடத்தை 50 நிமிடம் சத்யஜித்ரே படம் மாதிரி சொல்லுவான். திருக்குறள் பிடிக்காததற்க்கு காரணமே அது மிகவும் சிறியதாக இருப்பதால்தான் என டூப் விட்டு திரிவான். உண்மையில் விகடன் முழுதாய் எழுத்துக் கூட்டி படிக்க அவனுக்கு ஒரு நாள் பிடிக்கும். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஐஸ் ஹவுஸ்க்கு வழி சொல்லும் பாரிக்கே இவன் வழி சொன்னால் தலை கிறுகிறுத்துவிடும்.

ஆனந்த் எப்படியோ புது புயலின் பெயர் சாரதா என தெரிந்து வைத்திருந்தான். எல்லோருக்கும் முன்னால் அவளிடம் பேசி அவளை பட்டா பூமி ஆக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் முதல் வரிசையில் உக்கார்ந்து இருந்தான். சாரதா பாரதிராஜா படத்தில் வரும் தேவதை மாதிரி வெள்ளை உடையில் வந்திருந்தாள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வந்திருந்த ஆனந்தின் முகம் அவளை பிடிக்கவில்லை என காட்டிக் கொடுத்தது.

வேலுவுக்கு தான் ஒரு பெரிய ரவுடின்னு நினைப்பு. அவன் உருவத்துக்கும் அவன் செய்யும் சேட்டைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. பெண்கள் ஒரு அடி அடித்தால் நிலத்துக்குள் புதைந்து விடுவது போல் இருந்து கொண்டு சடையைப் பிடித்து இழுப்பது, அவனைவிட ரெண்டு அடி உயரமுள்ள ஜூனியரை ராகிங் செய்வது என வயதுக்கு மீறிய செயல்கள் செய்வது மட்டும் பிடிக்கும். தன்னுடைய ஆந்தை குரலில் உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே என அவளை ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு உயர்த்தி பாடி வைத்தான். சாரதா வகுப்புக்கு புதிது என்பதால் சும்மா முறைத்து மட்டும் வைத்தாள் இல்லை இவன்கூட எல்லாம் எதற்க்கு சாகவாசம் என நினைத்தாளோ என்னவோ.

சின்ன ராசுவுக்கு ஆனந்துடன் ஊர் வம்பு பேசாமல் நைட் தூக்கமே வராது. யார் யாருடன் வெளியே சுற்றுகிறார்கள் என்பதை ஆனந்த் டேட்டாபேஸில் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும். டேய் ஆனந்த், என்னடா சைலண்ட்டா இருக்க என்ன மேட்டர் என சின்ன ராசு சாம்பிராணி புகை போட்டுவிட்டு முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொண்டான். இல்லடா அது வந்து என ஆனந்த் ஆரம்பித்தவுடன் சின்ன ராசுவுக்கு ஜாக்பாட் அடித்த ஃபீலிங். ஆஹா, இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நல்லா பொழுதுபோகும் என மற்ற அடிப்பொடிகளுக்கும் சிக்னல் கொடுத்தான்.

எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள, சாரதா இன்னைக்கு வெள்ளை கலர் சுடிதார் போட்டு வந்தால்ல, அது அவளுக்கு நல்லாவே இல்ல. அவளோட டார்க் கலருக்கு அது சூட் ஆகவே இல்லை. அப்படியே வெள்ளை இருந்தாலும் மத்த கலர் எல்லாம் தூவின மாதிரி சுடிதார் போட்டிருந்தா நல்லா இருக்கும் என ஃபேஷன் டெக்னாலஜி 4 வருடம் படித்த மாதிரி பேசிக் கொண்டே இருந்தான் ஆனந்த். டேய் விடுடா, அவகிட்ட இருந்த ஒரே துவச்ச சுடிதார் அதாத்தான் இருக்கும். நீ ரொம்ப ஃபீல் பண்ணாத என சின்ன ராசு சமாதானம் சொன்னான்.

டேய் ஆனந்த், நானும்தான் அவளை பார்த்தேன். எங்க ஊர் மாரியம்மன் சிலைக்கு எண்ணெய் பூசி வெள்ளை சேலை கட்டின மாதிரி இருந்தா, கருப்புதாண்டா அழகு என ஒப்புக்கு சொல்லி வைத்தான் சின்ன ராசு. ஆனந்தை ஏற்றி விடுவதாக நினைத்துக் கொண்டு சின்ன ராசு சொன்ன இந்த பொய் அவனுடைய மீதியுள்ள காலேஜ் வாழ்க்கை முழுவதையும் வெறி நாய் மாதிரி துரத்தப் போகிறது என்பது அவனுக்கு தெரியவில்லை.

-தொடரும்.

2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

ஒரு மூச்சா எல்லா பகுதியையும் படிச்சு முடிச்சேன். நல்லா எழுதரீங்க. இனி கட்டாயம் படிக்கறேன்.

said...

ஆஹா ஆஹா... ரொம்ப நன்றி, கொத்ஸ்...