Monday, February 13, 2006

அத்தியாயம் 1

அப்படி இப்படி என்று இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைத்து விட்டது. மனதுக்குள் எதோ சாதித்த மாதிரி ஒரு நினைப்பு. இப்பொழுதுதான் முதன் முறையாக வீட்டை விட்டு வெளியில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு நன்றாக படித்தால்தான் +2 முதல் வகுப்பு கிடைக்கும் என மாங்கு மாங்கு என படித்து கரை ஏறியதும் +2 நன்றாக படித்தால்தான் நல்ல இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைக்கும் என சொல்லி என்னை ஏமாற்றி விட்டதாக ஒரு சின்ன ஃபீலிங் இருந்து கொண்டே இருந்தது.

என்னோடு சுற்றும் பசங்களெல்லாம் பக்கதில் இருந்த கலைக் கல்லூரிக்கு சென்று கொன்டிருந்தார்கள். அவர்கள் தினமும் சொல்லும் கதையை கேட்டு காலேஜ் என்பது ஜாலியாக இருக்க கட்டியிருக்கிறார்கள் என்றும் காலேஜ் போய் படிக்க வேண்டியது இல்லை என்றும் சொன்னதால் மனதுக்குள் இனித்தது.

பெரியப்பா களத்து மேட்டில் மாட்டுக்கு தவிடு காட்டிக் கொண்டிருந்தார். சின்ன மகன் ஊரில் இரண்டாவது இஞ்சினியர் என்பதில் அவருக்கு ஏக மகிழ்ச்சி.ஏன்டா சின்ன ராசு, இஞ்சினியருக்கு படிச்சுட்டு எனக்கு தார்ஸ் வீடு கட்டி தருவையில்ல என அப்பாவியாக கேட்டார். பெரியப்பா, அதுக்கு சிவில் இஞ்சினியரிங் படிக்கணும்.நான் மெக்கானிகல் இஞ்சினியர் என கோபமாக சொன்னேன்.

டேய், நம்ம அழுக்கு முருகன் மாதிரி மெக்கானிக் ஆக போறியா நீ? அதுக்கா உன்னை உங்க அப்பன் அவ்வளவு படிக்க வைக்கிறான்.பெரியப்பா, உனக்கு எத்தனை தடவை சொல்ல. அழுக்கு முருகன் டிவிஸ் 50 ரிபேர் தான் பண்ணுவான். ஆன நான் டிவிஸ் 50 மாதிரி புது மொபெட் கண்டு பிடிப்பேன் என சொல்லும் பொழுது என் முகம் பிரகாசித்தது.

பெரியப்பா கை கழுவிக் கொண்டே சொன்னார், சரி சரி நல்லா படிக்கணும், அங்கே 50 ரூபாய் இருக்கு எடுத்துக்கோ, பெரியம்மா கிட்ட சொல்லிராதே. ஏற்கனவே சுற்றமும் நட்பும் கொடுத்த 250 ரூபாய் பாக்கெட்டில் இருந்தது. பாட்டியையும் பார்த்து விட்டால் நாளைக்கு காலையில் வண்டி ஏறும் பொழுது வீடு வீடாக ஓட வேண்டியிருக்காது.

பாட்டி வரப்பில் இருந்த கீரை பறித்துக் கொண்டு இருந்தது. பாட்டியின் காலில் விழுந்தேன் ஏதாவது தேறும் என்ற நம்பிக்கையில். நம்பிக்கை வீண் போகவில்லை. பாட்டி எட்டாய் மடித்த100 ரூபாய் கொடுத்து விட்டு அண்ணன் மாதிரி ஊர் சுத்தத கூடாது என சொல்லிவிட்டு என்னமோ யோசித்தாள். என் பெரியப்பா மகன் +2 முதல் தடவை எழுதி 10 வருடம் ஆகிறது. இன்னும் பாஸ் ஆகாமல் ஊரெல்லாம் நல்ல பேர் எடுத்து வைத்திருந்தான். பாட்டி அருகிலிருந்த கருப்பராயன் கோவிலுக்கு கூட்டி போய் சூடம் பற்ற வைத்து சாமி கும்பிட்டாள். மது, மாமிசம் சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்ய சொன்னாள்.அண்ணனை மனதுக்குள் திட்டிய படியே சத்தியம் செய்து விட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

-தொடரும்

1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

சில எண்ணங்கல்..
மாமிசம் சாபிடாத கிராமத்தானா?
தனித்து வாழும் பாட்டியா?